சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்?
வரலாறு என்றால் என்ன?? என பலருக்குத் தெரிந்துதான் இருக்கும். இருந்தாலும் தெரியாத என் போன்றவர்களுக்காக அதுபற்றிய சிறு அறிமுகத்தை இங்கு தர முயல்கிறேன்.
ஒரு இனத்தின் பதிவுகள் எங்கு அடையாளப் படுத்தப்படுகிறதோ அல்லது பதியப்படுகிறதோ அதுதான் வரலாறு.
• நடைபெற்று முடிந்த நிகழ்வுகளை ஆதாரங்களுடன் எழுதுவது.
• மற்றவர்கள் ஆராய்ந்து எழுதியதை வாசித்து தம் அறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து எழுதுவது.
• தொல்லியற் சான்றுகளினூடாக ஆய்வுசெய்து எழுதுவது என்பன வரலாற்றுப் பதிவாகின்றன.
எதைப்பற்றி எழுதுவது வரலாறு?
ஒரு நாடு, இனம், மொழி, பண்பாடு, தனிமனிதன், தலம், பொருள், போர் எனப் பல இருந்தாலும், முக்கியமாகப் பார்க்கப்படுவது உலகில் மனித இனம் தோன்றிப் பரவிப் பெருகி அழிந்து தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்த இனங்களின் பழைமை, தொன்மை, நாகரிகம், வாழ்வியல் என்பவற்றை எழுதுவது வரலாறு.
வரலாற்றை ஆதாரங்களுடன் எழுதப் பயன்படுபவை: அகழ்வாய்வுகள், மண்படைச் சரிதவியல், கல்வெட்டுக்கள், மட்பாண்டச் சரிதவியல், ரேடியோ கார்பன் ஆய்வு 14, மரபுயிரியற் சோதனை, கல்லறைகள், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவை.
மண்படைச் சரிதவியல்:
மண்ணை அகழ்ந்து மண்ணின் படிமான நிலையிலிருந்து காலத்தைக் கணக்கிடல்.
ஒவ்வொரு தொகுதி படிமமும் 100 ஆண்டுகளைக் குறிக்கும்.
கல்வெட்டுக்கள்:
கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துகளினூடாக காலத்தையும் வரலாற்றையும் அறிதல்.
மட்பாண்டச் சரிதவியல் – வெப்பேற்றுவியல்:
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் உள்ள சித்திரங்களையோ அன்றி எழுத்துக்களையோ வாசித்துக் காலத்தைக் கணிப்பது.
அவற்றில் ஒட்டியிருக்கும் றேடியோ துகள்களின் அடர்த்தியைக் கொண்டு அப்பொருளைச் சூடாக்குவதன் மூலம் அதன் காலத்தை அறிதல்.
றேடியோ கார்பன் 14:
ஒரு உயிரினத்திலுள்ள கார்பன் 12 அவ்வுயிரினம் அழிந்தாலும் மாறாது. ஆனால் கார்பன் 14காலம் செல்லச் செல்லக் குறைந்து கொண்டு செல்லும்.
5000 ஆண்டுகளில் அரைவாசியாகக் குறைந்துவிடும்.
மரபுயிரணுச் சோதனை (DNA):
உயிருடன் இருக்கும் மனிதர், விலங்கு போன்றவற்றிலும் இறந்துபோன உயிரினங்களிலும் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகள் வரை பாதுகாப்பாக இருந்த உடலங்கள் எலும்புகள் போன்றவற்றிலும் செய்யப்படும் ஆய்வு.
இவை ஆண்களின் Y குரோமோசோம்களினுடாகவே இலகுவாக நிறுவப்படுகின்றன.
குரோமோசோம் – மரபுயிரணு – DNA:
முதல் மாந்தர் M-30
ஒஸ்ரொலொயிட் M-30
இலங்கை வேடர் M-30
தென்னிந்தியத் தமிழர் M-20
ஈழத் தமிழர் M-20
சிங்களவர் M-20
இந்தோ ஆரியர் M-17
தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் M-20
சுமேரியர் ?????
• இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் கோமோ சப்பியன்ஸ்.
• மனித இனம் ஆபிரிக்காவில் தோன்றிப் பரவியது.
• உறைபனி காலத்திலும் மாந்தஇனம் வாழ்ந்தது.
• கிட்டத்தட்ட 50000 வருடங்களுக்கு முன்னர் இடப்பெயர்வு ஆரம்பித்தது.
• இடம்பெயர்ந்தோர் தங்கிய இடங்களின் காலநிலைகளுக்கேற்ப அவர்களின் நிறமும் உருவங்களும் மாற்றம் பெற்றன.
• ஓரினம் 1000 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் இருந்தால் அவர்களின் உருவம், நிறம் என்பன மாற்றமடையும்.
பல இலட்சம் ஆண்டுகளாக உலகில் பல உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. விஞ்ஞானிகளின் ஆய்வின்படி இதுவரை நான்கு தடவைகள் மிகப்பெரிய பனி உறை காலம் வந்துள்ளது. அவை ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீடித்ததாகவும், ஒவ்வொரு பனியுறைகாலத்திலும் உலகிலிருந்த பல உயிரினங்கள் அழிந்துபோனதாகவும் மீண்டும் பனி உருகும் காலத்தில் அவை தோன்றிப் பெருகியதாகவும் கூறுகின்றனர். பனிக் காலங்களில் வாழ்ந்த மனித இனமும் விரல்நுனியில் ஊசலாடிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இறுதியாகப் பன்னீராயிரம் வருடங்களுக்கு முன்னர்தான் பனிக்காலம் முடிவடைந்ததாக விஞ்ஞானிகள் அறுதியிட்டுக் கூறுகின்றனர். அப்படி முடிவுற்ற பனிக்காலத்தின் பின்னர் உயிரினங்கள் உலகில் பெருகியபோது ஆபிரிக்கக் கண்டத்தில்தான் அதிகமாகப் பெருகியதாக உலக விஞ்ஞானிகள் நிறுவியுள்ளனர். இது பற்றிய விரிவான தகவலை ஸ்பென்சர் வேல்ஸ் என்பவர் எழுதிய The journey of man என்னும் நூலிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஸ்டீபன் ஒப்பன்கைமர் கிரகம்ஹன்கொக் போன்றபலரும் இதுபற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் ஏற்புடையதும், ஏற்றுக்கொள்ள முடியாத முரண்பட்ட கருத்துக்களையும் கூறியுள்ளனர்.
இறுதிப் பனி உருக்கு காலத்தின் பின் தோன்றிய மாந்த இனம் கோமோ சப்பியன்ஸ் என அழைக்கப்பட்டது. ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து முதன்முதல் இடம்பெயர ஆரம்பித்த மனித இனம் நீக்குரொயிட் என அழைக்கப்பட்டது. அப்படி இரண்டு மூன்று தடவைகள் ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பிரிவினர் ஆசியா, அவுஸ்ரேலியா ஆகிய இடங்களுக்குச்செல்ல இன்னொரு பிரிவினர் மத்திய கிழக்கு ஆசியாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகின்றது. அவுஸ்ரேலியா வரை சென்ற இனம் ஒஸ்ரோலொயிட் என்று அழைக்கப்பட்டனர்.
இவர்களில் சில குழுவினர் கடும் குளிரால் அழிந்துபோக மீண்டும் இடம்பெயர்ந்தனர் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அப்படி இடம்பெயர்ந்து திரிந்த போதுகூட மாந்த இனம் விலங்குகளை வேட்டையாடி காட்டிலும் மேட்டிலும் அலைந்து திரிந்தது. விலங்குகளும் மனிதரை வேட்டையாடியதால் மனித இனம் பல்கிப் பெருகுவது மிகச் சொற்பமாகவே இருந்தது.
இக்காலத்திலும் உறை பனி நிலை காணப்பட்டாலும் உயிரினங்களைக் கொல்லும் குளிர் இல்லாததால் மனித இனம் அக்குளிரைத் தாங்கும் நிலைக்கு இசைபாக்கம் அடைந்தது. அதனால் உறைந்து கிடந்த கடற்பரப்பில் அவர்கள் பயணம் செய்து மற்றைய கண்டங்களை அடைந்திருக்கலாம் எனவும் ஆய்வுகள் கூறுகின்றன. இப்படி இடம் பெயர்ந்த மக்கள் கூட்டம் சில ஆயிரம் ஆண்டுகள் கழிந்தே அமெரிக்கக் கண்டத்திற்குப் பயணித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.
இப்படி இடம்பெயந்து சென்ற மக்கள் கூட்டம் நிலையாக ஓரிடத்தில் தங்காது தொடர்ந்தும் நாடோடிகளாகவே அலைந்தது. காலம் செல்லச்செல்ல பச்சை மாமிசத்தை உண்ட மனிதன் தீயின் பயன்பாட்டுடன் மாமிசத்தை தீயில் வாட்டி உண்ண ஆரம்பித்தான். அதன் பின்னர் ஆடு மாடு போன்ற மனிதர்க்குத் தீங்கு விளைவிக்காத உயிரினங்களை வளர்க்கத் தொடங்கினான். விலங்குகளைத் தம் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்ததால் அவற்றிற்குரிய உணவுகளையும் தேடவேண்டிய நிலை அவனுக்கு ஏற்பட்டது. அதனால் அவர்கள் தொடர்ந்தும் நாடோடிகளாக கால்நடைகளை மேய்த்தபடி வேட்டையிலும் ஈடுபட்டனர். இப்படி உணவுதேடி அலைந்து திரிந்த குழுவொன்று காடுமேடெங்கும் அலைந்து மெசொப்பொத்தேமியா என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த்தது
.மெசொப்பொத்தேமியா என்றால் இரு நதிகளுக்கிடையே உள்ள நிலப்பரப்பு என்றுபொருள். மெசொப்பொத்தேமியா என்பது கிரேக்கப் பெயர். சிலோன் என்னும் பெயரும் ஆழிப் பேரலையின் சுனாமி என்னும் ஜப்பானியப் பெயரும் எப்படி உலகில் நிலைத்ததோ அதுபோல் கிரேக்கர்கள் அழைத்த பெயராலேயே அந்நிலமும் பின்நாளில் அழைக்கப்படலாயிற்று. தற்போதைய ஈராக் சிரியா ஆகிய இருநாடுகளையும் உள்ளடக்கியதே மெசொப்பொத்தேமியா.. இந்நகரம் யூப்பிரட்டீஸ் தைக்கிரிஸ் என்னும் கடல்போல் பரந்துவிரிந்த இரு பெரு நதிகளுக்கிடையே மிகப்பெரும் சமவெளியாகப் பரவிக் கிடந்தது.
உணவு தேடி அலைந்து திரிந்த மக்கள் பெரு மலைகளைக் கடந்து இப்பிரதேசத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கே பசி பொறுக்க முடியாது தானாக விளைந்திருந்த கோதுமையை இவர்கள் உண்ண நேர்ந்திருக்கிறது என டேவிட் நைமன் என்னும் யூத விரிவுரையாளர் கூறுகிறார். பென்சில்வேனியா பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆய்வாளருமான சாமுவல் நோவா கிரேமர் என்பவர் மெசொப்பொத்தேமியா பற்றிப் பல அரிய நூல்களை எழுதியுள்ளார். இவர் சுமேரியர் பற்றிய ஆய்வுகளுக்காகவே தம்வாழ்நாளைக் கழித்தவர். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துவிட்டபடியால் இவரின் ஆய்வுகள் நூல்களாக மட்டுமே இருக்கின்றன..
கோதுமையும் பார்லியும் மட்டும் விளைந்திருந்த அந்நிலத்தில் பசி போக்க உணவு கிடைத்தவுடன், மனிதர்கள் வசிப்பதற்கேற்ற நல்ல காலநிலையும் இருந்ததனால் அம்மக்கள் கூட்டம் தொடர்ந்தும் அலைந்து திரியாது அவ்விடத்திலேயே தங்கலாயிற்று. காட்டு விலங்குகளின் தொல்லை இல்லை. பசிக்கு உணவுகிடைக்கிறது. இனி அடுத்து என்ன. மக்கள் கூட்டம் பெருகுகிறது.
அதன்பின்அவர்கள் வெயிலிலும் மழையிலும் இருந்து தம்மைக் காக்க குடில்களை அமைக்கின்றனர்.
இரு நதிகளுக்கிடையில் இருந்ததனால் களிமண்ணே எங்கும்காணப்பட்டது. பேரீச்சை மரம் போன்ற சிறிய மரங்களும், கிட்டத்தட்ட எட்டு அடிவரை வளரும் பாரிய புற்களுமே அங்கு இருந்தன. வீடுகளைக் கட்டக்கூடிய பெருமரங்கள் எவையும் அங்கு இருக்கவில்லை. அதனால் புற்களைக் கொண்டே அவர்கள் தம்வாழ்விடங்களை அமைத்தனர். சுமேரிய இனம் பெருகப் பெருக அவர்களுக்கு வேண்டியஉணவை உற்பத்தி செய்யவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். அதனால் அங்கே விவசாயம் என்னும் முதற்படிக்கு அவர்கள் காலெடுத்து வைத்தனர்.
கோதுமை, பார்லி என்பன பெரும்பயிராகவும் காலப்போக்கில் கீரை, பட்டாணிக்கடலை, வெங்காயம், உள்ளி, லீக்ஸ், கடுகு, பேரீச்சம் பழம் போன்றசிறு பயிர்களும் அந்நிலத்தில் காணப்பட்டதால் அவற்றையும் பயிர்செய்தனர். சுமேரியர் ஆடு மாடு பன்றி மரை போன்ற விலங்குகளை மட்டுமே வளர்த்தனர். வேறு விலங்குகள் அங்கு காணப்படவில்லை.
விவசாயம் முதன் முதல் மெசொப்பொத்தேமியாவிலேயே ஆரம்பிக்கபட்டதாக அனைத்து ஆய்வாளர்களாலும் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
விவசாயம் என்றவுடன் ஒன்றிரண்டு மாதங்கள்அல்லது வருடங்களில் அதன் பரிணாமத்தை எட்டியிருக்கும் என எண்ணினால் அது தவறு. முதலில் விவசாயம் செய்ய ஆரம்பித்தவுடன் ஆற்று நீரை நம்பியே செய்யப்பட்டதாகவும் காலநிலை மாற்றத்தால் பயிர்கள் அழிவுற்றபோது காலநிலைஅவதானிக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சுமேரியர் சிறிதுசிறிதாக விவசாயத்தில் முன்னேற்றம் கண்டனர். இயற்கையின் அழிவுகளிலிருந்து பயிர்களைக் காப்பதற்கும், கால நிலைகளுக்கு ஏற்ப பயிரிடுவதையும் அறிந்தனர். அதன் பயனாய் காலம் நேரம் பருவகாலங்கள் வாரங்கள் மாதங்கள் ஆண்டுகள் போன்றன கண்டு பிடிக்கப்பட்டன.
விவசாயத்தின் வளர்ச்சி கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. விவசாயமே மனிதனின் மற்றைய கண்டுபிடிப்புக்களுக்கும் வழிகோலியது எனலாம். மெசொப்பொத்தேமியாவில் வாழ்ந்த எண்பது தொடக்கம் தொண்ணூறு சதவிகித மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலானோர் விவசாயத்தில் ஈடுபட்டதால் விளைச்சல் பெருகியது. விளைச்சல் பெருக அதிகுறுகிய காலத்தில் மக்கள் தொகையும் பெருகியது.
மக்கள் தொகை பெருகியதாலும் அதிக விளைச்சல் கிடைத்ததாலும் விளைந்த பொருட்களைப் பாதுகாத்து வைக்க வேண்டிய தேவையும் பண்டமாற்றுச் செய்யும் தேவையும் ஏற்பட்டது. சுமேரியர் செம்மறியாடுகள், ஒருவித மரை என்பவற்றை அதிகமாக வைத்திருந்தனர். விலங்குகளின் தோலிலிருந்து ஆடைகள் செய்யப்பட்டன.
பின்னர் செம்மறி ஆட்டின் மயிரிலிருந்து நூல் நூற்று ஆடைகள் செய்யப்பட்டன. பண்டமாற்றுச் செய்யும்போது கணக்கு வைப்பதற்காக களிமண் உருண்டைகள், வடிவங்கள் செய்து பரிமாறப்பட்டன. உதாரணத்துக்கு ஆட்டுப்பட்டியிலிருந்து நான்கு ஆடுகள் வாங்கினால் ஆட்டுக்கான பொருட்களைக் கொடுத்து களிமண் கோளங்களையும் கொடுக்க வேண்டும். வணிகம் முடிந்தபின் கோளங்களின் எண்ணிக்கையை வைத்து எத்தனை ஆடுகள் வெளியே போயின எனக்கணக்கிடுவர்.
விவசாயத்தைப் பெருக்குவதற்கு கலப்பையைக் கண்டுபிடித்த சுமேரியர் கலப்பையில் உழுவதற்கும் பாரங்களைச் சுமப்பதற்கும் மாடுகளைப் பயன்படுத்தினர். கலப்பின் மேற்பகுதியில் கூம்பு வடிவிலான ஒன்றை வடிவமைத்து, உழுது கொண்டு செல்லும்போதே தானாக விதை விழுமாறான பொறிமுறையையும் உருவாக்கினர். காலம் செல்லச்செல்ல சக்கரத்தைக் கண்டுபிடித்து பாரங்களை இழுப்பதற்கு இருசக்கர வண்டிலையும் உருவாக்கினர்.
களிமண்ணால் குடிசைகளையும் புற்களினால் கூரையும் அமைத்து நாகரிகத்தின் அடுத்த படியில் கால் வைத்தனர் சுமேரியர். சிலநூறு வருடங்களின் பின்னர் களிமண்ணினால் செங்கல் என்னும் பாரிய கண்டுபிடிப்பும் இவர்களுக்கே உரியது. செங்கல் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் களிமண் வடிவத்தைச் சுட்டெடுப்பது. செங்கற்களைச் சுடுவதற்கு பாரிய சூளைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன என ஆய்வுகள் கூறுகின்றன. அதன் தொடர்ச்சியாக பானைகள் சட்டிகள் களிமண்ணால் ஆக்கப்பட்டுச் சூளைகளில் சுட்டெடுக்கப்பட்டன என்றும் பானைகள் சட்டிகள் போன்றவை செய்ய அச்சுப் பொறிமுறையும் காலப்போக்கில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் தமக்கென வீடுகளை அமைத்தனர். புயல் வெள்ளம் போன்றவற்றால் வீடுகள் சேதமானபோது உடனே மீண்டும் கட்டப்பட்டது. செங்கற்களை அடுக்கிக் களிமண்ணால் பூசி வீடுகள் கட்டும்போது உடைந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட மாட்டா. கற்கள் அப்படியே தானிருக்கும்.
செங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் தமக்கென வீடுகளை அமைத்தனர் சுமேரியர். புயல் வெள்ளம் போன்றவற்றால் வீடுகள் சேதமானபோது உடனே மீண்டும் கட்டப்பட்டது. செங்கற்களை அடுக்கிக் களிமண்ணால் பூசி வீடுகள் கட்டும்போது உடைந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏற்பட மாட்டா. கற்கள் அப்படியே தானிருக்கும். பாரிய அணைகளையும் குளங்களையும் கூட செங்கற்களைக் கொண்டே சுமேரியர் அமைத்தனர். அந்த அணைக்கட்டுகளுடன் ஒத்த வடிவமே இந்தியா, இலங்கை ஆகிய இடங்களிலுள்ள குளக்கட்டுக்களுடன் ஒத்துப் போகின்றன.
அக்காலத்திலேயே அச்சுக்களைப் பதிக்கும் முறை சுமேரியரால் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதை கீழே உள்ள படத்திற் காணலாம்.
செங்கற் சூளைகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் சுமேரிய இனத்தின் வளர்ச்சியில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. களிமண் வீடுகளில் வாழ்ந்தவர்கள் செங்கற்களை அடுக்கி தமக்கான வீடுகளை அமைத்தனர். புகை போக்கியுடன் அமைக்கப்பட்டுள்ள சமையலறை கிறித்துவுக்கு முன் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்தது என்றால் சுமேரிய இனம் எத்துனை சிறந்த பொறியியலாளர்களைக் கொண்டிருந்தது என எண்ணிப் பார்க்க முடியவில்லை. அதுமட்டுமல்ல மலசல கூடம் கூட வீட்டின் பின்பக்கமாகவும் அதனுடன் தொடர் கழிவுநீர் வாய்க்கால்கள் கூட (drainage) அமைக்கப்பட்டிருந்தன.
வீட்டின் வாசல்களை V , U போன்ற வடிவங்களில் அமைக்கப்பட்டிருந்தன. அக்கட்டிடக் கலையின் நுணுக்கங்களை பார்த்து இப்பொழுது கூட வியப்பவர் பலர். சுமேரியர்களின் சமையலறை எத்தனை வசதியோடு அமைக்கப்பட்டிருந்தது என்பதைக் கீழே உள்ள படத்தின் மாதிரியிலிருந்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
தமக்கென வீடுகளை அமைத்த சுமேரியர் அதன்பின் பாரிய கோயில்களை அமைத்தனர். கோயில்கள் சீகுராட் என அழைக்கப்பட்டன. அவை மிகப்பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருந்தன. மழையோ புயலோ வெள்ளமோ வந்தால் கோயிலுக்கு எவ்வித சேதமும் ஏற்படாதவகையில் உயரமாகவும் கட்டப்பட்டது. தானியங்கள் எல்லாம் கோயில்களிலே பாதுகாக்கப்பட்டது. நாளடைவில் தானியங்கள் கொடுக்கல் வாங்கல்கள் கூட கோயில்களிலேயே இடம்பெற்றன. கோயில்களே அவர்களின் பொதுத் தளமாக இருந்தது. கற்றவர்கள் கூடி முடிவுகளை எடுக்கும் இடமாகவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டு அனைத்தையும் தீர்மானிக்கும் இடமாகவும் கோயில்களே விளங்கின. காலம் செல்லச்செல்ல சுமேரியர் சிறுசிறு நகரங்களை உருவாக்கி நகரங்களின் மத்தியில் கோயில்களை அமைத்தனர்.
தற்பொழுதுள்ள எமது கோயில் கோபுரக் கலசங்களிலும் பல்வகைத் தானியங்கள் வைக்கப்படுவதைக் காணலாம். தானியங்கள் இடியைத் தாங்கும் வல்லமை கொண்டமையாக விளங்குகின்றன. அதனாலேயே கோயில் கோபுரங்கள் மிக உயரமாகக் கட்டப்பட்டு தானியங்கள் அங்கு பாதுகாக்கப் பட்டன. குறிப்பிட்ட சுற்று வட்டாரத்தில் வாழும் மக்களுக்கு இடிதாங்கியாகவும் கோயிற் கோபுரங்கள் விளங்கியிருக்கின்றன. அத்துடன் வெள்ளமோ புயலோ ஏற்பட்டு அழிவுகள் ஏற்பட்டாலும் கோபுரக் கலசத்தில் பாதுகாக்கப்பட்ட தானியங்களில் இருந்து மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியும். அதனாலேயே தமிழர் உயரமான கோபுரங்களை வடிவமைத்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இது கூட தமிழரின் உயரிய நுண்ணறிவுக்கு ஒரு சான்றாகும்.
கோயில்கள் மட்டுமே பிரமாண்டமாக இருந்ததே அன்றி நகருக்குப் பொறுப்பாக இருந்தவர்களோ குருமாரோ யாருமே பிரமாண்டமாக எதையும் கட்டவில்லை. மக்களிடையே வேறுபாடுகள் அதிகம் காணப்படவில்லை.
அங்கு அவர்கள் மன்னர்காலங்களில் இருந்ததுபோல் ஆடம்பரமான வீடுகளையோ, மாளிகைகளையோ, அரண்மனைகளையோ அமைக்கவில்லை. அனால் கோயிலுக்கு அடுத்தபடியாக குருமார்களும் அந்த இனத்தை நிர்வகிப்போரும் பெரிய வீடுகளிலும், வியாபாரிகள் நடுத்தர வீடுகளிலும், மற்றைய தொழிலாளர்கள் சிறிய வீடுகளிலும் வாழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. ஒரு நகரத்தில் கோயிலைச் சுற்றியே வீடுகள் அமைக்கப்பட்டன. கோயில்களில் அறிவிற்சிறந்தோர் கூடிச் சங்கமும் அமைத்தனர்.
சுமேரியரின் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் கணக்கு வழக்குகளை சரியாகப் பார்க்கவேண்டிய தேவை ஏற்பட்டதனால் களிமண்ணால் செய்யப்பட்ட தட்டுகளில் தடியினால் கோடுகள் போட்டு கணக்கை ஆவணப்படுத்தத் தொடங்கினர். அவ் எழுத்து வடிவம் கூனிபோம் (Cuniform) என அழைக்கப்பட்டது. அதன் பின்னர் சுமேரிய இனம் கணிதத்தில் பாரிய வளர்ச்சி கண்டது. அதைத் தம் இனத்தவர்க்குக் கற்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டதனால் அவர்கள் பாடசாலைகளை அமைத்தனர்.
குருவினால் கணிதம் போதிக்கப்பட்டது. பலவந்தமாகவும் கணிதம் போதிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒருவர் தனது எட்டு வயது தொடக்கி இருபது வயதுவரை கட்டாயம் கற்க வேண்டும். ஆனால் எல்லோரும் கற்கவில்லை. கோயில்களினால் தெரிவு செய்யப்பட்டவர் மட்டுமே கற்றனர். பாடசாலைகள் கோயில்களிலேயே இயங்கின.
சுமேரியரின் கண்டுபிடிப்பான கோட்டு எழுத்துமுறை கூனிபோர்ம் என அழைக்கப்படுகின்றது. எழுத்துக்கள் முக்கோண வடிவம் கொண்டவையாகவும் எழுநூறுக்கும் அதிகமான சொற்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன.
கூனிபோம் எழுத்து வடிவம் கண்டுபிடிக்கப்பட முன்னர் கையாளப்பட்ட சித்திர வடிவங்கள் இவை. சித்திர வடிவம் என்பது ஒரு பொருளின் படத்தையோ அதற்கு ஈடான குறுக்குப்பட்ட படத்தையோ கீறுவது. சங்கம் அமைந்ததனாற்றான் அவர்களின் சித்திர வடிவம் மாற்றமடைந்து கூனிபோம் வரிவடிவாகி உலகை உன்னத நிலையில் உயர்த்தியது.
சீன மொழி இன்றும் சித்திர வடிவம் கொண்டதாகவே இருக்கிறது.
சுமேரிய எழுத்துக்களை மேற்குலக ஆய்வாளர்கள் தமக்கேற்றவாறு மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அவை தமிழ் எழுத்துக்களுடன் ஒத்துப்போவது கண்கூடு.
மிருதங்க வடிவிலும் களிமண் உருளைகள் செய்யப்பட்டு அவற்றிலும் எழுதப்பட்டன. ஒன்றின்மேல் ஒன்று அடுக்கி வைக்கத்தக்கதாக அவை ஆக்கப்பட்டிருக்கின்றன.
சுமேரியர் உருவாக்கிய உலகின் முதல் நகரம் உருக் என்று அழைக்கப்பட்டது. கிறித்துவுக்கு முன் 4000 ஆண்டளவில் அவர்கள் இருபத்தியொரு நகரங்களையும் பின் மக்கள் தொகை பெருகப் பெருக எல்லாமாக எழுபத்தோரு சிறிய நகரங்களையும் உருவாக்கினர். எல்லா நகரங்களுக்கும் தலை நகரமாக ஊர் என்னும் நகரமே விளங்கியது. ஊர் என்னும் நகரத்தின் தாக்கமே பின்னாளில் தமிழர்களின் ஊர் ஆகியது எனலாம். ஊரிலிருந்த சீகுராட்டில் அறிஞர்கள் கூடிச் sanka வளர்க்கப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. சங்காவும் சங்கம் ஆகியிருக்கலாம் அல்லவா? சீகுராட் கூட மருவி எங்கள் கோவிலின் சிகரம் ஆகியிருக்கலாம் என்பதுதான் எமது ஆய்வு.
பல ஆண்டுகளாக கேம்பிரிச் பல்கலைக் கழகம் ரெல் பிரேக் எனத் தற்போது அழைக்கப்படும் ஓரிடத்தில் வேறு சில பல்கலைக் கழகங்களுடன் சேர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. அந்த ஆய்வின் பெயரே அன்சியன்ற் நகர். நகர் என்பது சமஸ்கிருதம் என நீங்கள் வாதிடலாம். உண்மைதான். நகர் என்பது சமஸ்கிருதச் சொல்லே. ஆனால் நகரம் என்பது கி.மு 4௦௦௦ வருடத்துக்கு முந்தய சுமேரியச்சொல். தமிழிலும் நகரம் என்பது நாகரிகமடைந்த ஊரைக் குறிக்கும் தமிழ்ச் சொல். தமிழ்ச் சொல்லையே ஆரியர் சிறிது மாற்றி நகர் என்று வைத்தனர்.
சுமேரியர் நாகரிக வளர்ச்சி அடைந்து கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களின் பின்னரே எகிப்திய இனமும் இரண்டாயிரம் வருடங்களின் பின்னரே சீனர்களும் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளின் பின் மாயன்சும் நாகரிகம் அடைந்தனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். அவுஸ்ரேலியாக் கண்டம் நிலத்தோடு தொடர்பின்றி இருந்ததனாலும் அதிக தூரத்தில் இருந்ததனாலும் நாகரிக வளர்ச்சியை எட்டவில்லை. அத்தோடு மற்றவர் நாகரிகம் அடையும் போது எல்லோரும் நாகரிகமடைவர் என்பதும் சரியானதன்று. ஏனெனில் அபொரோஜினீசும், தென்னமெரிக்கக் காடுகளில் அரை நிர்வாணமாய் இப்பொழுதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களும், இலங்கை இந்திய வேடர்களும் இன்றுவரை நாகரிகமடையவில்லை.
சுமேரியர் செங்கற்களைச் சூளையில் இடும்போது ஒரு திரவப் பொருள் உருகி ஓடியது. அது இறுகியபோது கடினப் பொருள் ஆகியதாகவும் அதிலிருந்தே செப்பு என்னும் உலோகம் அறிமுகமாகியது என்றும் கூறுகின்றனர் . சிறிது காலத்தில் வெள்ளீயம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் வெள்ளீயத்தினால் கத்திகள், வாட்கள் போன்றவை செய்யப்பட்டன. கலப்பையின் மண்ணுக்குள் புதைபடும் பூண் என்னும் பகுதி கூட ஆரம்பத்தில் வெள்ளீயத்தினால் ஆக்கப்பட்டது. பின்னர் வெள்ளீயம் இலகுவில் வளைந்ததனால் மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.
செப்பினாலும் வெள்ளீயத்தினாலும் சுமேரியர் செம்புகள், தட்டுக்கள் போன்றவற்றையும் அணிகலன்களையும் செய்தனர். மற்றைய இனங்கள் சிப்பி சோகி போன்றவற்றாலான அணிகலன்களை அணிந்தபோது அழகாக வடிவமைக்கப்பட்ட உலோக நகைகள் மணிகளால் செய்யப்பட்ட நகைகள் சுமேரியர் அணிந்ததாகக் கூறப்படுகின்றது. அதிலும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு தங்க நகைகள் சுமேரியர் அணிய ஆரம்பித்தபின்னர், வசதியிற் குறைந்தவர்கள் தங்க நகைகளைப் போன்று போலி நகைகள் செய்து அணிந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.
சுமேரியர் கோயில்களும் வீடுகளும் அமைக்கத்தொடங்கி கிட்டத்தட்ட 500 ஆண்டுகளின் பின் அவர்களுக்கு அண்மையில் வாழ்ந்த எகிப்திய மக்களிடமும் இவர்களின் கண்டுபிடிப்புக்களும் மொழியும் பரவின. எகிப்தியரால் எல்லாவற்றையும் இவர்களிடமிருந்து அறிந்து கொள்ள முடியவில்லை. கட்டிடக்கலை பற்றியும் செங்கல் சுடு முறை பற்றியும் அதிககாலம் ஒருவரும் அறியமுடியவில்லை. சுமேரியரின் கட்டடங்களைப் பார்த்துவிட்டு அதுபோல் எகிப்தியரும் கட்டடங்களைக் கட்ட முயன்றனர்.
எகிப்தில் பாரிய பெருங்கற்களே இருந்ததனால் எகிப்தியர் அப்பெரிய கற்களை செங்கல் போன்ற அமைப்பிலும் அளவிலும் உடைத்துச் சிறிதாக்கியே முதல் பிரமிட்டைக் கட்டினார்கள். பின்னர் அது சிரமமாக இருந்ததால் பின்னர் கட்டப்பட்டவை பெருங் கற்களால் கட்டப்பட்டன.
தற்பொழுது கூட உலகின் 80 வீதமான வீடுகள் செங்கற்களால் கட்டப்படுகின்றன. சுமேரியர் பானைகள் சட்டிகள் தட்டுக்கள் போன்றவற்றையும் செங்கற்களையும் சுட்டெடுக்கும் முறையும் மற்றைய இனங்கள் அறியாததால் அவர்கள் வனைந்த பானைகள் கைகளால் வனைந்ததாகவும் தீயில் சுடப்படாது வெயிலில் காயவைத்ததாகவே இருந்ததது. அதனால் இலகுவில் உடைந்தும் போயின. சுமேரியரின் பானைகள் கிறித்துவுக்கு முன் 2500 ஆண்டுகள் பழைமையானது சிந்துவெளியிலும் 1500 ஆண்டளவில் இந்தியாவிலும் 1000 ஆண்டுகள் பழையதாக ஈழத்தின் பொம்பரிப்பிலும் காணப்பட்டன.
ஒரு இனம் தாம் இடம்பெயர்ந்து செல்லும்போது அனைத்துப் பொருட்களையும் காவிக்கொண்டு செல்வதில்லை. மாறாக தாம் போன இடங்களில் அதன் கலை நுணுக்கங்களைப் பயன்படுத்துவர். அதுபோலவே தாம் புலம்பெயர்ந்து சென்ற இடங்களில் எல்லாம் அவர்கள் விட்டுச் சென்ற தடயங்களாக சுமேரியர் வடிவ மட்பாண்டங்கள் தமிழர்களின் பானைகள் சட்டிகளாக இருக்கின்றன. அவர்கள் அம்மியும் குழவியையும் அரைப்பதற்குப் பயன்படுத்தினர். சுமேரியரின் கிரைண்டிங் மிசின் என அம்மி சொல்லப்படுகிறது. அம்மி கூட சுமேரியரிடமிருந்து தொடர்ச்சியாக எம்மிடம் வந்திருப்பதிலிருந்து சுமேரியரே தமிழர் என அறிய முடிகிறது.
இவற்றுடன் மட்டும் சுமேரியர் நின்றுவிடவில்லை. நோய்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வைத்தியம் செய்யும் முறை கூட அவர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் சிலவற்றில் மூன்று துளைகள் காணப்படுகின்றன. சுமேரிய மருத்துவர்களால் செய்யப்பட்ட சத்திர சிகிச்சை காரணமாகவே அத துளைகள் ஏற்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
மெசொப்பொத்தேமியாவில் திராட்சைக் கொடிகளும் பயிரிடப்பட்டன. திராட்சையிலிருந்து வைனும் பழரசமும் பார்லியிலிருந்து பியர் போன்ற திரவமும் தயாரிக்கப் பட்டதாகக் கூறுகின்றனர். ஆரம்பத்தில் ஆண் பெண் இருபாலாரும் மது அருந்தியதாகவும் பின்னர் அச்சமுதாயத்தில் நிகழ்ந்த சீர்கேடுகளால் கற்றவர் கூடி சில கட்டுப்பாடுகளை வகுத்ததாகவும் கூறப்படுகிறது. பெண்களே கள்ளை விற்றார்கள். வீடுகளில் சிறு தொழிலாக பார்லியிலிருந்து கள் வடிப்பது நடைபெற்றிருக்கிறது.
அப்போதே சுமேரியர் நாற்காலிகளைச் செய்திருந்தனர். விருந்துகளும் நடைபெற்றிருக்கின்றன. மேலே தந்திருக்கும் படத்தில் கதிரைகளில் இருந்து மது அருந்தும் படத்தைக் காணலாம். அது ஒரு ராணியின் கல்லறையிலிருந்து எடுக்கப்பட்ட சட்டம். அப்படியான பல சட்டங்கள் கல்லறைகள் பலவற்றிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை சுமேரியரின் வாழ்வியலை அழகாகக் கூறுகின்றன. சுமேரியக் கல்லறைகளின் அமைப்பே பொம்பரிப்பு வரை காணப்படுகின்றன.
நான் போட்டிருக்கும் மாட்டின் படம் சுமேரியருடயதே அங்கே அதிக அளவில் பெருங் கற்கள் இருக்காவிட்டாலும் வெள்ளை கறுப்புக் கற்கள் இருந்திருக்கின்றன. அவர்கள் பல சிலைகளையும் செய்திருக்கின்றனர். Brithsh Musiam பல சுமேரியச் சிலைகளையும் உருவங்களையும் கறுப்பு நிறத்தில் வைத்திருக்கிறது. சுமேரியர் மாடுகளை உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தியது தொடங்கி மாட்டின் விதவிதமான சிலைகள் என்பன அவர்கள் மாடுகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டி நிற்கின்றன. ஆனபடியால் மெசொப்போத்தேமியாவில் இருந்துதான் நந்தி வடிவம் இந்தியாவரை வந்துள்ளது எனலாம்.
இங்கு உள்ள படத்தில் ஆண்கள் இடுப்புக்குக் கீழே வேட்டி போன்ற ஆடையும் பெண்கள் சேலை போன்று ஒன்றும் அணிந்திருப்பதைக் காணலாம். இதன் தொடர்ச்சிதான் வேட்டியும் சேலையுமாக ஏன் இருக்க முடியாது?? ஆண்கள் பெண்கள் இருபாலாருமே காதணியும் அணிந்துள்ளனர். கொண்டை போன்ற அமைப்பிலும் தம் முடியை அலங்கரித்திருக்கின்றனர். விவசாயத்துடனும் கண்டுபிடிப்புக்களுடன் மட்டும் சுமேரியர் நின்றுவிடவில்லை. சங்கம் அமைத்து சமூகத்துக்குத் தேவையான தொழில் நுட்ப அறிவையும் கணித அறிவையும் பெருக்கினர்.
இனத்தின் பண்புகளை மேம்படுத்தவும் கட்டுப்பாடுகள் கொண்ட ஒழுங்கான ஒரு சமுதாயத்தை உருவாக்கவும் சங்கம் அமைத்ததனாலேயே உருவாக்க முடிந்திருக்குமே அன்றி சாதாரணமாக தனிப்பட்டவர்களால் சாதித்திருக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக கூனிபோர்ம் வடிவம் எழுத்துவடிவம் பெற்ற பின்னரே அடுத்த சங்கம் அமைத்து மொழியை வளர்க்க முடிந்திருக்கும்.
மொழியின் வளர்ச்சி கூட நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் பின்னரே இலக்கண வடிவம் பெற்றிருக்கும் என்றால் மிகையாகாது. நூற்றைம்பது கால அகழ்வாய்வில் நூற்றுக்கும் அதிகமான சுமேரிய இலக்கியங்கள் வாசிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது அந்த மொழி மட்டும் அழிந்து விட்டதென மேற்குலகினர் கூறுவது நகைப்புக்கிடமானது.
யாழ் என்னும் இசைக்கருவி தமிழர் வாழ்வோடு ஒன்றியது என்பது நீங்கள் அறிந்ததே.
மாமன்னன் இராவணன் யாழ் மீட்டுவதில் வல்லவன் என்றும் யாழை மீட்டியே இறைவனை வசப்படுத்தியதாகவும் வரலாறு உண்டு. யாழ் பாடி யாழ் வாசித்தே யாழ்ப்பாணத்தைப் பரிசாகப் பெற்ற கதையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
எல்லாவற்றிற்கும் முன்பாக சுமேரியரே கிறித்துவுக்கு முன் 3500 ஆண்டளவில் யாழைக்கூடக் கண்டுபிடித்தனர். சுமேரியரால் கோயில்களில் யாழ் போன்ற இசைக் கருவியை வாசிக்கப்பட்டிருக்கிறது. அதுக்கும் பெண்களே அதிகம் வாசித்துள்ளனர். 1927 இல் பலவகையான சுமேரிய இசைக்கருவிகள் இராக்கில் கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்களின் அறிவியற் திறனுக்கான மேலும் ஒரு உதாரணம் கூசா முறை. வெப்பத்தினால் மண் கூசாவிலுள்ள நீர் வெளியே கசிய உள்ளே இருக்கும் நீர் குளிர்மையாக இருக்கும் . இன்று கூட இராக்கில் பொது இடங்களில் களிமண்ணால் வனையப்பட்ட பெரிய பானைகள் சுமேரியரின் பானைகள் என்று தாகத்தைத் தணிக்க உதவுவதைக் காணலாம்.
சுமேரியர் கட்டடங்களையும் கோவில்களையும் அமைப்பதற்கு வேறு இன மக்கள் சிலரையும் பயன்படுத்தியதாகவும் அவர்களும் சுமேரியர்களும் கலந்ததனால் உருவானவர்களே யூத இனம் என்றும் ஒரு ஆய்வாளர் கூறுகிறார். இது இப்படியிருக்க சுமேரியர்களின் செழிப்பைக் கண்ட பல இனங்கள் அவர்களிடமிருந்து பலவற்றை அறிந்தார்கள். அறிய முயன்றார்கள். முடியாத போது தாக்குதல்களைத் தொடுத்து சுமேரியரை திகில் கொள்ள வைத்தார்கள்.
சுமேரியரிடம் மாடுகளும் கழுதைகளுமே அதிகம் இருந்ததால் அவற்றையே மற்றைய இனங்களின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்க எதிர்த் தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். போர் வீரர்கள் பயிற்றுவிக்கப்பட்டு படையணி அமைக்கப்பட்டு தாக்குதல்களை நடத்தினர். தாக்குதளுக்குத் தலைமை வகித்தோர் தலைக் கவசங்களையும் அணிந்திருந்ததாகவும் மன்னர்கள் தலைகளுக்கு தங்கத்தால் ஆன கவசங்கள் அணிந்ததும் காணப்படுகிறது. கோதுமையை உண்டு கொழுத்திருந்த சுமேரியரால் அவர்களை அடிக்கடி எதிர்க்கவும் முடியவில்லை.
சுமேரியர் மென்மையான விலங்குகளுடன் பழக்கப் பட்டவர்கள். மற்றவர்கள் நாடோடிகளாய் அதிக காலம் திரிந்தவர்களாதலால் பலம் கொண்டவர்களாகவும் பல சூட்சுமங்களை அறிந்தவர்களாகவும் இருந்தனர். அத்தோடு குதிரைகளை வைத்திருந்ததோடு அவற்றைத் தாக்குதலுக்கும் பழக்கபடுத்தி இருந்தனர். அவர்களின் பலத்தின் முன்னால் சுமேரியரால் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்க முடியவில்லை.
பல மேற்குலக ஆய்வாளர்களும் இந்திய ஆய்வாளர்களும் கூட சுமேரிய நாகரிகத்தையும் சிந்துவெளி நாகரிகத்தையும் தொடர்பு படுத்துவதில்லை.
மெசொபொத்தேமியாவிலிருந்து அருகில் இருந்தது சிந்துவெளிப் பள்ளத்தாக்கு. அடுத்து நயில் நதி. சுமேரியருடன் சேர்ந்து வாழ்ந்த மற்றைய சில இனங்கள் நயில் நதியைத் தேடிப் போக சுமேரியர் சிந்துவெளியை நாடிச் சென்றனர். அப்படி இடம்பெயர்ந்தபோது பிரிந்துசென்ற இனமொன்று பாகிஸ்தானுக்கும் பலுசிஸ் தானுக்கும் இடையே தங்கியதாகவும் அவர்கள் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவ்வினம் பிராகுஇஸ் (Brahuis) என்றும் அழைக்கப்படுகிறது. அவர்கள் அங்கு கிறித்துவுக்கு முன் 2000 ஆண்டளவில் குடியேறினர் என்றும் கூறுகின்றனர்.
சிந்துவெளி மிகப் பரந்த பிரதேசமாகக் காணப்பட்டது. முன்பு மெசொபோத்தேமியாவில் குறைந்த அளவு காணிகள் இருந்ததனால் கோயில்களின்கீழ் நிலக் கண்காணிப்பு இருந்தது. அதனால் காணிகள் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இங்கு நிலப்பரப்பு அளவுக்கதிகமாக இருந்ததால் காணி தொடர்பான கட்டுப்பாடுகள் எவையும் விதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
மெசொபொத்தேமியாவில் இருந்த ஒரு கட்டுப்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் இடப்பெயர்வின் போது சிந்து வெளியில் உடனே நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஏனெனில் இங்கு வேண்டிய அளவுக்கு அதிகமாக நிலப்பரப்புக் காணப்பட்டதால் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மெசொப்பொத்தேமியாவில் கட்டுப்பாடுகள் சிலவற்றிற்குப் பழகிப்போய் இருந்த மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் அதை மீற வேண்டி ஆசை இருந்திருக்கலாம். அத்துடன் எவ்வித வசதிகளும் இல்லாது அனைத்தையும் விட்டுவிட்டு வந்ததனால் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டிய தேவையும் இருந்ததனால் அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கவேண்டியும் ஏற்பட்டிருக்கலாம்.
சுமேரியருடையதைப் போன்றும் அதனிலும் சிறப்பாகவும் வடிவமைக்கப் பட்ட கட்டடங்களும், கால்வாய்களும், குடியிருப்புகளும் சிந்துவெளியில் காணப்பட்டாலும் கூட எதனால் ஒருவரும் இரண்டையும் தொடர்புபடுத்தாது விட்டுள்ளனர் அல்லது வேண்டுமென்றே அந்த விடயத்தை உதாசீனப் படுத்துகின்றனர் என்றுதான் புரியவில்லை
அகழ் நிலம் 1
அகழ் நிலம் 2
மெசொபொத்தேமியாவில் எப்படி வீடுகளையும் கோவில்களையும் சுமேரியர் அமைத்தனரோ அதே போல் சிந்துவெளியிலும் அமைத்தார்கள். இன்னும் சொல்லப்போனால் இன்னும் அதிக தொழில் நுட்பத்துடன் வீடுகளையும் நகரங்களையும் வீதிகளையும் ஏன் மாடிவீடுகள் பாலங்களைக் கூட அங்கு கட்டி வாழ்ந்தார்கள். அங்கே செந்நிற உப்பு அளவுக்கதிகமாக இயற்கையாக விளைந்தது. அது மருத்துவப் பயன்பாட்டிற்க்குப் பெரிதும் உதவியது எனவும் கூறப்படுகிறது.
அவர்கள் சிந்து வெளிக்குச் சென்றதன் பின்னர் வனையப்பட்ட பானைகளிலும் மற்றைய மட்பாண்ட வகைகளிலும் சுமேரியரின் தொடர்ச்சி காணப்பட்டாலும் வரி வடிவங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. காலம் செல்ல அங்கு காணப்பட்ட வெண்ணிறக் கற்களைக் கொண்டும் கட்டடங்கள் கட்டப்பட்டன. ஆனால் மெசொபொதேமியாவில் எழுதப்பட்ட களிமண் தட்டுக்கள் சிந்து வெளியில் காணப்படவில்லை. ஆதலால் அவர்களுக்கும் இவர்களுக்கும் எத்தொடர்பும் இல்லை என நீங்கள் முடிவுகட்டுவது தெரிகிறது. அவசரம் வேண்டாம். சுமேரியர் இடம்பெயர்வதற்கு முன்பதாக புற்களிலும் ஓலை போன்றவற்றிலும் எழுத ஆரம்பித்திருக்கலாம். அதன் தொடர்ச்சி இங்கும் அவ்வாறே எழுதப்பட்டிருக்க வேண்டும்.
கால மாற்றம் அனைத்தையுமே மாற்றும் வல்லமை கொண்டது என்பது நீங்கள் அறிந்ததே.
சிந்து வெளியிலேயே மீண்டும் சங்கங்கள் அமைத்து அவர்கள் பேசிய மொழிக்கு வரிவடிவத்தை உருவாக்கியும் இருக்கலாம். அது தமிழ் மொழியாகவோ அன்றி அதன் ஆரம்ப மொழியாகவோ கூட இருக்கலாம்.
அவர்கள் ஓலைகளிலும் புற்களிலும் எழுதியதாலேயே சிந்துவெளியிலிருந்து அதிக அளவில் செய்திகளைப் பெற முடியவில்லை என்பது ஒருபுறமிருக்க அதிகளவில் ஆய்வுகள் செய்தால் எங்கே மெசொபோத்தேமியாவுக்கும் சிந்துவெளிக்கும் உள்ள தொடர்பு தெரிந்துவிடும் என்பதனாலோ அன்றி மேற்குலகு நன்கு தெரிந்துவைத்திருப்பதாலோ சுமேரியரின் ஆய்வில் காட்டும் ஆர்வத்தை சிந்துவெளியில் காட்டவில்லை. ஆய்வு செய்பவர்களும் கூட சிந்துவெளியில் ஓர் நாகரிகம் தோன்றி வளர்ந்ததாகவே கூறுகின்றனர்.
சிந்துவெளியின் காலம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளே. சிந்துவெளி நாகரிகத்தின் பெருநகரங்களான மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகியன 200 ஆண்டுகள் மட்டுமே தலை நகராக இருந்துள்ளதாகச் சான்றுகள் உள்ளன. ஒரு நாகரீகத்தின் தோற்றம் ஆரம்பிப்பது கற்காலத்திலிருந்து தானே அன்றி ஆற்றங்கரையில் குடியேறி 500 ஆண்டுகளில் உடனேயே நாகரிகம் அடைந்து விட முடியாது என்பதும் சாத்தியம் அற்றதும் ஆகும்.
சிந்துவெளி நாகரிக மாந்தர் மொகஞ்சதாரோவிலோ அல்லது கரப்பாவிலோ எதையும் புதிதாகக் கண்டு பிடிக்கவில்லை. விவசாயம் என்றாலும் சரி, செங்கல் சுடுவது சரி, கட்டடம் கட்டுவதெல்லாம் கூட சிந்து வெளிக்கு வந்த உடனேயே ஆரம்பித்துவிட்டனர். நுட்பமான பாலங்கள், பாதுகாப்புச் சுவர்கள், நவீன வசதிகளுடன் கூடிய கழிவறைகள், கழிவு நீரை நகரத்துக்கு வெளியே கொண்டு போவதற்கான வாய்க்கால்கள், இப்படி ஒரு நாகரிக வளர்ச்சியுற்ற சமுதாயத்தால் செய்ய முடிந்த அத்தனையையும் அவர்கள் செய்துள்ளனர் எனில் அத்தனையும் 500 ஆண்டுகளில் அதுவும் புதிதாக நாகரிகம் அடைய ஆரம்பிக்கும் இனத்தினால் செய்வது சாத்தியமற்றதே என்பது அனைவருக்கும் விளங்காதென்பது இல்லை.
அத்தோடு சிந்து வெளியிலும் அவர்கள் கோதுமையையும் பார்லியையும் தான் அதிகமாக விளைவித்தும் இருக்கின்றனர்.
சுமேரியரால் வனையப்பட்ட பானைகள் போன்றே இங்கும் பானைகளும் மட்பானங்களும் சிவப்பு கருப்பு நிறத்தில் சுடப்பட்டவையாக இருக்கின்றன. சவக்குழிகள் கூட சிந்துவெளியினதும் மேசொபோத்தேமியாவினதும் ஒரே மாதிரியாகவே அமைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்ச்சியாக ஈழம் வரை கால இடைவெளியில் தொடர்கின்றன.
விவசாயத்தின் வளர்ச்சி மெசொபொத்தேமியாவில் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் என்னும்போது சிந்துவெளி நாகரிகம் சிந்துவெளியில் தொடங்கியிருந்தால் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது சிந்துவெளியில் அவ்வினத்தவர் இருந்திருக்க வேண்டும். ஆனால் அங்கு கிட்டத்தட்ட அவர்கள் 500 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. கிட்டத்தட்ட கிறித்துவுக்கு முன் 2300 காலப்பகுதியில் மெசொப்பொத்தேமியாவிலிருந்து இடம்பெயர்ந்த சுமேரியர் 1800 களில் சிந்துவெளியை விட்டு மீண்டும் இடம் பெயர்ந்துள்ளனர்.
அதற்கான காரணங்கள், அங்கும் சிந்து நதியின் சீற்றம் மிகக் கடுமையாக இருந்ததனால் அடிக்கடி பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டது. அங்கும் கொஞ்சம் கொஞ்சமாக வறட்சியும் நிலத்தில் உப்பு விளையும் தன்மையும் ஏற்ப்பட்டதனாலும், அவர்கள் தமக்குள் ஏற்கனவே மெசொபொதேமியாவில் ஏற்பட்டிருந்த அனுபவம் காரணமாக சிந்துவெளியை விட்டு இயற்கை மழைவீழ்ச்சி உள்ள இடங்களை சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து இந்தியாவை நோக்கி இடம்பெயர்ந்தனர்.
இத்தனை காரணங்களும் அகழ்வாய்வுப் பொருட்களும் சாட்சியாக இருக்க, ஒன்றுக்கொன்று தொடர்பை ஏற்ப்படுத்தவோ அல்லது நிறுவ முடியாது உள்ளதெனில் அதற்கான உண்மைக் காரணம், அகழ்வாய்வில் ஈடுபடுவோர் ஒன்றில் அடிமுட்டாள்களாக இருக்க வேண்டும் அல்லது அதி துவேச மனப்பாங்கு உடையவராக இருக்க வேண்டும். ஓரிருவர் நடுநிலை வகிப்பவராக இருக்கும் பட்சத்தில், அரசோ அல்லது தம்மை உயர்வென என்னும் சமுதாயத் தலைவர்களோ அவர்களின் கூற்றை ஏற்க்காதிருப்பதும் மறைப்பதுவுமாகவே இருக்கின்றன.
அதைவிடக் கொடுமை தமிழர்களே சுய சிந்தனை அற்ற சமுதாயமாக பல்லாண்டுகாலம் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வந்துள்ளமையினால் ஒருவித தாழ்வு மனப்பாங்கும் அவர்களிடம் அழிக்கமுடியாமல் இருப்பதனால், மற்றவர் கூறுவதை மட்டுமே நம்பும் தன்மையும், தமிழர்களிடையே தொல்பொருள் ஆய்வை மேற்கொள்ளும் திறனுடையோர் அதிகம் இல்லாததும், இருப்பவர்களும் சுதந்திரமாக அவ்வாய்வுகளைத் தொடர முடியாத தடைகளுடன் இருப்பதுவும், இதற்கான பொருளாதார வலுவின்மையும், எம்மைப்பற்றி நாமே அறிவதற்குத் தடைகளாக உள்ளதுடன் மேற்குலகுடன் சரிநிகர் நின்று வாதிட்டு நிறுவ முடியாதவர்களாகவும் உள்ளமை தமிழினத்தின் சாபக்கேடே அன்றி வேறென்ன???
தமிழர்களுக்கு மொழிவாரியாகப் பெயர்கள் இருந்தது இல்லை. இடப்பெயர், காரணப்பெயர், உருவப்பெயர் என்பனவற்றாலேயே சுமேரியர் அடையாளைப்படுத்தப் பட்டுள்ளனர். திரவ இடத்தில் வாழ்ந்த மக்கள் என்பதனால் திராவிடர் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது சிவகணேசன் அவர்களின் சிந்தனை.
சுமேரியர் இடம்பெயர்ந்து இந்தியப் பெரு நிலப்பரப்புள் வந்தபின் தமிழர் என்னும் பெயர் பெற்றிருக்கலாம். அது பற்றிய தெளிவான பதிலை இன்னும் என்னால் அறிய முடியவில்லை. இந்தியாவுக்கு வந்த பின்னரே அரிசியும் அவர்களுக்கு அறிமுகமாயிற்று. அரிசி முதன்முதல் இற்றைக்கு 6500 ஆண்டுகளுக்கு முன்னர் தான் சீனாவில் கண்டுபிடிக்கப் பட்டது. எம்மில் பலர் அது தமிழர்களுக்குச் சொந்தமானது என எண்ணிக்கொண்டிருக்கின்றோம். புலம் பெயர் நாடுகளில் எம் இளஞ்சமூகம் சோற்றை விடுத்து மேற்குலகின் உணவுகளுக்கு அடிமையாகிப் போயினரோ அதுபோல் புதிதாக அரிசியைக் கண்டவுடன் அரிசிக்கு அடிமையானான் தமிழன். ஆனால் விவசாயத்தை மட்டும் எக்காலத்திலும் விடவே இல்லை. அத்துணை விவசாயம் தமிழனுடன் ஒன்றாக ஊறிப்போனது மட்டுமன்றி விவசாயமின்றி மற்றொன்றும் இல்லை என்னும் நிதர்சனத்தையும் தமிழன் நன்கறிந்திருந்தான் என்பதே பொருந்தும். அதனால்த்தான் இன்றும் பச்சைக் கடவுளுக்காக மெசொபோத்தேமியாவில் கொண்டாடப்பட்டு வந்த இயற்கைக்கான விழா தைப்பொங்கலாக மதபேதமற்ற விழாவாக தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இத்தோடு சுமேரியர் தமிழர் என்னும் பகுதியை நிறைவுக்குக் கொண்டு வந்து அடுத்த பகுதியில் ஏன் நான் சுமேரியர் தான் தமிழர் என்று கூறுகிறேன் என்பதற்கான ஆதாரங்களை உங்கள் முன் வைக்கலாம் என்று எண்ணுகிறேன்.
மனிதக் குடிப் பரம்பல் பற்றிய ஆய்வை பலர் செய்து ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர். மனிதன் பூரண வளர்ச்சி பெற்றதன் பின்னர் கூட கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக விலங்குகளை வேட்டியாடியே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தான். இதை நான் முன்பும் கூறியிருக்கிறேன். இத்தனை காலங்களாக அலைந்து திரிந்த மாந்த இனம் நிலையாக ஓரிடத்தில் இருக்கத் தொடங்கியது தானியம் என்னும் ஒன்றை அடையாளம் கண்டதினால் தான் என ஆய்வாளர் கூறுவதை மறுக்க முடியாது.
தன் தேவைக்கு உகந்தது எனக் கண்டு எப்போது தானியத்தை விளைவிக்க முயன்றானோ அன்றிலிருந்து தான் நாகரிகத்தின் பாதையில் அடியெடுத்து வைத்தான். அதிலும் இரு நதிகளுக்கிடையில் அகப்பட்டதனாலே போராடி, தம் நிலை தக்கவைக்க அனைத்தும் அறிய முயன்று, நாகரிகத்தின் உச்சிக்குத் தள்ளப்பட்டார் சுமேரியர் என்கின்றனர்.
மற்றைய இனம் விவசாயத்தில் ஈடுபடவில்லையா என நீங்கள் கேட்பது தெரிகிறது. மற்றைய இனங்கள் 1000, 2000, 3000 ஆண்டுகள் பின்னோக்கியே இருக்கின்றன. இது அனைத்து அகழ்வாய்வு செய்யும் பல்கலைக் கழகங்களால் நிரூபிக்கப் பட்ட ஒத்துக்கொள்ளப்பட்டதுமான கூற்று. ஒவ்வொரு நாகரிகத் தோற்றங்களின் முன்னே ஆற்றுப் படுக்கைகளும் தானியங்களும் உள்ளன.
மெசொபொத்தேமியா – கோதுமை – கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள்
சீனா – அரிசி – கிட்டத்தட்ட 6500 ஆண்டுகள்
தென் அமெரிக்கா – சோளம் – கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள்
இது கூட ஆண்டுக் கணக்குகள் வேறுபட்டாலும் கால இடைவெளியை யாரும் மறுக்வில்லை. தமிழர் தான் சுமேரியர் என்பதற்காக நான் வைக்கும் முதற் சான்று இந்த விவசாயம் தான். தமிழர்கள் போர்த்துக்கேயர் காலம் வரை விவசாயத்தை முதன்மை தொழிலாக மூலை முடுக்குகளிலெல்லாம் செய்து வந்தனர். ஏற்றுமதியிலும் பண்டமாற்றிலும் தன்னிறைவு கண்டு செல்வம் பெருக்கினர்.
பிரித்தானியர்கள் தம் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காக தமிழர் விழை நிலங்களை தரிசாக்கித் தம் வியாபாரத்தைப் பெருக்கினர். அதன் பின் தமிழன் விவசாயத்தை முதன்மையாக எண்ணவில்லை. புதியனவற்றிற்கு அடிமைப்பட்டுத் தன்னிலை மறந்தமையே இன்றைய அவல நிலைக்கும் காரணம் எனலாம்.
உலக வரலாற்றை பார்த்தோமானால் ஐரோப்பியர்கள் விவசாயத்தை அக்காடியன்ஸ் என்னும் மத்திய கிழக்கு நாடுகளில் முன்னர் வாழ்ந்த இனத்திடம் கடன் வாங்கியதாக கூறப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் உள்ளது. அக்காடியன்ஸ் சுமேரியரிடமிருந்து விவசாயத்தைக் கடன் வாங்கியதாகவும் மேற்குலகே ஒத்தும் கொள்கிறது. அப்படியானால் ஏன் நேரடியாகவே சுமேரியரிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறவில்லை. ஏனெனில் சுமேரியர் கறுப்பினம். அக்காடியன்ஸ் வெள்ளை இனம். எனவே கறுப்பினத்திடம் கடன்வாங்கியதாகக் கூறுவது அவர்களுக்கு இழுக்கு என எண்ணுவதே காரணம்.
அடுத்து தமிழர் எவரிடமும் விவசாயத்தைக் கடன் வாங்கியதாக எவருமே கூறவில்லை. தமிழரும் கூறவில்லை. எனவே விவசாயம் தமிழரின் பூர்வீகத் தொழில் என்பதனால் தொன்றுதொட்டு தொடர்ந்தே வந்திருக்கிறது. மெசொபொத்தேமியாவில் கிரீன் கொடசுக்கென பெரு விழா கொண்டாடப்பட்டிருக்கின்றது. அங்கே ஒரே ஒரு மழைக் காலம் தான் விளைச்சலுக்கானதாக இருந்ததனால் முதல் மழை பெய்யும் காலத்தை இயற்கையைப் போற்றும் காலமாகவும் கொண்டு, விழா ஐப்பசி மாதத்தில் எடுத்துக் கொண்டாடினர். அதிலிருந்து மூன்று மாதங்களில் அறுவடை செய்தனர் என கூறப்படுகின்றது.
அப்படியாயின் தை மாதம் அறுவடை முடிந்து தானியங்கள் தயாராகிவிடும். அதனால்த்தான் பின்னர் நாம் தைமாதத்தில் தைபொங்கலைக் கொண்டாடினோமா? இது பற்றிய ஆய்வுகளை மைக்கல் வூட் என்னும் அறிஞர் விரிவாக எழுதியுள்ளார்.
மெசொபொத்தேமியாவில் வாழ்ந்த மாந்த இனத்தை கெமிற்றிக் இனத்தவர் என அனைவரும் அடையாளப்படுத்துகின்றனர். ஐரோப்பிய இனத்தவரை இந்தோ யூரோப்பியர் எனக் கூறுகின்றனர். சுமேரியரைச் சூழ வாழ்ந்த வெள்ளை இனத்தவரை செமற்றிக் இனம் என வரையறுத்துள்ளனர். ஆபிரிக்க இனத்தை நீக்ரொயிட் இனம் என்று கூறுவதோடு நிறுத்திக்கொண்டு ஆபிரிக்காவின் வட பகுதியில் வாழும் கலப்பு இனத்தை இவர்களும் கெமிற்றிக் இனமாக இருக்கலாம் எனக் கூறுகின்றனர். கெமிற்றிக் இனம் நொண்செமற்றிக் இனமெனவும் அழைக்கப்படுகின்றது.
கெமிற்றிக் இனம் என்றால் கறுப்பாக கட்டையாக குண்டாக இருப்பார்கள் எனவும், செமற்றிக் இனம் வெள்ளையாக சாதாரண உடல் வாகுடன் இருப்பர் எனவும், இந்தோ யூரோப்பியர் உயரமாகவும் வெள்ளையாகவும் இருப்பர் எனவும், உயரமாகக் கருப்பாக இருப்பவர்கள் நீக்ரொயிட் இனம் என்றும் சிக்கார்கோ, கேம்பிரிச், பென்சில்வேனியா மற்றும் வேறு பல பல்கலைக்கழக ஆய்வாளர்களும் ஒத்துக்கொண்ட விடயம்.
இதில் தமிழர்கள் எந்த இனமாக இருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள். தமிழர்கள் கெமிற்றிக் இனத்துடனேயே பொருந்துகின்றனர். ஆனால் எந்த ஒரு பல்கலைக்கழமும் இதை வாய் தடுமாறியும் கூறவில்லை. அப்படிக் கூறினால் நாம் சுமேரியருடன் நெருங்கிவிடுவோம் என்பதனால் திட்டமிட்டே இதை மறைக்கின்றனர்.
நாம் கேம்பிரிச் பல்கலைக் கழகத்துக்கு இது தொடர்பான ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தோம். பல நாட்கள் அவர்களிடமிருந்து எவ்விதப் பதிலும் இல்லை. மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியவுடன் தாம் அதுபற்றிய ஆராட்சி செய்யவில்லை என பதில் அனுப்பினர். அப்படி மழுப்பலாகப் பதில் தரவேண்டிய அவசியம் என்ன?
சர்ச்சைக்குரிய விடயம் ஆனால் ஆழமாகப் பார்க்கவேண்டிய வரலாறு. திருமதி நிவேதா உதயராஜன் காத்திரமான ஆய்வு ஒன்றைச் செய்துள்ளார். சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர்கள்? யார் இந்த சுமேரியர்? இவர்களுடைய நாகரிக வளர்ச்சி எங்கே ஆரம்பமானது? இவர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அப்படியானால் தமிழர் யாருடைய வழித்தோன்றல்? இவற்றுக்கான விடைகளைத் தேடி விரிகின்றது இத்தொடர்…
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடியினர் தமிழர் எனக் காலங்காலமாக மற்றவர் கூறக்கேட்டு நாம் இறுமாந்திருக்கின்றோமேயன்றி அதன் உண்மையை ஒருபோதும் ஆராய விளையவில்லை. திரு சிவகனேசன் என்பவர் தமிழர் தொன்மை பற்றிய ஆய்வில் இறங்கியபோது அவரது சிந்தனையில் இருந்து எனது ஆய்வு அவரது வழிகாட்டலில் ஆரம்பமானது.
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை நாடோடிகளாகத் திரிந்த மாந்த இனத்தை கூர்ப்படையச் செய்ததே விவசாயம் என்னும் மாபெரும் கண்டுபிடிப்பு.
மெசொபோத்தேமியாவில் விவசாயத்தின் தோற்றம் மனிதனை நாகரிகம் என்னும் பாரிய நகர்வுக்கு இட்டுச்சென்றதுடன் பொறிமுறையாக்கப்பட்ட விவசாயம் சுமேரிய இனத்தை அதி உன்னத அறிவியல் வளர்ச்சிக்கு உந்தித்தள்ளியது. அந்த சுமேரியரின் வழித்தோன்றல்களே நாம் என்பதே என் அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமன்றி உலகின் முன் அதை நிறுவவேண்டியவர்களாகவும் உள்ளோம்.
தமிழின் தொன்மை என்பது காலத்தால் அளக்கமுடியாதது மட்டுமன்றி அழிக்க முடியாததும் கூட. ஆனாலும் உலகுமுழுதும் எம் தொன்மையையும் வல்லமைகளையும் கண்டு எப்படியாவது தமிழினத்தைப் பிரித்து ஆண்டு நிரந்தரஅடிமைககளாக்கிப் பயன் பெற்று தம் வாழ்வை மேம்படுத்த வசதியாக இனத்தின் கட்டுக்கோப்பைப் பூண்டோடுஅழித்துவிடக் கங்கணம் கட்டி நிற்கிறது.
நாம் எமது வல்லமைகளைப் புரிந்து கொண்டோமானால், நடைமுறைச் சாத்தியக்கூறு உள்ள பொதுவான தளத்தைஅடையாளங் கண்டு அதில் நிலை எடுத்து உலகை ஆள முடிந்தாலும் ஆச்சரியம் இல்லை. உதாரணமாகக் கல்வி தமிழருக்கு பொதுவான தளமாக இருந்தாலும் கூட அட்சரங்கள், எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கல்விகற்கும் வாய்ப்பைத் தவிர்த்து விட்டு படித்த முட்டாள்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற கற்பித்தல் முறைகளையே நாம் நாடி வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
உலகின் முதல் நாகரிக மாந்தன் எத்தனை ஆண்டுகளானாலும் அழிய முடியாத பண்பாட்டைக் கொண்டவன் உலகின் முதல் நகரை அமைத்தவன், உலக மக்களுக்கு எல்லாவற்றையும் கண்டுபிடித்துக் கொடுத்தவன், எல்லாவற்றுக்கும்மேலாக உலகிற்கு உன்னத மொழியை தந்தவன் என்று தமிழனின் பெருமை பற்றிக் கூறிக்கொண்டே போகலாம். அத்தோடு உயிர்மெய்த் தத்துவத்தைக் கண்டறிந்து உலக மக்களின் உயரிய வாழ்வுக்கான வழிவகைகளைச்சொன்னவனும் தமிழனே என்றால் மிகையாகாது.
ஆனாலும் நாம் எம் சிறப்பை அறிந்துவிடாதிருக்க எம்மையே முட்டாள்களாக்கி திசைதிருப்பி குமரிக்கண்டம் என்னும் ஒரு சிறிய வட்டத்துள் சுழல விட்ட மேற்குலகின் தந்திரமான செயலை எண்ணி வியக்காதிருக்க முடியவில்லை. அதற்க்கு சாமரம் வீசிக்கொண்டு தம்மினத்தின் சிறப்பறியாது தம்மைத்தாமே சிறப்புறச் செய்வதாக எண்ணித் தாழ்த்தும் தமிழரை நினைத்து வேதனை கொள்ளாதிருக்கவும் முடியவில்லை.
இந்த தொடர் கட்டுரையை நான் எழுதியதன் நோக்கம், உலகில் உன்னதமாய் வாழ்ந்த ஒரு இனம் இன்று உலகின்முன் உருக்குலைந்துகிடந்தும் ஒருவர்கூட எம்மினத்தின் தொன்மையை மற்றவர் முன் நிறுவவோ அதைக் காக்கவோ முனையவில்லை. நாம் மட்டுமே எமக்காகப் போராடி எம்மை முன்னிறுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு சிறிய தீப்பொறியே பெருநெருப்பை உண்டாக்க வல்லது. கற்றவர்கள் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் கற்றவர்களே தமிழுக்கு எதிரிகளாய் உள்ளனர்.
இதை வாசிப்போருள் ஒருவரோ ஒரு சிலரோ எம் தொன்மையைப் புரிந்துகொண்டு ஏதாவது செய்வதற்கு முன்வரமாட்டார்களா?? என்னும் நப்பாசைதான் என்னை இதை எழுதத் தூண்டியது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த தமிழர் தம் அடிமனதில் இன்னும் தம் இனத்தை உயர்த்திப் பார்க்கும் ஆசை கொண்டிருப்பார். அவர் தம் தொன்மையைக் கண்டறிந்து உலக நாடுகள் முன் அதை நிறுவித் தமிழரை மீண்டும் தலை நிமிரச் செய்ய வேண்டும் என்பதே என் அவா. யாழ் இணையத்தில் வெளிவந்த எனது ஆய்வு இப்போது வணக்கம் லண்டன் இணையத்தில் தொடராக வெளிவர உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக