ஞாயிறு, 5 மே, 2024

 தமிழிசை`::: தொலைந்து போன வரலாற்றின், தொடக்கப் புள்ளி :-

சங்க இலக்கியங்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம் ஆகிய நூல்களைக் கூர்ந்து நோக்கினால், தமிழர் இசையுடன் இசை{புகழ்} பட வாழ்ந்த வாழ்வியலைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அத்தகைய காலத்தில் (இன்றைய) இந்தியாவின் பல மொழிகள் தோன்றியிருக்கவில்லை, இன்னமும் சில மொழிகள் தமக்குரிய எழுத்துகளையோ அல்லது இலக்கண- இலக்கியங்களையோ கொண்டிருக்கவில்லை. நிலைமை அப்படியிருந்திருக்க, எவ்வாறு இன்றைய தமிழன் தமது இசையினை (செவ்வியல் இசையினை) இழந்து, சில `துக்கடா` என அழைக்கப்படும் சிறு துண்டளவிலான பாட்டுடன் மன நிறைவடைய வேண்டிய நிலை வந்தது. தமிழ் மண்ணில் தமிழ்ப் பாட்டுப் பாடியதற்காகவே மேடையே கழுவப்பட்டு, `தீட்டுக்` கழிக்கப்பட்டுப் பிறகு ஏனைய மொழிப் பாடல்கள் பாடப்படும் நிலைமை எவ்வாறு வந்தது? தமிழில் முருகனைப் போற்றிப் பாடியதற்கே , கருநாடாக இசைக் கச்சேரிகளில் சீர்காழி கோவிந்தராயன் எவ்வாறு ஓரங்கட்டப்பட்டார்?
👆இவை எல்லாவற்றுக்கும் காரணம் தமிழன் தனது மரபுசார்ந்த இசையினைப் பறிகொடுத்ததே! எவ்வாறு தமிழன் தனது இசையினைப் பறிகொடுத்தான்? இதைப் பற்றி `தமிழிசை வேர்கள்` என்ற நூல் விரிவாக ஆய்வு செய்கின்றது{நூலாசிரியர் - நா. மம்மது, எதிர் வெளியீடு}. தமிழன் இசையினைப் பறிகொடுத்ததன் முதற்படி எது தெரியுமா? இசை தொடர்பான தமிழ்ச் சொற்களை மறந்து, அவற்றுக்குப் பதிலாக வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியதே! இதுவே தொடக்கம். தமிழரே தமிழ்ச் சொற்களை மறந்து வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியதால் ஏற்பட்டது பெருங்கேடு.
`பண்` என்ற தமிழ்ச்சொல்லை மறந்து `ராகம்` பயன்படுத்தினோம், இவ்வாறே பின்வரும் தமிழ்ச் சொற்களை மறந்து அவற்றுக்கான வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தினோம்.
• பண் =ராகம்
• பதம் = ஸ்வரம்
•ஆரோசை = ஆரோஹணம் (ascending note)
•அமரோசை = அவரோஹணம் (dscending note)
• ஏழு பதங்கள் =சப்த ஸ்வரம்
ஏழு பாலைப் பண்கள்:-
1 செம் பாலை= ஹரி காம்போதி
2 படுமலைப் பாலை= நடபைரவி
3 செவ்வழிப் பாலை= (சுத்த மத்யம) தோடி
4 அரும் பாலை= சங்கராபரணம்
5 கோடிப் பாலை= கரஹரப்ரியா
6 விளரிப் பாலை= தோடி
7 மேற்செம் பாலை= கல்யாணி
பிலஹரி ராகம் = கொல்லிப் பண், மத்யமாவதி ராகம் = செந்துருத்திப் பண் என அடுக்கிக் கொண்டே போகலாம். கீழுள்ள படங்களையும் காண்க.{படங்களைப் பெரிதாக்கிப் பார்க்க, அவற்றின் மீது அழுத்துக}
தொலைத்த இடத்தில்தானே தேட வேண்டும். எனவே முதலில் தமிழ்ச் சொற்களை மீட்டு எடுத்துப் பயன்படுத்துவோம். அதுவே தமிழிசை மீட்பின் முதற்படி.
🙏 தமிழில் சொல்லிருக்க, வேற்று மொழிச் சொற்கள் ஏன்?
சொற்களைத் தொலைத்தால், மொழியினைத் தொலைப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  குழலூதும் கண்ணனுக்கு பாடலாசிரியர் பாடகர்கள் இசையமைப்பாளர் திரைப்படம் வாலி கே.எஸ். சித்ரா எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா மெல்ல திறந்தது ...