வெள்ளி, 1 ஜனவரி, 2016


சிவவாக்கியம் -021


சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே. 

நமது மூக்கு ஒன்று, வாசல்கள் இரண்டு. அவைகளில் நம் காற்றானது இடகலை, பிங்கலை, சுழுமுனை எனும் நாடிகளில் சன்னல் பின்னலாக ஓடி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்படியாக ஒவ்வொரு சுவாசத்திலும் பிராணனில் இருந்து நாலு அங்குலம் நஷ்டமடைகிறது. அதனால் பிணி மூப்பு ஏற்பட்டு ஆயுளும் மங்கி, மாண்டு போகும் மனிதர்கள் கோடானு கோடி. இப்படியாக ஓடிக் கொண்டிருக்கும் மூச்சை சந்திரகலை, சூரியக்கலை, வழியாக கட்டுப்படுத்தி பிரனாயமத்தினால் பிராண வாயுவைப் பெருக்கி ரேசகம், பூரகம், கும்பகம், செய்து உடம்பையும், உயிரையும் வளர்க்கவேண்டும். இதனை நன்கு அப்பியாசித்து இடபிங்களைகளை ஒழுங்குபடுத்தி சுழுமுனை எனும் வாசலைத் திறந்தது வாசியினால் தாரை ஊதுவதைப் போல் ஊதி மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை மேலேற்றி அனலுடன் கூட்டி சோதியில் சேர்க்க வல்லவர்கள் ஆனால் அழகில் சிறந்த அம்மையை இடபாகம் கொண்ட ஈசருடன் கூடி வாழலாம். 
*****************************************
சிவவாக்கியம் -022

தங்கம் ஒன்று ரூபன் வேறு தன்மையான வாறு போல்
செங்கன் மாலும் ஈசனும் சிறந்திருந்ததும்முளே
விங்களங்கள் பேசுவோர் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்ற நாமம் இந்த நாமமே. 


தங்கம் என்ற ஒரு பொருளில் இருந்தே கம்மல், வளையல், மோதிரம், தாலி, மூக்குத்தி போன்ற நகைகள் பல வகைகளில் உருவாகி வெவ்வேறு தன்மைகளில் விளங்குகின்றது. அதுபோலவே ஒன்றான பிரமத்தில் இருந்தே திருமாலும், ஈசனும் சிறந்த மெய்ப்பொருளில் அமர்ந்திருந்து நமக்குள்ளே இருக்கின்றார்கள். இதனை அறியாமல் விஷ்ணு பெரியது, சிவன் பெரியது என்று வியாக்கியானங்கள் பேசி வாழ்பவர்கள் வாழ்வு விளங்காது. நமக்குள் இருந்த பரம்பொருளே இப்பிரபஞ்சம் முழுவதும் நின்றிப்பதை அறிந்து சிவனும் ஈசனும் ஒன்றாகவே விளங்கும் ஓரெழுத்தை உணர்ந்து தியானியுங்கள். 
*****************************************
சிவவாக்கியம் -023

அஞ்செழுத்திலே பிறந்து அஞ்செழுத்திலே வளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தில் ஒரேழுத்து அறிந்து கூற வல்லிரேல்
அஞ்சல் அஞ்சல் என்று நாதன் அம்பலத்தில் ஆடுமே.


ஐந்து பூதங்களால் பிறந்து அந்த ஐந்து பூதங்களின் தன்மைகளால் வளர்ந்து அஞ்செழுத்தில் உண்மைகளை உணராது அதனை பஞ்சாட்சரமாக வெறும் வாயால் மட்டும் அஞ்செழுத்து மந்திரமாக ஓதி வரும் பஞ்சபூதங்களால் ஆன பாவிகளே பஞ்சபூதங்களும் நமக்குள்ளே பஞ்சாட்சரமாக இயங்கி வருகிறது என்ற உண்மையை உணர்ந்து, அறிந்து அதனை அஞ்செழுத்தால் அதற்குறிய இடத்தில் வைத்து ஓதி தியானியுங்கள். நமசிவய என்ற அஞ்செழுத்தில் ஒரேழுத்து என்ன என்பதை அறிந்து அதிலேயே நினைவால் நிறுத்தி செபித்து தியானிக்க வல்லவர்களானால் அந்த அஞ்செழுத்தும் ஒரேழுத்தாகி நிற்கும் அம்பலமான கோயிலில் ஈசன் அஞ்சல் அஞ்சல் என்று நடராஜனாக ஆடி நிற்பான். 
*****************************************
சிவவாக்கியம் -024

அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே
பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்
நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் தோன்றுமே 


அஞ்செழுத்தே ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்கலாகவும் நமது உடம்பில் இருந்து இயங்கி அனாதியான பஞ்சாட்சரமாக இருக்கின்றது. அதுவே சீவனாகி என்றும் அன்னதியாக உள்ள சிவனால் ஜீவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அதுவே பின்ஜெழுத்தான வாலையாக ஒரேழுத்தாகி உள்ளது. இதனை அறியாமல் பித்தர்களைப் போல் வெறும் வாயால் மட்டுமே பிதற்றுவதால் பயன் ஏது? அந்த அஞ்செழுத்தாக ஆகியிருப்பது இன்னது என்பதை அறிந்து கொண்டு நெஞ்சமாகிய கோவிலிலே அஞ்செழுத்து ஓதி உள்ளம் உருகி கண்ணீர் கசிந்து அங்கேயே நினைவை நிறுத்தி அதிலேயே நின்று தியானிக்க வல்லவர்க்கு அஞ்செழுத்தும் இல்லை ஆறாதாரங்களும் இல்லை. அஞ்செழுத்தும், ஆறு ஆதாரங்களில் உள்ள தெய்வ சக்திகளும் ஒன்றான சிவமாகி அனாதியாகத் தோன்றும்.
*****************************************
சிவவாக்கியம் -025

நீளவீடு கட்டுநீர் நெடுங்கதவு சாத்துறீர்
வாழ வேணு மேன்றல்லோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலன் ஓலை வந்த போது கையன்கன்று நிற்பிரே
ஆலமுண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே 


தான் மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்பதற்காக நீளமாக பெரிய வீட்டைக் கட்டி வேறு எவரும் உள்ளே நுழையாவண்ணம் பெரிய நிலைக்கதவுடன் அமைத்து வைத்திருக்கும் மனிதர்களே!! எத்தனை கதவுகள் அமைத்து சாத்தி வைத்தாலும் எமனின் ஓலையில் எழுதியபடி உயிர் போகும் தருணத்தில் எதைக் கொண்டும் தடுக்க இயலாமல் நம்மால் எதுவும் ஆகாது என கைவிரித்து நிற்பார்கள். ஆலகால விஷத்தை உண்டு அகிலம் முழுமையும் காத்த நீலகண்டராகிய ஈசன் பாதமும் அம்மை சக்தியின் பாதமும் நம்மிடம் உள்ளதை உணர்ந்து அத்திருவடிகளைப் பற்றி தியானியுங்கள். அத்திருவடி சத்தியமாய் நம்மை கரை சேர்க்கும். இது உண்மையே!!!! 
*****************************************
சிவவாக்கியம் -026

வீடெடுத்து வேள்வி செய்து மெய்யினோடுபொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டீர் சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடு பெற்ற நடுவர் கையில் ஓலை வந்து அழைத்திடில்
ஓடு பெற்ற அவ்விளை பெறாது காண் இவ்வுடலமே. 


மெய்யாகிய வீட்டை அறியாது பொய்யான வாழ்வை நம்பி, புது வீட்டைக் கட்டி வேள்விகள், செய்து புது மனை புகுவிழா நடத்தி, மாடு மக்கள் மனைவி சொந்தம் பந்தம் என அனைவரோடும் எப்போதும் இப்படியே இருப்போம் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களே! நல்லது கேட்டது என்பதை நடுவாக இருந்து தீர்ப்பளிக்கும் இறைவனின் இறுதி ஓலை எமன் கையில் கிடைத்து இவ்வுயிரை கொண்டு போனால் மண்ணால் செய்த ஓடு பெரும் விலை கூட பெறாது ஒரு காசுக்கும் உதவாது இவ்வுடம்பு என்பதனைக் கண்டு அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். ஆதலின் இவ்வுடலில் ஈசன் இருக்கும்போதே அவனை உங்களில் கண்டுணர்ந்து தியானியுங்கள். 
*****************************************
சிவவாக்கியம் -027

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்
ஓடம உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்
ஓடமும் உடைந்த பொது ஒப்பிலாத வெளியிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லையானதே 


ஒடமாகிய இவ்வுடம்பு இருந்தால்தான் அங்கும் இங்கும் ஓடி உலவலாம். இந்த உடம்பில்தான் உயிர் உள்ளது என்பதையும் அதிலேதான் இறைவன் இருக்கின்றான் என்பதையும் அறிந்து பிராணாயாமம், வாசியோகம், தியானம், தவம் போன்றவைகளை அறிந்து புரிந்து இவ்வுடம்பை உறுதியான கல்பதேகமாக மாற்றிக் கொள்ளலாம். இதை உணராது இவ்வுடலை விட்டு உயிர்போய் ஆகாயத்தில் மறைந்து விட்டால் அப்போது இவ்வுடலில் ஆடிக் கொண்டிருந்த உயிரும் இல்லை. அதனை மேய்த்துக் கொண்டிருந்த ஈசனும் இல்லை என்றாகி தம மனைவி மக்களோ, சொந்த பந்தங்களோ, யாரும் இல்லாது போய்விடும். ஆகவே இவ்வுடம்பில் உயிர் இருக்கும் பொழுதே இறைவனை அறிந்து தியானம் செய்யுங்கள். பிறவிப் பெருங்கடலை கடந்து கரை சேரலாம். 
*****************************************
சிவவாக்கியம் -028

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணில் ஆணின் சுக்கிலம் கருவில் ஓங்கும் நாளிலே
மன்னுளோரும் வின்னுளோரும் வந்தவாறு எங்ஙகனே 


நம் ஆருயிரில் ஆதி, அனாதி அந்தமாக உள்ளவன் சிவனே. அவனே அனாதிக்கும் முன் தோன்றிய அனாதியாக என்றும் நம் ஆன்மாவில் உறைகின்றான். பிறப்பதற்கு முன் எல்லா ஆன்மாக்களும் ஒரேழுத்தாக ஒன்றாகவே இருந்தது. அவைகளுக்கு ஆன, பெண் என்ற பேதம் ஏதும் கிடையாது. அது கண்ணில் நினைவாகத் தோன்றி ஆணிடம் சுக்கிலமாக உற்பத்தியாகி உருவாகின்றது. அப்போதே ஆன்மாவில் ஆண்டவன் நுழைந்து விடுகின்றான். பின்னரே உருவாகி ஆன்மா வளர்கின்றது. இப்படித்தான் மண்ணில் வாழும் மனிதர்களாகவும்,விண்ணில் சேரும் தேவர்களாகவும் அனைவரும் வந்தனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். 
*****************************************
சிவவாக்கியம் -029 

பண்டுநான் பறித்து எறிந்த பன்மலர்களை எத்தனை?
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை?
மிண்டனாய்த் திரிந்தபோது இரைத்தநீர்கள் எத்தனை?
மீளவும் சிவாலயங்கள் சூழவந்தது எத்தனை? 


தன் வாழ் நாளில் முன்பு வீணாய்ப் பறித்து எறிந்த பன்வகை மலர்கள் எத்தனையோ? வீணாய்ப்  செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனையோ? இளைஞனாய் திமிரெடுத்து திரிந்தபோது சிற்றின்பத்தில் இரைத்த நீர்கள் எத்தனையோ? இம்மாதிரி செய்ய தகாதவைகளை செய்து இதனால் ஏற்பட்ட பாவங்கள் அகல சுற்றி வந்த சிவாலயங்கள் எத்தனையோ என்பதை உணர்ந்தறியுங்கள். 
*****************************************
சிவவாக்கியம் -030 

அண்டர்கோன் இருப்பிடம் அறிந்து உணர்ந்த ஞானிகள்
பண்டரிந்த பான்மை தன்னை யார் அறிய வல்லரோ?
விண்டவேதப் பொருளை அன்றி வேறு கூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கைஎடுப்பது இல்லையே 


அண்டங்கள் யாவினுக்கும் அரசனான ஈசனை, அவன் கோனாக அமர்ந்து தனக்குள் ஆட்சி செய்யும் இடம் இதுவென அறிந்து, உணர்ந்த ஞானிகள் அவனையே அறிவதற்காக பட்ட பாட்டினையும், இழந்த பொருளையும், அலைந்த அனுபவங்களையும், அலைந்து தேடியதையும் யாராவது அறிய முடியுமா? வேதம்  வெளிப்படுத்தும் மெய்ப் பொருளை ஈசனாக அறிந்தவர்கள் தனக்குள்ளே இறைவனைக் கண்டு கண்ட அதே தெய்வம் என உணர்ந்தவர்கள் காணுகின்ற கோயில்களில் எல்லாம் தெய்வம் இருப்பதாக எண்ணி கைதொழ மாட்டார்கள். 
*****************************************

சிவவாக்கியம் (011–020)





சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்011 
அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சாந்தி தர்ப்பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கு மந்திரம்
எந்தை ராம ராம ராம ராம என்னும் நாமமே

அதிகாலைமதியம்மாலை என்று மூன்று நேரங்களிலும் நீராடி குளித்து விட்டு இயம நியமங்களுடன் இருந்து சந்தியா வந்தனம் தர்ப்பணங்கள் போன்றவைகளை செய்வதும்பெறற்கரிய தவங்கள் புரிந்து காயத்ரி செபம் செய்வதும்இதனால் வரும் பலன்களால் சிந்தையில் எப்போதும் ஞானம் ஒன்றையே வைத்து தியானம் செய்வதினால் வரும் பலன்களும் எந்தையாகிய ஸ்ரீ இராமனின் ராம மந்திர செபத்தை செய்வதனாலே கிடைக்கும். 
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்012 
கதாவு பஞ்ச பாதகங்களைத் துறந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதா விடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே.
செய்த பாவங்கள் யாவும் அகலவும்பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக  இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து  உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள். 
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்013
நானா தேதுநீய தேதுநடுவில் நின்றது ஏதடா?கோனதேதுகுருவதேதுகூறிடும் குலாமரே
ஆனதேதுஅழிவதேதுஅப்புறத்தில் அப்புறம்
ஈனதேத்றுராம ராம ராம என்ற நாமமே

நான் என்று ஆனது எதுநீ என்பது எதுஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்னகோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எதுகுருவாக அமைந்திருப்பது எதுஅது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எதுஅது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எதுஅது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள். 
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்014 
 
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே.

சாஸ்திரங்கள் வேத பாராயணங்கள் போன்றவைகளை தினமும் ஓதுகின்ற சட்டநாதப்பட்டரே!  உங்களுக்கு நோய்வேர்த் வந்து மாரடைப்பு ஏற்பட்டு வேர்த்து இறைத்து உயிர் ஊசலாடும் போது நீங்கள் சொல்லி வந்த வேதம் அந்நேரம் வந்து உதவுமோஉதவாதுஆதலால் ஒரு நொடி நேரமாவது உங்களுக்குள்ளே உள்ள மைப்போருளை அறிந்து வாசியோகம் செய்து அதையே தொக்கியிருந்து தியானம் செய்து வந்தீர்களானால் சோற்றுப் பையான இவ்வுடம்பிற்கு நோய் என்பது வராது. மரண காலத்திலும் ஈசன் கருணையினால் சக்தியும்முத்தியும்சித்தியும் கிடைக்க மெய்பொருளை அறிந்து தியானியுங்கள். தினம் தினம் தாங்கள் சொல்லி வந்த வேத சாத்திரங்களுக்கும் அதனால் சக்தி கிட்டி முக்திபெற்று சித்தி அடைவீர்கள்.

****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் பாடல்015  
தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

இறைவன் வெகு தூரத்தில் இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு  அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்லுபவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும்வின்னாகவும் எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும்பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! அவ்
இறைவன்  உனக்குள் உள்ளதை உணர்ந்து  தியானித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். 
*****************************************************
சிவவாக்கியரின் சிந்தனைகள்எண்: 016
நாலு வேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர் ஆழம் உண்ட கண்டநீர் அகத்துளே இருக்கவே காலன் என்று சொல்லோவீர் கனவிலும் மஃது இல்லையே.

ரிக்யஜூர்சாம,அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் நன்றாக மனப்பாடம் செய்து ஒதுவீர்கள். ஆனால் அந்த நான்கு வேதங்களும் சொல்லும் ஞான பாதம் எது என்பதை அறிவீர்களா? ஞானபாதம் எனும் மெய்ப்பொருளை அறிந்தவர்க்கும் காலன் என்ற எம் பயம் கிடையாது. அதை அறிந்து அதையே எண்ணி தியானிப்பவர்களுக்கு கனவில் கூட எம பயமோ எம வேதனையோ இருக்கவே இருக்காது. 
*****************************************************
சிவவாக்கியரின் சிந்தனைகள் எண் : :017
வித்தில்லாத சம்பிராதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை
தச்சிலாது மாளிகை சமைந்தவாற தெங்ஙனே
பெற்ற தயை விற்றடிம்மை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத பொது சிவனில்லை இல்லை இல்லையே.

பரம்பொருளே அனைத்துக்கு வித்தாக இருக்கின்றது. அதனாலேயே எல்லா சம்பிரதாயங்களும் மேலுலகிலும்,பூலோகத்திலும் அமைந்துள்ளது. அவனின்றி ஓரணுவும் அசையாதுதச்சன் இல்லாது மாளிகை அமையுமா?அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எழும்புமாநம் உடம்பில் உயிராகி வித்தாகி இருப்பவன் ஈசன்மானிடப் பிறவிகள் சிவனை வித்தாகக் கொண்டே நடமாடும் கோயிலாக உடம்பு அமைந்துள்ளது. பெற்ற தாயை மறந்து(விற்று)விட்டுமற்ற பெண்களை அடிமை கொள்ளும் பேதை மக்களே!! பெற்ற ஞானத்தை விற்று சிவன் உறையும் சீவர்களை அடிமைகளாக மாற்றுகின்ற பேத ஞானிகளே!!! சிவன் இல்லது போனால் அந்த சீவனும் இல்லையே!!! இந்த உடம்பும் இல்லையென ஆகிவிடும் என்பதனை உணர்ந்து அச்சிவனையே நினைத்து தியானம் செய்யுங்கள். 
*****************************************************
சிவவாக்கியரின் சிந்தனைகள் எண்:018 
அஞ்சும் மூன்றும் எட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும்
பஞ்சு போல் பறக்கும் என்று நான் மறைகள் பன்னுமே

'நம சிவய என்ற அஞ்செழுத்தும்ம் என்ற மூன்றெழுத்தும் சேர்ந்த ஓம் நமசிவயஎன்ற எட்டெழுத்து மந்திரமே அனாதியாக விளங்கும் ஈசனின் மந்திரம்இதுவே அநாதியான மந்திரம். இதனை நன்கு அறிந்து கொண்டு நம் உள்ளமாகிய கோவிலிலே இறுத்தி நினைந்து நீங்கள் கண்ணீர் விட்டு அழுது உருக் கொடுத்து செபித்து தியானியுங்கள். எந்த ஜென்மத்தில் செய்த பஞ்சமா பாதகங்களும்பாவங்களும் அனைத்தும் இம்மந்திர செபத்தால் காற்றில் பஞ்சு பறப்பது போல் நம்மை விட்டு பறந்துவிடும். எவ்வித பழிபாவங் களையும் செய்யா வண்ணம் நம்மை நன்னெறியில் நடக்கச் செய்யும் என்று நான்கு மறைகளும் சொல்லுகின்றது. ."ஓம் நமசிவய"
*****************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை பாடல்: 019
அண்டவாசல்ஆயிரம் பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூர்கொடியான வாசல் ஆயிரம்
இந்த வாசல் ஏழை வாசல் ஏக போகமான வாசல்
எம்பிரான் இருக்கும் வாசல் யாவர் கணவல்லரோ?

இவ்வுலகத்திற்கும் பிற உலகங்களுக்கும் ஆயிரமாயிரம் வழிகள் வாசல்களாக அமைந்திருக்கின்றது. எண் சாண் உடம்பு எண்ணாயிரம் கோடி உயிர்களிலும் கோடிக்கணக்கான வாசல்கள் கொண்டு இப்பூமியில் இலங்கி வருகின்றது. இதிலே இறைவன் பத்தாவது வாசலிலிருந்து உலாவுகின்றான். இந்த வாசல் ஏழை வாசலாகவும்,ஏகமாகி நின்று இறை இன்பம் கிட்டும் வாசலாகவும் எளிமையாக எல்லோரிடமும் மறைவாக இருக்கின்றது. இந்த பத்தாவது வாசலை அறிந்து யோகா ஞானத்தால் அவ்வாசலின் பூட்டைத் திறந்து எம்பிரானாகிய ஈசன் இருக்கும் வாசலை யாவர் காணவல்லவர்கள்.
*****************************************************
சித்தர் சிவவாக்கியர் சிந்தனை பாடல் :020 
சாம நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதிலும் சிவனை நீர் அறிகிலீர்
கம நோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன் எண்கள் ஈசனே

காலம் தவறாது நான்கு வேதங்களையும்சகல சாஸ்திரங்களையும் வெகு நேர்த்தியாகவும்ஒழுங்காகவும்மிக அழகாகவும்நன்றாக ஓதி வந்தாலும் சிவன் தங்களுக்குள் நீராக உள்ளதை அறியார்கள். தன உடம்பில் உயிர் இருப்பதையும்அதற்குள் சிவன் இருப்பதையும் அறிந்துணரமாட்டார்கள். தனக்குள் உட்பகையாக இருக்கும் காமம் என்ற நோயை அகற்றிவிட்டு அதே காமம் தோன்றும் இடத்தில் கருத்துடன் எண்ணத்தை வைத்து ஈசனை உணர்ந்து தியானித்தால் நம்மில் ஊமை எழுத்தாகி  சூட்சும உடம்பில் இருப்பான் எண்கள் ஈசன் என்பதை அறிந்து நீங்களும் உணர்ந்து தியானியுங்கள்.


சிவவாக்கியம் 01-10



சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் 001 

அரியதோர் நம சிவாயம் ஆதியந்தம் ஆனதும் 
ஆறிரண்டு நூறு தேவர் அன்றுரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம் 
தோஷ தோஷ பாவ மாயை தூர தூர ஓடவே.

மிகவும் அரியதான நவசிவய என்ற அஞ்செழுத்தே ஆதியும் அந்தமும் ஆகி உள்ளது. எண்சான் உடம்பைப் பெற்ற அறிய பிறவியை அடைந்த மனிதர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அன்றும் இன்றும் ஓதி வருவதும் அனைவருக்கும் எடுத்துரைத்த மந்திரம் 'ஓம் நமசிவயஎன்பதே. அதுவே அனைத்தும் அடங்கிய ஒரெழுத்தானதையும் என் உயிரில் வாலையாக  விளங்குவதையும் உணர்ந்து அந்த ஓரெழுத்தை தியானித்து அதன் உள்ளிருக்கும் சிவனை அறிந்து இதனை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்றே ஈசனை தியானித்து இந்த சிவ வாக்கியம் என்ற நூலைச் சொல்லுகின்றேன். இதனைப் படித்து உணர்பவர்களுக்கு எல்லா தோஷங்களும்பற்றிய பாவ வினைகளும்தொடரும் மாயைகள் யாவும் விலகி தானே வெகு தூரம் ஓடிவிடும்.
*****************************************************
சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள் 002

கரியதோர் முகத்தையுற்ற கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூற்கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே.

"கரியதோர் முகத்தையுற்ற கற்பகம்" இது உபதேசத்தினால் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள். இந்த ஒரு பொருளை உலகோர் உணர்வதற்கே இந்த சிவவாக்கியம் முழுவதும் சொல்லி இருக்கின்றார் சிவவாக்கியர். கரிய நிறமுடைய தும்பிக்கையை முகத்தில் உடையவரும் கேட்ட வரங்கள யாவையும் கற்பகத்தருவை போல் வழங்கும் கருணை உடையவரான கணபதியை கைகள் தொழுது வேண்டுகின்றேன். ஆய கலைகள் அறுபத்தி நான்கும்வேத ஆகம புராண சாஸ்திர நூல்களில் உள்ள உண்மைகளும்முக்கண் ஞான அறிவும் என் கருத்தில் தோன்றி இந்நூலில் உதிக்க வேண்டும். அறிஞர் பெருமக்களும்வயதில் சிறியவராயினும் ஞானம் பெற்றவர்களும்,யோக ஞானம் அனைத்தையும் கற்று உணர்ந்தவர்களும் மற்றும் யாவரும் பேயனாகிய யான் சொல்லுகின்ற சிவ வாக்கியத்தில் உள்ள தவறுகளை பொறுத்து அருள வேண்டும்.
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் 003

ஆன அஞ்செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

  அஞ்செழுத்துக்குள்ளே அண்டமாகிய இவ்வுலகமும் அகண்டமாகிய  ஆகாய வெளியும் அமைந்துள்ளது. ஆதி பராசக்தியினால் ஆன அஞ்செழுத்தே ஆதியாகிஅதிலேயே பிரம்மாவிஷ்ணுசிவன் என்ற மும்மூர்த்திகளும்  அமர்ந்திருக்கின்றனர். அந்த அஞ்செழுத்தின் உள்ளேயே அகாரமாகவும் மகாரமாகவும்அறிவும் மனமும்ஒளியும் இருளும்இறையும் மாயையுமாய் அமைந்துள்ளது. ஆதலின் இந்த அஞ்செழுத்தை அறிந்துணர்ந்து ஓதுங்கள். இந்த அஞ்செழுத்துக்குள் தான்  அனைத்து தத்துவங்களும் அடங்கி அது நமக்குள்ளேயே பஞ்சாட்சரமாகி உற்ற பொருளாய் உட்கலந்து இருக்கின்றது.
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள் :-004

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

அருட்பெருஞ் சோதியான ஆண்டவனாகிய ஈசனை அங்கும் இங்கும் ஓடி ஓடி தேடுகின்றீர்கள். அவன் உங்கள் உடம்பின் உள்ளே கலந்து சோதியாக ஓடி உலாவுவதைக் காணாதுஅவனையே நாடி பற்பல இடங்களுக்கும் ஓடி ஓடி தேடியும் அலைந்தும் காண முடியாமல் உங்கள் ஆயுள் நாட்கள் கழிந்து போய் கொண்டிருக்கிறது. அவனை ஞான நாட்டத்துடன் நாடி அச்சோதியாகிய ஈசன் நம் உடலிலேயே உட்கலந்து நிற்பதைமாண்டு போகும் மனிதர்கள் எண்ணற்ற கோடி பெறற்கரிய இம் மானிடப் பிறவியை பெற்ற இவர்கள் என்றுதான் சோதியாக இறைவன் தம்முள்ளே கலந்து நிற்பதை உணர்ந்து கொள்வார்களோதம்முளே உறையும் உயிரை அறியாமல் அவ்வுயிரை ஈசனிடம் சேர்த்து பிறவா நிலை பெற முயலாமல் அவனை அகிலமெங்கும் தேடி ஓடி நாடி வாடி இறந்து போகின்றனரே.
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்  005

"உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீறேல்
விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும்
அருள் தரித்த நாதர் பாதம் அம்மை பாதம் உண்மையே".

நம் உடம்பில் கழுமுனை நாடியில் மூலாதாரத்தில் தனஞ்செயன் எனும் பத்தாவது வாய்வு ஒடுங்கி பாம்பைப் போல் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கின்றது. இதையே யோகிகள் குண்டலினி சக்தி என்பர். தாயின் கர்ப்பத்திலிருந்து முழு உருவமாய் வெளிவரும் பொது தனஞ்செயன் என்ற இக்காற்றின் செயலால் தான் பிண்டம் பிறக்கின்றது. . அதன் பிறகு எச்செயலும் இன்றி மூலாதாரத்திலேயே ஒடுங்கி உள்ளது. உயிர் உடம்பை விட்டு போன பிறகு மூன்று நாட்கள் இருந்து இவ்வுடம்பை அழுகச் செய்தபின் கபாலத்தைப் பிளந்து வெளியேறும். .ஆதலால் இதனை நன்குஅறிந்து வாசியோகம் எனும் யோக தந்திரத்தால் கருத்தோடு இருத்தி அதனை எழுப்பி சுழுமுனையினால் முதுகுத் தண்டின் வழியாக மேலே ஏற்றி கபாலம் எனும் உச்சியில் உள்ள சகஸ்ரதளத்தில் கொண்டு சேர்த்து தியானம் செய்து வரவேண்டும். .இதனை முழுமுயற்சியுடன் பயிற்சி செய்து தொடர்ச்சியாக தியானத்தில் இருந்து வருபவர்கள் கிழவனாக இருந்தாலும் இளமை பெற்று மெய்பரவசத்தால் குழந்தையைப் போல் மாறுவர். அவர்கள் உடல் பொன் நிறமாக மாறும். இந்த யோக தந்திரத்தை முறையாக அனுசரித்து செய்து வந்தால் இறையருள் கிடைக்கப் பெற்று இன்புறலாம். . நம் உடம்பிலேயே சிவசக்தி திருவடியான் பாதம் மெய்ப்பொருள் என்பதுவே உண்மை
*****************************************************
சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள்-006 

வடிவு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனை முன்னர் வெட்டவேண்டும் என்பனே
நடுவண் வந்து அழைத்த பொது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தொட்டி கைக் கொடுப்பரே".

அழகிய பெண்ணைக் கண்டு மணமுடித்துக் கொண்டவன் அப்பெண்ணை வேறு ஒருவன் தொட்டு விட்டால்விடாதே அவனைப் பிடித்துக் கட்டுங்கள் .   முதலில் அவனை வெட்டவேண்டும் என்று அரிவாளை எடுப்பான். . அந்த அழகிய பெண்ணை விதிவசத்தால் எமன் வந்து உயிரை எடுத்துப் போய்விட்டால் என்ன செய்வாய். . மிக அழகிய பெண்ணாயிற்றே என்று அந்தப் பிணத்தை அப்படியே வைத்திருக்க முடியுமா?  அவ்வுடம்பில் பிணவாடை வீசி நாற்றமடிக்குமல்லவா . ஆகவே அதனை அந்த
அழகிய உடம்பைசுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று தோட்டியின் கையில் கொடுத்து
அவன்அந்த தோட்டிஅவ்வுடலை தொட்டுத் தூக்கி எரிக்கவோபுதைக்கவோ சொல்லுவார்கள். .அப்போது மட்டும் அந்த தொட்டியின் மீது கோபம் வருவதில்லையேஅது ஏன் என்று யோசியுங்கள். . அந்த அழகின் மீதிருந்த மோகமோ அன்போ எங்கே போயிற்று என சிந்தியுங்கள். . அப்போது புரியும் அழியும் பொருள்களின் மீதுள்ள ஆசை நிலைப்பதில்லை என்று.
*****************************************************
சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்-007

என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது இல்லையே
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது கொண்ட பின்
என்னிலே இருந்த ஒன்றை யான் அறிந்தது காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான் உணர்ந்து கொண்டேனே”.

எனக்குள்ளே ஒன்றான மெய்ப்பொருளாக இறைவன் இருக்கின்றான் என்பதை நான் முன்பு அறிந்து கொள்ளவில்லை. அப்பரம்பொருளை பல இடங்களில் தேடியும்நல்ல நூல்களைப் படித்தும்நல்லோரிடம் பழகியும்,நல்ல குருநாதர் மூலம் அது என்னிடமே இருப்பதை யான் அறிந்து கொண்டேன். . தனக்குள் இருந்த உயிரை அறிந்து அதனுள் இருக்கும் ஈசனை யார் காண வல்லவர்கள். . என்னிலே இருந்த அந்த மெய்ப்பொருளை அறிந்து அதையே என் உள்ளத்தில் இருத்தி தியானத்தில் இருந்துஇருந்து அந்த உண்மையை யான் உணர்ந்து கொண்டேன்.
*****************************************************
சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்-008

நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ
அனைத்துமாய் அகண்டமாய் அநாதி முன் அனாதியாய்
எனக்குள் நீ உனக்குள் நான் நினைக்கு மாற தெங்கனே

நான் தியானத்திலிருந்து நினைப்பது ஒன்றான மெய்ப் பொருளேஅது நீயேயன்றி வேறு ஒன்றையும் நான் கண்டது இல்லை. நான் தியானத்தில் அமர்ந்து  நான் என் நினைவை புருவ மத்தியில் நிறுத்தி பார்க்கும்போது அங்கு உன் நினைவைத் தவிர வேறு நினைவு இல்லை. நான் நினைப்பதாகவும்மறப்பதாகவும்நின்ற மனம் ஒரு மாயையோ,இவ்வுலகில் உள்ள அனைத்துமாகவும் எல்லாம் அடங்கியுள்ள ஆகாயமாகவும் அநாதி காலங்களுக்கும் முன் உள்ள அனாதியாகவும் உள்ளவன் நீயே. எனக்குள் நீ இருப்பதுவும் உனக்குள் நான் இருந்ததையும் உணர்ந்த பிறகு எல்லாம் உன்செயல் என்று அறிந்த பிறகு உன்னை நினைப்பது எவ்விதம் என் ஈசனேஉன்னை மறந்தால் தானே நினைக்க முடியும். உன்னை மறவேன் நானே!!!!
*****************************************************
சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்-009

மண்ணும் நீ விண்ணும் நீ மறிகடல்கள் ஏழும் நீ
எண்ணும் நீ எழுத்தும் நீ இசைத்த பண் எழுத்தும் நீ
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுளாடும் பாவை நீ
நண்ணும் நீர்மை நின்ற பாதம் நண்ணுமாறு அருளிடாய் “.

பூமியாகவும்ஆகாயமாகவும்ஏழு கடல் நீராகவும்காற்று நெருப்பு என பஞ்ச பூதங்களாக இருப்பவனும் நீயே. எட்டிரண்டு என்ற எண்ணாகவும்அகார உகார எழுத்தாகவும் ஆகி இசையுடன் கூடிய தேவாரப் பண்ணாகவும்ஏழு ஸ்வரங்களான சரிகமபதநி என்ற ராக எழுத்தாகவும் உள்ளவன் நீயே. கண்ணாகவும்கண்மணி யாகவும்கண்ணுள் ஆடும் பாப்பாவாகவும் ஆனவனும் நீயே. . இப்படி அனைத்துமாய் உள்ள உண்மையான பிரம்மா ஞானத்தை எனக்கு வழங்கி என்னுள் நீராகி நின்ற நினது திருவடி பாதத்தை என்றும் என் தியானத்தில் வைக்க அருள்செய் ஈசா!
*****************************************************
சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்-010

அரியும் அல்ல அயனும் அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமை செம்மை வெண்மையைக் கடந்து நின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமும் கடந்து நின்ற தூர தூர தூரமே

மெய்ப் பொருள் விஷ்ணுவுமல்லபிரம்மாவும் அல்ல. விஷ்ணுவாலும்பிரம்மாவாலும்
அடி முடி காண முடியாமல் அப்பாலுக்கப்பாலாய் நின்றவன் ஈசன். அவன் அதுவாகி அப்புறத்தில் அப்புறமாய் கருமை செம்மை வெண்மை நிறங்களைக் கடந்து நின்ற சோதியாகி காரணப் பொருளாய் நமக்குள்ளேயே இருக்கிறான். அச்சிவனே சீவனாக கருமையிலும் சிகப்பு வெள்ளை அணுக்களிலும் கலந்து நின்று உயிரும் உடலும் இயங்க காரணமாக இருக்கின்றான்.  அவனுடைய திருவடி நமக்குள் இருப்பதைஉணருங்கள். . அது பெரியதும் இல்லைசிறியதும் இல்லையாவிலும் நடுவாய் இருப்பது. அப்பாதத்தையே பற்றி நின்று தியானியுங்கள். அது துரியமாகிய ஆஞ்ஞா கமலத்தில் ஆகாயத் தத்துவத்தையும் கடந்து நிற்பதால் வெகு தூரமாய் தோன்றுகின்றது. இதனை தனக்குள்ளேயே அறிவை அறிந்து உண்மையை என்று உணர்ந்து தியானியுங்கள்.
*****************************************************

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...