புதன், 2 டிசம்பர், 2015

சிவஞானபோதம் 

சிவஞானபோதம்...!!!

தமிழ் கண்டதோர் மற்றுமொரு மாபெரும் படைப்பு. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் அவர்களால் இயற்றப்பட்ட இந்த நூலைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. காரணம் இக்காலத்திலும் வெறும் அறிவியலை மட்டுமே மற்ற மொழிகள் அனைத்தும் ஆராய்ச்சி செய்துக் கொண்டு இருக்கும் பொழுது, அறிவியலின் அடுத்த நிலையான ஆன்மவியலைப் பற்றி தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றது இந்நூல்...அதுவும் 12 சூத்திரங்களில். எனவே ஆன்மாவைப் பற்றி நாம் அறிய வேண்டும் என்றால் நிச்சயம் இந்த நூலினைப் பற்றிக் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது. சரி...இப்பொழுது சிவஞானபோதம் என்ன கூறுகின்றது என்றே காண்போம்.

சூத்திரம் 1: உலகத் தோற்றமும் வீழ்ச்சியும்


"அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின்
தோற்றிய திதியே ஒடுங்கி மலத்துளதாம்
அந்தம் ஆதி என்மனார் புலவர்"

பதவுரை:

அவன் - முதல் மனிதன்

அவள் - முதல் பெண்

அது - உலகம்

எனும் அவை - எனப்பட்ட அவை

மூவினைமையின் - மனிதனைப் படைத்தல், பெண்ணைப் படைத்தல், உலகைப் படைத்தல் ஆகிய மூன்று வெவ்வேறு செயல் திறனால்

தோற்றிய திதியே - படைக்கப்பட்டு இருக்கும் நிலையில்

ஒடுங்கி - தமது தூய நிலையில் இருந்து ஒடுங்கி

மலத்து உளதாம் - பாவத்தில் வீழ்ந்ததாகிய

அந்தம் - தூய நிலையின் முடிவே

ஆதி - பாவ நிலையின் தொடக்கம்

என்மனார் - என வழிவழியாகக் கூறுவர்

புலவர் - வேத அறிவில் புலமை பெற்றோர்.

விளக்கம்:

இறைவன் உலகையும் முதல் மனிதனையும் முதல் பெண்ணையும் மூன்று வகையான செயல்களால் படைக்கின்றார். அவர் மனிதனைப் படைத்த நிலை வேறு...பெண்ணைப் படைத்த நிலை வேறு...உலகைப் படைத்த நிலை வேறு. அவ்வாறு படைக்கப்பட்ட அவை, அவற்றிடம் இருந்த இயல்பான தூய நிலையில் இருந்து ஒடுங்கி தாழ்ந்த நிலைக்கு சென்று பாவத்தில் வீழ்ந்தது தான் பாவ நிலையின் தொடக்கம் என்று இறையறிவாளர் வழிவழியாகக் கூறி வருகின்றனர்.

இதனையே சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமாகிய திருஉந்தியார்,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41

என்று கூறுகின்றது.

சூத்திரம் 2: வீழ்ச்சியில் கடவுளது ஆட்சி


அவையே தானே ஆயிரு வினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

பதவுரை:

அவையே ஆய் - ஆண் பெண் உலகம் ஆகிய அவற்றைத் தோற்றுவித்தும்

தானே ஆய் - அவற்றைத் தன் ஆணையால் மறைத்துத் தானேயாகியும்

இரு வினையின் - தோற்றுவித்தல் மறைத்தல் ஆகிய இரு செயல்களால்

போக்கு - தம்மை விட்டுப் போக்குதலாகிய தோற்றுவித்தல்

வரவு - தம்மிடத்தில் சேர்த்தலாகிய மறைத்தல்

புரிய - ஆகியவற்றைச் செய்ய

ஆணையின் - அவை கடவுளது ஆணையிலிருந்து

நீக்கம் இன்றி - நீக்கம் இல்லாமல்

நிற்கும் அன்றே - நிலைத்து நிற்கும்.

விளக்கம்:

ஆண், பெண், உலகம் ஆகியவற்றைப் படைத்தும், அவற்றைத் தன் ஆணையால் மறைத்துத் தானேயாக நின்றும், படைத்தல் மறைத்தல் ஆகிய இரு செயல்களால் தம்மை விட்டுப் போக்குதலாகிய பிறப்பித்தல், தம்மிடத்துச் சேர்த்தலாகிய மறைத்தல் ஆகியவற்றைச் செய்யும் கடவுளது ஆணையில் இருந்து எதுவும் நீங்காமல் நிலைத்து நிற்கும்.

முதல் சூத்திரத்தில் பாவமாகிய மலத்தில் வீழ்ந்தமையால் இறைவனை அறியாத நிலைக்கு படைப்புகள் சென்றன என்றுக் கண்டோம். இப்பொழுது சில கேள்விகள் எழலாம், பாவத்தில் உள்ள அவற்றிற்கும் இறைவனுக்கும் தொடர்பு உண்டா? அவ்வாறு தொடர்பு இல்லை என்றால் அவை கடவுளின் அதிகாரத்துக்கு கட்டுப்பட்டவையா இல்லையா? இக்கேள்விக்கான விடையைத் தான் இங்கே விளக்கி இருக்கின்றார் மெய்கண்டார்.

இறைவனை உணராத நிலையில் மலத்தால் சூழப்பட்டு அவை இருப்பினும் இறைவனின் அதிகாரத்துக்கு அவை உட்பட்டவையே ஆகும். அப்படைப்புகளை உலகில் தோற்றுவிப்பதும் சரி பின்னர் மீண்டும் தன்னிடமே சேர்த்துக் கொள்வதும் சரி இறைவனின் ஆணையின் படியே நடக்கும். அவனின் ஆணையை மீறி எதுவும் இயங்குவது இல்லை.



சூத்திரம் 3: கடவுளாட்சியில் ஆன்மாவின் உண்மை


உளது இலது என்றலின் எனது உடல் என்றலின்
ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படில்
உண்டி வினை இன்மையின் உணர்த்த உணர்தலின்
மாயா இயந்திர தனுவினுள் ஆன்மா.

பதவுரை:

இலது என்றலின் - இல்லை என்று கூறுவதாலும்

எனது உடல் என்றலின் - என்னுடைய உடல் என்று (பிரித்துச்) சொல்வதாலும்

ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் - மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிகின்ற காரணத்தாலும்

கண்படில் - கண்ணுறக்கத்தில்

உண்டிவினை இன்மையின் - உணவும் வேலையும் இல்லாததாலும்

உணர்த்த உணர்தலின் - பிறிதொருவர் உணர்த்த உணர்தலாலும்

மாயா இயந்திர தனுவினுள் - மாயா இயந்திரமாகிய உடலுக்குள்

ஆன்மா உளது - ஆன்மா உள்ளது.

விளக்கம்:

இல்லை என்று மறுக்கின்ற காரணத்தினால் ஆன்மா உண்டு. என்னுடைய உடல் என்றுப் பிரித்துச் சொல்கின்றகாரணத்தினால் உடலுக்கு வேறாகிய ஆன்மா உண்டு. மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளின் வழியாகச் செயல்படுகின்ற ஐம்புலன்களின் ஒடுக்க நிலைகளை அறிவதால் ஐம்புலன்களுக்கு வேறான ஆன்மா உண்டு.

கண்ணுறக்கத்தில்(கனவில்) உடலுக்கு உணவும் வேலையும் இல்லாதிருப்பீனும், உணவும் வேலையும் இருந்ததாக அறிந்த ஆன்மா உண்டு. தானே அறிய இயலாமல் பிறிதொருவர் உணர்த்தியப் பின்பு அதை உணரக்கூடிய நிலையிலும் மாயா இயந்திரமாகிய உடலுக்குள் ஆன்மா இருக்கின்றது.

இங்கே நாம் முக்கியமாக காண வேண்டிய ஒரு விடயம் 'உணர்த்த உணர்தலின்' என்றச் சொல்லாடலையே ஆகும். உணர்த்த உணர்தலின் என்றால் - உணர்த்தினால் மட்டுமே உணர்ந்துக் கொள்ளும் என்றே பொருள் ஆகும்.

இறைவனை அறியாத நிலையில் ஆன்மா இருக்கின்றது. இந்நிலையில் ஆன்மா இறைவனை உணர வேண்டும் என்றால் இறைவனே ஆன்மாவிற்கு உணர்த்த வேண்டும். இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் இறைவனை அறிய முடியாது.

ஆன்மிகம் பேசுவோர் என்றுமே இறைவனை அறியலாம் என்றோ இறைவனைக் காட்டுகின்றேன் என்றோ கூறியது கிடையாது...மாறாக இறைவனை உணர மட்டுமே முடியும் அதுவும் அவன் உணர்த்தினால் மட்டுமே உணர முடியும் என்றே கூறி இருக்கின்றனர்.

மாணிக்கவாசகர் - 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' என்றே பாடிச் சென்றுள்ளார். அதாவது இறைவனின் தாளினை அறிந்து வணங்குவதற்கு இறைவனின் அருள் வேண்டும் என்றே அவர் கூறி உள்ளாரே அன்றி இறைவனை அவர் தேடிச் சென்று அறிந்துக் கொண்டார் என்றுக் கூறவில்லை.

ஆன்மிகம் பேசுவோர் 'இறைவன் எம்மை ஆட்க்கொண்டான்' என்றே தான் கூறி இருக்கின்றனர். அதைப் போன்றே இயேசுவின் சீடர்கள் யாரும் இயேசுவைத் தேடிச் செல்லவில்லை....அவரே தான் அவர்களைத் தேர்வு செய்தது. அதைப் போன்றே தான் பவுலின் கதையும், இயேசுவின் சீடர்களை கொலை செய்துக் கொண்டு இருந்த பவுல் பின்னர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு இறைத் தூதனாக மாறி சேவைப் புரிந்ததை வரலாற்றில் அறிகின்றோம்.

எனவே இறைவன் உணர்த்தாமல் ஆன்மாவால் அதனையும் சரி இறைவனையும் சரி அறிய முடியாது. அந்த அறியா நிலையில் தான் ஆன்மா இல்லை, இறைவன் இல்லை என்ற கருத்துக்களும் சரி மந்திரத்தால் இறைவனை கட்டுப்படுத்தலாம், மந்திரங்களும் சடங்குகளும் வலிமை வாய்ந்தவை என்ற எண்ணங்களும் சரி எழுந்து உழன்றுக் கொண்டு இருக்கின்றன.

சூத்திரம் 4: வீழ்ந்த ஆன்மா செயல்படும் விதம்


அந்தக்கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை
சந்தித்தது ஆன்மா சகசமலத் துணராது
அமைச்சர சேய்ப்ப நின்று அஞ்சவத்தைத்தே.

பதவுரை:

ஆன்மா - ஆன்மாவானது

அந்தக்கரணம் - மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக் கரணங்களாகிய

அவற்றின் ஒன்று அன்று - அவற்றில் ஒன்று அன்று

சகசமலத்து உணராது - சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் நிற்கிறது

அமைச்சரசு ஏய்ப்ப நின்று - அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் அரசனைப் போல் நின்று

அவை - அந்தக்கரணங்களை

சந்தித்தது - சந்தித்துச் செயல்படுவது

அஞ்சவத்தைத்தே - நனவு, கனவு, துயில், அறிதுயில், இன்துயில் ஆகிய ஐந்து அனுபவங்களில் ஆகும்.

விளக்கம்:

ஆன்மாவானது மனம், புத்தி அகங்காரம் சித்தம் ஆகிய அந்தக்கரணங்களாகிய அவைகளில் ஒன்று அன்று. சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் நிற்கின்றது. அமைச்சர்களைக் கொண்டு ஆட்சி செய்யும் அரசனைப் போல நின்று அந்தக்கரணங்களை ஆன்மா சந்தித்துச் செயல்படுவது நனவு, கனவு, துயில், அறிதுயில், இன்துயில் ஆகிய ஐந்து அவத்தைகளிலே ஆகும்.

மாயா இயந்திரமாகிய உடலுக்குள் இருக்கின்ற ஆன்மாவை அது உடலின் செய்கைகளை அறிவதாலும், உணர்த்த உணர்வதாலும் இருப்பதாக அறியலாம் என்று கூறுவது சரிதானா? பற்றுவது, சிந்திப்பது, துணிவது, தன்கண் கொள்வது முதலிய செயல்கள் உடலுக்கு உள்ளேயுள்ள மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணத்தின் செயலாகும் அல்லவா! என்ற சந்தேகம் எழலாம்.

அறிவது, பற்றுவது, முடிவெடுப்பது, துணிவது முதலியன மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய அந்தக்கரணங்களின் செயல்களே என்பதில் சந்தேகமில்லை.

நான் அறிந்தேன்! நான் பற்றினேன்! நான் முடிவெடுத்தேன்! நான் துணிந்தேன்! என்றுக் கூறும் பொழுது அந்தக்கரணங்களின் இயக்கத்திற்குக் காரணமான ஆன்மா ஒன்று உளது என்பது விளங்குகின்றது.

அந்தக்கரணம் ஆன்மாவின் செயலுக்குக் கருவியாகுமே தவிர, ஆன்மாவாகாது. கண் முதலிய கருவிகளின் வழியாகக் காணப்படுவதைப் பற்றுவது மனம். அதை இன்னதெனச் சிந்திப்பது சித்தம். சிந்தனையின் கண் இது தான் எனத் துணிவேன் என எழுவது அகங்காரம். துணிந்து தன் கண் கொள்வது புத்தி. இவ்வகையில் மனம் முதலிய நான்கும் ஆன்மாவாகிய அரசனுக்கு அமைச்சர்கள் போல் நின்று உதவுகின்றன.

ஆன்மாவிற்கு தன்னை உணரும் ஆற்றல் இல்லை என்பதை முன்னரே கண்டோம். தன்னை உணரும் ஆற்றல் அதற்குத் தோன்றாமல் போனதற்குக் காரணம், அது பிறக்கும் பொழுதே அதை மூடி மறைத்து இருக்கும் ஜென்மப் பாவமாகிய சகச மலமாகும். ஆகவே சகச மலத்திற்குட்ப்பட்ட ஆன்மா தன்னை உணரா நிலையில் அந்தக்கரணங்களின் துணைக் கொண்டு செயல்படுகின்றது. அந்தக்கரணங்கள் ஆன்மாவாகிய அரசனுக்கு ஏற்ற அமைச்சர்களாயிருந்து செயல்படுகின்றன. கண் இருப்போன் நோயின் காரணமாகக் காண இயலாமல் இருப்பது போன்று, சகசமல மறைப்பின் காரணமாக ஆன்மா தன்னை உணர மாட்டாமல் இருக்கின்றது.

சூத்திரம் 5: தன்னை உணரா ஆன்மா


விளம்பிய உள்ளத்து மெய் வாய் கண் மூக்கு
அளந்தறிந் தறியா ஆங்கவை போலத்
தாந்தம் உணர்வின் தமியருள்
காந்தக் கண்ட பசாசத் தவையே.

பதவுரை:

விளம்பிய - முன் சூத்திரத்தில் சொல்லப்பட்ட

உள்ளத்து - உள்ளே இருக்கும் ஆன்மாவினால்

மெய்,வாய்,கண்,மூக்கு - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளும்

அளந்து அறிந்து - தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அளவிட்டு அறிந்தும்

அறியா ஆங்கவை போல - தம்மையும் தம்மைச் செயல்பட வைக்கும் ஆன்மாவையும் அறியாதிருக்கும் ஐம்பொறிகளைப் போல

தாம் - ஆன்மாக்கள் தாமும்

தம் உணர்வின் - தமது உணர்வில் விளங்குகின்றன

தமி - முதல்வனாகிய கடவுளின்

அருள் - திருவருளினால்

காந்தம் கண்ட - காந்தத்தால் இழுக்கப்பட்ட

பசாசத்து அவையே - இரும்பினை ஒத்து ஆன்மாக்கள் செயல்படுகின்றன.

விளக்கம்:

முன் சூத்திரத்தில் சொல்லப்பட்ட உள்ளே இருக்கும் ஆன்மாவினால் மெய் வாய் கண் மூக்கு செவி ஆகிய ஐம்பொறிகளும் தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அறிந்தும், தம்மையும் தம்மைச் செயல்பட வைக்கும் ஆன்மாவையும் அறியாது இருக்கும் அவற்றைப் போல ஆன்மாக்கள் தாமும் தமது உணர்வில் விளங்குகின்றன. முதல்வனாகிய கடவுளின் திருவருளினால் காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பினை ஒத்து ஆன்மாக்கள் செயல்படுகின்றன. இரும்பிற்குத் தானே இயங்கும் இயக்கம் இல்லாதது போல, ஆன்மாக்களுக்கும் தாமே தம்மை உணரும் ஆற்றல் இல்லை. காந்தம் இழுக்க இரும்பு அதனோடு இணைவதைப் போன்று, கடவுள் உணர்த்த உணரும் ஆற்றலை உடையது ஆன்மா.

உடலின் உள்ளே இருக்கும் ஆன்மா 'உள்ளம்' என்றே அழைக்கப்படுகின்றது. உள்ளே இருக்கும் உள்ளமாகிய ஆன்மாவினால் இயக்கப்பட்டு, உலகத்திலுள்ள எல்லாவற்றையும் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று ஆன்மாவிற்கு அறிவிப்பவை ஐம்புலன்கள். அவ்வைம்புலன்களும் தமக்கு முன்னுள்ள பொருள்களை இப்படிப்பட்டவை என அளவிட்டு அறிந்தும், தம்மையோ தம்மைச் செயல்படவைக்கும் ஆன்மாவையோ அறியும் ஆற்றல் அற்றவைகளாய் இருக்கின்றன. அவற்றைப் போலவே ஆன்மாவும் தன்னையோ தன்னைச் செயல்பட வைக்கும் இறைவனையோ உணர்ந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றது. இவ்வாறு ஆன்மா தன்னை உணர்ந்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதற்குக் காரணம், அதை மூடி இருக்கும் சகசமலம் என்பதை முந்திய சூத்திரத்தில் சகசமலத்து உணராது என்ற பகுதியால் அறிந்தோம்.

அறியக்கூடிய ஆற்றல் ஆன்மாவிற்கு எப்பொழுதுமே இல்லாமல் போய் விட்டதா? என்ற கேள்வி எழுப்பப்படுமானால், அதற்கு விடை, 'நிலையாகப் போய்விடவில்லை' என்பதாகும். கடவுள் உணர்த்தினால் அதை உணரக் கூடிய தகுதி ஆன்மாவிற்கு உண்டு. ஆனால் கடவுள் உணர்த்தாமல் தானாக, கடவுளை உணரக்கூடிய ஆற்றல் ஆன்மாவிற்கு இல்லை. இதை ஒரு எடுத்துக்காட்டின் வழி கூற வேண்டுமானால் கடவுளை காந்தத்திற்கும் ஆன்மாவை இரும்பிற்கும் ஒப்பிடலாம். இரும்பு தானாகச் சென்று காந்தத்தை அடைய இயலாது, காந்தம் இழுக்கும் பொழுது காந்தத்தோடு இணையும் ஆற்றல் இரும்பிற்கு உளது.

காந்தத்தின் முன்னால் ஒரு இரும்பையும் ஒரு மரக்கட்டையையும் வைத்தால், இரும்பு காந்தத்தை அடைகின்றது. மரக்கட்டை அடைவதில்லை. இதைப் போல ஆன்மாவே கடவுளை உணர முடியும். மற்றப் பொருள்களுக்கு கடவுளை உணரும் ஆற்றல் இல்லை.

கடவுள் தம்முடைய திருவருளினால் ஆன்மாக்களுக்கு உணர்த்தும் பொழுது மட்டுமே, அவை தம்மையும் தம் தலைவனாகிய கடவுளையும் உணரும் ஆற்றலைப் பெறுகின்றன. அதுவரை அவை தம்மை உணரா ஆன்மாவாகவே உள்ளன.


சூத்திரம் 6: கடவுளை உணர இயலுமா?


உணர்வு உரு அசத்து எனின் உணராது இன்மையின்
இருதிறன் அல்லது சிவசத்தாம் என
இரண்டு வகையின் இசைக்கும் மன் உலகே.

பதவுரை:

உணர்வு உரு எனின் - (கடவுள்) ஐம்பொறிகளால் அளந்து அறிந்து உணரக்கூடிய உருவப் பொருளே என்றால்

அசத்து - நிலை இல்லாத அழியும் பொருள் ஆவான்

உணராது - கருவிகளால் உணர முடியாதவன் என்றால்

இன்மையின் - இல்லாத பொருள் ஆவான்

சிவசத்து - என்றும் நின்று நிலைபெறும் அன்பாகிய கடவுள்

இருதிறன் - உணரக்கூடியதும், உணரக் கூடாததும் ஆகிய இரண்டு தன்மைகளையும்

அல்லது என - அல்லாதவன் என்று

மன்உலகு - நிலைபேறுடைய மெய்யுணர்வு பெற்ற சான்றோர்கள்

இரண்டு வகையின் - இரண்டு வகையாலும்

இசைக்கும் - சொல்லுகிறார்கள்

விளக்கம்:

கடவுள் ஐம்பொறிகளால் அளந்து அறிந்து உணரக்கூடிய உருவப்பொருள் என்றால் உருவப் பொருள் யாவும் அழியக் கூடியதாய் இருப்பதைப் போன்று, கடவுளும் நிலை இல்லாத அழியும் பொருள் ஆவான். கடவுள் நமது கருவிகளால் உணர இயலாதவன் என்றால் இல்லாத பொருள் ஆவான். என்றும் நின்று நிலைபெறும் அன்பாகிய கடவுள், உணரக்கூடியதும், உணரக்கூடாததும் ஆகிய இரண்டு தன்மையையும் அல்லாதவன் என நிலைபேறுடைய மெய்யுணர்வு பெற்ற சான்றோர்கள் இரண்டு வகையாலும் சொல்கின்றார்கள். கடவுளுடைய அருள் பெற்றவர்களால் கடவுளை உணர இயலும். அருள் பெறாதவர்களால் கடவுளை உணர இயலாது.

கடவுள் உணர்த்தும் பொழுது மட்டுமே கடவுளை உணரக் கூடியது ஆன்மா என்பதாகப் பார்த்தோம். அப்படியானால் கடவுள் ஆன்மாவினால் உணரக்கூடிய பொருளா என்ற கேள்வி எழுகின்றது. கடவுள் உணரக்கூடிய பொருள் என்றால் அவனுடைய அழியாத்தன்மை கேள்விக்குரியதாக மாறி விடுகின்றது. எவ்வாறெனில், உலகத்துப் பொருள்களை எல்லாம் நமது ஐம்புலன்களால் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறிகின்றோம். அவ்வாறு அறியக்கூடிய பொருளாக, கடவுள் இருப்பானானால், உலகத்துப் பொருட்களைப் போல அவன் அழியக்கூடிய தன்மை உடையவன் என்று ஆகிறது. அது கடவுளுடைய தன்மைக்கு இழுக்காகும். கடவுள் அழியக்கூடிய பொருளாகிய அசத்து அல்லன். என்றும் அழியாப் பொருளாகிய சத்தாக நிற்பவனே கடவுள்.

அப்படியானால், கடவுள் அறிந்து உணர முடியாப் பொருளா? என்ற கேள்வி எழுகின்றது. அறிந்து உணர முடியாப் பொருள் என்றால் அப்படி ஒரு பொருள் உலகில் இருக்க இயலாது என்பது தெளிவு. ஆகவே கடவுள் இல்லாப் பொருளாகி விடுவான்.

உலகில் என்றும் நிலைபெறும் பெரியவர்களை இதைப் பற்றிக் கேட்டால், அவன் உணரக்கூடிய பொருளும் அல்லன்; உணர இயலாப் பொருளும் அல்லன்; உணர்தல், உணராமை ஆகிய இரண்டிற்கும் அப்பாற்பட்டு விளங்குபவன் கடவுள் என்று கூறுகின்றனர்.

இது எவ்வாறு பொருந்தும்? என்ற எண்ணம் ஏற்படலாம். அவன் தன்னை யாருக்கு உணர்த்துகின்றானோ அவர்களால் மட்டுமே அவனை உணர முடியும். மற்றவர்களால் அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவனை உணர்தல் இயலாது.

இதே கருத்து கிருத்துவத்திலும் வருவது குறிப்பிடத்தக்கது.

// சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.// - மத்தேயு 11:27

சிவம் என்பது அன்பைக் குறிக்கும்.

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

அன்பு என்ற உணர்வைப் பெற்றவர்களுக்கே அதன் தன்மை விளங்கித் தோன்றும். அன்பை உணராதவர்களுக்கு அன்பை விளக்கிக் காட்டவோ, நிலை நிறுத்தவோ மற்றவர்களால் முடியாது. என்றும் நிலை பெற்று விளங்கும் கடவுளாகிய சத்துப் பொருளும் அன்பாகிய சிவசத்தாகவே இருக்கின்றது. ஆகவே கடவுளை உணரக்கூடியவன் என்றும், உணர இயலாதவன் என்றும் இரண்டு வகையாகக் கூறலாம் என நிலைப் பெற்ற பெரியோர் விளக்கிக் கூறுகின்றனர்.



 சூத்திரம் 7: அறியும் தன்மை ஆன்மாவிற்கே


யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகலின்
சத்தே அறியாது அசத்து இலது அறியாது
இருதிறன் அறிவுளது இரண்டலா வான்மா.

பதவுரை:

சத்து எதிர் : என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர்

யாவையும் சூனியம் ஆகலின் : எல்லாப் பொருள்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே ஆதலால்

சத்தே அறியாது : நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாதலின் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன்

அசத்து இலது அறியாது : அழியக்கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே இது எதையும் அறியாது.

இரண்டலா : என்றும் நிலைத்திருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய கடவுளும் முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும், ஆகிய இரண்டும் அல்லாமல்

ஆன்மா : குறை அறிவும் அழியாமையையும் உடைய சதசத்தாகிய ஆன்மா

இருதிறன் அறிவுளது : சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டுள்ளது.

பொருள்:

என்றும் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளின் முன்னர் எல்லாப் பொருட்களும் அழிந்து ஒழியக் கூடியவைகளே. ஆதலால் நிலைத்திருக்கும் ஒன்றாகிய கடவுளே முற்றறிவு உடையவனாகையால் இன்னொன்றை அறிய வேண்டிய அவசியமற்றவன். அழியக் கூடிய பொருளுக்கு அறியுந் திறன் இல்லை. ஆகவே அது எதையும் அறியாது. என்றும் நிலைத்து இருக்கும் முற்றறிவுடைய சத்தாகிய இறைவனும், முழுவதும் அழியக்கூடிய அறிவற்ற அசத்தாகிய உலகப் பொருளும் அல்லாமல், குறை அறிவும் அழியாமையும் உடைய சதசத்தாகிய ஆன்மா, சத்தாகிய கடவுளையும் அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக் கூடிய தன்மையைக் கொண்டு உள்ளது.

கடவுளுடைய அருள் இல்லாவிட்டால் கடவுளை உணரவோ, உணர்ந்து தொழவோ ஆன்மாவிற்கு இயலாது என்று கூறும் பொழுது, ஆன்மா எப்படிப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. அதே நேரத்தில், தன்னுடைய அருளால் ஆன்மாவிற்கு உணர்த்தும் கடவுள் எப்படிப்பட்டவன்? என்ற கேள்வியும் எழுகின்றது. கடவுள் என்றும் அழியாது நிலை நிற்கும் சத்துப் பொருள் ஆவான். அவன் இன்றி எப்பொருளும் நிலை பெறுவதில்லை. என்றும் நின்று நிலைக்கும் கடவுள் பிறிதொன்றை அறிய வேண்டிய அவசியமற்ற, முழுவதும் அறியும் முற்றறிவு உடையவன் ஆவான்.

சத்தாகிய கடவுள் அல்லாத மற்ற உலகப் பொருள்கள் அழியக்கூடியவை. பிறிதொன்றை அறியும் திறனும் அற்றவை. ஆகவே, அவை அசத்துப் பொருள்களாகும். சத்தாம் கடவுளும், அசத்தாம் உலகப் பொருளும் ஆகிய இரண்டும் அல்லாத மூன்றாவது பொருள் ஒன்று உண்டு. அது கடவுளைப் போல் முழு அறிவுடையதாக அல்லாமல் குறை அறிவு உடையதாகவும், உலகப் பொருளைப் போல் அழியக் கூடியதாக அல்லாமல் அழியாமையை உடையதாகவும், சத்தும் அசத்தும் அல்லாமல் இரண்டன் தன்மைகளையும் கொண்டது சதசத்தாகிய ஆன்மா ஆகும். இந்த ஆன்மாவே சத்தாகிய கடவுளையும், அசத்தாகிய உலகப் பொருளையும் அறியக்கூடிய தன்மையைக் கொண்டது. எனவே கடவுள் வந்து உணர்த்தினால் உணர்வுப் பெறக் கூடிய தன்மை ஆன்மாவிற்கு உண்டு.



சூத்திரம் 8 : ஆன்ம மீட்பு


ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்து எனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

தம்முதல் - தமக்கு முதல்வனாகிய இறைவன்

ஐம்புல வேடரின் வளர்ந்து - மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து

அயர்ந்தனை என - உன்னையும் உன்னைப் படைத்த இறைவனையும் அறியாது மயங்கி உள்ளனை என்று

குருவுமாய் - குருவாக உலகத்தில் வந்து

தவத்தினில் - ஆன்மாவிற்காகத் தான் துன்பத்தை ஏற்றுத் தன்னுயிர் தானறப் பெறுதலாகிய தவத்தினில்

உணர்த்த - ஆன்மாவிற்கு உணர்த்திக் காட்ட

விட்டு - ஆன்மாவானது தனது பாவத்தை விட்டுப் பிரிந்து

அன்னியம் இன்மையின் - ஆன்மாவிற்கு இறைவனோடிருந்த பிளவு நீக்கப்பட்டமையால்

அரன் - பாவத்தை அரித்தெடுப்பவனாகிய இறைவனின்

கழல் - திருவடியைச்

செலுமே - சென்று அடையும்.

விளக்கம்:

தமக்கு முதல்வனாகிய கடவுள் ஆன்மாவை நோக்கி 'நீ மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புல இச்சைகளாகிய வேடருடன் வளர்ந்து, இப்பொழுது இருக்கும் இழி நிலையை அடைந்தாய். நீ யார் என்பதையும், எங்கிருந்து வந்தாய் என்பதையும் அறியாது மயங்கி விட்டாய்' என்று குருவாக உலகில் வந்து, ஆன்மாவை மீட்பதற்காகத் தான் ஏற்றுக் கொள்ளும் துன்பமாகிய தவத்தினால், ஆன்மாவிற்கு உண்மையை உணர்த்திக் காட்ட, ஆன்மாவானது தன் பாவ நிலையை விட்டுத் தனக்கும் இறைவனுக்கும் இடையேயுள்ள பாவமாகிய பிரிவினை நீக்கப்பட்டு மீட்கப் பட்டமையால் பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவனின் திருவடியைச் சென்று அடையும்.

ஆன்மாவினால் மட்டுமே கடவுளையும், உலகப் பொருளையும் அறிந்து உணர்ந்து கொள்ள இயலும். உலகப் பொருளை அறிந்துக் கொள்வதில் ஆன்மாவிற்கு இடையூறு ஒன்றும் இல்லை. ஆனால் கடவுளையும் தன்னையும் அறிந்துக் கொள்ள இயலாமல் சகச மலத்தினால் அது மறைப்புண்டு இருக்கின்றது. சகசமலம் ஆன்மாவை அதனுடைய பிறப்பில் இருந்தே தொடர்ந்து வருகின்றது. ஆகவே, ஆன்மா தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றது. இறைவன் வந்து சகசமல மறைப்பை நீக்கி ஆன்மாவை விடுவிக்க இயலும்.

இதை ஒரு எடுத்துக்காட்டின் வாயிலாக விளக்கலாம். செம்பில் களிம்பு சேர்வது இயல்பு. செம்பில் சேரும் களிம்பை நிலையாக நீக்குவது எவ்வாறு?

களிம்பே சேராத பசும்பொன் கட்டி ஒன்றை எடுத்து, அக்னிக் குகையிலே (உலோகம் உருக்கும் பாத்திரத்திலே) அதை உருக்கி, உருகி நிற்கும் அதனுடன் செம்பையும் சேர்த்தால், செம்பு அதனோடு சேர்ந்து உருகி இரண்டும் ஒன்றாகி, ஒரு புதிய உலோகம் கிடைக்கின்றது. இந்தப் புதிய உலோகம் களிம்பு சேரக் கூடிய செம்பும், களிம்பு சேராத பொன்னும் சேர்ந்து உருவானதாயிருந்தாலும், இவ்வுலோகத்தில் உள்ள செம்பில் களிம்பு சேர்வதில்லை. ஏனென்றால் அச்செம்பு பசும்பொன்னுடன் சேர்ந்து நிற்கிறது.

இதைப் போலவே மலத்துளதாம் ஆன்மாவை மீட்க, மலம் சிறிதுமற்ற இறைவன் தவமாகிய அக்னிக் குகையிலே இறங்குகின்றான். இறங்கி, ஆன்மாவிற்காக உருகி நிற்கின்றான். அவனோடு இணைக்கப்பட்ட ஆன்மாவும் தன்னுடைய மலங்களுக்காக உருகிக் கண்ணீர் வடித்து இறைவனுடன் இணைகின்றது. அப்பொழுது மலமறைப்பு ஆன்மாவை விட்டு நீங்கி ஆன்மா இறைவனின் சாயலைப் பெற்றுத் தன்னை மீட்டுக் கொண்ட இறைவனை அடைகின்றது.

 இறைவனாகிய பசும்பொன்னுடன் இணைந்திருக்கும் செம்பாகிய ஆன்மாவை விட்டு, களிம்பாகிய மலம் நீங்குகின்றது.

மன்னனின் மகன் காணாமற் போய்க் காட்டிலே வேடர்களோடு வாழ்கின்றான், வேடர்களோடு வாழும் மன்னர் மகன் தன்னையும், தான் அரச குமாரன் என்பதையும், தனது தந்தை ஆட்சி செய்யும் மன்னர் என்பதையும் மறந்து தன்னை ஒரு வேடர் குடியில் தோன்றிய வேடனாக நினைத்து வாழ்கின்றான்.

வேடர் குடியில் வாழும் தன் மகனுக்கு அவன் யார் என்பதை உணர்த்தி, அரண்மனைக்கு அழைத்து வர அரசருக்கு வாய்ப்பு நேரிடுகிறது. அரச கோலத்தில் தான் சென்றால் தன்னைப் பார்த்து அவன் பயந்து ஓடிவிடக் கூடும் என்று எண்ணிய அரசன், தன் மகன் வாழும் நிலையிலுள்ள ஒரு வேடனைப் போல் உருவங்கொண்டு, மகனைத் தேடி காட்டிற்கு வருகின்றான். காட்டிலே வேடர் குடியில் தன மகனைச் சந்தித்து, " நீ வேடர் குடியைச் சார்ந்தவன் அல்லன்; ஆட்சிக்குரியவன். ஆகவே இந்த வேடர் தொடர்பை விட்டு அரண்மனைக்குத் திரும்பு" என்று அவனுக்கு உண்மை நிலையை அறிவுறுத்துகின்றான். வேடர் குடியிலிருந்த மன்னர் மகன் தன்னையும் தன் தலைவனையும் உணர்ந்து அரண்மனைக்குத் திரும்பும்படியாக அரசனைப் பின்பற்றுகின்றான்.

இறைவன் ஆன்மாவை மீட்டுக் கொண்ட தன்மையும் இவ்வாறே விளக்கப்படுகிறது.

முதல் மனிதனானவன் பாவத்தில் வீழ்ந்ததை சைவ சித்தாந்த சாத்திரங்களில் முதல் சாத்திரமான திரு உந்தியார் பின் வருமாறுக் கூறுகின்றது.

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடி படர்ந்து
அத்தி பழுத்தது என்று உந்தீ பற
அப்பழம் உண்ணாதே உந்தீ பற - 41


அவ்வாறு பாவத்தில் வீழ்ந்து ஐம்பொறிகளான வேடர்களுடன் வாழ்ந்து வரும் மனிதனை மீட்க இறைவன் மனித உருக் கொண்டு மண்ணில் வந்தான் என்றே போற்றிப் பஃறொடை கூறுகின்றது

இறவா இன்பத்தெமை இருத்த வேண்டிப்
பிறவா முதல்வன் பிறந்தான் - போற்றிப் பஃறொடை 69

அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற – திருஉந்தியார் 1
 

சிலர் இறைவன் மனிதனாகப் பிறக்கவில்லை; அருளே உருவாக ஒரு தோற்றம் மட்டுமே கொண்டான் என எண்ணுகின்றனர். அதற்கு விடையாய், இறைவன் நம்மைப் போன்ற மனித உருவம் கொண்டு பிறந்தான் என்பதை சைவ சித்தாந்த சாத்திரங்களில் ஒன்றாகிய சங்கற்ப நிராகரணம் கூறுகின்றது.

அருளுரு என்ற பொருளினை ஆயின்
மாயா உருவினன் மாயா உருவினை
ஏயான், எய்ந்தவர் எம்மனோரே - சங்கற்ப நிராகரணம் (சைவவாதி நிராகரணம் 25-27)


அவ்வாறு மனித உரு எடுத்து வந்த இறைவன் மனிதன் வீழ்ந்திருந்த பாவத்தை அறுக்க வந்தான் என்பதனை,

முத்தி முதற்கொடிக்கே மோகக் கொடிபடர்ந்
அத்தி பழுத்த தருளென்னுங் – கத்தியினால்
மோகக் கொடியறுக்க முத்திப் பழம் பழுக்கும்
ஏகக் கொடி எழுங்காண் இன்று’ – திருக்களிற்றுப்படியார் – 93



என்றே திருக்களிற்றுப்படியார் கூறுகின்றது.


சகசமலத்திலிருந்து ஆன்மாவை விடுவிக்கும் முயற்சியில் துன்பத்தை ஏற்றுக் கொள்ளும் தவத்தை இறைவனோடு இணைத்துக் கூறுகின்றது சைவ சித்தாந்தம். உலக மக்கள் எல்லோரும் செய்த தவத்தை விட உலக மக்களுக்காக இறைவன் செய்த தவமே மிகவும் உயர்ந்தது என்பதை,


மூலையிருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியரென்று உந்திப்பற
தவத்தில் தலைவரென்று உந்திப்பற - திரு உந்தியார் 12


என்று எவ்வித ஐயத்திற்கும் இடமின்றிச் சித்தாந்த சாத்திரத்தின் முதல் நூலாகிய திருஉந்தியார் கூறுகின்றது.

சகசமலமாகிய மூலையிருந்தாரை விடுவித்து அம்பலமாகிய முற்றத்தே கொண்டு நிறுத்தியவராகிய இறைவன் மிகவும் பெரியவர். எல்லாத் தவங்களிலும் அவர் தவமே தலைமை பெற்றது. அதுவே ஆன்ம மீட்பை மக்களுக்கு எல்லாம் அருளுவது என்பன விளக்கப்படுகின்றன.


பின்குறிப்பு:

1) 'தவத்தினில் உணர்த்த விட்டு' என்பன இங்கு சற்று ஆழ்ந்து நோக்கத்தக்கது. விட்டது ஆன்மா, உணர்த்தியது இறைவன்.

தவம் இறைவனுடைய தவமா? என்ற ஐயம் சிலருக்கு ஏற்படலாம். விட்டது ஆன்மா என்பதில் அவர்களுக்கு ஐயமில்லை.

விட்டது எதை? மலத்தை.

விடுவதற்கு முன் ஆன்மா மலத்தைப் பற்றி இருந்ததா? ஆம்.

அந்நிலையில் சகசமலத்தில் உள்ள ஆன்மா தன்னையும் இறைவனையும் உணர இயலுமா? இயலாது என்பது முன்னரே 'சகசமலத்து உணராது' என்பதின் மூலம் விளக்கப்பட்டு உள்ளது.

தன்னையும் இறைவனையும் உணராத ஆன்மா எவ்வாறு தவம் செய்யப் புறப்படும். ஆகவே தவம் ஆன்மாவின் தவமன்று. தவத்தில் தலைவராகிய இறைவனுடைய தவமேயாகும்.

2) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

3) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
You might like:



சூத்திரம் 9 : ஆன்ம முயற்சி


ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினில் சிந்தை நாடி
உராத்துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத்
தண்ணிழலாம் பதி விதி எண்ணும் அஞ்செழுத்தே.

பதவுரை:

ஊனக்கண் பாசம் உணராப் பதியை - ஐம்புல வேடர்களில் ஒன்றாகிய புறக் கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா பதியாகிய இறைவனை

ஞானக் கண்ணினில் - இறைவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால்

சிந்தை நாடி - ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில்

உரா - யாராலும் ஏறிச் செலுத்த (ஊர்ந்து செல்ல) இயலாத

துனை - மிக வேகமுடைய

தேர்த்து என - பேய்த் தேரைப் (கானல் நீர்) போல

பாசம் ஒருவ - பாசம் விரைந்து நீங்க

தண்ணிழலாம் பதி - ஆன்மாக்களின் பாவம் ஆகிய வெப்பம் தணியக் குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான்

விதி எண்ணும் - அவனை முறைப்படி இடை விடாது தியானிப்பது

அஞ்செழுத்தே - ஐந்து எழுத்தின் உட் பொருளின் வழி ஆகும்.

பொருள்:

ஐந்து வேடர்களில் ஒன்றாகிய புறக்கண் கொண்டு அறியும் பாச ஞானத்தால் உணர இயலா கடவுளை, அவன் கொடுத்த அருளாகிய ஞானக் கண்ணினால் ஆராய்ந்து அறிந்து உணர்ந்த அளவில், யாராலும் ஏறிச் செலுத்த இயலாத மிக வேகமுடைய பேய்த் தேராகிய கானல் நீரைப் போலப் பாவம் விரைந்து நீங்க, அவ்வான்மாக்களின் பாவமாகிய வெப்பம் தணிய, குளிர்ந்த நிழலாக கடவுள் விளங்குகின்றான். முறைப்படி இடைவிடாது ஐந்து எழுத்தின் உட்பொருளின் வழி அவனைத் தியானிக்க வேண்டும்.

இறைவன் தவத்தினில் உணர்த்த அதை உணர்ந்த ஆன்மா மலத்தை விட்டு, பாவத்தை அரித்தெடுக்கும் அரனடியைச் சேர்கின்றது என்பதைப் பார்த்தோம். உணர்ந்தவுடன் மலம் நீங்கிற்று என்றால் மலம் நீங்கிய முறை எவ்வாறு? என்ற கேள்வி எழலாம். புறக்கண் கொண்டு கடவுளைக் காண முயன்றால் அவனைக் காண இயலாது. ஆன்மாவிற்கு, கடவுள் அருளால் திறந்துள்ள அகக் கண்ணால் ஆராய்ந்து உணர்ந்த அளவில், பாசமாகிய மலமானது மிக விரைந்து நீங்கிற்று. அது எவ்வாறு நீங்கிற்று என்றால் கானல் நீராகிய பேய்த் தேரைப் போல மிக விரைந்து நீங்கிற்று.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் காடு வழிச் செல்லும் பொழுது கானல் நீராகிய பேய்த் தேரை நாம் காணஇயலும். அதனுடைய விரைவு, அதை நேரில் கண்டோர்க்கே புலப்படும். பாவம் நீங்கியதற்குப் பேய்த் தேரின் விரைவு ஒப்பிட்டுக் காட்டப்படுகின்றது.

கோடைக் காலத்தில் நண்பகல் வெயிலில் நடந்து துன்புறும்மனிதனுக்குக் குளிர்ந்த நிழல் எவ்வளவு ஆறுதலைக் கொடுக்குமோ அவ்வளவு ஆறுதலைப் பாவமாகிய கானலினின்று விடுபட்ட ஆன்மா, இறைவன் திருவடியாகிய குளிர் நிழலில் பெற்று மகிழ்ச்சி அடைகின்றது. அந்த மகிழ்ச்சியில் நிலை நிற்க ஆன்மாவானது முறைப்படி ஐந்தெழுத்தின் உட் பொருளைத் தன்னகத்தே இடை விடாது தியானித்து நிற்கும்.



சூத்திரம் 10 : ஆன்ம ஈடேற்றம்


அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகனாகிய இறைபணி நிற்க
மலமாயை தன்னொடு வல்வினை இன்றே

பதவுரை:

அவனே - ஞானக்கண்ணால் உணரப்பட்ட கடவுளே

தானே ஆகிய - தன்னை முழுமையாக ஆட்கொண்டவனாகிய நிலையில்

அந்நெறி - அவன் காட்டும் வழியில்

ஏகனாகி - தன்னை ஒப்படைத்து, அவன் வழியில் ஒன்றாகி

இறைபணி நிற்க - இறைவன் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க

மலம் - ஜென்ம பாவமாகிய சகசமலமும்

மாயை - சகசமலத்தின் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல் இறைவனுக்கு அடிமையாகி இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும்

தன்னொடு - ஆகிய இவற்றுடன்

வல்வினை - (சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டின் காரணமாகச் செயல்படக் கூடிய) கொடிய பாவ வினைகளும்

இன்றே - இல்லாமல் போயிற்றே.

பொருள்:

ஞானக் கண்ணினால் உணரப்பட்ட கடவுளே தன்னை முழுமையாக ஆட்கொண்ட நிலையில், அவன் காட்டும் வழியில் தன்னை ஒப்படைத்து அவன் வழியில் ஒன்றாகி கடவுள் ஏவும் பணியில் ஒன்றித்து நிற்க, ஜென்ம பாவமாகிய சகசமலமும், சகசமலத்தினின்று விடுபட்டு இறைபணி செய்வதால் மாயையாகிய உடலின் போராட்டங்களும், சகசமலம், போராட்டம் ஆகியவற்றின் காரணமாக செயல்படக்கூடிய கொடிய பாவ வினைகளும் இல்லாமல், இவற்றினின்று முற்றிலும் விடுதலை அடைந்ததாய்ப் பரிசுத்த நிலையை ஆன்மா அடைகின்றது.

இவ்வாறு இடைவிடாமல் கடவுளை ஞானக்கண் கொண்டு நோக்கித் தியானிக்க, தியானிக்க, தனது சித்தத்தை முழுமையாக விட்டு கடவுளுடைய சித்தத்தையே செயல்படுத்தும் நிலைக்கு ஆன்மா வளர்கின்றது. 'இனி நான் அல்ல...என்னுள் வாழும் கடவுளே என்னைச் செயல்படுத்துகின்றான்' என்ற நிலைக்கு ஆன்மா வரும் பொழுது கடவுள் ஏவும் பணியில் தன்னை மறந்து ஒன்றித்து விடுகின்றது. அந்நிலையில் ஆன்மா செய்யும் செயல்கள் யாவும் கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் செயல்களாக மாறி விடுகின்றன. பிறவியிலேயே இவனைத் தொடர்ந்து வரும் சகசமலம் அழிந்து விடுகின்றது.

சகசமலத்திற்கு அடிமையாய் இருந்து அதன் காரணமாகத் தீமை செய்ய விழையும் உடல், சகசமலத்தில் இருந்து விடுதலைப் பெற்று, கடவுளுக்கு அடிமையாகி இறை பணி செய்வதால், மாயையாகிய உடலின் போராட்டங்கள் நீங்குகின்றன. சகசமலம், உடல் போராட்டம் ஆகிய இரண்டில் இருந்து விடுதலைப் பெற்ற காரணத்தால், இவை இரண்டன் காரணமாகச் செயல்படக் கூடிய பாவ வினைகளும் இல்லாமல் அழிகின்றன.

அக்கிரமத்தில் ஆழ்த்தும் அசுத்தத்திற்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் தன் உறுப்புகளை முன்பு அது அடிமை ஆக்கி இருந்தது. அதுபோல இப்பொழுது தூய்மையில் (பரிசுத்தத்தில்) மலரும் ஏற்புடைய வாழ்விற்கு அது தன் உறுப்புகளை உட்படுத்திக் கொள்கின்றது.

முன்னே பாவத்திற்கு அடிமையாயிருந்த ஆன்மா, பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று கடவுளுக்கு ஏற்புடைய நிலைக்கு அடிமையாகின்றது. இதனால் அதற்குக் கிடைத்துள்ள பலன் தூய்மையடைவதே, பரிசுத்தம் ஆவதே ஆகும்.




சூத்திரம் 11 : அன்பர் திருவடியில் ஆன்மா



காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே.

பதவுரை:

காணும் - உலகப் பொருளைக் கண்டு அறியக்கூடிய

கண்ணுக்கு - கண்ணாகிய உறுப்பிற்கு

காட்டும் - உள்ளிருந்து காட்டுகின்ற

உளம்போல் - ஆன்மாவைப் போன்று

காண - பாசத்தால் மறைபுண்டிருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் அதனதன் இயல்பின்படி தெளிவாய் அறிந்து கொள்ளுமாறு

உள்ளத்தைக் கண்டு காட்டலின் - இறைவன் ஆன்மாவைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால்

அயரா அன்பின் அரன் - மயக்கம் சிறிதும் இல்லாத, என்பையும் பிறர்க்கீயும் அன்பனாகிய, பாவத்தை அரித்தெடுக்கும் இறைவனுடைய

கழல்செலுமே - திருவடியைச் சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்

பொருள்:

உலகப் பொருளைக் கண்டு அறியக் கூடிய கண்ணாகிய உறுப்பிற்கு அது காணுமாறு உள்ளிருந்து காட்டுகின்ற ஆன்மாவைப் போன்று, பாசத்தால் மறைப்புண்டு இருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் தெளிவாக அறிந்துக் கொள்ளுமாறு அதைத் தேடி வந்து, அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால், மயக்கம் சிறிதும் இல்லாதவனும், என்பையும் பிறர்க்கீயும் அன்பையுடையவனும், பாவத்தை அரித்தெடுப்பவனும் ஆகிய இறைவனுடைய திருவடியை ஆன்மா சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்.

இறைபணியில் ஆன்மா நிற்கும் பொழுது மலம், மாயை, வல்வினை ஆகிய மூன்றும் நீங்குகின்றன என்றால் கடவுள் தன்னுடைய வழியை ஆன்மாவிற்குத் தெளிவாக காட்டுகின்றானா? அனுதினமும் அவன் வழியில் நடத்துகின்றானா? என்னும் கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடைகள் ஆம் என்பதே.

கண் காட்டுகின்றது. காணுகின்ற கண்ணிற்குப் பொருளைக் காட்டுவது உள்ளமாகிய ஆன்மாவே ஆகும். ஆன்மாவின் துணையின்றி, கண் பொருளைக் காண இயலாது. அதே போன்று உள்ளம் நடக்க வேண்டிய வழியை அதைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து அதற்குக் காட்டுபவனாக இருப்பவன், அதன் மீது அயரா அன்பினைக் கொண்ட கடவுளே ஆகும். கடவுளின் அன்பிற்கு ஓர் எல்லை உண்டோ! ஆகவே அன்பின் உறைவிடமாக விளங்குபவனும், பாவத்தை அரித்தெடுக்கும் அரனுமாகிய கடவுளுடைய திருவடிகளை ஆன்மா சேரும்.




சூத்திரம் 12 : ஆன்மாவே கோயில்


செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
அம்மலம் கழீஇ அன்பரோடு மரீஇ
மாலற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன் எனத் தொழுமே.

பதவுரை:

செம்மலர் - சிவப்பு மலர் போன்ற

நோன்தாள் - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவமாகிய நோன்பினில் நிலை நின்ற இறைவனின் திருவடிகளை

சேரல் ஒட்டா - சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நின்ற

அம்மலம் கழீஇ - அக்கொடிய பாவம் கழுவப்பட்டு

அன்பரொடு மரீஇ - என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு

மால் அற - ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு

நேயம் மலிந்து - ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு

அவர் வேடமும் - ஆன்மாவின் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலைப் பெற்ற நிலையில் அது

அரன் - பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன்

ஆலயம் தானும் என - மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து

தொழுமே - இறைவனை வாழ்த்தி வணங்குமே

பொருள்:

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் கொடுக்கும் தவத்தில் நிலை நின்று சிகப்பு மலர் போன்று விளங்குகின்ற இறைவனின் திருவடிகளைச் சேர விடாமல் ஆன்மாவைத் தடுத்து நிற்கும் கொடிய பாவம் கழுவப்பட்டு, என்பையும் பிறர்க்கீயும் அன்பராகிய இறைவனுடைய திருவடிகளில் இணைக்கப்பட்டு ஆன்மாவைப் பற்றி நின்ற மயக்கம் முற்றிலுமாக நீக்கப்பட்டு, ஆன்மீக நேயத்தால் நிரப்பப்பட்டு, இறைவனின் புதிய சாயலைப் பெற்று, பாவத்தை அரித்து எடுப்பவனாகிய இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயிலாகத் தான் அமைந்து உள்ளதை உணர்ந்து தன்னை மீட்டு ஆட்கொண்ட இறைவனை வாழ்த்தி வணங்கி இன்புறும்.

இறைவனின் திருவடிகளில் இணைந்த ஆன்மா, மயக்கம் முற்றிலுமாக நீங்கப் பெற்று ஆன்மீக நேயத்தால் நிரப்பப் பெறுகின்றது. அவ்வாறு நிரப்பப்பட்ட ஆன்மா எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்பதற்குச் சித்தாந்த சாத்திரத்தின் திருக்களிற்றுப்படியார் பின்வருமாறு கூறுகின்றது.

அன்பேயென் அன்பேயென் றன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும் – அன்பன்றித்
தீர்த்தந் தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான். - திருக்களிற்றுப்படியார் 55


இவ்வாறு அன்பால் அழுது அரற்றி அன்பே அன்பாக அறிவழியும் ஆன்மாவாக, இறைவன் வாழும் திருக்கோயிலாக மாறுகின்றது. அதன் பழைய சாயல் நீங்கி இறைவனின் புதிய சாயலாகிய இறை வேடத்தை தாங்கிக் கொள்கின்றது. என்பையும் பிறர்க்கீயும் அன்பனாக மாறுகின்றது. இப்படிப்பட்டவர்களே இறைவன் மகிழ்ந்து உறையும் திருக்கோயில்கள் ஆகின்றனர். இறைவனை இடைவிடாது தொழும் பெரும்பேற்றை அடைந்து இறைவனில் இன்புறுகின்றனர். இதனையே இறைவனை உணர்ந்தவர்கள் கூறிச் சென்று உள்ளனர்

//உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? – I கொரிந்தியர் 6:19- இது பவுலின் கூற்று.

உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே. – திருமந்திரம் - இது திருமூலரின் கூற்று.


இந்த நிலையே அவர்கள் இடைவிடா இன்பத்தை, இரவா இன்பத்தை அடையும் அதி உயர் நிலையாகும். இவ்வகையில் அடையும் இன்பம் என்றுமே அழிவதில்லை. அந்த இன்பம் இவ்வுலகிலேயே தொடங்குகின்றது.

முற்றும்.



திருவள்ளுவர் கூறும் இறைவன் யார் 

திருக்குறளினைப் பற்றி நாம் பல பதிவுகளை முன்னரே கண்டு இருக்கின்றோம்...இருந்தும் இன்னும் சில விடயங்களை நாம் கண்டாகத்தான் வேண்டி இருக்கின்றது. காரணம் இன்னும் தெளிவற்ற கருத்துக்கள் பல வெளியில் உலாவிக் கொண்டு தான் இருக்கின்றன.

உதாரணமாக திருவள்ளுவர் கூறும் கடவுள் யார் என்றக் கேள்விக்கும் திருவள்ளுவரின் சமயம் யாது என்ற கேள்விக்கும் பலவிதமான கருத்துக்கள் நம்முடைய சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றன. சிலர் திருவள்ளுவரை பௌத்தர் என்றும் சமணர் என்றும் கூறுவர்...இன்னும் சிலர் அவர் கடவுள் என்றுக் கூறியது சூரியனைத் தான் என்றும் கூறுவர்...சிலர் அவர் சைவ வைணவ சமயத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுவர்.

ஆனால் இவை அனைத்துமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை...இவைகளில் யாதேனும் ஒன்று தான் விடையாக இருக்க முடியும்...இல்லையேல் இவைகள் அல்லாத ஏதேனும் வேறு ஒன்று தான் விடையாக இருக்க முடியும். ஒரே நேரத்தில் திருவள்ளுவர் பௌத்த சமணத்தைச் சார்ந்தவராகவோ அதே நேரம் சமண சமயத்தைச் சார்ந்தவராகவும் இருத்தல் இயலாது. சரி இருக்கட்டும்...இப்பொழுது நமது கருத்தினைக் காண்போம்...!!!

திருவள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதில் மாற்றுக் கருத்தே நமக்கு கிடையாது. அதனால் தான் அவர் அவரது நூலிற்கு எழுதிய சிறப்பாயிரத்தை கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் ஆரம்பித்து உள்ளார். ஆனால் அந்த கடவுள் வாழ்த்துப் பகுதியில் அவர் கடவுளாக கூறியுள்ளது யாரை என்றக் கேள்வி தான் பலரையும் பல கருத்துக்களைக் கொள்ள வைத்து உள்ளது. இப்பொழுது அக்கேள்விகளுக்கு விடையினைக் காண முயல்வோம்...

திருவள்ளுவர் கூறும் கடவுள் சூரியனா?

பண்டைய தமிழர்களாக இருக்கட்டும்...அல்லது இயற்கை வழிபாட்டினை உடைய பண்டைய நாகரீகங்களாக இருக்கட்டும் சூரிய வழிபாடு என்பது அவர்களது வாழ்வில் இருந்து உள்ளது. சூரியனுக்கு அவர்களது வாழ்வில் முக்கியத்துவம் தரும் தன்மையை நாம் காணுகின்றோம்.

மேலும் நமது வார நாட்களின் முதல் நாளான கிழமையை 'ஞாயிறு' என்றே அழைப்பதாலும் ஆங்கிலத்திலும் '' என்றே சூரியனைச் சிறப்பித்தே வழங்குவதாலும் சூரியனின் சிறப்பை நாம் உணருகின்றோம் என்றும் ...இந்தியிலும் கூட 'ஆதிவார்' என்றே முதல் கிழமை வழங்கப் பெறுவதாலும் வள்ளுவர்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற தனது குறளின் மூலம் ஆதியான சூரியனையே கடவுளாக வழங்குகின்றார் என்றும் சிலர் கூறுகின்றனர்.

இவர்கள் 'ஆதி' என்ற ஒற்றை வார்த்தையை எடுத்துக் கொண்டே அவர்களது முடிவிற்கு வந்து விட்டது தான் வியப்பாக இருக்கின்றது. நாம் இந்தக் கூற்றினை மறுத்துத் தான் ஆக வேண்டி இருக்கின்றது.

காரணம் வள்ளுவர் அந்த ஒரு வார்த்தையினை மட்டுமே தனது குரளினில் பயன்படுத்தி இருக்கவில்லை (மேலும் ஆதி என்ற தமிழ்ச் சொல்லிற்கு தொடக்கம் என்ற பொருள் தான் பரவலாக அறியப்படும் பொருள்...வள்ளுவர் காலத்தில் தெலுங்கோ இந்தியோ அல்லது சமசுகிருதமோ தோற்றம் பெற்று இருக்கவில்லை). மேலும் ஒரே ஒரு குறளினை மட்டும் வள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பகுதியில் விட்டுச் செல்லவில்லை...வேறு ஒன்பது குறள்களையும் விட்டுச் சென்று இருக்கின்றார்.

எனவே ஒரே ஒரு குரளினில் வரும் ஒரே ஒரு வார்த்தையையும் அவ்வார்த்தைக்கு பொதுவாக யாரும் கொள்ளாத பொருளையும் வைத்துக் கொண்டு மட்டும் திருவள்ளுவர் கூறும் இறைவன் சூரியன் என்று கூறுவது சரியானதொன்றாக அமையாது. வள்ளுவர் சூரியனைத் தான் கடவுள் என்று கூறி இருந்தார் என்றால் மற்ற குறள்களிலும் அதற்குரிய சான்றுகளோ அல்லது குறிப்புகளோ நிச்சயம் காணப்பட வேண்டும்... அவ்வாறு காணப்படுகின்றதா என்பதனை நாம் இப்பொழுது காண்போம்...!!!

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5

இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இங்கே வள்ளுவர் சூரியனைத் தான் கடவுளாக கூறினார் என்று கூறுபவர்கள், வள்ளுவர் கூறும் இரு வினைகள் யாது, அவை எவ்வாறு ஒரு மனிதனை இருளில் சேர்த்து விடுகின்றன என்பதையும் அவ்வினைகள் எவ்வாறு சூரியனின் அடியினை சேர்ந்தால் விலகி விடுகின்றன என்பதையும் கூறி ஆக வேண்டி இருக்கின்றது.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்நீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - 6

இங்கே வள்ளுவர் ஐந்தவித்தான் என்று இறைவனை ஐம்புலன்களை அடக்கியவன் என்றுக் கூறுகின்றார்...வள்ளுவர் சூரியனையே இறைவனாக கூறி இருந்தார் என்றால் சூரியன் ஐம்புலன்களை எப்பொழுது பெற்றது என்றும் ஐம்புலன்களை எப்பொழுது/எப்படி அது அடக்கியது என்றும் நமக்கு கூறித் தான் ஆக வேண்டி இருக்கின்றது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10

இங்கே வள்ளுவர் தெளிவாகக் கூறுகின்றார் இறைவனின் அடியினைச் சேராதவர்களால் பிறவிப் பெருங்கடலை கடக்கவே முடியாது என்று. இறைவனாக வள்ளுவர் சூரியனைக் கூறி இருந்தார் என்றுக் கூறுபவர்கள்  பிறவிப் பெருங்கடல் என்பது என்ன என்றும் அதனை மக்கள் சூரியனின் அடியினைச் சேர்வதன் மூலம் மட்டுமே கடக்க முடியும் என்று வள்ளுவர் கூறியிருப்பது எதனைக் குறிக்கும் என்பதனையும் நமக்குக் கூறி ஆகத் தான் வேண்டி இருக்கின்றது.

மேலும் வள்ளுவர் திருக்குறளின் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை மட்டும் வைக்கவில்லை...மாறாக வான் சிறப்பு, நீத்தார் பெருமை மற்றும் அறன் வலியுறுத்தல் என்று வேறு மூன்று அதிகாரங்களையும் வைத்துவிட்டுச் சென்று இருக்கின்றார்.

அவற்றில் வான் சிறப்பு என்பது மழையைக் குறிக்கின்றது என்று பலர் கூறினாலும் அக்கூற்றுகளில் இன்னும் விவாதங்கள் நிகழ்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன. மழையை சிறப்பித்து சிறப்பாயிரத்தில் வைப்பது என்பது தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு பழக்கம் ஆகும்.

மேலும்,

நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஒழுக்கு.

என்ற குறளில் வள்ளுவர் தெளிவாக நீரையும் 'வான்' என்று அவர் கூறுவதையும் வேறுபடுத்திக் கூறியுள்ளார். (வான் என்று கடவுளின் அருட் சக்தி வழங்கப்படுவதை நினைவிற் கொள்க)

அவ்வாறே நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில், கடவுள் வாழ்த்தில் இறைவனை குறிக்க பயன்படுத்திய 'ஐந்தவித்தான்' என்றச் சொல்லை வள்ளுவர் மீண்டும் பயன்படுத்தி உள்ளார்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி.

கடவுள் வாழ்த்துப் பகுதி மட்டும் இருக்கும் சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியுடன் வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரங்களையும் வைத்த வள்ளுவர், 'ஐந்தவித்தான்' என்ற சொல்லின் மூலம் கடவுளையும், நீத்தாரையும் இணைத்து உள்ளார்.

வள்ளுவர் சூரியனையே கடவுளாக கூறி இருந்தார் என்றால் ஏன் சூரியனை ஐந்தவித்தானாக கூற வேண்டும், ஏன் அவனை நீத்தாருடன் இணைக்க வேண்டும்...ஏன் கடவுள் வாழ்த்துப் பகுதியில் வான் சிறப்பு/நீத்தார் பெருமை/அறன் வலியுறுத்தல் போன்ற பகுதிகளைச் சேர்க்க வேண்டும்?

என்பன போன்ற கேள்விகளுக்கு வள்ளுவர் சூரியனைத் தான் இறைவனாக கூறினார் என்றுக் கூறுபவர்கள் விடையினைத் தந்தாகத் தான் வேண்டி இருக்கின்றது.

அவ்வாறு விடையினைத் தராமல் வெறும் யூகங்களின் அடிப்படையில் வள்ளுவர் கூறிய கடவுள் சூரியன் என்று ஒருவர் கூறினார் என்றால் ஒன்று அவர் அறியாமையில் கூறுகின்றார் என்றோ அல்லது கருத்தினை திரிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடோ கூறுகின்றார் என்றே தான் நாம் கருத முடியும்...!!!

சரி இப்பொழுது வள்ளுவர் சமணம் அல்லது பௌத்த சமயத்தைச் சார்ந்தவரா என்றே காணலாம்...!!!


சென்ற பதிவினில் வள்ளுவர் இறைவன் என்று கூறுவது சூரியனையே என்று சிலர் கருதுவதையும் அது எவ்வாறு பொருந்தாது என்பதையும் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நாம் வள்ளுவர் பௌத்த சமயத்தை அல்லது சமண சமயத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்றக் கருத்தினைத் தான் காண வேண்டி இருக்கின்றது.

திருவள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவரா?

இப்பொழுது ஒரு கேள்வி, ஒருவர் ஒரு சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அச்சமயத்தைச் சார்ந்தவர் அல்லர் என்றோ கூற வேண்டும் என்றால் முதலில் என்ன தெரிந்து இருக்க வேண்டும்?

அந்த சமயத்தைப் பற்றித் தெரிந்து இருக்க வேண்டும் தானே. அதனைப் பற்றித் தெரிந்தால் தானே ஒருவர் அச்சமயத்தைச் சார்ந்தவர் என்றோ அல்லது சார்ந்தவர் அல்ல என்றுக் கூற முடியும். இந்நிலையில் வள்ளுவர் சமணம் அல்லது பௌத்தம் ஆகிய சமயங்களைச் சார்ந்தவர் என்றுக் கூற வேண்டும் என்றால் முதலில் அச்சமயங்களைப் பற்றி நாம் அறிந்து இருக்க வேண்டும் தானே. அது தானே சரியானதொன்றாக இருக்கும். எனவே நாம் முதலில் அந்த சமயங்களின் கருத்துக்களை சிறிது மேலோட்டமாகப் பார்த்து விடலாம்...!!!

பௌத்த சமயமாக இருக்கட்டும் அல்லது சமணச் சமயமாக இருக்கட்டும் இரண்டுமே இறை மறுப்புச் சமயங்கள்...அதாவது நாத்திக சமயங்கள்...அவைகளைப் பொறுத்த வரை இறைவன் என்ற ஒருவன் இல்லை. அச்சமயங்களுள் இறைக் கோட்பாடு கிடையாது. அதனால் பிறவிச் சுழற்சிக் கோட்பாடு உண்டு. அதாவது இந்த பிறவியில் நீ செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அடுத்த பிறவி நிகழும்...உன்னுடைய ஒவ்வொரு பிறவியிலும் உன்னுடைய பழைய வினை உன்னை தொடர்ந்து வந்துக் கொண்டே இருக்கும்...அதை யாராலும் மாற்ற இயலாது.

இதையே தான் சிலப்பதிகாரத்தில் வரும் 'ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்' என்ற கூற்று வெளிப்படுத்துகிறது. இந்நூலினை இயற்றியவர் சமண சமயத்தைச் சார்ந்த இளங்கோவடிகள் என்பதை நாம் அறிவோம்...அதனால் சமணத் தத்துவமாகிய 'ஒருவனது வினை அவனை எப்பிறவி ஆயினும் அடைந்தேத் தீரும்' என்ற கருத்து அவரது படைப்பில் வெளிப்பட்டு உள்ளது.

பற்றுகளை அறுப்பதன் மூலமே உன்னால் அப்பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்...இதுவே அச்சமயங்களின் அடிப்படைக் கூற்றாகும்...உலகத் தோற்றம், உயிர், உடல், மாற்றம் என்பன போன்ற பல தத்துவங்கள் அவற்றுள் கூறப்பட்டு உள்ளனவாயினும் நம்முடைய தலைப்பிற்கு அவை தேவை இல்லாத காரணத்தினால் அவற்றை நாம் இங்கே காணப் போவதில்லை. நிற்க.

சுருக்கமாக, சமண பௌத்த சமயங்கள் இறைக் கொள்கை இல்லாத சமயங்கள்...பிறவிச் சுழற்சியில் நம்பிக்கை கொண்டுள்ள சமயங்கள்...ஒருவனது வினை அவனை எப்பிறவியிலும் அடைந்தேத் தீரும் என்ற நம்பிக்கைக் கொண்டுள்ள சமயங்கள்...அவ்வினைகளிடம் இருந்து அவனை யாராலும் காப்பாற்ற முடியாது...பற்றினை அறுத்து துறவு நிலைக்கு செல்வதன் மூலமாகவே அவனால் பிறவித் தளையில் இருந்து விடுப்பட்டு வீடுப் பேற்றினை அடைய முடியும் என்ற கொள்கையினை உடையச் சமயங்கள்.

இந்நிலையில் வள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவராகவோ அல்லது பௌத்தச் சமயத்தைச் சார்ந்தவராகவோ இருந்து இருந்தால், அச்சமயக் கொள்கைகள் தான் அவருடைய குறள்களில் வெளிப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வள்ளுவரின் குறள்களின் கருத்துக்கள் பௌத்த சமண கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன.

1. வள்ளுவர் இறை நம்பிக்கை உடையவர். இதனை சிறப்பாயிரத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியினை வைத்துத் துவங்கி இருப்பதில் இருந்தே நாம் அறிய முடிகின்றது.

2.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5
இக்குறளில் வள்ளுவர் ஒருவனை இருளில் சேர்த்து விடும் இரு வினைகளும் அவன் இறைவனின் அடி சேர்ந்து விட்டால் அவனை ஒன்றும் செய்யாது என்றே கூறுகின்றார். இது பௌத்த சமண சமயங்களின் கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்ட கூற்றாகும்.

அச்சமயங்களின் கொள்கைகள் படிஒருவனது வினைகளைப் போக்கும் வல்லமை வேறு ஒருவனுக்கு கிடையாது...ஒருவனது வினை அவனைத் ஒவ்வொரு பிறவியாகத் தொடர்ந்துக் கொண்டே இருக்கும்...அதில் இருந்து விடுபட அவன் பற்றுகளை அறுத்து துறவியாக வேண்டும். பற்றுகளை எவ்வாறு ஒரு மனிதன் அறுக்க முடியும் என்பதற்கு சமண சமயமும் புத்த சமயமும் தனித்தனியே வழிகள் வைத்து இருக்கின்றன. அவைகளைப் பின்பற்றினால் ஒழிய ஒருவனால் அவனது வினைகளை விட்டு விலக முடியாது.

ஆனால் வள்ளுவர் அக்கருத்தினை முற்றிலுமாக இங்கே உடைத்து விடுகின்றார். இறைவனின் அடி சேர்ந்தவனுக்கு வினைகளால் யாதொரு ஊரும் நேராது என்றும் அவனை வினைகள் சேராது என்றுமே அவர் கூறிச் சென்று இருக்கின்றார். வள்ளுவரின் கூற்றின் மூலம் இறைவன் மனிதனின் வினையைத் தீர்க்கும் வல்லமைப் பெற்று இருக்கின்றான். மேலும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். - 10
என்று இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டுமே அவர்களது பிறவிக் கடலைக் கடக்க முடியும் சேராதவர்களால் முடியாது என்று வள்ளுவர் கூறுவதன் மூலம் பௌத்த சமண கொள்கையான 'ஒருவன் அவனது முயற்சியால் மட்டுமே பிறவிச் சுழற்சியில் இருந்து விடுபட முடியும்' என்ற கூற்றினை மறுக்கின்றார்.

வள்ளுவரின் கூற்றின் மூலம் ஒருவன் அவனாகவே அவனது வினையில் இருந்தோ அல்லது பிறப்பில் இருந்தோ தப்பி கரை சேர இயலாது...அதற்கு இறைவனின் துணை வேண்டும்.

இக்கருத்துக்கள் பௌத்தம் மற்றும் சமண சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையே மறுப்பவை. இந்நிலையில் வள்ளுவர் பௌத்தம் அல்லது சமணச் சமயத்தைச் சார்ந்தவர் என்றுக் கூறுவது பொருந்தாது போய் விடுகின்றது. நிற்க

இதுவரை நாம் எவ்வாறு வள்ளுவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சார்ந்தவர் அல்லர் என்பதையும், அவர் கூறிய இறைவன் சூரியன் அல்ல என்பதையும் கண்டு இருக்கின்றோம்.

இப்பொழுது வள்ளுவரின் கொள்கை யாது என்றும்...வள்ளுவர் கூறிய இறைவன் யார் என்றுமே நாம் காண வேண்டி இருக்கின்றது....!!!

கடந்த பதிவுகளில் எவ்வாறு வள்ளுவர் கடவுளாக சூரியனைக் கூறவில்லை என்றும் எவ்வாறு அவர் பௌத்த சமயத்தினையோ அல்லது சமணச் சமயத்தினையோ சார்ந்தவர் அல்லர் என்றும் கண்டு இருந்தோம். அப்படி என்றால் வள்ளுவர் கூறும் இறைவன் யார் என்ற கேள்வி இங்கே எழுகின்றது? இக்கேள்விக்கு விடையினை நாம் முன்னரே சில பதிவுகளில் கண்டு இருந்தாலும்


இங்கே மீண்டும் அவற்றை நாம் கண்டாகத் தான் வேண்டி இருக்கின்றது.

வள்ளுவர் கூறும் இறைவன் இரு வினைகளைத் தீர்பவராக இருக்கின்றார். பிறவிப் பெருங்கடலை அவர் அருள் இன்றி கடத்தல் இயலாது. மேலும் ஐம்புலன்களை அடக்கியவராகவும் அவர் குறிக்கப்பட்டு இருக்கின்றார். உலகம் முழுவதற்கும் பொதுவானவர். எனவே எந்தச் சமயம் இறைவனை இத்தன்மைகளோடு கூறுகின்றதோ அச்சமயத்தை சார்ந்தவராக வள்ளுவர் இருக்கலாம் என்றே நாம் கருதலாம் தானே. இதன் அடிப்படையில் நாம் கண்டோம் என்றால் நமக்கு விடையாய் இரண்டுச் சமயங்கள் கிட்டுகின்றன.

சைவம் (வைணவம் சைவத்தில் இருந்து பிரிந்த சமயம் என்பதனை கருத்தில் கொள்க)
கிருத்துவம்

இந்த இரண்டுச் சமயங்களிலும் இறைவன் வினைகளைத் தீர்பவராகவும்...அருளினால் மனித உயிர்களை பிறவிக் கடலில் இருந்து மீட்பவராகவும்...ஐம்புலன்களை உடைய மனிதனாக அவதாரம் எடுத்து உலகிற்கு வந்து மனிதர்களுக்கு வழியினைக் காட்டியவராகவும்...உலக மக்கள் அனைவருக்கும் உரியவராகவும் அறியப்படுகின்றார்.

இந்நிலையில் இந்த இரண்டு சமயங்கள் கூறும் இறைவனில் யாரை வள்ளுவர் கூறி உள்ளார் என்ற ஒரு கேள்வியும்...இரண்டு சமயங்களிலும் கூறப்பட்டு உள்ள இறைவனின் தன்மைஒன்றாகவே இருக்கின்றதே இந்நிலையில் இவ்விரண்டுச் சமயங்களும் ஒரே இறைவனைத் தான் கூறுகின்றனவா என்ற கேள்வியும் இங்கே எழ வாய்ப்பு இருக்கின்றது.

இதற்கு விடையாய் நமக்கு கிட்டுவது கிருத்துவமும் சைவமும் இரு வேறு சமயங்கள் அல்ல என்றும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஒரே கருத்தின் அடிப்படையில் எழுந்த இரு பிரிவுகள் என்பதே ஆகும். அதாவது கிருத்துவமும் சைவமும் இரு வேறு கருத்தினைக் கொண்ட இரண்டுச் சமயங்கள் அல்ல மாறாக, ஒரே கருத்தினைக் கொண்ட ஒரே சமயத்தின் இரண்டுப் பிரிவுகள்.

கிருத்துவத்தில் ஈசா
சைவத்தில் ஈசன்

கிருத்துவத்தில் தந்தை/பரிசுத்த ஆவி/மகன்
சைவத்தில் சிவன்/சக்தி/ குமரன்

இதையேத் தான் திருவள்ளுவர் தனது சிறப்பாயிரத்தில் (கடவுள் வாழ்த்து/ வான் சிறப்பு/ நீத்தார் பெருமை) என்றுக் கூறி உள்ளார்.

கிருத்துவத்தில் மகன் வினையினைத் தீர்பவராக அறியப்பெருகின்றார். இங்கே குமரன் 'வேலுண்டு வினையில்லை..' என்றும் 'விநாயகனே வினைத் தீர்பவனே' என்றும் வினையினைத் தீர்பவனாக அறியப்பெருகின்றார்.

கிருத்துவத்தில் மூஒருமைக் கோட்பாட்டில் ஒரே இறைவன் மூன்று நிலையில் இருக்கின்றார். சைவத்திலும் சிவன், சக்தி, குமரன் ஆகியோர் மூன்றாக கூறப்படினும் அடிப்படையில் அவர்கள் ஒன்றே என்ற மூஒருமைக் கோட்பாடு காணப்படுகின்றது. நிற்க

இந்தத் தலைப்பில் நாம் ஏற்கனவே பல பதிவுகளைக் கண்டாயிற்று...எனவே இதனை மேலும் விளக்காமல் திருவள்ளுவரைப் பற்றித் தொடருகின்றேன் (சமயங்களைப் பற்றி அறிவதற்கு இந்தச் சுட்டியினைச் சொடுக்கவும் - சமயங்கள்)

திருவள்ளுவர் சைவமும் கிருத்துவமும் கூறும் இறைவனைப் பற்றியே கூறி இருக்கின்றார் என்றே நாம் கண்டிருக்கின்றோம் ஆனால் திருவள்ளுவர் சைவரும் அல்லர்...கிருத்துவரும் அல்லர்...!!!

புதிரான கூற்றாக இருக்கின்றது தானே...ஆனால் உண்மையும் அதுதான். திருவள்ளுவர் சைவரும் அல்லர் கிருத்துவரும் அல்லர். காரணம் திருவள்ளுவர் காலத்தில் கிருத்துவம்/கிருத்துவர் என்றப் பெயரோ அல்லது சைவம்/ஈசன் என்றப் பெயரோ உருவாகி இருக்கவே இல்லை.

திருவள்ளுவரின் காலத்தில், கிருத்துவக் கருத்துக்கள் தோற்றம் பெற்ற மத்திய ஆசியாவில் கிருத்துவின் கருத்துக்களைக் கூறியவர்களை வேட்டையாடிக் கொண்டு இருந்தனர்...மேலும் கிருத்துவின் போதனைகளையும் கூற்றுகளையும் அவரது சீடரே முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாத நிலை தான் இருந்தது.

அவ்வாறே தமிழகத்தில் 'குறிஞ்சி/முல்லை/மருதம்/நெய்தல்/பாலை' ஆகிய நிலப்பிரிவுகளின் திணைக் கடவுளரான 'சேயோன்/மாயோன்/இந்திரன்/வருணன்/கொற்றவை' ஆகியோர் வழிபாடும் (இவைகள் சமயங்கள் அல்ல...இவைகள் பலி கொடுக்கும் வழிபாடே ஆகும்), அப்பலி கொடுக்கும் வழிபாடுகளை மறுக்கும் சமயங்களான சமணமும் பௌத்தமுமே பரவி இருந்தன.

அறிவிலும் பண்பிலும் சிறந்தவர்களாக தமிழர்கள் இருந்தனர். அவ்வாறே கிரேக்கர்களும் சரி ரோமர்களும் சரி அளப்பரிய முன்னேற்றங்களைக் கண்டு தான் இருந்தனர். இருந்தும் எவரிடத்தும் உலகம் முழுவதற்கும் உள்ள ஒரு இறைவன் என்றக் கருத்து பரவலாகக் காணப்படவில்லை.

ரோமர்களுக்கு அவர்களுக்கு உரிய கடவுளர் இருந்தனர், கிரேக்கர்களுக்கும் சரி எகிப்தியர்களும் சரி யூதர்களுக்கும் சரி அவர்களுடைய இனத்திற்குரிய கடவுளர் இருந்தனர். எவ்வாறு தமிழர்களுக்கு குறிஞ்சி நிலம், முல்லை நிலம் போன்ற நிலப்பிரிவுகளுக்கு என்று தனித் தனி வழிபாட்டுக் கடவுளர் இருந்தனரோ அதனைப் போன்று தான் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கும் அவர்கள் இனத்திற்கென்று வழிப்பாட்டுக் கடவுளர் இருக்கத் தான் செய்கின்றனர்.

இவர்களது இனம், அவர்கள் எகிப்தியர்களாக இருக்கட்டும்...அல்லது கிரேக்கர்களாக இருக்கட்டும்...அல்லது ரோமர்களாக இருக்கட்டும்...பல்வேறு சாதனைகளையும் அறிவுச் செல்வங்களைப் பெற்று இருந்தாலும் ஆன்மீகச் சிந்தனை என்பது அவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்தது. இதே நிலை தான் உலகின் முதல் இனமும் ஞானத்தில் சிறந்த இனமுமான தமிழ் இனத்திலும் நிலவியது.

இந்த நிலை நிலவியதற்குக் காரணம் எளிது தான்...ஆன்மீகச் சிந்தனை என்பதனை இறைவன் அளிக்காமல் மனிதனால் தானாகத் தேடி அடைய முடியாது. இறைவனை உணர இறைவனின் அருள் வேண்டும்...அவன் அருள் இன்றி அவனை அறிதல் இயலாது...இதுவே தான் கிருத்துவமும் சரி சைவமும் சரி கூறும் அடிப்படைக் கருத்தாகும். இதைப் பற்றித் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது...!!!

கடந்த பதிவுகளில் திருவள்ளுவர் கூறும் இறைவன் கிருத்துவம் மற்றும் சைவம் ஆகிய சமயங்கள் கூறுகின்ற இறைவனையே என்றும் அவர் பௌத்த சமயத்தையோ அல்லது சமண சமயத்தையோ சேர்ந்தவர் அல்லர் என்றுமே நாம் கண்டு இருக்கின்றோம்.

அவ்வாறு கண்டு வருகையில் இறைவனின் அருள் இன்றி இறைவனை அறிதல் அறிதல் இயலாது என்றும் அவன் அருள் இருந்தால் தான் ஆன்மீக அறிவினைப் பெற முடியும் என்றே சமயங்கள் கூறுகின்றன என்றே கண்டோம். இப்பொழுது இதனைப் பற்றித் தான் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்று மாணிக்கவாசகர் கூறுகின்றார். இதனையே சைவ சித்தாந்த சாத்திரத்தின் மணிமுடியான சிவஞானபோதமும் தெளிவாக விளக்குகின்றது.

கிருத்துவும் என் மூலமாக அன்றி பிதாவினை வேறு ஒருவனும் அறியான் என்றே கூறி இருக்கின்றார்.

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." யோவான் 14:6

இவற்றின் மூலமாக இறைவன் உணர்த்தாமல் இறைவனைப் பற்றி அறிந்துக் கொள்ளும் ஆன்மீகச் சிந்தனைகளை மனிதனால் அறிந்துக் கொள்ள முடியாது என்பதனை நாம் அறிந்துக் கொள்ள முடிகின்றது.

அதனால் தான் அதுவரை இறை நம்பிக்கை கொண்டு இருந்த மக்கள் அனைவரும் அவர்களது குலத்திற்கான வழிபாட்டுக் கடவுளரைக் கொண்டு அவற்றிக்கு பலிகளை இட்டுக் கொண்டு வந்தனர்...அவர்களுக்கு மக்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் இறைவனைப் பற்றிய புரிதலோ அல்லது எண்ணமோ இருக்கவில்லை.

அதனால் தான் ஞானம் மிகுந்த இம்மண்ணில் எழுந்த சமயங்களான பௌத்தமும் சமணமும் இறைவனைப் பற்றி அறியாத சமயங்களாகவும் பலியினை எதிர்பதாகவும் இருக்கின்றன. நிற்க

இறைவன் உணர்த்தாமல் இறைவனை அறிய முடியாது சரி...அப்படி என்றால் இறைவன் எப்படி உணர்த்தினான் எவ்வாறு உணர்த்தினான் என்றக் கேள்வி இங்கே எழுக்கூடும்...இதற்கு விடையாய்

"சுத்த சிவன் குருவாய் வந்து தூய்மை செய்து" - திருமந்திரம்

"அகலமாய் யாரும் அறிவரி தப்பொருள்
சகலமாய் வந்ததென் றுந்தீபற
தானாகத் தந்ததென் றுந்தீபற" – திருஉந்தியார் 1

என்று இறைவன் மனிதனாக உலகிற்கு வந்து மனிதர்களுக்கு குருவாகி அவர்களை ஆட்கொண்டார் என்றே சைவம் கூறுகின்றது. இங்கே நாம் காண வேண்டியக் கேள்வி,

இறைவன் மனிதனாக வந்தான் சரி...ஆனால் எப்பொழுது வந்தான்? எங்கு வந்தான்? எப்படி வந்தான்? என்பதுதான்.

இறைவன் மனிதனாக வந்து மக்களைக் ஆட்கொண்டான் என்றக் கருத்து சைவ சமயத்தின் அடிப்படையாக இருந்தாலும் இறைவன் எப்பொழுது மனிதனாக வந்தான் என்றக் கேள்விக்கு விடைகள் கிடைப்பதில்லை. இந்நிலையில் இறைவன் மனிதனாக வந்தான் என்ற கருத்து வேறு எங்காவது இருக்கின்றதா என்றே நாம் கண்டோம் என்றால் அதே கருத்து கிருத்துவத்திலும் காணப்படுகின்றது.

அங்கே இறைவன் மனிதனாக எங்கே வந்தான், எப்பொழுது வந்தான், எப்படி வந்தான் என்ற கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கின்றன. இதைத் தான் நாம் இப்பொழுது சற்று உன்னிப்பாகக் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் அருளில்லாமல் மனிதனால் இறைவனை அறியவோ உணரவோ முடியாது என்றே சைவமும் கிருத்துவமும் கூறுகின்றன (காரணம் மனிதன் மலத்தில்/பாவத்தில் உள்ளான்). அவனை மீட்டு எடுக்க இறைவன் மனிதனாக வருகின்றார். இக்கருத்தை, இக்காலத்தில் இந்த இடத்தில் இறைவன் மனிதனாக வந்தான் என்றே கிருத்துவம் கூறுகின்றது.

ஆச்சர்யவசமாக அக்காலத்திற்கு முன்பு வரை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன் என்ற ஆன்மீகச் சிந்தனையோ அல்லது மனிதன் மலத்தில் இருக்கின்றான் என்றச் சிந்தனையோ வேறு எங்கும் காணப்படவே இல்லை...(கி.மு (கிருத்து காலத்திற்கு முன்னர்) வில் சிவன்/பிள்ளையார்/சக்தி/ஈசன்/பெருமாள்/பிரமன் போன்ற பெயர்களோ அல்லது சைவ வைணவ சமயத் தத்துவங்களோ காணப்படாதது இங்கே குறிப்பிடத்தக்கது. முருகன் என்பவன் பலியினை ஏற்றுக் கொள்ளும் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பெற்றான் என்பதும் குறிப்பிடத்தக்கது). நிற்க

எனவே இறைவன் மனிதனாக வந்த வரலாற்று நிகழ்வை கிருத்துவம் கூறிக் கொண்டு இருக்கும் பொழுது, இறைவன் மனிதனாக வந்து மனிதரை மீட்ட ஆன்மீகக் கருத்தினை ஆன்மீக ரீதியாக தெள்ளத் தெளிவாக தமிழரின் ஞானத்துடன் விளக்கிக் கொண்டு இருப்பது சைவ வைணவ சமயங்களாகும் என்றே நாம் அறியப் பெறுகின்றோம்.

இவை இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் தான் திருவள்ளுவர் நிற்கின்றார்...இறைவன் மனிதனாக உலகிற்கு வந்த வரலாற்று செய்திக்கும், அந்த வரலாற்று நிகழ்வு தமிழரின் ஞானத்துடன் ஆன்மீக ஞானமாக வளர்ந்த நிலைக்கும் இடைப்பட்ட காலத்தில் வள்ளுவர் நிற்கின்றார்.

இறைவன் மனிதனாக வந்து பலியான செய்தியை தமிழகத்திற்கு கொண்டு வந்தது ஈசனின் சீடரான தூய தோமா...இவர் கிருத்துவ சமயத்தைச் சார்ந்தவர் அல்லர்...இவரது காலத்தில் கிருத்துவ சமயம் தோற்றம் பெற்று இருக்கவே இல்லை. இவர் இறைத்தூதராக இறைவனின் கருத்தினைக் கொண்டு வந்தவர். எவ்வாறு திருநாவுக்கரசரும் மாணிக்கவாசகர் போன்றவர்களும் இறைத் தொண்டு ஆற்றினார்களோ அவ்வாறு இறைத் தொண்டாற்றிய ஒருவர்.

இவருடையக் கருத்தினைத் தமிழர்களின் ஞானம், இறை அருளால் தெளிவாக அறிந்துக் கொண்டு, அதனை மாபெரும் ஆன்மீகப் புதையலாக வளர்த்தது. அவ்வாறு வளர்த்ததில் முதல் இடத்தில் இருப்பவர் திருவள்ளுவர். இயற்கை நெறி காலத்தில் வாழ்ந்துக் கொண்டு வந்த மக்களை அறநெறிக் காலத்திற்கு இறைவனின் அருளால் கொண்டு வந்த நிகழ்வினை துவக்கி வைத்தது திருவள்ளுவர் தான்.


திருக்குறளின் அடிப்படையாகக் கொண்டு தான் அறநெறிக் காலம் இங்கே மலர்ந்தது. திருக்குறளின் அடிப்படைக் இறைக் கருத்தோ, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவன் மக்களின் வினையினைப் போக்க மனிதனாக வந்து மக்களுக்காகப் பலியானான் என்பதே.

அந்த இறைவனைப் பற்றியே திருவள்ளுவர், கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகிய அதிகாரங்களினால் விளக்குகின்றார்.

முற்றும்...!!!


ஆய்வாளர்.தெய்வநாயகம் ஐயா என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.

  உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானு...