கிறிஸ்தவம்:திரித்துவமும்,மருத்துவமும்
விவிலியப் பாடசாலையில் பயிலும் ஐந்துவயதான மகள் தன் தந்தையைப் பார்த்துக் கேட்டாள்.
‘அப்பா…. தேவதைகள் தூங்குமா ?’.
‘தூங்கும் என்று தான் நினைக்கிறேன்’ தந்தை சொன்னார்.
‘அப்படியானால் அவர்கள் எப்படி இரவு உடை அணிந்து கொள்வார்கள் ? சிறகுகள் தடுக்காதா ?’ மகள் கேட்டாள். தந்தை சிரித்துக் கொண்டார்..
பைபிளை நோக்கி நீட்டப்படும் பல கேள்விகள் இப்படித்தான் இருக்கின்றன. விவிலியத்தின் மையக்கருத்தாக நிலைவாழ்வு என்பதும், மீட்பு என்பதும் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க பலர் தங்கள் அறியாமையினால் வறட்டுக் கேள்விகளைக் கேட்டுக் கொள்கிறார்கள். கிறிஸ்தவத்துக்கு வெளியே இருக்கும் மக்கள் மட்டும் தான் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என்றில்லை. வெளியே ஒலிக்கும் இத்தகையக் கேள்விகள் கொஞ்சம் கொஞ்சமாக கிறிஸ்தவர்களிடமும் வரவேற்பைப் பெற ஆரம்பித்து விடுகிறது. ‘ஆமா, அந்த கேள்வியிலும் ஒரு லாஜிக் இருக்கு இல்லையா” என பேசுகிறார்கள். அவர்கள் தங்களுடைய கேள்விக்கான விடையைத் தேடி விவிலியத்தைப் புரட்டினால் பதில்களைத் தூய ஆவியானவர் அவர்களுக்குக் கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.
ஆனால் பலரும் அப்படிச் செய்வதில்லை. நமக்கு ஒரு கெட்ட பழக்கம் உண்டு. பைபிளைப் படிப்பதை விட அதிக நேரம் பைபிள் குறித்த நூல்களைப் படிக்கச் செலவிடுவோம். அது ஒரு விளக்க உரையாய் இருக்கலாம், அல்லது ஒரு விவிலிய ஆராய்ச்சியாய் இருக்கலாம், அல்லது புதிய ஒரு கோட்பாடோ, கொள்கையோ எதுவாகவும் இருக்கலாம்.
வார்த்தை தேவனாயிருந்தது. அந்த தேவனை நாம் தினமும் தரிசிக்க முடிகிறது. நமது வாழ்க்கையின் வழிகாட்டியாக வேதாகமம் நமக்கு இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஒவ்வோர் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடைகள் பைபிளில் இருக்கின்றன.
காலம் காலமாக நம்மிடையே நாம் எழுப்பும் கேள்விகளில் முக்கியமானதாக மருத்துவம் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் மருந்து உட்கொள்ளலாமா ? இல்லை நம்பிக்கை மட்டுமே நம்மை நலமாக்குமா ? இந்தக் கேள்விக்கு உண்மையான பதில், குணமளித்தல் இறைவனிடமிருந்து வருகிறது என்பதே. அந்த இறைவன் மருந்தை நிராகரித்தாரா, வரவேற்றாரா என்பதை வைத்து நம்முடைய வழியை சரிபார்த்துக் கொள்ள முடியும். மருந்தை உட்கொண்டாலும் குணமளிப்பவர் கடவுளெனில் ஏன் மருந்து உட்கொள்ள வேண்டும் ? காரணம், அதுவே இறைவன் நமக்காக வகுத்த வாழ்க்கை முறை – என்பது தான்.
“பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை” என்கிறார் இயேசு. பிணியாளிகளுக்கு வைத்தியன் தேவை என்பதை இயேசு தனது போதனையின் மூலம் மிகத் தெளிவாகவே அறிவுறுத்துகிறார். பார்வையற்றவனின் கண்களில் சேற்றைப் பூசுவது கூட மருத்துவத்தின் அங்கீகாரம் என்றே விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
விவிலிய ஆசிரியர் லூக்கா ஒரு மருத்துவராக இருந்திருக்கலாம் எனும் நம்பிக்கை பல ஆய்வாளர்களுக்கு உண்டு. காரணம் அவருடைய எழுத்துகளில் தெரியும் விவிலிய வாசனை. பிளாக் எம் சி எனும் விவிலிய ஆய்வாளர் அந்தக் கூற்றை மறுக்கிறார். மறுப்பதற்கு அவர் சொல்லும் காரணம் சுவாரஸ்யமானது. “அந்தக் காலத்தில் இருந்த சாதாரண நபர்களுக்கே லூக்கா வுக்கு இருந்த அளவுக்கு மருத்துவ அறிவு உண்டு” என்பது தான். அத்தகைய மருத்துவ அறிவோடு வாழ்ந்த இயேசுவின் சீடர்கள் இயேசுவின் போதனைகளை மாற்றியிருக்க வாய்ப்பே இல்லை. மருத்துவம் தேவையில்லை என்பது இயேசுவின் போதனையாய் இருந்திருந்தால் தூய ஆவியானவர் வேதாகமத்தில் அதைத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
மோசேக்கு இருந்த மருத்துவ அறிவுக்கும், வழிகாட்டலுக்கும் இன்றைய பிரபல மருத்துவர்களே வியப்பு கலந்த வரவேற்பைக் கொடுக்கிறார்கள். தொழுநோயாளிகளின் ஆடைகளை தீயினால் சுட்டெரிக்க வேண்டும் ( லேவியர் – 13 : 52 ) என மோசே கட்டளையிட்டிருந்தார். நவீன மருத்துவம் என்ன சொல்கிறது தெரியுமா ? தொழுநோய் மனித உடலை விட்டு வெளியே வந்து தூசிலோ, ஆடையிலோ மூன்று வாரங்களோ, அதற்கு அதிகமான வாரங்களோ உயிர்ப்புடன் இருக்குமாம் ! மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தின் உயர் நிலையை மோசே அறிந்திருக்கிறார் என்பது வியப்பு. அது இறைவன் மூலமாகவே வந்திருக்கும் என்பதில் வியப்பில்லை ! அதே போலத் தான் மோசேயின் தூய்மை குறித்த போதனைகளும். கடந்த நூறு ஆண்டுகளில் விஞ்ஞானம் கண்டறிந்தவற்றை மோசே 3500 ஆண்டுகளுக்கு முன்பே போதித்திருந்தார் என்பது ஆச்சரியம் தான் இல்லையா ?
யாக்கோபு 5 : 14 – 15 தான் மருந்து கூடாது என்பவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் விவிலிய வசனம். விசுவாசமுள்ள செபம் பிணியாளியை இரட்சிக்கும் எனும் வசனம் நமக்கு ஊக்கமூட்டுகிறது. மீன்டும் மீண்டும் செபிக்கத் தூண்டுகிறது. ஆனால் வசனங்களை வசனங்களுடன் ஒப்புமைப்படுத்தி வாசிப்பதே சிறந்தது. மருத்துவத்தை விட மேலாக இறைவிசுவாசத்தை வைப்பதில் எந்தத் தவறும் இல்லை, ஆனால் மருத்துவத்தை நிராகரித்து விசுவாசத்தைப் பற்றிக் கொள்வது என்பது, இயேசுவின் ஒரு வசனத்தைப் பற்றிக் கொண்டு அவருடைய பல வசனங்களை நிராகரிப்பதற்கு சமம்.
இறைவன் எங்குமே மருத்துவம் வேண்டாம் என்று சொல்லவில்லை, இன்னும் சொல்லப் போனால் தேவைக்கேற்ற மருத்துவத்தையே அவர் பரிந்துரைக்கிறார். மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து ( நீதி 17: 22 – பொ.மொ ) என நலமளிக்கும் மருந்தையும், ஆனந்தமான மனதையும் விவிலியம் ஒப்பிட்டுப் பேசுகிறது. மகிழ்வார்ந்த மனம் இறைவனின் விருப்பம் என ஒத்துக் கொள்ளும் நாம், நலமளிக்கும் மருந்தையும் ஒத்துக் கொள்ளவேண்டும் இல்லையா ?
எசேக்கியேலுக்கு எசாயா பரிந்துரைத்த மருத்துவ முறையும் நினைவில் கொள்ளத் தக்கதே. “எசேக்கியா நலமடைய, ஒரு அத்திப் பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின் மேல் வைத்துக் கட்டுங்கள்” என சொல்லியிருந்தார். ( ஏசாயா 38 : 22 ). ஏசாயாவை விட விசுவாசத்தில் ஆழமானவர்கள் என்று நம்மைக் கருதிக் கொள்ள முடியுமா ? அவர் மருத்துவ வழியையும், இறைவனின் மீதான நம்பிக்கையையும் ஒரு சேர மனதில் கொண்டிருந்தாரே ! எரேமியாவை எடுத்துக் கொள்ளுங்கள். “அங்கே மருத்துவர் இல்லையா? அப்படியானால், என் மகளாகிய மக்கள் ஏன் இன்னும் குணமாகவில்லை?” ( எரேமியா 8 :22 ) என்கிறாரே எரேமியா. அவருடைய விசுவாசத்தைக் கேள்வி கேட்க முடியுமா ?
“தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின் பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து” 1 திமோ 5 :23 என்கிறார் பவுல். விசுவாசத்தின் பிம்பமாய் இருக்கும் பவுல் இறைவனின் விருப்பத்தை மீறி சொல்வார் என்று வாதிட முடியுமா ?
சரி, அப்படியே லாஜிக்கல் பேர்வழிகளாகவே நாம் இருக்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். நம்மிடம் பணம் குறைவாக இருக்கும்போது பணத்துக்காக பணம் வைத்திருக்கும் நல்ல மனம் படைத்த ஒருவரை நாடிப் போய் கேட்பதுண்டு. அது போலவே உடல் நலம் குறைவாக இருக்கும் போது உடல் நலக் குறையைத் தீர்க்க உதவுவார்களோ அவர்களிடம் செல்வது தானே முறை. பணத் தேவை வரும்போதோ, உணவுத் தேவை வரும்போதோ பெரும்பாலும் கடவுள் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுவார் எனும் ‘மாஜிகல்’ களை நாம் சார்ந்திருப்பதில்லை. ஆனால் உடல் நலத்தில் மட்டும் ஏன் ஒரு மேஜிகலை எதிர்பார்க்க வேண்டும் ? எந்த ஒரு சூழலானாலும் இறைவன் தானே செயலாற்றுகிறார்.
இயேசுவை ஆலய உச்சிக்குக் கூட்டிச் சென்ற சாத்தான், “இங்கிருந்து கீழே குதி, தூதர்கள் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்” என்று சொன்னபோது இயேசு குதிக்கவில்லை. படிகள் இருக்கும் ஒரு கட்டிடத்தின் உச்சியிலிருந்து கீழே இறங்கி வர படிகளைப் பயன்படுத்துவதே தேவையானது என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. ஒருவேளை படிகளே இல்லாத கட்டிடமெனில் இயேசு குதித்திருக்கக் கூடும், தந்தையவர்கள் இயேசுவை நிச்சயம் தாங்கியிருப்பார். அமேசான் காடுகளில் நீங்கள் அகப்பட்டால், அங்கே உங்களுக்காய் கடவுள் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரவில்லையென்றால், அங்கே மருந்துகளைப் பயன்படுத்த முடியாது. அந்த சூழல்களில் இறைவனே நேரடித் துணை. மற்றபடி எங்கெல்லாம் இறைவன் நமக்காக உதவிகளை ஆயத்தப்படுத்தியிருக்கிறாரோ, அங்கெல்லாம் அவற்றைப் பயன்படுத்துவதே சரியானது.
ஒரு சிங்கம் ஒருவனைத் துரத்திக் கொண்டு வந்தது. அவனோ அசையாமல் நின்றான். ஓடு, ஓடு வீட்டுக்குள் புகுந்து கொள் என எல்லோரும் கத்தினார்கள். அவனோ, கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என நடுவழியில் நின்றான். சிங்கம் அவனைக் கொன்றது. இறந்தவன் கடவுளிடம் சென்றான். கடவுளே நீங்கள் ஏன் என்னைக் காப்பாற்றவில்லை என முறையிட்டான். அவரோ, நான் உன்னைக் காப்பாற்ற கடுமையாக முயன்றேன். பல பேருடைய வாய் வழியாக, “ஓடு ஓடு” என உன்னை அவசரப் படுத்தினேன். நீ தான் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்று சொன்னாராம். கடவுள் நமக்காக வழிகளை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கும் போது, நமது விருப்பப்படி தான் கடவுள் நம்மைக் குணப்படுத்த வேண்டும் என அவரைக் கட்டாயப்படுத்த முடியுமா ?
மனிதன் கடவுளாக முடியாது. ஆனால் மனிதர்கள் மேல் நம்பிக்கை வைக்க முடியாது என்று சொல்ல முடியுமா ? அப்படிச் சொல்பவர்கள் வேலை தேடித் திரியும்போது மனிதர்களைச் சார்ந்திருப்பதில்லையா ? வீடு கட்டும் போது ? பயணங்களில் ? திருமணத்தில் ? இன்னும் பலவற்றில் பிறரைச் சார்ந்திருப்பதில்லையா அப்படியெனில் மருத்துவ விஷயத்தில் மட்டும் ஏன் வித்தியாசமான கோட்பாடைக் கடைபிடிக்க வேண்டும் ?
கடைசியாக மிக முக்கியமான ஒன்று. கிறிஸ்தவத்தின் அடைப்படை இறைவன் மீதான விசுவாசமே. அந்த விசுவாசம் இல்லாத மருத்துவம் வீணானதே. தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போல, ‘நம்பிக்கை வை’ என்னிடம் என்று பலமுறை கடவுள் சொல்லியும் நாம் அவர் மேல் வைக்கும் நம்பிக்கையை பல நேரங்களில் பலவீனப்பட விட்டு விடுகிறோம்.
இயேசு வாழ்ந்த காலத்தில் பலரைக் குணப்படுத்தினார், பிறவியிலேயே பார்வையற்றவன், பல்லாண்டுகாலமாக தொழுநோயாய் இருந்தவன் என நீளும் பட்டியல் நாம் அறிந்ததே. அவர்களுடைய குணமடைந்த நிகழ்வை நாம் உற்றுப் பார்த்தால் குணமடைந்தவர்கள் இயேசுவின் மீது நல்ல நம்பிக்கை கொண்டிருந்ததை அறியலாம். ‘உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கியது’ என்று இயேசு பலமுறை சொல்கிறார். நம்பிக்கையில்லாவிடில் நீ அதிசயங்களைக் காணமுடியாது என்று தெள்ளத் தெளிவாக எச்சரிக்கையும் விடுக்கிறார். பேதுரு இயேசுவை நம்பியபோது கடல்மீது நடந்தார். அந்த நம்பிக்கை தளர்ந்தவுடன் தண்ணீரில் மூழ்கினார்.
இந்த நம்பிக்கை நமக்குள் அடிப்படையாய் இருக்க வேண்டியது அவசியம். அதன் மேல், இறைமகன் நமக்குத் தந்திருக்கும் அறிவையும், ஞானத்தையும் பயன்படுத்த வேண்டும். விவிலியம் முழுக்க இறைவனின் பண்புகளும் அவருடைய சித்தமும் தெரிகிறது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என ஏராளம் பைபிளின் விசுவாச மாந்தர்கள் தங்கள் இறை விசுவாசத்தையும், மருத்துவப் பார்வையையும் தந்திருக்கின்றனர்.
தூய ஆவியானவரின் துணையுடன் நாம் விவிலியத்தை வாசிக்கும் போது நமக்கு உண்மைகள் புலப்படும். பைபிள் நாம் வெளியே செல்லும்போது சட்டென வாசித்துப் பார்க்கும் ஒரு மேஜிகல் நூல் அல்ல. பைபிள் வாசிக்காம போன ஆக்ஸிடன்ட் ஆயிடுமோ, எக்ஸாம் பெயில் ஆயிடுவோமோ, போற காரியம் வெளங்காதோ என்பதற்காக வாசிக்கும் ‘மிரட்டும்’ நூல் அல்ல. அது வாழ்வின் அடிப்படை நூல் என்பதை மனதில் கொள்வோம். வார்த்தைகளின் வெளிச்சத்தில் வாழ்க்கையை அமைப்போம். இறைமகனின் வழியில் பயணம் தொடர்வோம்.
வீணான கேள்விகள் கேட்டு வாழ்வை வீணாக்காமல்
இறைவனில் இணைந்து வாழ்வை வளமாக்குவோம்.
ஃ
இறைவனில் இணைந்து வாழ்வை வளமாக்குவோம்.
ஃ
சேவியர்
நன்றி : தேசோபகாரி, கிறிஸ்தவ மாத இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக