உயிர்த்தவரோடு உயிர்த்தெழுவோம்.
ஹாரி கௌடினி என்றொரு மனிதர் இருந்தார். 1874 ல் பிறந்த இவர், தனது வாழ்நாளில் உலகப் பிரசித்தம். “தப்பிதல்களின் தலைவன்” என்று இவரை அழைத்தார்கள். என்னை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கட்டலாம், பூட்டலாம், மாட்டி வைக்கலாம், அடைத்து வைக்கலாம் அனைத்திலும் இருந்து தப்பிப்பேன், என பொதுவில் சவால் விடுவார். இவருடைய சவாலை ஏற்றுக்கொண்டு பலரும் பல விதங்களில் இவரைப் பூட்டி வைக்க நினைத்தார்கள். முடியவில்லை. பல்லாயிரம் பேருக்கு முன்னால் வைத்தே, சவால்களை வெற்றியுடன் முடிப்பார்.
ஒரு முறை இவருக்காகவே ஸ்பெஷலாக 5 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு புதுவகை பூட்டைக் கண்டுபிடித்து அவரைப் பூட்டியது, லண்டன் “டெய்லி மிரர்” செய்தி நிறுவனம். அதிலிருந்தும் தப்பினார். உலகமே அவரை வியந்து பார்த்தது .சங்கிலிகளால் பூட்டினால் தப்பினார். சவப்பெட்டியில் அடைத்து புதைத்தால் வெளியே வந்தார். பால் கேனுக்குள் திணித்துப் பூட்டினால், வெளியே வந்தார். உயர் மட்ட பாதுகாப்புடைய சிறையில் போட்டபோதும் தப்பினார் !
கடைசியாகஅக்டோபர் 31, 1926ல் மரணம் அவரைப் பூட்டியது. சாகும் முன் மனைவியிடம் சொன்னார். இதிலிருந்து தப்பிக்கும் வழி ஏதேனும் இருந்தால் நான் நிச்சயம் வருவேன். வந்து உன்னைச் சந்திப்பேன். நமது திருமண நாளில் உன்னை எப்படியும் வந்து சந்திப்பேன், காத்திரு ! என்றார். மனைவி மெழுகுதிரியும், இதயமும் உருக காத்திருந்தாள். திருமண நாள் வந்தது. ஹாரி வரவில்லை. அடுத்த வருடம் திருமண நாள் வந்தது, ஹாரி வரவில்லை. வருடங்கள் கடந்தன. பத்துவருடங்கள் சென்றபின் அவருடைய மனைவி தனது டைரியில் இப்படி எழுதினாள். “மரணத்திலிருந்து தப்பிக்க ஹாரியாலும் முடியாது ! ”
யாரும் தப்ப முடியாத ஒரு சுருக்கு தான் மரணம். அதை வென்றவர் ஒரே ஒருவர் தான். அவர் தான் இறைமகன் இயேசு. மரணத்திலிருந்து உயிர்த்தவர்கள் லாசரைப் போல பலர் உண்டு. ஆனால் அவர்களுடைய பயணம் மீள முடியாத இன்னொரு மரணத்தில் தான் முடிவடைந்தது, மரித்து உயிர்த்தபின் மீண்டும் மரிக்காதவர் ஒருவரே ! அதனால் தான் அவரை மரணத்தை வென்ற மீட்பர் என அழைக்கிறோம்.
ஹாரியைப் போல இயேசுவும் கல்லறைக்குள் அடங்கியிருந்திருப்பாரேயானால், கிறிஸ்தவம் இன்று இல்லை. நற்செய்தி இல்லை. பாவத்தையும் மரணத்தையும், ஆண்டவர் வென்று விட்டார் என்பதற்கான ஆதாரம் இல்லை. நமக்கு மீட்பு இல்லை. “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்”. ( 1 கொரி 15 : 14.) என்கிறார் பவுல்.
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் நமது விசுவாசம் முட்டாள்தனமான ஒன்றாக மாறியிருக்கும். மறுபடியும் முளைத்து எழாத சூரியனை யாரும் வெளிச்சத்தின் நாயகனாகப் பார்க்க முடியாது. மரணத்தோடு முற்றுப்புள்ளியாகியிருந்தால் இயேசு ஒரு மனிதனாகவே வந்து மனிதனாய் மறைந்த ஒரு தத்துவஞானியாகியிருப்பார். ” தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட நிலையில் வல்லமையுள்ள இறைமகன். இவர் இறந்து உயிர்த்தெழுந்ததால் இந்த உண்மை நிலைநாட்டப்பட்டது. இவரே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ” ( உரோமர் 1 : 4″. )
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் கிறிஸ்தவம் தோன்றியிருக்காது. சீடர்களுக்கு ஒரு ஆக்ரோஷ வல்லமையை வேறு எந்த ஒரு நிகழ்வும் வழங்கியிருக்க முடியாது. அவர்கள் பொய் சொல்லவில்லை. “(கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லையென்றால்) ” நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சான்று பகர்வோர் ஆவோம் ( 1 கொரி 15 ). என்கிறார் பவுல். அவர்கள் பொய் சொல்லவில்லை என்பதற்கு மனித காரணங்களே போதுமானது !
நாம் எப்போது பொய் சொல்வோம் ? ஒரு பிரச்சினையிலிருந்து தப்பிக்க, அல்லது ஒரு சிக்கலுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க. அப்படித் தானே ? பிரச்சினைக்குள் நுழையவதற்காக ஒரு பொய்யைச் சொல்வோமா ? அதுவும் மிரட்டும் அரசவையிலும், விரட்டும் மதவாதிகளின் நடுவிலும் !! விளைவு கொடூரமான சாவு என தெரிந்தும் கூட பொய் சொல்லுவோமா ? தோலை உரித்து, சிலுவையில் தலைகீழாய் அறையும் போது கூட அதே பொய்யைச் சொல்வோமா !!! கண்டிப்பாக இல்லை ! எனவே சீடர்கள் பொய்சொல்லியிருக்க வாய்ப்பு கடுகளவும் இல்லை !
இயேசு உயிர்த்தெழாமல் இருந்திருந்தால் நமது பாவங்களுக்கான மன்னிப்பு இல்லை ! “கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை பயனற்றதே. நீங்கள் இன்னமும் உங்கள் பாவங்களில் வாழ்பவர்களாவீர்கள்.” என்கிறது பைபிள். பாவங்களுக்கான மன்னிப்பு இல்லையேல், நமக்கு மறு உலக வாழ்க்கை என்பது நிச்சயம் இல்லை. எனவே தான் வேறெந்த விழாவையும் விட உயிர்ப்பு மிக முக்கியமானதாகிறது. புதிய ஏற்பாட்டின் மையமே உயிர்த்த இயேசுவின் மீது கட்டியெழுப்பப்படுகிறது.
உயிர்ப்பு என்பது கொண்டாட்டத்தின் நாள். அது தான் நமது விசுவாசத்தையும், நமது இறை அனுபவத்தையும் ஆழப்படுத்துகிறது. அது நமது வாழ்க்கையை உயிர்ப்பை நோக்கி நடத்தும் வழிகாட்டுதலைத் தரவேண்டும். இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தில் பங்குகொள்ள வேண்டுமெனில் மூன்று விஷயங்கள் நமக்குத் தேவை.
முதலாவது தேவை சிலுவையை சுமத்தல் !
“என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக்கா 18 : 23) என்கிறார் இயேசு. சிலுவையைச் சுமக்காமல் இயேசுவின் வழியில் நடக்க முடியாது. இயேசுவின் வழியில் நடக்காமல் இயேசுவின் உயிர்ப்பைச் சந்திக்க முடியாது.
சிலர் தங்களுக்கு வருகின்ற காய்ச்சல் தலைவலி பல்வலி போன்றவற்றையெல்லாம் “சிலுவை” என்று சொல்லித் திரிவதுண்டு. சிலுவை என்பது நமது உடல் சார்ந்த சிக்கல்கள் அல்ல. அது நமது பாவம் சார்ந்தது. நமது உலக ஆசைகளை வெறுப்பதே உண்மையான சிலுவை சுமத்தல். “தன்னலம் துறந்தால்” மட்டுமே அதைச் சுமக்க முடியும்.
கண்கள் நம்மை பாவத்தில் விழத் தூண்டினால், பிடுங்கி எறிய வேண்டும். கைகள் பாவத்தைச் செய்யத் தூண்டினால் வெட்டி விட வேண்டும் என்கிறார் இயேசு. அது தான் நாம் தினமும் சுமக்க வேண்டிய சிலுவை. அதுவே தன்னை வெறுத்து, தன் சிலுவையை சுமக்கும் நிலமை. ஆசைகள் அலைக்கழிக்கையில் மனக் கட்டுப்பாடு எனும் சிலுவையைச் சுமக்க வேண்டும். கோபம் நமது மூக்கில் ஏறி அமர்கையில் கோபம் தாண்டும் சிலுவை சுமக்க வேண்டும். இப்படி, இயேசு வெறுத்த அத்தனை விஷயங்களையும் நாமும் வெறுத்து, அதனால் வரும் இடர்கள் எனும் சிலுவையை “நாள்தோறும்” சுமக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.
இரண்டாவது தேவை சிலுவையில்
அறையப்படுதல்
“நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நான் அல்ல: கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். (கலா 2 : 19-20. ) என்கிறார் பவுல். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்படுதல் என்பது பழைய வாழ்க்கையைச் சிலுவையில் அறைந்து விட்டு புதுப் பிறப்பு எடுப்பது.
பழைய மனிதனைக் களைந்துவிட்டு புதிய மனிதனை அணிந்து கொள்ளச் சொல்லும் இறை வார்த்தை அது ! ஆதாமின் வாழ்க்கை பாவத்தின் முள்கிரீடத்தை தலைமுறை தலைமுறையாய் நமது தலையில் சூட்டுகிறது. அந்தப் பாவத்தின் சாபத்தை இயேசுவின் சிலுவை அழிக்கிறது. நமது பழைய மனிதன் சிலுவையில் அறையப்பட்டுவிட்டான். இனிமேல் புது மனிதனாய் நாம் வாழவேண்டும் என்பதே பைபிள் சொல்லும் வாழ்க்கை.
பழைய ஏற்பாட்டில் செங்கடலில் எகிப்தியர்கள் அழிக்கப்பட்டு இஸ்ரயேல் புது வாழ்வுக்குள் நுழைந்தது போல, கிறிஸ்துவோடு நாம் அறையப்பட்டு புதுப் பிறப்பு எடுக்கிறோம். இதை இறைவனே முன்னின்று நடத்துகிறார். இறைவன் நடத்தும் செயலில் நமக்குரிய பங்கு, அர்ப்பணிப்பு உணர்வும், அசைக்க முடியாத நம்பிக்கையுமே ! எதை அசைக்க வேண்டுமெனிலும் முதலில் நமக்குள் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்க வேண்டியது அவசியம் !
மூன்றாவது தேவை
இயேசுவோடு உயிர்த்தல்.
சிலுவையில் அறையப்பட்டு அப்படியே இறந்து போய்விடுவதில் அர்த்தமில்லை. பழைய பாவங்களை அழித்து விட்டு நமது வாழ்க்கையை அதைவிடப் புதிய பாவங்களுக்குள் நுழைப்பது என்பது மீண்டும் நாம் புதைத்த மனிதனைத் தோண்டி எடுத்து அணிந்து கொள்வது போல.
பேயை விரட்டிவிட்டால் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லையேல் அதைவிடக் கொடிய ஏழு பேய்கள் வந்து தங்கி வீட்டை சல்லடையாக்கிவிடும். எனவே தான் சிலுவையில் அறையப்பட்டபின் அவரோடு உயிர்த்தெழுதலும் அவசியமாகிறது ! பாவங்கள் அகற்றப்பட்ட இதயத்தை இறைவனின் வார்த்தைகளாலும் வாழ்க்கையாலும் நிரப்ப வேண்டும். அதுவே இயேசுவோடு உயிர்த்தலின் அடையாளம்.
உயிர்த்த இயேசுவின் அனுபவத்தில் இணைவது என்பதும், இயேசுவுக்காய் வாழ்வோம் என்பதும் துறவற வாழ்க்கையோ, முழுநேர ஊழியமோ அல்ல. வாழும் இடத்தில், பணி செய்யும் இடத்தில் இயேசுவைப் பிரதிபலிப்பதே. நமது வெளிப்படையான வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும், மறைவான வாழ்விலும் எப்போதும் இயேசுவைப் போல வாழ்வதே ! உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிரும்போது நீங்கள் உயிர்த்த இயேசுவின் அங்கங்கள் என்பதை உலகம் கண்டு கொள்ளும்.
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். உயிரோடு இருக்கும் போது என்னிடம் நம்பிக்கைகொள்ளும் எவரும் என்றுமே சாகமாட்டார் ( யோவான் 11 : 25 – 26 ) எனும் இயேசுவின் வார்த்தையில் நம்பிக்கை கொள்வோம். நமது வாழ்கையில் அவரைக் கொள்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக