வெள்ளி, 1 ஜனவரி, 2016

சிவவாக்கியம்--071


இருக்கவேண்டும் என்றபோது இருத்தலாய் இருக்குமோ
மரிக்கவேண்டும் என்றாலோ மண்ணுலே படைத்தனர் சுருக்கமற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும் மரிக்குமுன் வணங்கிடீர் மருந்தெனப் பதம் கெடீர்

நாம் எப்பொழுதும் இப்படியே இருக்க வேண்டும் என்று நினைத்தால் இருக்க முடியுமாஇருந்து இறக்க வேண்டும் என்று தானே இப்பூமியில் நம்மைப் படைத்தனர். குறுகிய எண்ணம் இல்லாத என் குருநாதன் எனக்கு உபதேசித்த சிவனாம என்ற அஞ்செழுத்தையும் இறப்பதற்கு முன் அறிந்து கொண்டு வணங்கி செபம் செய்து தியானம் செய்யுங்கள். அதுவே இப்பிறவிப் பிணி தீர்க்கும் மருந்தாக இருப்பதை உணராமல் இறை திருவடியை மறந்து கெடுகின்றீர்கள். 
********************************************************************************
சிவவாக்கியம்072

அம்பத்தொன்றில் அக்கரம் அடக்கம் ஓர் எழுத்துளோ விண்பறந்த மாத்திரம் வேதம் நான்கும் ஒன்றலோ
விண்பறந்த மூல அஞ்செழுத்துளே முளைத்ததே அங்கலிங்க பீடமாய் அமர்ந்ததே சிவாயமே.

'
நமசிவயஎன்ற அஞ்செழுத்துக்கும் (9+11+4+15+12=51) எண்களைக் கொடுத்து அம்பத்தோர் அட்சரங்களாக்கி அமைத்து அதை ஒரேழுத்தான 'சியில் அடக்கினர். ஆகாயத்தில் பறந்து நின்ற சோதியான சிகாரமும்,வேதங்கள் நான்கும் கூறும் சிகாரமும் ஒன்றே. மூலாதரத்திலிருந்து ஆஞ்ஞா வரை ஓம் நமசிவய என்று உச்சரித்து தியானியுங்கள். நம் உடம்பிலேயே இழிந்கமாகவும்பீடமாகவும் அமைத்திருப்பது சிவமே என்பதை உணருங்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்073

சிவாயம் என்ற அட்சரம் சிவன் இருக்கும் அட்சரம்
உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அட்சரம் கபாடம் உற்ற வாசலைக் கடந்து போன வாயுவை
உபாயம் இட்டு அழைக்குமே சிவாய அஞ்செழுத்துமே 
சிவயநம என்ற மந்திரமே சிவன் இருக்கும் அட்சரமாகும்.  நமக்கு ஆபத்து வரும் காலங்களில் உபாயமாக வந்து காப்பதற்கு நம்பி உபாசிக்க உண்மையாக உள்ள மந்திரம் இதுவே. நம் பிராணனிலிருந்து கடந்த்க்ஹு போன பிராண வாயுவை மீண்டும் நம் பிரானநிலேயே சேர்த்து ஆயுளைக் கூட்ட பிரானவாமம் செய்தால் அதற்கு உற்ற துணையாக இருப்பது சிவாயநம எனும் அஞ்செழுத்து மந்திரமே. ஆதலின் அதை ஓதி தியானியுங்கள். அதுவே உங்களுக்கு உபாயமாக என்றும் வரும். 
********************************************************************************
சிவவாக்கியம்074 
 
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றதல்ல மருவும் அல்ல காதம் அல்ல மற்றதல்ல அற்றதல்ல
பெரியதல்ல சிறியதல்ல பேசும் ஆவி தானும் அல்ல
அரியதாகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே

உருவாக உள்ளது ஆனால் உருவும் அல்ல. வெளியாகி இருப்பது ஆனால் வெளியும் அல்ல. ஐம்புலன்களில் உருவாக உள்ளதுஆனால் உருவும் அல்ல. ஐம்புலன்களில் ஒன்றை சேர்ந்து இருப்பது ஆனால் அதைச் சார்ந்து நிற்கவில்லை. மறுவாக உள்ளது ஆனால் தூரம் அல்ல. பஞ்சபூதங்களில் எல்லாம் உள்ளது அனால் மற்றதல்ல. பாசம் அற்றிருப்பது ஆனால் பாசம் அற்றதல்ல. மிகவும் பெரியது ஆனால் பெரியதும் அல்ல. மிகவும் சிறியது ஆனால் சிறியதும் அல்ல. பேசும் தன்மை கொண்டது ஆனால் பேசாதது. ஆன்மா தானாகி தற்பரமாய் நின்ற அதை அறிவதற்கு அறிய மெய்ப்போருல்களின் உண்மைகளை யார் அறிந்துகொண்டு தியானம் செய்து காண வல்லவரோ!!
********************************************************************************
சிவவாக்கியம்075
 
ஆத்துமா அனாதியோ அனாத்துமா அனாதியோ?மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ?தர்க்கமிக்க நீல்களும் சதாசிவமும் அனாதியோ?வீக்கவந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே?

உனக்குள் இருக்கும் ஆன்மா அனாதியா?  அனைத்திலும் இருக்கும் ஆண்டவன் அனாதியா?  உனக்குள் ஐம்போரிகலாகவும்ஐந்து புலன்கலாகவும்இருப்பவை அனாதியா?  தத்துவ விளக்கங்கள்உண்டென்றும் இல்லையென்றும் தர்க்கம் செய்யும் வேதாகம நூல்கள் அனாதியாஅல்லது ஆஞ்ஞாவில் உள்ள சதாசிவம் அனாதியாஎன்பதை யோக ஞானம் விளக்க வரும் யோகிகளே எது அநாதி என்பதயும் எது நித்தியம் என்பதை அனைவரும் உணரும் வண்ணம் விரைந்து வந்து கூறவேண்டும். 
********************************************************************************
சிவவாக்கியம்-076
 
அறிவிலே பிறந்திருந்த ஆகமங்கள் ஓதுறீர்
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர்
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணை தேடும்
அறிவிலாத மாந்தரோடு அனுகுமாறது எங்ஙனே

அறிவிலே பிறந்த ஏடுகளைப் படித்து மனனம் செய்து வேத ஆகமங்கள் ஓதுவார்கள். யோக ஞானாநெறியிலே நின்று தியானம் செய்து மயக்கத்தை ஒழித்து மெய்ப்பொருளை அரிய மாட்டார்கள். தனது வீட்டின் உறியிலே தயிராக வைத்துக் கொண்டு ஊரெல்லாம் அலைந்து வெண்ணை தேடுகின்ற மூடரைப் போல உனக்குள்ளேயே இருக்கும் இறைவனை அங்கும் இங்குமாய் தேடி அலையும் அறிவை அறியாதவுருக்கு எப்படி எடுத்துரைத்து அணுகுவது.
********************************************************************************
சிவவாக்கியம்077
 
இருவர் அரங்கமும் பொருந்தி என்புருகி நோக்கிலீர் உருவரங்கம் ஆகி நின்ற உண்மை ஒன்றை ஒர்கிலீர்
கருவரங்கம் ஆகி நின்ற கற்பனை கடந்து பின்
திருவரங்கம் என்று நீர் தெளிந்திருக்க வல்லீரே

சக்தியாகிய உடலும் சிவனாகிய உயிரும் ஒரே நினைவோடு அன்பால் என்புருகி தியானம் செய்யுங்கள். நமக்குள் உருவாக அரங்கத்தில் ஒளியாக நின்று ஒன்றாய் இருக்கும் உண்மையை உணர்ந்து அதுவே இறைவன் குடியுருக்கும் கோயிலாக இருப்பதைக் கண்டு அறிந்து அத்திருவரங்கத்தில் உடலையும் உயிரையும் இணைத்து சிவத்தில் கரைய தவம புரியுங்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்078
 
கருக்குழியில் ஆசையைக் காதலுற்று நிற்கிறீர்
குறுக்கிடும் ஏழைகள் குலாவுகின்ற பாவிகாள்
திருத்துருத்தி மெய்யினால் சிவந்த அஞ்செழுத்தையும் உருக்கழிக்கும் உம்மையும் உணர்ந்துணர்ந்து கொள்ளுமே

பெண்ணின்ப ஆசையால் காதல் வயப்பட்டு அதே நினைவில் நிற்கின்றீர்கள். அந்த குறிப்பைத் தவிர அதனால் வரும் துன்பங்களை அறியாத ஏழைகளே! பெண்ணின்பத்தினை பெரிதாக போற்றி குலாவுகின்ற பாவிகளே! அதனால் உங்கள் உடம்பு உருக்குலைந்து உயிர் போய்விடுமே! ஆதலால் நல்ல குருநாதர் உன்னைத் திருத்திக் கற்றுக்கொடுக்கும் உண்மையான யோகத்தை செய்து நமது மெய்யில் பஞ்சாட்சரமாக இருக்கும் மெய்ப் பொருளை அறிந்து 'சிவயநமஎன்ற அஞ்செழுத்தை ஓதி உனக்குள்ளேயே உணர்ந்துதியானித்து அறிந்து கொள்ளுங்கள். 
********************************************************************************.
சிவவாக்கியம்079
 
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் எண்ணிலாத கோடி தேவர் என்னது உன்னது என்னவும்
கண்ணிலே மணி இருக்கக் கண் மறைந்தவாறு போல்
என்னில் கோடி தேவரும் இதின் கனார் விழிப்பதே.

இருவினை பாவ புண்ணியத்தால்தான் மண்ணில் பிறக்கின்றோம். கடவுள் உண்டென்றும் இல்லையென்றும் வழக்குகள் பேசுகின்றோம். எண்ணில்லாத கோடி தேவர்களையும் என்னுடையது,உன்னுடையது என்றும் உரிமை கொண்டாடுகின்றோம். அதனால் இறைவனை அறிந்து கொண்டீர்களா?அவ்வண் உனக்குள்ளேயே அதுவாக இருப்பதை உணருங்கள். கண்களில் இருக்கும் கண்மணியால் எல்லாம் காணப்பட்டாலும் அதனை அக்கண்ணே மறைப்பதுபோல் தனக்குள் இருக்கும் ஆன்மாவை காணமுடியாது மையை மறைக்கின்றது. இதனை தியானத்தால் அகக்கண் திறந்து பார்த்தால் எல்லா தெய்வங்களும் இதன் கண் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள்.
********************************************************************************
சிவவாக்கியம்080
 
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நன்கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண்கலந்து நின்ற மாயம்என்ன மாயம் ஈசனே.

மண்பானை கவிழ்ந்து உடைந்து போனால் அது தேவைப்படும் என எடுத்து அடுக்கி வைப்பார்கள். வெண்கலப் பானை வீழ்ந்து நசுங்கிப் போனால் அது வேணும் என்று பாதுகாப்பார்கள். ஆனால் நமது உடம்பை விட்டு உயிர் போய் கிடக்கும் போது அதனைப் பிணம் என்று இகழ்ந்து அது கிடந்தால் நாறும் எனக் கூறி குழிவெட்டி அதனில் போட்டு மூடிவிடுவார்கள். இப்படி ஒரு காசுக்கும் கூட உதவாத என்எண்சாண் உடம்பில் நீ நின்று ஆடிய மாயம்தான் என்ன மாயமையா ஈசனே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...