விடுகதைகள் சில
1. சின்னச் சின்ன அறைகள் உண்டு அது வீடு அல்ல
சிறந்த அழகு கொண்டிருக்கும் அது சித்திரம் அல்ல
காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு அது கோட்டையும் அல்ல
அது என்ன?
தேன்கூடு
2. ஓரிடத்தில் பிறந்த சகோதரர்கள்
சிவப்புத் தொப்பி அணிந்தவர்கள்
ஒற்றுமையாக ஓரே அறையில் இருப்பவர்கள்
ஒருவர் வீட்டின் சுவரில் உரசினால்
அனைவரும் எரிந்துவிடுவார்கள்.
இவர்கள் யார்?
தீப்பெட்டி
3. வானத்தில் பறக்கும்
அது பறவை அல்ல
நீண்ட வால் உண்டு
அது குரங்கு அல்ல
வானத்தில் ஆட்டம் போடும்
அது மயில் அல்ல
அது என்ன?
பட்டம்
4. வீதியில் கொட்டி வைத்த வெள்ளைப் பஞ்சுப்பொதிகள்
காற்றடித்தால் நகர்ந்துவிடும். அங்கும் இங்கும் ஓடித்திரியும்
கொஞ்சம் கறுத்துவிட்டால் போச்சு, கண்ணீர் விட்டு அழுதுவிடும்
அது என்ன?
மேகங்கள்
5. வீட்டு வாசலில் போட்ட பூப்போல் தடுக்கு இருக்கு
அதைப் பார்க்கத்தான் முடியும் கையில் எடுக்க முடியாது
துடைப்பத்தால் கூட்டிவிட்டால் போச்சு; காணாமல் போய் விடும்
அது என்ன?
கோலம்
6. அடி மலர்ந்து நுனி மலராத பூ
கறிசமைக்க உதவும் பூ
ஆனால் தலையில் சூட்ட முடியாத பூ
அது என்ன?
வாழைப்பூ
7. வட்டமான அறையில் அண்ணன் தம்பி இரண்டு பேர்
அவர்களைச் சுற்றிப் பனிரண்டு நண்பர்கள்
அண்ணன், தம்பி இருவரும் நண்பர்களைத் தொட்டுத் தொட்டு
விளையாடுவார்ர்கள். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை
அண்ணன் தம்பி இணைந்து ஒவ்வொரு நண்பர்களாகத்
தொட்டுப் பிடிப்பார்கள். அது என்ன?
கடிகாரம்
8. நின்றால் ஒரு பெயர்
ஓடினால் ஒரு பெயர்
விழுந்தால் ஒரு பெயர்
அது என்ன?
தண்ணீர்! நின்றால் குளம். ஓடினால் நதி, விழுந்தால் அருவி
9. ஓடும் கால் நான்கு
உறிஞ்சும் கால் நான்கு
முட்டும் கால் இரண்டு
உடம்புக்கு விசிறிக்கொள்ள
முடி விசிறி ஒன்று. அது என்ன?
பசு
10.உடம்பு எல்லாம் பல்லுக்காரன்
ஒரு பொருளும் கடிக்க மாட்டான்
கடித்தால் வலிக்காது
பல் விழுந்தால் முளைக்காது. அது என்ன?
சீப்பு
11.செடியில் முளைக்காத இலை
நரம்பு இல்லாத இலை
அம்மா கொடுத்த இலை
அழுத்தினால் நொறுங்கி விடும்
வாயில் போட்டால் கரையும். அது என்ன?
அப்பளம்
12.உடல் மீது ஓடு உண்டு; ஆமை அல்ல
முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல
உள்ளமோ வெள்ளை; வெண்ணை அல்ல
நல்லதற்கும் கெட்டதற்கு நாயகனாம். அது என்ன?
தேங்காய்
13.ஆடிக்காற்றில் உதிரும் பழம்
ஓடிச் சிறுவர் பொறுக்கும் பழம்
கொழுகொழு என்ற கரும்பழம் அது என்ன?
நாவல் பழம்
14.ஆயிரம் ஆயிரம் முடிச்சும் உண்டு
ஆயிரம் ஆயிரம் ஓட்டையும் உண்டு. அது என்ன?
வலை
15.மண்ணாய் இருந்தவன்
பம்பரத்தில் சுழன்றவன்
நெருப்பினில் வெந்தவன்
எல்லார் வீட்டிலும் இருப்பவன் நான் யார்?
மண்பானை
16.தண்ணீரில் நீந்தத் தெரியும் மீன் அல்ல
இரண்டு கால் இருக்கும்; நடக்கும்; மனிதன் அல்ல
இறக்கை உண்டு; ஆனால் பறக்காது. அது என்ன?
வாத்து
17.கிளை இல்லா மரம்
ஏறினால் வழுக்கும் மரம்
ஒற்றைப் பூவில் நூறு காய் காய்க்கும்
தின்ன காய் துவர்க்கும்
பழமோ இனிக்கும். அது என்ன??
வாழைக்குலை தள்ளிய வாழைமரம்
18.தாளம் இல்லாமல் பாட்டுப்பாடுவார்; பாடகர் அல்ல
நோய் இல்லாவிட்டாலும் தேடி வந்து ஊசி குத்துவார்; மருத்துவர் அல்ல
வலையைக் கண்டால் மிரண்டுபோவார்; மீனும் அல்ல. அது என்ன?
கொசு
19.பறக்கும் இது பறவை போல
தலைகீழாய்த் தொங்கும் கோட்டான் போல
பாலூட்டும் ஆனால் பசுவல்ல
பழம் தின்னும் கிளியும் அல்ல அது என்ன?
வெளவால்
20.கூரை விட்டைப் பிரிச்ச ஓட்டு வீடு
ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகையின் நடுவே குளம். அது என்ன?
தேங்காய்
21.தரையிலும் இருப்பான்; நீரிலும் இருப்பான்
வாலோடு பிறந்தவன்; வளர்ந்ததும் வாலை இழந்தவன்
கை, கால் இரண்டு; கத்திக் கத்தியே கெடுவான். அது என்ன?
தவளை
22.அந்தி கருக்கையிலே அம்பலத்திலே ஆடுகிறான்
ஆடும் அவன் உடம்பெல்லாம் வண்ணக் கண்கள்
மயில்
23.பூவிலே நான் ஒரு வெள்ளைப்பூ
பூமி பார்த்து முகம் காட்டிச் சிரிப்பேன்
ஒரு எண்ணையின் பெயரைச் சொன்னால்
நான் யாரெனத் தெரியும்
எள்ளுப்பூ
24.யானைக்குப் பிடிக்கும்
அடித்தால் வலிக்கும்
வாய் வைத்துக் கடித்தால்
நுனி கசக்கும்
அடி இனிக்கும் அது என்ன?
கரும்பு
25.அந்தரத்து மேடை,
கறுப்புத் திரை
ஒளியும் ஒலியும் சேர்ந்தே தோன்றும்
ஆனால் தொலைக்காட்சி அல்ல
இடி, மின்னல்
26.அண்ணன், தம்பி மூன்று பேர்
ஒருவன் வீட்டில் வசிப்பான்
ஒருவன் காட்டில் வசிப்பான்
ஒருவன் நீரில் நீந்துவான் அது என்ன?
வீட்டில் வசிப்பது பல்லி
காட்டில் வசிப்பது உடும்பு
நீரில் நீந்துவது முதலை
27.தான் தொட்டதை எல்லாம் சுட்டுத் தின்பான்
காற்றோடு கை வீசி பயம் காட்டுவான்
தண்ணீர் பட்டால் செத்துப் போய்விடுவான். அது என்ன?
நெருப்பு
28.மூன்று பேரும் வெள்ளைக்காரிகள்
தாய் இனிப்பாள்
மகள் புளிப்பாள்
பேத்தி மணப்பாள் அது என்ன?
பால், தயிர், நெய்
29.பசிக்குத் தீனி தந்தால் குஷிதான்
தாகத்துக்கு நீர் தந்தால் ஓடி விடுவேன். அது என்ன?
தீ
30.உனக்கு முன்னாலும் போவேன் பின்னாலும் தொடருவேன்
ஆனால் ஒரு போதும் மேலே போக மாட்டேன். அது என்ன?
நிழல்
31.என் உடல் முழுதும் காற்று ஆனாலும்
நான் சுவாசிக்க மாட்டேன். அது என்ன?
பலூன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக