சூத்திரம் 11 : அன்பர் திருவடியில் ஆன்மா
காணும் கண்ணுக்குக் காட்டும் உளம் போல்
காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
அயரா அன்பின் அரன்கழல் செலுமே.
பதவுரை:
காணும் - உலகப் பொருளைக் கண்டு அறியக்கூடிய
கண்ணுக்கு - கண்ணாகிய உறுப்பிற்கு
காட்டும் - உள்ளிருந்து காட்டுகின்ற
உளம்போல் - ஆன்மாவைப் போன்று
காண - பாசத்தால் மறைபுண்டிருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் அதனதன் இயல்பின்படி தெளிவாய் அறிந்து கொள்ளுமாறு
உள்ளத்தைக் கண்டு காட்டலின் - இறைவன் ஆன்மாவைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால்
அயரா அன்பின் அரன் - மயக்கம் சிறிதும் இல்லாத, என்பையும் பிறர்க்கீயும் அன்பனாகிய, பாவத்தை அரித்தெடுக்கும் இறைவனுடைய
கழல்செலுமே - திருவடியைச் சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்
பொருள்:
உலகப் பொருளைக் கண்டு அறியக் கூடிய கண்ணாகிய உறுப்பிற்கு அது காணுமாறு உள்ளிருந்து காட்டுகின்ற ஆன்மாவைப் போன்று, பாசத்தால் மறைப்புண்டு இருந்த ஆன்மாவிற்கு அதன் மறைப்பை நீக்கி, அது யாவற்றையும் தெளிவாக அறிந்துக் கொள்ளுமாறு அதைத் தேடி வந்து, அதைக் கண்டு பிடித்து, அது நடக்க வேண்டிய வழியைத் தாமே முன்னின்று காட்டுகின்ற காரணத்தால், மயக்கம் சிறிதும் இல்லாதவனும், என்பையும் பிறர்க்கீயும் அன்பையுடையவனும், பாவத்தை அரித்தெடுப்பவனும் ஆகிய இறைவனுடைய திருவடியை ஆன்மா சார்ந்து திடமாகப் பற்றிக் கொள்ளும்.
இறைபணியில் ஆன்மா நிற்கும் பொழுது மலம், மாயை, வல்வினை ஆகிய மூன்றும் நீங்குகின்றன என்றால் கடவுள் தன்னுடைய வழியை ஆன்மாவிற்குத் தெளிவாக காட்டுகின்றானா? அனுதினமும் அவன் வழியில் நடத்துகின்றானா? என்னும் கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு விடைகள் ஆம் என்பதே.
கண் காட்டுகின்றது. காணுகின்ற கண்ணிற்குப் பொருளைக் காட்டுவது உள்ளமாகிய ஆன்மாவே ஆகும். ஆன்மாவின் துணையின்றி, கண் பொருளைக் காண இயலாது. அதே போன்று உள்ளம் நடக்க வேண்டிய வழியை அதைத் தேடி வந்து அதைக் கண்டு பிடித்து அதற்குக் காட்டுபவனாக இருப்பவன், அதன் மீது அயரா அன்பினைக் கொண்ட கடவுளே ஆகும். கடவுளின் அன்பிற்கு ஓர் எல்லை உண்டோ! ஆகவே அன்பின் உறைவிடமாக விளங்குபவனும், பாவத்தை அரித்தெடுக்கும் அரனுமாகிய கடவுளுடைய திருவடிகளை ஆன்மா சேரும்.
தொடரும்....!!!
பி.கு:
1) ஆய்வாளர்.தெய்வநாயகம் என்பவரின் ஆய்வுகளில் இருந்து நான் அறிந்தவற்றையே இங்கே பதிவிட்டு இருக்கின்றேன்.
2) விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக