வெள்ளி, 8 மே, 2015
புணரியல் தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்)
தொல்காப்பியர் உருபியல்→
க ச த ப முதலிய மொழிமேல் தோன்றும்
மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான்
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே
அன்ன மரபின் மொழிவயினான. 1
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும்
உயிர் முதல் ஆகிய மொழியும் உளப்பட
அன்றி அனைத்தும் எல்லா வழியும்
நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே. 2
அவற்றுள்,
மெல்லெழுத்து இயற்கை உறழினும் வரையார்
சொல்லிய தொடர்மொழி இறுதியான. 3
ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும்
வினை ஓரனைய என்மனார் புலவர். 4
மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும்
வரு வழி நின்ற ஆயிரு புள்ளியும்
வேற்றுமை அல் வழித் திரிபு இடன் இலவே. 5
வேற்றுமைக்கண்ணும் வல்லெழுத்து அல் வழி
மேற் கூறு இயற்கை ஆவயினான. 6
ல ன என வரூஉம் புள்ளி முன்னர்
த ந என வரின் ற ன ஆகும்மே. 7
ண ள என் புள்ளி முன் ட ண எனத் தோன்றும். 8
உயிர் ஈறு ஆகிய முன்னிலைக் கிளவியும்
புள்ளி இறுதி முன்னிலைக் கிளவியும்
இயல்பு ஆகுநவும் உறழ்பு ஆகுநவும் என்று
ஆயீர் இயல வல்லெழுத்து வரினே. 9
ஔ என வரூஉம் உயிர் இறு சொல்லும்
ஞ ந ம வ என்னும் புள்ளி இறுதியும்
குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட
முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே. 10
உயிர் ஈறு ஆகிய உயர்திணைப் பெயரும்
புள்ளி இறுதி உயர்திணைப் பெயரும்
எல்லா வழியும் இயல்பு என மொழிப. 11
அவற்றுள்,
இகர ஈற்றுப் பெயர் திரிபு இடன் உடைத்தே. 12
அஃறிணை விரவுப்பெயர் இயல்புமார் உளவே. 13
புள்ளி இறுதியும் உயிர் இறு கிளவியும்
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்
தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்
மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்
அம் முறை இரண்டும் உரியவை உளவே
வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 14
மெல்லெழுத்து மிகு வழி வலிப்பொடு தோன்றலும்
வல்லெழுத்து மிகு வழி மெலிப்பொடு தோன்றலும்
இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றலும்
உயிர் மிக வரு வழி உயிர் கெட வருதலும்
சாரியை உள் வழிச் சாரியை கெடுதலும்
சாரியை உள் வழித் தன் உருபு நிலையலும்
சாரியை இயற்கை உறழத் தோன்றலும்
உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும்
அஃறிணை விரவுப்பெயர்க்கு அவ் இயல் நிலையலும்
மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும்
அன்ன பிறவும் தன் இயல் மருங்கின்
மெய் பெறக் கிளந்து பொருள் வரைந்து இசைக்கும்
ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப. 15
வேற்றுமை அல்வழி இ ஐ என்னும்
ஈற்றுப் பெயர்க் கிளவி மூ வகை நிலைய
அவைதாம்,
இயல்பு ஆகுநவும் வல்லெழுத்து மிகுநவும்
உறழ் ஆகுநவும் என்மனார் புலவர். 16
சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும்
எகர முதல் வினாவின் இகர இறுதியும்
சுட்டுச் சினை நீடிய ஐ என் இறுதியும்
யா என் வினாவின் ஐ என் இறுதியும்
வல்லெழுத்து மிகுநவும் உறழ் ஆகுநவும்
சொல்லிய மருங்கின் உள என மொழிப. 17
நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும்
குறியதன் முன்னர்த் தன் உருபு இரட்டலும்
அறியத் தோன்றிய நெறி இயல் என்ப. 18
ஆறன் உருபினும் நான்கன் உருபினும்
கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை
ஈறு ஆகு புள்ளி அகரமொடு நிலையும்
நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன. 19
நும் என் இறுதியும் அந் நிலை திரியாது. 20
உகரமொடு புணரும் புள்ளி இறுதி
யகரமும் உயிரும் வரு வழி இயற்கை. 21
உயிரும் புள்ளியும் இறுதி ஆகி
அளவும் நிறையும் எண்ணும் சுட்டி
உள எனப்பட்ட எல்லாச் சொல்லும்
தம்தம் கிளவி தம் அகப்பட்ட
முத்தை வரூஉம் காலம் தோன்றின்
ஒத்தது என்ப ஏ என் சாரியை. 22
அரை என வரூஉம் பால் வரை கிளவிக்கு
புரைவது அன்றால் சாரியை இயற்கை. 23
குறை என் கிளவி முன் வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை இயற்கை. 24
குற்றியலுகரக்கு இன்னே சாரியை. 25
அத்து இடை வரூஉம் கலம் என் அளவே. 26
பனை என் அளவும் கா என் நிறையும்
நினையும் காலை இன்னொடு சிவணும். 27
அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி
உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே
அவைதாம்,
க ச த ப என்றா ந ம வ என்றா
அகர உகரமொடு அவை என மொழிப. 28
ஈறு இயல் மருங்கின் இவை இவற்று இயல்பு எனக்
கூறிய கிளவிப் பல் ஆறு எல்லாம்
மெய்த் தலைப்பட்ட வழக்கொடு சிவணி
ஒத்தவை உரிய புணர்மொழி நிலையே. 29
பலர் அறி சொல் முன் யாவர் என்னும்
பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை
ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை
ஒன்றிய வகரம் வருதலும் இரண்டும்
மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. 30
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...
-
சிவஞானபோதம் சிவஞானபோதம்...!!! தமிழ் கண்டதோர் மற்றுமொரு மாபெரும் படைப்பு. கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்கண்டார் அவர்கள...
-
இராவண ன் முன்னொரு காலத்தில் தமிழகம் முழுவதையும் ஆண்ட மன்னன் இராவணன். அவனுடைய ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் தலைநகராக இலங்கை நகர...
-
தாய் மொழி!! தமிழை வாழ வைக்க சில வழிகள் உண்டு. வீட்டு மொழி தமிழாக இருக்க வேண்டும். குழந்தைகளின் பெயர் தமிழாக இருக்க வேண்டும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக