திங்கள், 18 மே, 2015

"தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்" - தந்தை பெரியார்(1938)

தமிழ் மொழியும், தமிழ் இனமும் அழிக்கப்பட்டு வரும் சூழலில் தமிழ் நாட்டிலுள்ள திராவிட இயக்கங்களுக்கும், திராவிட அரசியல் கட்சிகளுக்கும், தமிழ் தேசிய சிந்தனையாளர்களுக்கும் 2016 தேர்தலை நோக்கிய ஒரு பொது அறிவிப்பு

"தமிழர்" என்னும் தமிழ் பெயரே "திராவிடர்" என்று சமசுகிருதத்தில் குறிக்கப்படுகின்றது என்பது எவராலும் மறுக்க இயலாத வரலாற்று உண்மை.

திராவிடர் கழகத்தின் நோக்கம்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், 1944 இல் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர் அடங்கியிருந்த சென்னை மாகாணத்தில் ஆரியப் பிராமணர்களின் சாதி ஏற்றத்தாழ்வுக் கொள்கையை எதிர்த்து, ஆரியரல்லாத மக்களை ஒன்றிணைக்க திராவிடர் கழகத்தைத் தோற்றுவித்தமை காலத்தின் கட்டாயமாக இருந்தது.

திராவிட அரசியல் கட்சியின் துரோகம்

பெரியாரின் திராவிடர் கழகத்தின் பிராமண எதிர்ப்புக்கு எதிராக, பிராமணர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொண்டு பிராமணர்களின் ஆதரவுடன், திராவிடர் என்னும் பெயரைப் பயன்படுத்தி திராவிட அரசியல் கட்சி 1949 இல் தமிழ் நாட்டில் உருவாக்கப்பட்டது. ஐந்து வகை நாத்திகப் பிரிவுகளில், "நானே கடவுள்" எனக் கூறும் பிராமணர்கள் நயவஞ்சக நாத்திகப் பிரிவைச் சேர்ந்தவர்கள். பிராமணர்களுடன் இணைந்த திராவிட அரசியல் கட்சி, பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையைக் கைவிட்டு, பெரியாரை நாத்திகராகக் காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியது. 

இதன் பயன் பெரியார் என்றால் நாத்திகர் என்று மட்டுமே பொது மக்கள் நம்புகின்றனர். இது பெரியாருக்கு எதிரான துரோகச் செயல் ஆகும்.

எந்த பிராமணர்களுக்கு எதிராகப் பெரியார் இயக்கத்தை உருவாக்கினாரோ அந்த பிராமணர்களே, பெரியார் இயக்கத்தின் பெயரால் தமிழ் நாட்டை ஆளும் கொடிய நிலை திராவிட அரசியல் கட்சியால் உருவாக்கப்பட்டு உள்ளது. இது கொடிய துரோக நிலையாகும்.

ஆதிக்க வெறி

இந்தியா 1947 இல் விடுதலையடைந்து, 1956 க்குப் பின்னர் மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. தமிழர், தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்கு தனித்தனி நாடுகள் தோன்றின. தெலுங்கர் தெலுங்கு நாட்டையும், மலையாளி மலையாள நாட்டையும், கன்னடர் கன்னட நாட்டையும் ஆண்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டை மட்டும் தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும் மாறி மாறி ஆள வேண்டும் என்னும் ஆதிக்க மனப்பான்மையுடன், தமிழ்நாட்டில் "தமிழர்" என்னும் தமிழ் பெயருக்குப் பதில், "திராவிடர்" என்னும் சமசுகிருதப் பெயரைப் பயன்படுத்தி திராவிட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களை ஏமாற்றி ஆண்டு வருவது ஆதிக்க வெறியைக் காட்டுவதாகும்.

தமிழரல்லாதார் ஏன் இணைவதில்லை?

தமிழரல்லாத, தெலுங்கரும், மலையாளியும், கன்னடரும், சமசுகிருத மொழியின் செல்வாக்கில் இருக்கின்ற காரணத்தால், "திராவிடர்" என்று குறிப்பிடும் பொழுது "தமிழர்" என்றே நன்கு தெளிவாகப் புரிந்து கொள்ளுகின்றார்கள். இதனால் அவர்கள் தமிழ் நாட்டுத் திராவிட கட்சிகளுடன் இணைவது இல்லை.

இதனால் தமிழ்நாட்டைத் தாண்டி தெலுங்கு நாட்டிலோ, மலையாள நாட்டிலோ, கன்னட நாட்டிலோ, திராவிட இயக்கக் கிளைகளோ, திராவிட அரசியல் கட்சிகளின் கிளைகளோ இல்லை. தப்பித்தவறி அவ்விடங்களில் இருந்தாலும் தமிழர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் முதலிய வெளிநாடுகளிலும் இதுவே நிலை.

நயவஞ்சகம்

இதனால், தமிழர்களைத் தமிழ்நாட்டில் அடிமைப்படுத்துவதற்காக மட்டுமே தெலுங்கர், மலையாளி, கன்னடர்களால் நயவஞ்சகமாகப் பயன்படுத்தப்படும் "திராவிடர்" என்னும் சமசுகிருதப் பெயரிலிருந்து தமிழ்நாட்டிலுள்ள திராவிட இயக்கங்களும், திராவிட அரசியல் கட்சிகளும் விடுதலை அடைய வேண்டும். தாங்களே தமிழ் இனத் தலைவர் என்று ஏமாற்றி தமிழ் மொழியை அழிப்பதைக் கைவிட வேண்டும்.

நம்பிக்கைத் துரோகம்

ஆரியப் பிராமணர்களின் இயக்கமான RSS இன் இந்துத்துவா இயக்கங்களுடனும், அதன் அரசியல் கட்சியுடனும் கூட்டு வைத்து, தமிழ் இனத்தையும், தமிழ் மொழியையும் அழிக்கும் கூட்டுச் சதியும் நம்பிக்கைத் துரோகமும், இவர்களால் செய்யப்பட்டு வந்ததையும், செயல்படுவதையும் இவர்களால் மறுக்க முடியாது. ஏனெனில் இவர்கள் தங்கள் தாய் மொழிப் பற்றினால் தமிழ் மொழியை அழிக்கின்றார்கள்.

தமிழ்த்தேசியச் சிந்தனையாளர்களின் இகழ்ச்சி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் அடிப்படைக் கொள்கையைக் கைவிட்டு, தமிழ் இனத்தை அடிமைப்படுத்தும் திராவிடக் கட்சிகளின் சதிச் செயலால் தமிழ் தேசியச் சிந்தனையாளர்கள் தந்தைப் பெரியாரை இகழும் நிலையை உருவாக்கி இருப்பதை மறுக்க இயலாது.

வெட்கப்படத்தக்க சாதிப் பெருமையும், நிலவுடைமையும்

தமிழ் இனத்தை அந்நியர்களுக்குக் காட்டிக் கொடுத்தமையால், அந்நியர்களிடம் பெற்ற சாதிப்பட்டமாகிய சற்சூத்திரர் (சிறந்த அடிமை), சூத்திரர் (அடிமை) என்னும் இரு பிரிவினரின் ஆரிய அடிமைத்தனத்தையே தந்தை பெரியார் வன்மையாகக் கண்டித்து, சாதி ஒழிப்பில் ஈடுபட்டார் என்பது வரலாறு. இந்த நோக்கில் இலங்கையில் தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த கருணாவும், டக்லஸ் தேவானந்தாவும் இன்று அமைச்சர் பதவியில் இருப்பதும், அந்நியர்களை எதிர்த்தவர்கள் நிலங்கள் பிடுங்கப்பட்டும் வேட்டையாடப்படுவதும் எண்ணிப் பார்கத்தக்கவை.

இந்த நோக்கில் தமிழ் ஞானப் பரம்பரையில் பிறந்து தமிழர் சமயக் கோவில்களில் பூசாரிகளாயிருந்து அந்நியர்களை எதிர்த்தமையால் கொலை செய்யப்பட்ட நந்தனார் பரம்பரையும், திருப்பாணாழ்வார் பரம்பரையும் கோவில்களில் இருந்து விரட்டப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு தீண்டத்தகாத கீழ் சாதி என இழிவு படுத்தப்படுவதும், அந்நியர்களுக்கு தமிழ் இனத்தைக் காட்டிக் கொடுத்த சற்சூத்திரர்களே தமிழர்களில் மேல் சாதி என சைவ மடாதிபதிகளாக இருப்பதும், இவர்கள் அனைவரும் நில உடைமையாளர்களாக இருப்பதும், ஏன் என்பது நமக்கு விளங்கும். இந்த நோக்கில் தம் சொந்த இனத்தைக் காட்டிக் கொடுத்து மனித நேயத்திற்கு எதிராக அந்நியர்களிடம் பெற்ற சாதிப் பெருமையும், நிலவுடைமையும் மிகவும் வெட்கப்படத்தக்கது ஆகும். நியாயமான சிந்தனையுடைய அனைவரும் வெட்கப்படுவார்கள், திருந்துவார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.

புதைகுழியில் சாதி ஒழிப்புக் கொள்கை

இன்று சற்சூத்திரரிலும், சூத்திரரிலும் ஒரு பகுதியினர் திராவிடர் என்னும் பெயரிலுள்ள இயக்கங்கள் மற்றும் கட்சிகளிலும், மறுபகுதியினர் தமிழ் தேசியச் சிந்தனையாளர் என்னும் பெயரிலும் நுழைந்துக் கொண்டு, தந்தைப் பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கையைக் குழி தோண்டி புதைத்து உள்ளனர். இவர்களைப் பின் இருந்து ஆரியப் பிராமணர்கள் இயக்கிக் கொண்டு இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை. இதனால் தந்தை பெரியாரைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் இயக்கங்கள், கட்சிகளின் வழியாகவும், தமிழ் தேசியச் சிந்தனையாளர் வழியாகவும் தந்தை பெரியாருடைய சாதி ஒழிப்புக் கொள்கை பிராமணர்களின் சூழ்ச்சியால் புதை குழியில் இருக்கின்றது. கடவுள் பெயரால் சாதிப் பெருமையை நம்புகின்றவர்களை எதிர்த்த பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டுமே காட்டப்படுகின்றார். அவருடைய சாதி ஒழிப்புக் கொள்கை பொதுமக்களுக்கு மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கிறது.

வெட்கப்பட வேண்டிய சாதிப் பெருமையிலிருந்து விடுதலையடைந்த தமிழ்த்தேசிய சிந்தனையாளர்களும், திராவிட இயக்கம் மற்றும் கட்சியினரும் சாதி ஒழிப்பு மாநாடு நடத்த முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

சாதி ஒழிப்பும், பொருளாதார சமத்துவமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். மன்னர் ஆட்சிக்கால வன்முறை இல்லாமல், மக்கள் ஆட்சிக்கால மனம் திருந்துதலால் வரும் ஆன்மீகப் பொது உடைமை இதற்கு ஏற்ற தீர்வு ஆகும். இதற்கு இப்பொழுது இருக்கும் ஐ.நா சபை பயன்படாது. இதில் பொதுமக்களுக்கு இடமில்லை, நாடுகளுக்கு மட்டுமே இடம் உண்டு. இதனால், உலக மக்களாட்சியும், உலக மக்கள் நீதிமன்றமும் அமைக்கப்பட வேண்டும். இது "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்னும் தமிழர் சிந்தனையால் உருவாக்கக்கூடியது ஆகும். இதற்கு அடிப்படையாக வேண்டுவது கடவுள் அனுபவம்.

இந்துத்துவாவும் இந்து மதமும்

தந்தை பெரியார் காலத்தில் நயவஞ்சக நாத்திகப் பிராமணர்களின் மனுநூல் கொள்கையாகிய இந்துத்துவாவிற்கும், தமிழ் ஞானிகளால் வளர்க்கப்பட்ட இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடு வெளிப்படவில்லை. அப்படியிருந்தும், பெரியாருடன் நெருக்கமாக இருந்த குன்றக்குடி அடிகளார், பெரியாரின் நெற்றியில் திருநீற்றைப் பூசிய பொழுது, அதைப் பெரியார் அழிக்கவில்லை என்னும் வரலாற்றில் ஆழமான கருத்து பொதிந்து கிடக்கிறது. பெரியார் பிராமணர்களின் மனுநூல் கொள்கையாகிய இந்துத்துவாவிற்கு எதிரானவரே தவிர, 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' எனக் கூறும் தமிழ் ஞானிகளின் இந்து மதத்திற்கு எதிரானவர் அல்லர் என்பதுவே அது ஆகும்.

மறைக்கப்பட்டு, மறைந்து கிடக்கும் இந்து மத வரலாறு

கடவுள் இப்பேரண்டத்தை ஆளுகின்றார் என்பதை தமிழ் ஞானிகள் மட்டுமே உலகின் மற்ற எந்த மொழியிலும் இல்லாமல் தமிழ் மொழியில் மட்டுமே இருக்கும் ஆறாவது அறிவுக்குக் காரணமான ஆன்மாவைப் பற்றிய கல்வியாகிய ஆன்மவியலின் வழி நிலை நாட்டி இருக்கின்றார்கள். ஆன்மவியலில், அறிவியல், மெய்யியல், இறையியல் ஆகிய மற்ற மூன்றும் அடங்கி இருக்கின்றன. இதற்குரிய ஒப்பற்ற தமிழ் நூல் சிவஞான போதம் ஆகும். இதிலே ஆன்மீகப் பொதுஉடைமை அடங்கி இருக்கின்றது(சூத்திரம் 12).

தமிழ் ஞானிகளில் சிறந்தவராக திருவள்ளுவர் விளங்குகின்றார். அவர் வாழ்ந்த மயிலாப்பூரில் வேதாந்தக் கொள்கையின் விளக்கமாக முதன் முதலில் அமைந்த ஆதிக் கபாலீசுவரர் கோவிலே இந்து மதத்தின் முதல் கோவில்.

1. இந்தவரலாற்று உண்மை மறைக்கப்பட்டுமறைந்து கிடக்கின்ற காரணத்தால், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், இந்துத்துவாவிற்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாட்டை அறிய 7 நீதிபதிகளை அரசியல் சட்ட பெஞ்சிக்கு நியமிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

2. ஆரியப் பிராமணர்களின் இந்துத்துவாக் கொள்கை தமிழர்களின் இந்து மதத்தை அடிமைப்படுத்தி உள்ளது. இதனால் உண்மை இந்திய மக்கள் ஆரியர்களின் சாதி ஏற்றத் தாழ்விற்கு அடிமைப்பட்டு பயங்கரத் துன்பங்களில் இன்றளவும் இருக்கின்றனர். இந்திய மக்களின் இந்தத் துன்பங்களை நீக்கப் போவதாக உலகளாவிய கிருத்துவ, இசுலாமியத் தலைவர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்தியாவின் உள்விவகாரத்தில் அந்நிய நாட்டிலிருக்கும் மதத் தலைவர்கள் தலையிட உரிமை இல்லை. இந்த உரிமை தந்தை பெரியாரின் உண்மைத் தொண்டர்களுக்கும் சாதிப் பெருமையிலிருந்து விடுதலை அடைந்த தமிழ் தேசியச் சிந்தனையாளர்களுக்கும் மட்டுமே இருக்கிறது. இதற்குப் புதை குழியிலிருந்து தந்தை பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை தூக்கி எடுக்கப்படல் வேண்டும். இந்தியா முழுவதும் சாதி ஒழிப்பு செயல்படுத்தப் பட வேண்டும்.

தந்தை பெரியாரின்உண்மைத் தொண்டர்களுக்கு

இந்தியாவின் உச்ச நீதி மன்றமும், உலகளாவிய கிருத்துவ, இசுலாமிய அமைப்புகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை நோக்குவனவாக இருக்கின்றன.

உச்ச நீதிமன்றம் மறைந்து கிடக்கும் இந்து மதத்தை அறிய முற்படுகின்றது. உலகளாவிய கிருத்துவ இசுலாமிய அமைப்புகள் இந்தியாவின் சாதி ஏற்றத்தாழ்வை நிலை நாட்டும் மனுநூல் கொள்கையான இந்துத்துவாவினால் துன்புறுத்தப்படும் இந்திய மக்களைப் பற்றிக் கவலை கொள்ளுகிறது. இது நியாயமான தன்னலமற்ற கவலையா? என்பது போகப் போக தெரியும்.

இந்துத்துவா சமசுகிருதத்தினில் இருக்கின்றது. இந்து மதம் தமிழ் மொழியில் இருக்கின்றது. இந்துத்துவாவின் பிடியில் இருந்து இந்து மதத்தை விடுவிக்க தமிழ் மொழியாலும், தமிழ் இனத்தாலும் மட்டுமே முடியும்.

தமிழ் மொழியும், தமிழ் மொழியும் அழிக்கப்பட்டு முற்றிலுமாக அழியும் நிலையில் இருக்கின்றது. காரணம் அந்நியர்களின் நயவஞ்சகத்தாலும் நம்பிக்கைத் துரோகத்தாலும் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டினை ஆள முடியவில்லை. 2016 இல் நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தந்தை பெரியாரின் 1938 கூற்றுப்படி "தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும்". அதற்குத் தமிழர்களின் ஒற்றுமைக்கு எதிராக இருக்கும் சாதிக் கொள்கை ஒழிக்கப்பட வேண்டும். சாதி ஒழிப்பும் இந்து மத விடுதலையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இதனால் இந்து மத விடுதலைக்கு பெரியாரின் சாதி ஒழிப்புக் கொள்கை புதைக் குழியில் இருந்து தூக்கி எடுக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட வேண்டும். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தமிழ் நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் இதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். பெரியாரின் உண்மைத் தொண்டர்களும் விடுதலை அடைந்த தமிழ் சிந்தனையாளர்களும் இந்து மத விடுதலையில் ஒன்றிணைந்து சாதி ஒழிப்பு மாநாடு நடத்த முன்வர வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. போலிகள் அகற்றப்பட வேண்டும்.

2016 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளையும் பக்குவப்படுத்தும் ஆர்வமுள்ள தன்மானத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் அந்நியர்களின் அழிவில் இருந்து காக்க நியாயமான எந்தத் தியாகத்திற்கும் ஆயுத்தமாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தியாகச் சிந்தனையுடைவர்களை வரவேற்கின்றோம் - மு.தெய்வநாயகம்

தொடர்பு:

பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம்
நிறுவனர் : இந்துமத விடுதலை முன்னணி
ஒருங்கிணைப்பாளர்: அனைத்துத் தன்மான தமிழர்களின் கூட்டமைப்பு
எண் 278, கொன்னூர் நெடுஞ்சாலை, அயன்புரம் சென்னை - 600 023
044-26743842
You might like:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...