செவ்வாய், 27 டிசம்பர், 2016


எகிப்து தேசம் & யோசேப்பு - வரலாற்று தடயங்கள்






இஸ்ரவேலர்களின் அடிமைக் காலத் துயரங்களை யோசேப்பின் கதையிலிருந்து பைபிள் கூறத் தொடங்குகிறது. யோசேப்பு ஆபிரகாமின் விசுவாசமும், ஈசாக்கின் நற்பண்பும், யாக்கோபின் தன்னம்பிக்கையும் கொண்டவர். பைபிளில் காணப்படும் வியப்புக்குறிய மனிதர்களுள் இவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.
    • பைபிளில் கணக்கிட, யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டு எகிப்திய அதிகாரியாக உயர்த்தப்பட்ட நாட்கள் கி.மு 1900-1850 என்ற கால அளவிற்குள் வருகின்றன.

    மூன்றாம் செனுசுரத்தின் சிலைகள்

    இக்காலங்களில் எகிப்தை 12ஆம் வம்சத்தை சேர்ந்த இரண்டாம் செனுசுரத் (கி.மு 1897-1878), மூன்றாம் செனுசுரத் (கி.மு 1878 - 1839) என்ற இரண்டு அரசர்கள் ஆண்டனர். எனவே, இரண்டாம் செனுசுரத்தின் நாட்களில் யோசேப்பு எகிப்தின் மேல் அதிகாரியாகி மூன்றாம் செனுசுரத்தின் ஆட்சியிலும் பதவி வகித்தார் என கணக்கிடலாம். இஸ்ரவேல் புத்திரர் எகிப்தை அடைந்து 71 ஆண்டுகளான பின் (கி.மு 1805) யோசேப்பு இறந்தார். கி.மு 1805-இல் அரசி சொபெக்நெப்ரூ (கி.மு 1806-1802) எகிப்து தேசத்தை ஆண்டு வந்தார். யோசேப்பு இறந்து மூன்று ஆண்டுகளுக்குள் 12ஆம் வம்சத்தின் ஆட்சி வீழ்ந்தது.

    யோசேப்பை உறுதிப்படுத்தும் தடயங்கள்:

    1) எகிப்திற்கு விற்கப்படும் யோசேப்பு:
    கி.மு 2000 -1800 காலங்களில் செமித்தியர்கள் எகிப்திற்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். அடிமைகளாக பெறப்பட்ட ஆசியர்களின் பெயர்களை 12ஆம் வம்சத்தை சேர்ந்த சில எகிப்திய ஹியராடிக் (சமயஞ்சார்ந்த) பாப்பிரஸ்கள் குறிப்பிடுகின்றன. பண்டைய எகிப்து தேசத்திற்கும், மெசப்பொத்தொமிய தேசங்களுக்கும் நிலவிய அடிமைவர்த்தகத்தை இதனால் அறியலாம்.

    12ஆம் வம்சத்தை சார்ந்த
    ஒரு ஹியராடிக் பாப்பிரஸ்
    Genesis 37:28 -So when the Midianite merchants came by, his brothers pulled Joseph up out of the cistern and sold him for twenty shekels of silver to the Ishmaelites, who took him to Egypt. (NIV)
    ஆதியாகமம் 37:28 - அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிற போது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக் காசுக்கு* விற்றுப் போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு போனார்கள்.
    * தமிழ் பைபிளில் இருபது வெள்ளிக் காசுகள் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 'இருபது சேக்கல்' அல்லது 'இருபது நிறைவெள்ளி' என்பதே பொருத்தமான தமிழ் சொற்கள். பண்டைய சுமேரியர்களும் எகிப்தியர்களும் வெள்ளியை இடைநிறுத்தி கொடுத்து பொருட்களை வாங்கி வந்தனர். 11.5 கிராம் இடை கொண்ட வெள்ளி ஒரு சேக்கல் எனப்பட்டது. அக்காலத்தில் காசுகள் (coins) வழக்கத்தில் இல்லை.
    • 1 சேக்கல் - 11.5 கிராம் வெள்ளி
    • 20 சேக்கல் - 230 கிராம் வெள்ளி
    • 1 திபன் (deben) - 90 கிராம் வெள்ளி
    • 1 கித் (kit) - 9 கிராம் வெள்ளி
    ஆதியாகமம் 37:28 யோசேப்பு 20 சேக்கல் வெள்ளிக்கு விற்கப்பட்டதாக கூறுகிறது. யோசேப்பு கி.மு19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அக்காலத்தில் ஒரு அடிமைக்கு 20 சேக்கல் (230 கிராம் வெள்ளி) என்பது மிக சரியான விலை. பண்டைய எகிப்து பதிவேடுகள் இதனை உறுதி செய்கின்றன. 
    Behold, I have sent you Hanya, the commissioner of the archers, with merchandise in order to have beautiful concubines, i.e. weavers; silver, gold, garments, turquoises, all sorts of precious stones, chairs of ebony, as well as all good things, worth 160 deben. In total: forty concubines - the price of every concubine is forty of silver. Therefore, send very beautiful concubines without blemish.
    - Letter from Amenhotep III to Milkilu

    தமிழாக்கம்: "அழகான அடிமைப் பெண்களை உன்னிடத்தில் பெற்று வர வில்லாளர்களின் அதிகாரியான அன்யாவிடம் 160 திபன் மதிப்புள்ள நெசவாளர்கள், பொன்வெள்ளிகள், பட்டாடைகள், ரத்தினங்கள், விலையுர்ந்த கற்கள், கருங்காலிமர நாற்காலிகள் என பலவித நற்பொருட்களை கொடுத்து  அனுப்பியுள்ளேன். ஒரு அடிமைப் பெண்ணின் விலை 40 வெள்ளி என்ற கணக்கில் 40 அடிமைப் பெண்களாகிறது. எனவே குறையில்லாத அழகான அடிமை பெண்களை அனுப்பி வை"

    160 திபன் / 40 = 4 திபன் = 40 கித் = 360 கிராம் வெள்ளி = 31 சேக்கல்
    மேற்கோளில் உள்ள குறிப்பு கி.மு 14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த எகிப்திய மன்னனின் தூதுச் செய்தி. கி.மு 14ஆம் நூற்றாண்டில் ஒரு அடிமைக்கு சுமார் 30 சேக்கல் விலையாக கருதப்பட்டது. இக்குறிப்புகளைக் கணக்கில் கொண்டால், கி.மு 19ஆம் நூற்றாண்டில் ஓர் அடிமைக்கான விலை 20 சேக்கலாகிறது.

    2) எகிப்தில் நிலவிய அநீதிகள்:
    இஸ்மவேலர்கள் யோசேப்பை பாரோவின் பிரதானியான போத்திபாரிடத்தில் விற்றனர். போத்திபார் அவரை தன் வீட்டு விசாரணைக்காரனாக்கினார். அந்நாட்களில் போத்திபாரின் மனைவி யோசேப்புடன் தகாத உறவு கொள்ள முயல்கிறாள். அவர் தனக்கு இணங்காததை அவள் கண்ட போது, தன் கணவனிடத்தில் அவரைக் குறித்து பொய் குற்றஞ்சாட்டி அவரை சிறைத் தண்டனைக்குள்ளாக்கினாள். (ஆதியாகமம் 39)
    பாப்பிரஸ் டி'ஆர்பினி

    இதே கதை 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த "பாப்பிரஸ் டி'ஆர்பினி" என்ற எகிப்திய ஓலையில் காணப்படுகிறது.

    இக்கதையில் இரு சகோதரர்கள் காணப்படுகின்றனர். அண்ணனின் மனைவி இளையவனுடன் தகாத உறவு கொள்ள விரும்புகிறாள். அதற்கு அவன் இணங்காததைக் கண்ட அப்பெண், கொளுந்தன் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாய் தன் கணவனிடம் பொய் கூறுகிறாள். இதனால் அண்ணன் தம்பியைக் கொலை செய்ய தேடுகிறான். ஆனால் உண்மை கண்டுபிடிக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்படுகிறாள்.இக்கதை போத்திப்பார் மனைவி குறித்து அக்காலங்களில் நிலவிய செய்தியைக் கருப்பொருளாக வைத்து எழுதப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.

    கோதுமை தானியங்களை பெற்றுகொண்டதாக
    எகிப்தின் தலைமை சுயம்பாகி ஒருவர் பானை
    ஓட்டில் ஒப்புதல் எழுதியுள்ளார்.

    சுயம்பாகிகளின் அப்பம் தயாரிப்பு பணியை
    சித்தரிக்கின்ற பண்டைய எகிப்தின் மாதிரி
    (கெய்ரோ அருங்காட்சியகம்)

    சிறையில் வாடிய நாட்களில், எகிப்து ராஜனின் பானப்பத்திரக்காரனும், சுயம்பாகியும் தங்கள் சொப்பனங்களுக்குரிய பொருளை யோசேப்பிடம் கேட்டறிந்தனர் (பைபிள்). "பானப்பத்திரக்காரன்", "சுயம்பாகி" என்ற பட்டப்பெயர்கள் எகிப்திய கையேடுகளில் காணப்படுகின்றன. இத்தகைய அரண்மனைப் பணியிடங்கள் அக்கால எகிப்து தேசத்தில் விளங்கி வந்தன என இதனால் அறியலாம்.

    ரொசெட்டாக் கல்வெட்டு

    பாரோ மன்னர்கள் தங்களது பிறந்தநாட்களில் சிறைகைதிகளை விடுவித்து வந்தனர் என ரொசெட்டாக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இச்செய்தியை ஆதியாகமம் 40:20,21 வசனங்களும் கூறுகின்றன.

    3) யோசேப்பு உயர் அதிகாரியாகிறார்:
    இறைவன் யோசேப்பை நினைத்தருள பாரோ சொப்பனங்கண்டு கலங்குகிறான். பாரோ கண்ட கனவிற்குரிய பொருளை யோசேப்பு எடுத்துக் கூறுகிறார். மகிழ்ந்த மன்னன் அரண்மனைப் பணியில் அமர்த்தி அவரை பெருமைப்படுத்துகிறான் (ஆதியாகமம் 41). அமர்னா களிமண் பலகைகளில் பாரோ மன்னர்கள் செமித்தியர்களை அரண்மனைப் பணிகளில் அமர்த்தியதாக செய்திகள் காணப்படுகின்றன.
    ஆதியாகமம் 41:14 - அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல் கிடங்கிலிருந்து கொண்டு வந்தார்கள். அவன் சவரம் பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்
    பாரோக்களும், எகிப்திய அரண்மனை பிரதானிகளும் மீசைத்தாடி மயிர்களை சவரஞ்செய்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்வழக்கம் எகிப்தின் பாரம்பரிய சடங்குகளில் மிகவும் தொன்மையானது. பாரோ மன்னர்கள் தங்களது முக்கிய பிரதானிகளுக்கு பொற்கச்சையை சூட்டி பெருமைப்படுத்தும் மரபையும் எகிப்திய பதிவேடுகள் கூறுகின்றன. பண்டைய ஓவியங்களிலும்  இந்த மரபைக் காணலாம்.
    ஆதியாகமம் 41:41-43,45: "பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின் மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்து தேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.... பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியன் போத்திபிராவின் குமாரத்தி ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்"

    யோசேப்பு காலத்தைச் சேர்ந்த
    ரா கோவிலின் மீந்துள்ள பகுதி.
    (ஓன் பட்டணம்)

    ஓன் பட்டணத்தின் ரா கோவில்
    இவ்வாறு இருந்திருக்கலாம்.

    சாப்நாத்பன்னேயா என்பது பாரோ யோசேப்புக்கு இட்ட எகிப்திய பெயரின் எபிரேயச் சொல். மெய்யான எகிப்திய பெயரைக் குறித்து இன்றும் தெளிவான முடிவுகள் இல்லை. 'போத்திபேரா' என்பதற்கு 'ராவினால் கொடுக்கப்பட்டவர்' என்பது பொருள். பண்டைய எகிப்தியர்கள் 'ரா' என்ற சூரிய கடவுளை வழிபட்டு வந்தனர், இவ்வழிபாட்டிற்கு பெயர் பெற்ற ஓர் பண்டைய எகிப்து நகரமே ஹீலியொபோலிஸ் (ஓன்பட்டணம்). பாரோன் தன்னுடைய இரண்டாம் இரதத்தையும் யோசேப்புக்கு கொடுத்தான். 14ஆம் வம்சத்தில் இருந்தே எகிப்து தேசத்தில் இரதங்களைப் பயன்படுத்த தொடங்கினர் என்ற செய்தி நிலவி வருகிறது. இது தவறு. 14,15-ஆம் வம்சங்களில் பெருவாரியான தேர்களைக் கட்டி போர்களுக்கு பயன்படுத்த தொடங்கினர். எனினும் அதற்கு முந்திய காலங்களில் இருந்தே பாரோ மன்னர்களும் முக்கிய பிரதானிகளும் இரதங்களை சுயதேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர்.

    நம்ஹோடப்
    (இடப்புற தெளிவான நபர்)

    பாரோ யோசேப்பை தனக்கடுத்த நிலையில் பணி அமர்த்தினான் என பைபிள் கூறுகிறது. எகிப்திய அரண்மனைகளில் மன்னனுக்கு அடுத்த அதிகாரங்கள் மதகுருகளுக்கும் அமைச்சர்களுக்கும் தரப்பட்டிருந்தன. எனினும் அமைச்சர்களைக் குறித்து அனைத்து ராஜவம்சங்களிலும் குறைந்த குறிப்புகளே உள்ளன. இரண்டாம் செனுசுரெத், மூன்றாம் செனுசுரத்  அரசாட்சிகளில் 'சொபெக்-எம்ஹத்', 'நம்ஹொடப்' என்ற இரு அமைச்சர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இருவரும் மூன்றாம் செனுசுரெத்தின் பிற்காலத்தை சார்ந்தவர்கள். நம்ஹொடப் அமைச்சர் பணியோடு மன்னனின் பிரதான உதவியாளராகவும் செயலாற்றிருக்கிறார். இதுவரை நம்மிடம் உள்ள எகிப்திய வரலாற்றில் அமைச்சராகவும், பிரதான உதவியாளராகவும் விளங்கிய ஒரே நபர் இவரே. நம்ஹொடப் யோசேப்பாக இருக்க வாய்ப்புகள் இல்லை. எனினும் 2ஆம், 3ஆம் செனுசுரத் மன்னர்களது காலங்களில் யோசேப்பு அமைச்சராகவும், பிரதான உதவியாளராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற பின், நம்ஹொடப் அப்பணிக்கு உயர்த்தப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன. 'பார்வோனுக்கு தகப்பன்' என்பது ஆன்மீக ஆலோசனைகளை எடுத்துக்கூறும் பணியைக் குறிக்கும்.
    ஆதியாகமம் 45:8 - "ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார்"
    4) பஞ்சம் உண்டான காலம்:
    ஆதியாகமம் 41:48,49 - அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களை எல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான். இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப் போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது.
    எகிப்துஅரசி ஒருவரது கல்லறையில் தீட்டப்பட்டுள்ள
    சுவரோவியம் (கி.மு 13ஆம் நூற்றாண்டு)

    எகிப்தின் அறுவடை பணியை குறிக்கும் சுவரோவியம்.
    மெனா சமாதி, தெபெஸ் - கி.மு 1420

    தானியங்களை எடுத்துச்செல்லும் எகிப்தியர் - சுவரோவியம்
    மெனா சமாதி, தெபெஸ் - கி.மு 1420

    குறிப்பு: இம்மூன்று சுவர் ஓவியங்களும் பண்டைய எகிப்தின் வேளாண்மை பணிகளைக் குறிக்கவே இங்கு பதிக்கப்பட்டுள்ளன. யோசேப்பு காலத்தில் நிகழ்ந்த விளைச்சலை குறிப்பதாக எண்ணவேண்டாம்.

    யோசேப்பு காலத்தை ஒட்டி செய்யப்பட்ட
    ஒரு களஞ்சிய கட்டமைப்பு மாதிரி
    (கெய்ரோ அருங்காட்சியகம்)

    யோசேப்பு பணியிலிருந்த போது, செழிப்பான பருவங்களில் விளைந்த தானியங்களைத் திரட்டி கடற்கரை மணலைப் போல சேர்த்து வைத்தார். இதனால் பஞ்சம் உண்டான காலங்களில் எகிப்து தேசம் காப்பாற்றப்பட்டது என பைபிள் கூறுகிறது. எகிப்து தேசம் முழுவதும் அதிக கொள்ளளவு கொண்ட பண்டைய களஞ்சியங்கள் (குதிர்கள்) காணப்படுகின்றன. இக்களஞ்சியங்கள் பெருமளவான கோதுமை தானியங்களைக் கொள்ளும். கி.மு 2000-1800 காலக்கட்டங்களில் செய்யப்பட்ட களஞ்சிய கட்டமைப்பு மாதிரிகளும் எகிப்தில் பெரிதளவில் கண்டெக்கப்பட்டுள்ளன.
    7 வருட பஞ்ச காலத்தை
    கூறும் கல்வெட்டு

    ஆதியாகமம் 41: 53,54,56,57 - எகிப்து தேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின், யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது.
    எகிப்து-மெசப்பொத்தோமிய தேசங்களில் ஏழு வருட பஞ்சம் நிகழ்ந்திருப்பதை பல தடயங்கள் உறுதி செய்கின்றன. நைல் டெல்டா பகுதியை ஒட்டி அமைந்துள்ள ஒரு கல்வெட்டு (Famine Stela) எகிப்தில் நிலவிய 7 வருட பஞ்சத்தைக் குறிப்பிடுகிறது. நைல் நதியில் நீர்வரத்து நின்று, எகிப்து தேசத்தில் பஞ்சம் கொடிதாகிறது. பஞ்சத்தின் கொடுமையை தாங்காத மன்னன் புரோகிதர்களை அழைத்து பரிகாரம் கேட்கிறான். மன்னனின் துயர்நீக்க புரோகிதர்கள் நைல்நதியை வணங்கி வந்தனர். அச்சமயம் நைல் நதிதேவன் தலைமை புரோகிதனின் கனவில் தோன்றி விரைவில் பஞ்சம் நீங்கும் என ஆறுதல் கூறுகிறான். விடியற்காலை எழுந்தவுடனே புரோகிதன் இச்செய்தியை அறிவிக்க, மன்னன் மகிழ்ந்து நைல் நதிதேவனுக்கு கோவில் கட்டினான். இவ்வாறு இக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கதையில் காணப்படும் மன்னன் ஜோசர், தலைமை புரோகிதரின் பெயர் இம்ஹொடப். ஜோசர் மூன்றாம் வம்சத்தை சார்ந்த எகிப்திய பாரோ மன்னன் - கி.மு 2670 காலத்தை ஒட்டி வாழ்ந்துள்ளார். இவரது தலைமை மதகுருவாக இம்ஹோடப் விளங்கினார்). இது யோசேப்பின் கதையை ஒத்திருப்பதைக் காணலாம்.

    சில பைபிள் ஆய்வாளர்கள் யோசேப்பும் இம்ஹோடப்பும் ஒருவரே என கருத்து தெரிவிக்கின்றனர். இது தவறு. பைபிள் கூறுகின்ற காலக் குறிப்புகளைக் கணக்கில் கொண்டால் யோசேப்பு வாழ்ந்த காலம் கி.மு 19ஆம் நூற்றாண்டு என்று திட்டவட்டமாக தெளிவாகும். இம்ஹோடப் கி.மு 27ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் - யோசேப்பு பிறப்பதற்கு 700 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் பணியாற்றியவர். யோசேப்பும், இம்ஹோடப்பும் ஒரே நபர் அல்ல. வேறுசிலர், பிற்கால இஸ்ரவேலர்கள் இக்கதையை திருத்தஞ்செய்து தங்களது இறைவனை போற்றிப் புகழ்ந்துள்ளதாக கருதுகின்றனர். இதுவும் தவறான கருத்து. இக்கதையில் கூறப்பட்டுள்ள ஜோசர், இம்ஹோடப் ஆகிய நபர்கள் யோசேப்பிற்கு முந்திய காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும், இக்கதை பைபிளிற்கு பின்பு எழுதப்பட்டது தான். இக்கல்வெட்டு கி.மு 332-இல் செதுக்கப்பட்டது. பைபிள் (ஆதியாகமம்) இக்கல்வெட்டிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது. ஜோசரும், இம்ஹோடப்பும் வாழ்ந்த காலத்தை (கி.மு-27ஆம் நூற்றாண்டு) ஒட்டி இக்கல்வெட்டு கூறுகின்ற கதைக்கு எவ்வித தடயங்களும் இதுவரை இல்லை. பிற்கால எகிப்தியர்கள் இக்கதையை ஜோசருக்கும், இம்ஹோடப்பிற்கும் இணைத்து எழுதிருக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளன.

    இக்கல்வெட்டைப் போலவே எகிப்திய பாப்பிரஸ் (pWien D6319) ஒன்று அத்தேசத்தில் நிலவிய 7 வருட பஞ்சத்தை கூறுகிறது. நெபர்காசேகர் என்ற பாரோவின் ஆட்சியில் கொடிய பஞ்சம் நிகழ்ந்ததாக இப்பாப்பிரஸ் கூறுகிறது. அச்சமயம் பாரோவின் சொப்பனத்தில் எகிப்தியரின் தேவன் தோன்றி தேசத்தின் கோவில்களைச் சீர்படுத்துமாறு கூறுகிறான். மன்னன் இணங்கி எகிப்தின் கோவில்களைச் சீர்படுத்த, நைல் நதியில் நீர்வரத்து உண்டாகி பஞ்சம் நீங்குகிறது. இக்கதையும் யோசேப்பு குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகளுக்கு ஒத்திருப்பதைக் காணலாம். நெபர்காசேகர் கி.மு2740-இல் வாழ்ந்தவர். யோசேப்பு பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன் இவர் எகிப்தை ஆண்டுள்ளார். ஆனால் நெபர்காசேகரைப் பற்றிய இக்கதை பைபிளிற்கு பின்பு எழுதப்பட்டது. நெபர்காசேகர் கனவு கண்டதையோ, அவரது அரசாட்சியில் பஞ்சம் உண்டானதையோ உறுதிபடுத்த கி.மு 28ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தடயங்கள் ஏதும் இல்லை. நெபர்காசேகர் மடிந்து 2000 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய பிற்கால எகிப்தியர்களே (கி.மு 237) நெபர்காசேகர் காலத்தில் 7 வருட பஞ்சம் உண்டானதாக எழுதியுள்ளனர். ஆனால் இப்பாப்பிரஸ் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. இது ஒரு மொழிப்பெயர்ப்பு பிரதி. இச்செய்திகள் கி.மு 2055 -1650 காலங்களில் இருந்தே எகிப்தில் விளங்கியிருக்கலாம் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். (இக்காலத்தில் தான் யோசேப்பு வாழ்ந்ததாக பைபிள் கூறுகிறது). எகிப்திய வட்டாரங்களில் இச்செய்திகள் காலப்போக்கில் மருவியிருக்கலாம்.

    எகிப்தில் எடுக்கப்பட்ட இவ்விரு தடயங்களும் 7 வருட பஞ்ச காலத்தையும், அதற்கு ஒரு சொப்பனத்தையும் தங்கள் கதைகளில் எடுத்துக்கூறுவதை தெளிவாக காணலாம். இவ்விரண்டு தடயங்களும் பைபிளிற்கு பின்பே எழுதப்பட்டுள்ளன. எனினும் பண்டைய எகிப்து மக்களிடையே 7 வருட பஞ்சத்தையும், அதோடு தொடர்புடைய ஒரு சொப்பனத்தையும் குறித்து நம்பிக்கைகள் விளங்கி வந்ததை இவை உறுதி செய்கின்றன. பஞ்சம் நிகழ்ந்த காலத்தைக் குறித்து அக்கால எகிப்தியர்களிடம் முரண்பாடு உள்ளதையும் இதனால் அறியலாம். எகிப்து மட்டுமின்றி, மெசப்பொத்திமிய கல்வெட்டுகள் சிலவற்றிலும், 7-வருட பஞ்சகாலம் குறித்து செய்திகள் காணப்படுகின்றன. கில்கமேஷ் காப்பியத்தில் 'அனு' என்ற தேவன் 7 வருட கொடிய பஞ்சத்தைக் குறித்து முன்னறிவிக்கிறான். பண்டைய மத்திய-கிழக்கு தேசங்களில் நிகழ்ந்த ஒரு கொடிய பஞ்சம் அக்கால மக்களிடையே அழியாத நினைவை ஏற்படுத்தியுள்ளது. இதனை இத்தடயங்கள் உறுதி செய்கின்றன.
    ஆதியாகமம் 41:57 - சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசம் எங்கும் ஆகாரம் இருந்தது. தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்து தேசத்தில் வரவரக் கொடிதாயிற்று. சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாய் இருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.
    5) யோசேப்பின் மரணம்:
    ஆதியாகமம் இறுதியாக யாக்கோபு, யோசேப்பின் மரணங்களை கூறுகிறது. இருவரது சரீரங்களும் சுகந்தவர்க்கமிட்டு பதனிடப்பட்டன. யாக்கோபின் பிரேதம் மக்பேலாவில் அடக்கஞ்செய்யப்பட்டது. யோசேப்பின் பிரேதத்தை சவப்பெட்டியில் கிடத்தி எகிப்திலேயே வைத்தனர். எனினும் மோசே எகிப்தை விட்டு செல்லும் போது யோசேப்பின் எழும்புகளை எடுத்துச் சென்றார்.
    ஆதியாகமம் 50: 1-3: அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான். பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள். சுகந்தவர்க்கமிட நாற்பது நாள் செல்லும்; அப்படியே அந்நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கம் கொண்டாடினர்.

    பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள சில மம்மிகள்
    பிரிட்டிஷ் அருங்காட்சியம், லண்டன்

    உள்ளுறுப்புகள் வைக்கப்பட்ட
    கற்ஜாடிகள் - லண்டன்
    எகிப்தின் ஈமச்சடங்குகளை (மம்மி) பைபிள் துல்லியமாக எடுத்துக்கூறுகிறது. பண்டைய எகிப்தில் உடலை பதப்படுத்தியே அடக்கஞ்செய்தனர். முதலில் இதயத்தை தவிர பிரேதத்தின் உள்ளுறுப்புகளை அகற்றி, அவைகளை தனி கற்ஜாடிகளில் வைத்தனர். பின் உறுப்புகள் நீக்கப்பட்ட பிரேதத்தை நன்கு வற்றச்செய்வர். நீர்வற்றிய பிற்கு, சோடியம் கார்பனேட்-பைகார்பனேட் கலவையை பிரேதத்தில் சேர்த்துக்கட்டி, வாசனைத் திரவியங்களைப் பூசி, சவப்பெட்டியில் கிடத்துவர். இப்பணிகளுக்கு நாற்பதுநாட்கள் தேவைப்படும். இறுதியாக கற்ஜாடிகளையும், சவப்பெட்டியையும் ஒரே பிரமிட் (அ) கல்லறையில் பாதுகாப்பாக வைத்தனர். இறந்தவருக்கு பிடித்த ஆடைகள், பொன்வெள்ளி ஆபரணங்கள், சிலைகள், சித்திரங்கள் என பலவிதமான பொருட்களையும் கல்லறையில் வைத்துவிடுவார்கள். இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவெனில், எகிப்தியர்கள் நூற்றுப்பத்து வயதை எட்டிய மூத்தமக்களை தீர்க்காயிசுள்ளவர்களாக கருதினர் (Aling 1981:51, note 25). யோசேப்பு 110 வருஷங்கள் வாழ்ந்தார் என பைபிள் கூறுகிறது.
    ஆதியாகமம் 50:23, 26 -  யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் அவன் மடியில் வளர்க்கப்பட்டார்கள்... யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்து வைத்தார்கள்.
    டெல்-எல்தாபா அகழ்வாராய்ச்சி பணிகள்
    எகிப்தின் 'டெல்-எல்தாபா' மாநிலப்பகுதிகளே பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள 'ராமசேஸ்' பட்டணம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இப்பகுதியில் 12ஆம் வம்சத்தைச் சார்ந்த அரண்மனை ஒன்று சிதைந்த நிலையில் உள்ளது. பன்னாட்டு வர்த்தகங்களை கண்காணித்த அரச அதிகாரி ஒருவர் இதில் வாழ்ந்துள்ளார். அரண்மனைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ள நிலத்தில் 12 கல்லறைகள் உள்ளன. இவைகளில் ஒரு கல்லறை உயர்ந்த அளவிலும், முற்பகுதியில் சிறிய கோவிலோடும், கொள்ளை அடிக்கப்பட்ட நிலையிலும் காணப்படுகிறது. எனினும் ஒரு சிலையின் உடைந்த தலைப்பகுதிகள் மட்டும் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன.

    கல்லறையின் கட்டமைப்பு

    உடைந்த சிலைப்பகுதிகள்

    ராஜவம்சத்திற்கு உரிய எந்த சிற்பவேலைகளும் இச்சிலையில் இல்லை. உடலிற்கு மஞ்சள் நிறச்சாயம் பூசப்பட்டு காளான் வடிவ தலைமயிரோடு இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை ஆசிய ஆண்மக்களைக் குறிக்கும் எகிப்திய சிற்ப வேலைகள். இம்மனிதர் ஆசியாவை சேர்ந்தவர், எகிப்திய அரசுப்பணி வகித்தவர் என்பதை இத்தடயங்கள் விளக்குகின்றன. இவர் யோசேப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    குறிப்பு:


    காசுகள்?

    யோசேப்பு காலத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான எகிப்திய பொன், வெள்ளி நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 'அல்-அஹ்ரம்' என்ற எகிப்தின் பிரபல தினசரி பத்திரிக்கை செய்திகள் வெளியிட்டுள்ளது. எகிப்து அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்படாத சிறுதொல்பொருட்களை இடமாற்றம் செய்யும்போது, யோசேப்பின் சித்திரமும் பெயரும் பொறிக்கப்பட்ட வட்டநாணயங்களைத் தற்செயலாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர் என இப்பத்திரிக்கை கூறுகிறது. இவைகளை ஆராய்ந்த டாக்டர் சையத் முஹமது என்ற தொல்பொருளாய்வாளர் ஒரு நாணயத்தில் பாரோவின் கனவை சித்திரிக்கின்ற வகையில் ஒரு பசுமாடு பொறிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். யோசேப்பின் மெய்யான பெயரும், சாப்நாத்பன்னேயா என்ற எகிப்திய பெயரும், உருவப்படமும் பொறிக்கப்பட்ட சில நாணயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சையத் கூறுகிறார். சிலவற்றில் காலமும், எழுத்துக்களும் கூட பொறிக்கப்பட்டுள்ளதாக அல்அஹ்ரம் கூறுகிறது. அக்காலங்களில் எழுத்துமுறை வளர்ந்து வந்ததால் தற்போது அறியப்பட்டுள்ள பழமையான சித்திர எழுத்துக்களைக் கொண்டு நாணயங்களில் பொறிக்கப்பட்டுள்ள செய்திகளை ஆராய்ந்து வருவதாக சையத் கூறுகிறார். நாணயங்கள் கி.மு 8,7ஆம் நூற்றாண்டுகளில் தான் வழக்கத்திற்கு வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதி வருகின்றனர். இச்செய்தி மெய்யென கண்டுபிடிக்கப்பட்டால், நாணயங்களின் காலம் ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி போகும்! குர்-ஆனில் யோசேப்பின் காலத்தில் நாணயங்கள் இருந்ததாக செய்திகள் உள்ளன. 'அல்-அஹ்ரம்' குர்ஆனை ஒப்பிட்டு இச்செய்தியை வெளியிட்டுள்ளதால் இது சர்ச்சைக்குரியதாக உள்ளது.
    குர்ஆன் 12:20 - இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து அவரை அவர்கள் எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
    சில ஆய்வாளர்கள் குர்-ஆனை மெய்ப்படுத்த சையத் தவறான செய்திகளை முன்வைப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். சிலர், அவை நாணயங்கள் அல்ல, நாணய வடிவில் செய்யப்பட்ட சேக்கல்கள், நினைவுபொருட்கள் எனக் கருதுகின்றனர். எனினும் இவை இன்றும் ஆய்விற்கு உட்பட்ட நிலையிலேயே உள்ளன. சையது முஹமது அவர்களின் செய்திகள் உறுதியாகும் வரை இவைகளை யோசேப்பிற்கு சான்றாக கருதவேண்டாம் என மேற்கத்திய திருச்சபைகள் தெரிவிக்கின்றன. இந்த நாணயங்கள் மெய்யானாலும், பொய்யானாலும் யோசேப்பு வாழ்ந்தார் என்பதில் எங்களுக்கு சந்தேகமில்லை.
    சங்கீதம் 19:7 - கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.

    முற்பிதாக்களின் காலம் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - ஒரு ஆய்வு




    இஸ்ரவேல் தேசத்தின் சரித்திர தொடக்கமாக பைபிள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வாழ்க்கைகளை எடுத்து கூறுகிறது. ஆபிரகாம் சிலைவணக்க வழிபாடு மிகுந்த சமுதாயத்தில் பிறந்தாலும் யெகொவா தேவனுக்கு மட்டுமே தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். இறைவனின் ஆசியோடு ஆபிரகாம் ஈசாக்கை பெற்றார். ஈசாக்கு யாக்கோபை பெற்றார். யாக்கோபிற்கு பன்னிரெண்டு புத்திரர்கள் பிறந்தனர். இந்த சந்ததி எகிப்திற்கு குடிபெயர்ந்து பன்னிரெண்டு கோத்திரங்களாக பெருகுகின்றனர். அந்நியர்கள் தங்களது தேசத்தில் பெருகி வருவதை கண்டு அச்சமுற்ற எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்க ஆரம்பிக்கின்றனர். தேவன் ஆபிரகாமை நினைவு கூர்ந்து, அவரது சந்ததியை எகிப்தியர்களுக்கு தப்புவித்து கானான் தேசத்தில் குடி அமர்த்துகிறார். இஸ்ரேல் என்னும் தேசம் மலர்ந்தது.


    பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மூவரை உறுதிபடுத்தும் தடயங்களை  கண்டடைவது எளிதல்ல என்றாலும் அவர்களை குறித்த செய்திகளின் உண்மையை கண்டையலாம். பைபிளில் கணக்கிட்டபடி முற்பிதாக்களின் காலம் கி.மு 2000-த்திற்கு ஒத்து வருகிறது. இம்மூன்று தனி நபர்களை குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகளை இன்றைய மத்திய கிழக்கு தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. குறிப்பாக பண்டைய மத்திய கிழக்கு பட்டணங்களான மரி, நுசி, எப்லா ஆகியவற்றில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கிட்டிய கல்வெட்டுகள் முற்பிதாக்களின் கதைகளோடு ஒத்திருக்கின்றன.

    மரி கல்வெட்டுகளில் ஒன்று

    ஒரு எப்லா கல்வெட்டு

    நுசி கல்வெட்டுகளில் சில
    அ) முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் வரலாற்று துல்லியங்கள்:
    முற்பிதாக்கள் வாழ்ந்த சூழல் குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகள் வரலாற்று பூர்வமாக உறுதியாகியுள்ளது. அவை நான்கு தலைப்புகளாக கீழே விளக்கப்பட்டுள்ளன.

    1) பெயர்கள்: பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் காணப்படுகின்ற பல பெயர்கள் பழங்கால கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
    • ஆபிரகாம்: ஆபிரகாம் என்ற பெயர் மரி கல்வெட்டுகள் பலவற்றில் பலமுறை காணப்படுகிறது. கி.மு 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாபிலோனிய கல்வெட்டுகள் சிலவற்றிலும் இப்பெயர் காணப்படுகிறது.
    • பென்யமீன்: இப்பெயர் மரி கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
    • யாக்கோபு: சாகர்-பசர் என்ற வட மெசபொத்தோமிய பட்டணத்தில் கிட்டிய  கி.மு 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் யாக்கோபு என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் துட்மோஸ் என்ற எகிப்திய மன்னரின் அரச ஓலையில் ஒரு பாலஸ்தீன பட்டணத்தின் பெயர் யாக்கோபு என எழுதப்பட்டுள்ளது. எகிப்தில் வாழ்ந்த ஹிஸ்கோஸ் என்ற பழங்குடி மக்களின் அதிகாரி ஒருவரின் பெயாராகவும்  காணப்படுகிறது.
    • நாகோர்:  ஆபிரகாமின் சகோதரரின் பெயர் நாகோர். இப்பெயர் ஒரு பட்டணத்தின் பெயராக மரி கல்வெட்டுகள் சிலவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
    • பிற பெயர்கள்: காத், தாண், லேவி, இஸ்மவேல் ஆகிய பெயர்களும் மரி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அசீரிய கல்வெட்டுகள் செரூகு, தேராகு என்னும் பெயருடைய இரு பட்டணங்களை குறிப்பிடுகின்றன. தேராகு ஆபிரகாமின் தந்தை. செரூகு தேராகின் தாத்தனாவார்.  எப்லா கல்வெட்டுகள் சிலவற்றிலும் இஸ்ரவேல், இஸ்மவேல் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன.
    இப்பெயர்கள் பைபிளில் காணப்படுகின்ற நபர்களையே குறிக்கின்றன என்று நிச்சயித்து கூற முடியாது. எனினும் முற்பிதாக்களின் காலத்தில், சமூகத்தில் இப்பெயர்கள் மக்களிடையே விளங்கி வந்தன என்பதை இதன் மூலம் அறியலாம். இத்தடயங்கள் பைபிளின் சரித்திர செரிவிற்கு ஆதரவாக உள்ளன.

    2) பாரம்பாரியங்கள்: முற்பிதாக்களின் கதைகளுக்கு தடயங்களை அக்கால பாரம்பரியங்களில் இருந்தும் பெறலாம். நுசி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரியங்கள் பல, முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் பாரம்பரியங்களோடு ஒத்து வருகின்றன. நுசி பட்டணத்தை குறித்து பைபிளில் செய்திகள் இல்லை என்றாலும் அசீரியாவை குறித்து பைபிளில் செய்திகள் உள்ளன. நுசி அசீரியாவின் வடபகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. 1925-இல் நுசியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் நூற்று கணக்கில் அக்காதிய கல்வெட்டுகள் கிட்டின. இக்கல்வெட்டுகளில் அக்கால மக்களின் வணிகம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த செய்திகள் பெரும்பாலும் காணப்படுகின்றன. இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில வழக்கங்கள்,
    • குழந்தையில்லா தம்பதிகள் ஒரு வேலைக்காரனை தங்களுக்கு மகனாக தத்தெடுத்து கொள்ளலாம். அவன் அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மகனாக பணிவிடை செய்ய வேண்டும். அவ்வாறு, அவன் பணிவிடை செய்தால், அவன் வாரிசுரிமை பெறுவான். அத்தம்பதி இறந்த பின், அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அவனுக்கே உரியவை. இச்செய்தி ஆபிரகாமின் கதையில் காணப்படுகிறது. ஆபிரகாமின் தத்து மகனாகவும், வாரிசுரிமையாகவும் எலியேசர் என்ற பணிவிடைக்காரன் காணப்படுகிறான் (ஆதியாகமம் 15:2-4).
    • ஒரு தம்பதிக்கு குழந்தைகள் இல்லாவிட்டால், மனைவியானவள் தன் கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும். இச்செய்தியும் ஆபிரகாமின் கதையில் காணப்படுகிறது. சாராள் தன் கணவனுக்கு குழந்தை உண்டாகும்படி தன் அடிமை பெண்ணாகிய ஆகாரை அவருக்கு திருமணம் செய்து வைத்தாள்(ஆதியாகமம் 16:1-3).
    • குழந்தையில்லாத காரணத்தினால் மனைவி தன் கணவனுக்கு வேறொரு பெண்ணை மணமுடித்து வைத்த பின்பு, அவளிற்கு குழந்தை பிறக்க நேரிட்டால், அக்குழந்தையே வாரிசுரிமை பெறும். மறுமனையாட்டிக்கு பிறந்த குழந்தைக்கு வாரிசுரிமை இல்லை. சாராள் ஈசாக்கை பெற்றபின், ஆகாரையும், அவள் ஆபிரகாமிற்கு பெற்ற மகனான இஸ்மவேலையும் புறந்தள்ளுகிறாள் (ஆதியாகமம் 21:9-11).
    • ஒருவர் ஒரு பெண்ணிற்கு மணமுடித்து வைப்பதாக வாக்களித்து தனக்கு சகோதரியாக தத்தெடுக்கலாம். தத்தெடுக்கப்பட்டவர் அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும், இறந்த பின் துக்கித்து அவரை முறைபடி அடக்கஞ் செய்ய வேண்டும். இவ்வழக்கம் ஆபிரகாமிற்கும் சாராளிற்கும் பொருந்தலாம் (ஆதியாகமம் 20:2).
    • தந்தை தன் முதல் மகனையே குடும்ப வாரிசாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அவர் விரும்பும் எந்த மகனையும் தன் வாரிசுரிமை உடையவன் ஆக்கலாம். உதாரணத்திற்கு, யாக்கோபு தன் மூத்த மகன்களை விடுத்து யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீமையும் மனாசேவையும் தன் வாரிசுரிமைகளாக தெரிந்து கொண்டார் (ஆதியாகமம் 48:5).
    • உயில்கள் குலதெய்வ சிலைகளை மதிப்பிற்குரிய உரிமை சொத்துகளாக எடுத்துரைக்கின்றன. லாபான் தன் குலதெய்வ சிலைகளை தேடி கொண்டு யாக்கோபிடமும், ராகேலிடமும் புறப்பட்டு வந்த காரணத்தை இது தெளிவுபடுத்துகிறது (ஆதியாகமம் 31:19,34,35).
    • ஒருவன் தன் பிறப்புரிமையை தன் சகோதரனுக்கு விற்கலாம். உதாரணத்திற்கு, ஏசா தன் பிறப்புரிமையை யாக்கோபிற்கு விற்றார்(ஆதியாகமம் 25:29-34).
    • சில கல்வெட்டுகள் முதிர்ந்த பெரியவர்கள் இறப்பதற்கு முன்பு ஆசி வழங்கியதாக கூறுகின்றன. இச்செய்தி யாக்கோபு மரணிப்பதற்கு முன்பு ஆசீர்வதித்த சம்பவத்தை ஒத்திருப்பதை காணலாம் (ஆதியாகமம் 48,49).
    • பண்டைய எகிப்தியர்களும், மெசபொத்தோமியர்களும் விருத்தசேதனம் செய்து வந்தனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்திய கல்லறை ஒன்றில் விருத்தசேதன காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இதே காலக் கட்டத்தில் தான் ஆபிரகாமும் அவரது சந்ததியும் தன் உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என இறைவன் கூறுகிறார் (ஆதியாகமம் 17:9-14).
    இவ்வாறு பல பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பைபிளுடன் ஒத்து போகின்றன.முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் பாரம்பரியங்களும், அக்காலக் கட்ட பாரம்பரியங்களும் ஒத்திருப்பதை இக்கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.

    3) பாலஸ்தீன பகுதிகளில் நிலவிய சூழல்: அக்கால பாலஸ்தீன வட்டாரத்தில் நிலவிய சூழல் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளை பெரிதும் உண்மைபடுத்துகிறது.
    • மரி கல்வெட்டுகளில் காணப்படும் சுமேரிய நாடோடிகளின் தற்காப்பு படைகள் குறித்த விவரங்கள் ஆதியாகமம் 14-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆபிரகாமின் போர்குணங்களோடு பொருந்துகின்றன. அக்கால கட்டத்தில் கானான் பகுதிகளில் மக்கள் சிறு ராஜ்ஜியங்களாக பிரிந்து வாழ்ந்ததாகவும், அவ்வப்போது தங்களுக்குள் கூட்டு படைகள் அமைத்து ஆதாயந்தேடி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இக்குறிப்பு ஆதியாகமம் 14ஆம் அதிகாரத்தை ஒத்து காணப்படுகிறது.
    ஆதியாகமம் 14:1-2: சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம் பண்ணினார்கள்.
    • ஓரிடித்தில் நிலையாய் குடியிராமல், நாடோடிகளாகவும், கூடாரங்கள் அமைத்து வசிப்பவர்களாகவும் அக்கால சுமேரியர்கள் வாழ்ந்தனர் என்றும் தண்ணீர் தேடி அலைவது, கால்நடை மேய்ப்பது, பயிரிடுவது, அண்டை வீட்டாரோடு அமைதி பேணுவது என அவர்களின் அன்றாட வாழ்க்கை கடந்தது என்றும் மரி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவை பைபிளில் கூறப்பட்டுள்ள செய்திகளோடு ஒன்றியுள்ளது.
    • ஆதியாகமம் 34-37- யாக்கோபு சீகேமிலும் பின் எபிரோனிலும் வாழ்ந்த கதை சுமேரிய நாடோடித் தலைவர்களின் வழக்கங்களோடு ஒத்துள்ளது.
    4) நெடுந்தூர பயணங்கள்: முற்பிதாக்கள் நெடுந்தூர பயணங்களை மேற்கொண்டதாக பைபிள் கூறுகிறது. ஆபிரகாம் ஆயிரம் மைல்களை கடந்து கல்தேயருடைய ஊரை விட்டு தெற்கு கானானிற்கு சென்றார் (ஆதி.11:31-12:9). ஈசாக்கிற்கு மணப்பெண்ணை தேடும்படி தன் வேலையாளான எலியேசரை ஆரானில் இருந்து வட மெசபொத்தோமியா வரையுள்ள நானூறு மைல் தூரம் அனுப்பினார் (ஆதி. 24:1-10). யாக்கோபும் நெடுந்தூர பயணங்களை மேற்கொண்டார்.
    • சுமேரியர்கள் நெடுந்தூர பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரானில் இருந்தும் பிற பாலஸ்தீன பகுதிகளில் இருந்தும் தூதர்கள் தெற்கு மெசபொத்தோமியாவையும் ஏலாமையும் வந்தடைந்ததாக மரி கல்வெட்டுகளில் செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.
    • ஏத்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் வணிக உறவுகள் இருந்ததாக கனிஷில் கிட்டிய கப்பத்தோக்கியா குறிப்புகள் கூறுகின்றன.
    இன்று நம்மிடம் தனி மனிதர்களை குறித்த தொல்பொருள் சான்றுகள் மிக குறைந்தளவே உள்ளன. எனினும், அகப்படும் அகழ்வாராய்ச்சி தடயங்கள் பல, முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் வரலாற்றுச் செரிவை உறுதிபடுத்தி வருகின்றன.

    ஆ) முற்பிதாக்களின் காலகட்டம்:
    பைபிள், பைபிள் சாராத பிற வரலாற்று குறிப்புகளில் இருந்து ஆபிரகாம் வாழ்ந்த காலக் கட்டத்தை கணக்கிடுகின்றனர். பைபிள் கூறுகின்ற செய்திகளை குறிப்பிட்டு காணும் போது ஆபிரகாம் கி.மு 22ஆம் நூற்றாண்டின் மையத்தில் பிறந்திருக்கிறார்.
    • சாலொமோன் ராஜா யூத தேவாலயத்தை கி.மு 966-இல் கட்டத் தொடங்கினார் என 99.99% வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கின்றனர்.
    • விடுதலை பயணம் நிகழ்ந்து 480 ஆண்டுகள் ஆன பின்பு சாலொமோன் ராஜா தேவாலயத்தை கட்ட தொடங்கியதாக 1 இராஜாக்கள் 6:1கூறுகிறது. இக்குறிப்பின் படி விடுதலை பயணம் கி.மு 1446 என்ற கால கட்டத்தில் நிகழ்கிறது.
    1 இராஜாக்கள் 6:1 - " இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின் மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான் "
    • ஆபிரகாம் ஈசாக்கு பிறந்த போது 100 வயதை எட்டியிருந்தார் (ஆதி 21:5). ஈசாக்கு 60 வயதான போது யாக்கோபை பெற்றார் (ஆதி 25:26). யாக்கோபு எகிப்தை அடைந்த போது 130 வயதுள்ளவராய் இருந்தார் (ஆதி 47:9). இதன்படி ஆபிரகாம் பிறந்த காலம் முதல் யாக்கோபு எகிப்தை அடைந்த காலம் வரை 290 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது.
    • இஸ்ரவேலர்கள் எகிப்தில் வசித்த காலம் 430 ஆண்டுகள். இக்குறிப்பு யாத்திராகமம் 12:40,41-இல் காணப்படுகிறது. இதனை ஆதியாகமம் 15:13, அப்போஸ்தலர் நடபடிகள் 7:6 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.
    யாத்திராகமம் 12:40,41 - " இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்று முப்பது வருஷம். நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைய தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது "
    இதன் படி ஆபிரகாம் பிறந்த ஆண்டை எளிதாக கணிக்கலாம்.

    ஆபிரகாம் பிறந்த ஆண்டு = 966+480+430+290 = கி.மு 2166

    இ) முற்பிதாக்கள் வாழ்ந்த பகுதிகள்:
    பாக்தாத்திலிருந்து தெற்கு நோக்கி 100 மைல் தொலைவில் அமைந்த 'நிப்பூர்' என்ற மெசப்பொதோமிய பட்டணம் 1890-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பட்டணத்தை குறித்து பைபிளில் எந்த செய்திகளும் குறிப்பிடவில்லை. எனினும் நிப்பூரில் கிட்டிய 40,000 கல்வெட்களில் சுமேரிய பகுதிகளை ஆண்ட அரசர்களை குறித்தும், அவர்கள் அரசாண்ட காலத்தை குறித்தும் செய்திகள் உள்ளன. இது ஆதியாகமத்தில் காணப்படும் ஜலப்பிரளயத்திற்கு முந்திய அரசர்களின், முற்பிதாக்களின் தலைமுறை பட்டியலை ஒத்திருக்கிறது. மரி, நுசி, எப்லா பட்டணங்களில் கிட்டிய கல்வெட்டுகளிலும் இத்தகைய தடயங்கள் கிடைக்கின்றன. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நினிவே பட்டணத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் நோவா கதையை ஒத்த கில்கமெஷ் காப்பியம் என்ற பழங்கதை கல்வெட்டு கிட்டியது.

    கில்கமேஷ் காப்பியம்
    ஆதியாகமம் 10:10 - " சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள் "
    ஆதியாகமம் 10:10-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏரேக் பட்டணம் (உருக்) கி.பி 1850-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பட்டணத்தில் நிகழ்ந்த தொடர் அகழ்வு ஆராய்ச்சிகளில் கட்டிடங்களும்  பழமையான ஜிக்கருட் கோபுரம் ஒன்றும் கண்டடையப்பட்டன. இக்கண்டுபிடிப்புகள் பைபிளில் காணப்படும் பண்டைய பட்டணங்களை பெரிதும் உண்மைப்படுத்துகின்றன.

    எபிரேய மூலப்பிரதியில் ஆபிரகாம் 'ஊர் கஸ்திம்' என்ற பட்டணத்தில் வசித்ததாக எழுதப்பட்டுள்ளது. செப்துவசிந்தாவில் (கி.மு 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க மொழிப்பெயர்ப்பு) 'கல்தேயருடைய பட்டணமான ஊர்' என இப்பட்டணம் குறிக்கப்பட்டுள்ளது. கல்தேயர்கள் பண்டைய செமிடிக் இனத்தை சேர்ந்தவர்கள். கி.மு 6ஆம் நூற்றாண்டில் இவர்களது ஆதிக்கம் பாபிலோனில் (ஈராக்கில்) பெருகியது. இவர்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்-கஸ்திமும் அடங்கும். நெடுங்காலமாக இப்பட்டணம் அமைந்த இடம் கண்டுபிடிக்கப்படவில்லை. கி.பி-1850ஆம் ஆண்டு ஈராக்கில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் 'இதன் அமைவிடம் ஊர்' என்று பொறிக்கப்பட்ட ஜிக்கருட் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடம் 'ஊர்' என உறுதி செய்யப்பட்டது.
    ஆதியாகமம் 15:7 - "பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார் "
    ஊர்-கஸ்திம்

    ஊர்-கஸ்திமில் காணப்பட்ட ஜிக்கருட்

    கி.மு 2500 கால அளவை சேர்ந்த பொன், வெள்ளி சிலைகளும், கல்வெட்டுகளும், சுத்தி, அரிவாள் போன்ற பொருட்களும் ஊர்-கஸ்திமில் கிடைத்துள்ளன. கி.மு 2130-2022 காலக்கட்ட நிலவரங்களை தெளிவுபடுத்தும் பல தடயங்களும் கிட்டியுள்ளன. உர்-நம்மு, சுல்கி, அமர்-சின், ஷு-சின், இபி-சின் என ஐந்து அரசர்கள் இப்பகுதியை வரிசையாக ஆண்டுள்ளனர். உர்-நம்மு வகுத்த சட்ட விதிகள் பைபிளில் எழுதப்பட்டுள்ள நியாப்பிராமணங்களை ஒத்து காணப்படுகின்றன. உர்-நம்முவின் சட்டவிதிகளே இதுவரை கிட்டியுள்ள சட்ட விதிகளில் மிகவும் தொன்மையானது. இப்பட்டணத்தின் மக்கள் 'சின் (நன்னா)' எனப்படுகிற சுமேரிய நிலவு கடவுளை வழிப்பட்டனர்.
    யோசுவா 24:2 - " அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்த போது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள் "
    சின் - நன்னா நிலாக்கடவுள்

    ஆபிரகாம் ஊரிலிருந்து கானானுக்கு செல்லும் போது, ஆரானில் தங்கினார். ஊரை போல ஆரானும் (காரானூர்) நன்னா வழிபாடு மிகுந்த பட்டணமாக விளங்கியது என எப்லா கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன. எனவே ஆபிரகாமின் தந்தை தேராகு ஆரானில் நன்னாவை வழிபடும் பொருட்டு தங்கியிருந்தார் என சந்தேகிக்கப்படுகிறது.
    அப்போஸ்தலர் 7:4 - " அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தை விட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம் பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்த பின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு வந்து குடியிருக்கும்படி செய்தார் "
    கானான் தேச எல்லைகளை அமர்னா கல்வெட்டுகள் (கி.மு 14ஆம் நூற்றாண்டு) உறுதிபடுத்துகின்றன. இக்கல்வெட்டுகளில் கானான் எகிப்தின் ஆட்சிக்கு உட்பட்ட சிரியா-பாலஸ்தீன மாநிலம் என பொறிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி சீதோன் வரை உள்ள இடங்கள் கானானில் அடங்கும்.
    ஆதியாகமம் 10:19 - " கானானியரின் எல்லை, சீதோன் முதல் கேரார் வழியாய்க் காசா மட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டுக்கும் இருந்தது "
    கி.மு 2200-2000 காலங்களில் பல கானானிய பட்டணங்கள் நாகரீக வளர்ச்சி மிகுந்து விளங்கின. இக்காலத்தில் தான் ஆபிரகாம் கானானை வந்தடைந்தார். இதே காலத்தில் தான் எகிப்திய நாகரீகமும் வளர்ந்து வந்தது.

    ஊர்-இல் கிட்டிய சிலை

    மோரியா மலைமீது ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முற்படும் போது தேவன் அவரைத் தடுத்து நிறுத்தினார், அப்பொழுது ஆபிரகாம் புதர்களில் சிக்கிய ஒரு ஆட்டுக்கடாவை கண்டு அதனை தேவனுக்கு பலியிட்டார் (ஆதியாகமம் 22ஆம் அதிகாரம்). இதே மோரியா மலைமீது தான் சாலொமோன் தேவாலயத்தை கட்டினார் (2 நாளாகமம் 3:1). 1928-இல் ஊர்-கஸ்திமில் (ஊர்) நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் கி.மு 2600-2400 காலத்தைச் சேர்ந்த ஆட்டுக் கடாவின் பொற்சிலை கிட்டியது. புதர்களுக்கிடையே காலூன்றியதை போல இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில் தான் சுமேரியர்கள் பெருமளவான ஆடுகளை வீட்டுவளர்ப்புப் பிராணிகளாக்கி வந்தனர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

    ஆபிரகாம் கானானை அடைந்த காலத்தில் அவருடைய சகோதரரின் மகனான லோத்து அவரை விட்டு பிரிந்து யோர்தான் நதி அருகில் அமைந்த சமபூமிக்கு சென்றார். இந்த சமபூமியின் ஐம்பட்டணங்களாக பைபிள் குறிப்பிடும் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம், சோவார் இன்றும் சர்ச்சைக்குரிய இடங்களாக உள்ளன. ஐந்தாவதான சோவார் அமைந்த இடம் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்மா, செபோயிம் பட்டணங்கள் விளங்கியதற்கான தடயங்கள் எப்லா கல்வெட்டுகளில் காணப்படுகின்றன, இருப்பினும் இவை அமைந்துள்ள இடங்கள் இன்றும் தேடல் நிலையிலேயே உள்ளன.

    சோதோமிலும் கொமோராவிலும் பாவங்கள் பெருகின போது இறைவன் கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்க செய்து அப்பட்டணங்களை அழித்தார் எனவும் அதில் லோத்து குடும்பத்தார் மட்டுமே தப்பி பிழைத்ததாகவும் பைபிள் கூறுகிறது. பின்னிட்டு பாராமல் வெளியுமாறு விதிக்கப்பட்ட கட்டளையை மீறி லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆகிறாள். உப்புகடலை ஒட்டி இப்பட்டணங்கள் அமைந்திருந்ததாகவும் நீலக்கீல் மிகுந்த பகுதிகளாக விளங்கியதாகவும் பைபிளில் செய்திகள் உள்ளன (ஆதியாகமம் 14:1-3, 10). உப்புக்கடலை ஒட்டியுள்ள பகுதிகள் சிலவற்றில் கந்தகமும், சாம்பலும், நீலக்கீலும் படிந்திருக்கின்றன. கடற்கரையை ஒட்டி தூண் வடிவ உப்புக்கல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலர் சோதோம் கொமோரா உப்புக்கடலால் சூழப்பட்டு மூழ்கி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் அழிக்கப்பட்ட இப்பட்டணங்கள் அமைந்துள்ள இடங்கள் இன்றும் கண்டறியப்படவில்லை.

    உப்புக்கடல் அருகே காணப்படும் தூண் வடிவம்

    ஆதியாகமம் 21:32, 26:1,8, 14, 15, 18 ஆகிய வசனங்களில் பெலிஸ்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். கி.மு 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெலிஸ்தர்களின் மட்பாண்டங்கள் கப்தோரிலும், பெலிஸ்தாவிலும், எரிகோவிலும், பெத்சானிலும் கிடைத்துள்ளன. கானான், கப்தோர் மக்களுக்கிடையே தூதுவர்கள் இருந்தனர் என ஆத்சோரிலும், உகாரித்திலும் எடுக்கப்பட்ட மினோவர் மட்பாண்டங்கள்  கூறுகின்றன. கி.மு 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த மரி கல்வெட்டுகளில் ஆத்சோரின் மன்னர் கப்தோருக்கு பரிசுப் பொருட்களை அனுப்பினார் என குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.

    ஆபிரகாம் சாராள் இறந்த போது, எபிரோனிலுள்ள மக்பேலா என்னும் குகையை விலைக்கு வாங்கி அங்கு சாராளை அடக்கம் செய்தார். இக்குகையிலேயே ஆபிராகமும் அடக்கம் செய்யப்பட்டார்.ஈசாக்கு, ரெபேக்காள், யாக்கோபு, லேயாள் ஆகியோரும் மக்பேலாவில் அடக்கம் செய்யப்பட்டனர்.
    ஆதியாகமம் 49:29-32 - " பின்னும் அவன் (யாக்கோபு) அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப் போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம் பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம் பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம் பண்ணினேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான் "
    எபிரோன் மக்பேலா

    ஆபிரகாமின் கல்லறை வாயில்

    ஆபிரகாமின் கல்லறை - பிரேதம்
    நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளது.

    சாராளின் கல்லறை வாயில்.
    உள்ளே காணப்படுவது கல்லறை.

    ஈசாக்கு - ரெபெக்காளின் கல்லறைகள்

    யாக்கோபின் கல்லறை

    லேயாளின் கல்லறை வாயில்.
    உள்ளே காணப்படுவது லேயாளின் கல்லறை.

    கி.மு முதல் நூற்றாண்டில் பேரரசர் ஏரோதால் மக்பேலா குகையை சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டன.  கி.பி 6ஆம் நூற்றாண்டில் பைசாண்டிய பேரரசால் மக்பேலாவில் கிறிஸ்தவ தேவாலயம் எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தை கி.பி-614-இல் பெர்சியர்கள் அழித்தனர். பின்னர், இஸ்லாமியர்களால் மக்பேலா மசூதியாக மாற்றப்பட்டது. சிலுவை போர்களின் போது கிறிஸ்தவர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டு தேவாலயமானது. இக்காலத்தில் முற்பிதாக்களின் உடற்கூறுகளும் எழும்புகளும் புதிய துணிகளால் போர்த்தப்பட்டு மீண்டும் குகையிலேயே வைக்கப்பட்டன என அலி, இபின் அத் அதிர், இபின் அல் குலானிஷி முதலிய இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். கி.பி 1188-இல் அரசர் சலாவுதீன்  மக்பேலாவை மீண்டும் மசூதியாக்கினார். எனினும் இவ்விடத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஆராதனை செய்ய அனுமதிக்கப்பட்டனர். கி.பி-13ஆம் நூற்றாண்டில் மன்னர் மம்லுக் மசூதியை விரிவுப்படுத்தி முற்பிதாக்களுக்கும் அவர்களது மனைவிமார்களுக்கும் கல்லறைகளைக் கட்டினார். இதன்பின்பு,  1929ஆம் ஆண்டு வரை யூதர்கள் மக்பேலாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை. 1967-இல் நிகழ்ந்த ஆறு நாட்கள் போரில் மக்பேலா யூதர்களால் கைப்பற்றப்பட்டு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தது. எனினும் இவ்விடம் இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.

    யாக்கோபு  தன் இளைய மனைவி ராகாலை பெத்லகேமிற்கு போகின்ற வழியில் அடக்கம் செய்து கல்லறைத் தூணை நிறுத்தினார் (ஆதியாகமம் 35:19). ராகேலின் கல்லறையாக பெத்லகேமில் உள்ள பிலால்-பின்-ரபா மசூதியை கருதுகின்றனர். இது யூதர்களின் மூன்றாம் புனித ஸ்தலம்.

    பிலால்-பின்-ரபா மசூதி

    ராகேலின் கல்லறை வாயில்

    ராகேலின் கல்லறை அருகே தொழும் யூதர்கள்

    இவைத்தவிர இஸ்ரேலில் காண வேண்டிய புனித ஸ்தலங்கள் ஏராளம் உள்ளன. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என கோடிக் கணக்கான  மக்கள் வருடந்தோரும் இப்பகுதிகளை நோக்கி வருகை தந்து இறைவனை தொழுகின்றனர். முற்பிதாக்களின் காலடித் தடங்கள் பதிந்த புண்ணிய பூமியாக இஸ்ரேல் விளங்கி வருகிறது...

    "அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவு மட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின் மேல் வைக்கப்பட்டிருக்கும்" - உபாகமம் 11:12

      நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...