வியாழன், 22 டிசம்பர், 2016

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்...???









இந்த உலகிலுள்ள உயிரினங்கள் அனை த்தும் அழிந்துவிட்டன எனக்கொள்வோம். சற்று கற்பனைதான். பல்லா ண்டுகள் கழித்து வேற்று கிரகத்திலிருந்து மனிதர் கள் அல்லது மனிதர்களையொத்த ஜீவிகள் இந்த பூமிக்கு வருகின்றனர். அழிந்து புதைந்து கிடக்கும் பொருட்களையெல்லாம் பார்க்கின்றார்கள். அவைகளில் சைக்கிள், மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், கப்பல் விமானம் எல்லாவற்றையும் பார்க்கின்றான். இவைகள் எப்படி தோன்றியிருக்கும் என்று சிந்திக்கின்றான்.

பின் ஒரு கோட்பாட்டை உருவாக்குகின்றான். இப்படி 'ஆரம்பத்தில் வெறும் ரப்பர் மட்டும்தான் இருந்தது. அது தானாக பரிணாம வளர்ச்சியடைந்து டயராக மாறியது. இபபடி உருவான டயரால் யாதொரு பயனும் ஏற்படாது போக அத தானாக ஒரு சைக்கிளாக மாறியது. இந்த சைக்கிளை கொண்டு வேகமாக செல்ல முடியாது போக அதில் தானாக ஒரு என்ஜின் உருவாகி அது மோட்டார் சைக்கிளாக மாறியது அந்த மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பக்கவாட்டில் சரிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு வந்த காரணத்தினால் அந்த மோட்டார் சைக்கிள் தானாக ஒரு ஆட்டோ ரிக்ஷாவாக மாறியது அந்த ஆட்டோ ரிக்ஷாவால் வேகமாக செல்ல முடியாது போக அது ஒருகாராக மாறியது. கார் தன் கொள்ளளவை அதிகப்படுத்திக் கொள்ள அது பஸ்ஸாக மாறியது. பின் இன்னும் கொள்ளவை அதிகமாக்கிக் கொள்ள அது டபுள் டக்கர் பஸ்ஸாக மாறியது. பஸ் வேகமாக சென்று பல வகைகளில் உபயோகமாயிருந்தது. பின் அந்த பஸ் கடற்கரையை எத்திய போது மேற்கொண்டு செல்ல இயலாத நிலையில் பஸ்ஸின் மேற்பகுதி தனியே பிரிந்து அது ஆகாய விமானமாக மாறி பறந்தது. கீழ்பகுதியோ அது கப்பலாக மாறி தண்ணீரில் மிதந்தது. இவ்வாறு தான் வாகனங்கள் தோன்றின.

என்று அந்த வேற்று கிரகத்து ஜீவி விஞ்ஞானக் கோட்பாடு வகுத்தால் அந்த ஜீவியை புத்தி ஜீவி என்பீர்களா? பைத்தியக்காரன் என்பீர்களா?

வாயுக்களுக்கு, தூசுக்களுக்கு ஒன்றாக சேர்ந்த பொருள் தானாக வெடித்து பூமி உட்பட ஏனைய கிரகங்களும் தோன்றின. பூமி ஒருவித திரவத்ததைக் கக்கினது . இந்த திரவத்திலிருந்து ஆரம்பத்தில் மிக நுண்ணிய முதல் உயிரணு தானாக தோன்றியது. பின்னர் அதிலிருந்து ஏராளமான செல்களைக் கொண்ட உயிரணுக்கள் தோன்றின. அவைகளில் சில கடலிலிருந்து வெளிப்பட்டு ஊர்ந்து செல்லும் உயிரினங்களாக நிலத்தில் வாழ வந்தன. இன்னும் சில பறப்பனவாகின. ஊர்ந்து செல்லும் பிராணிகளிலிருந்து குட்டி போடும் பிராணிகள் உருவாயின. இத்தகைய பிராணிகளிலிருந்து தானாக ஒரு தனி இனம் தோன்றியது. அது தோற்றத்தில் குரங்கைப் போல் இருந்தது. அது மரத்தில் வாழ்வதை விட்டு விட்டு நிலத்தில் வாழ ஆரம்பித்தது. காலப்போக்கில் இவை நிமிர்ந்து நின்று கைகளை நடப்பதற்குப் பதிலாக கருவிகளோடு பரிமாறும் அனுபவத்தை சந்தர்ப்பவசத்தால் பெற்றுக் கொண்டது. நீண்ட நெடிய காலங்களுக்குப் பின்னர் அவை மனித வடிவம் பெற்றன. இந்நிலையில் அவை சிந்திக்கவும், பேசவும் கற்றுக் கொண்டன. பல வருடங்கள் கழித்தபிறகு இந்த குரங்கு குணங்கள் அதனிடமிருந்து அகன்றது. முழுமையான மனிதன் உருவானான்.

என்று கூறுபவர்களுக்குப் பெயர் புத்தி ஜீவி, அறிவியல் ஞானி.

இந்த கோட்பாட்டிற்கு சார்லஸ் டார்வினும் அவர் பக்தர்களும் எடுத்து வைக்கும் ஆதாரம் ஒரு சில உயிரினங்களின் (அதாவது மீன், பாம்பு, பல்லி, ஓணான், கீரி, நாய், குரங்கு. மனிதன் என்று சிலவற்றின் எலும்புகளை வரிசைப்படுத்தி வைத்து ஒன்றை அடுத்து மற்றொன்றின் தொடர்பை பார்த்தீர்களா? இது தான் மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியில் தோன்றினான் என்பதற்கு ஆதாரம் என்றார்கள்.

பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் குரங்கிலிருந்து தான் மனிதன் பிறந்தான் என்றால் இன்று வாழும் மனித குரங்குகளும், வாலில்லாத குரங்குகளம் ஏன் இதுவரை மனிதனாக மாறவில்லை. அவ்வாறு மாறுவதிலிருந்து தடுத்தது எது?

இந்த பரிணாம மாற்றம் நிகழ போதிய காலம் அவைகள் வாழ்ந்தே இருக்கின்றன. விஞ்ஞானியின் கால அளவு படி பலலட்சம் ஆண்டுகள் குரங்கு தலைமுறைக் குரங்காகவே வாழ்ந்து வருகின்றன. அவைகள் ஏன் இன்னும் அந்த பரிணாம மாற்றத்தை அடையவில்லை?

பரிணாம வளர்ச்சியின் மூலம் மனித இனத்தை அடைந்த பின் இன்னும் வேறு ஒரு வர்க்கமாக மனிதன் பரிணாம வளர்ச்சியடையாதது ஏன்?

வரலாறு அறிந்த காலத்திலிருந்து எங்காவது எந்த குரங்காவது மனிதனாக மாறியிருக்கிறதா? இல்லை மனிதனாவது பரிணாம வளர்ச்சியடைந்து வேறு இனமாக மாறியிருக்கிறானா?

சில உயிரினங்களை 50 வருடங்கள் வரை பாலூட்டி உணவூட்டிக் கவனமாக வளர்த்துப் பார்த்த பிறகும் அவற்றிலிருந்த எந்தப் புதிய இனமும் தோன்றக் காணோம். இந்த உயிரினங்களை 50 ஆண்டுகள் வளர்ப்பது என்பது 1000 மனிதத் தலைமுறைக்கு ஒப்பானதாகும். கழுதைக் காலம் கடந்தால் குதிரையாக. குதிரைக்காலம் கடந்தால் ஒட்டகமாகவே மாறியதை எவரும் கண்டதில்லை.

ஒர் உயிரினம் காலப்போக்கில் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு உயிரினமாக மாறும் என்னும் பரிணாமக் கோட்பர்டடை நிருபிக்கும் விதமான ஆதாரம் ஒன்றைக் கூட நடைமுறை உலகில் எடுத்துக்காட்டியதில்லை.

மிருகங்களுக்கு உள்ளது போலவே மனிதனுக்கும் உடலுள்ளது. தின்பது, குடிப்பது, சுவாசிப்பது, மலஜலம் கழிப்பது, உடலுறவு கொள்வது போன்றவைகளில் இரு வர்க்கத்திற்குமிடையே வேறுபாடு இல்லை எனினும் ஒருசிலவகையில் அவைகள் மனிதர்களை விட மிகைத்தே காணப்படுகின்றன. இந்த பிரபஞ்ச அறிவிலிருந்து தேடி எடுத்துக்கொள்ளாமல் இயல்பாகவே சில சிறப்புத் தன்மைகளுடன் பிறக்கும் ஜீவிகள் பல உண்டு.

தேனீக்களைப் பாருங்கள், விரிந்து கிடக்கும் பூவில் எந்த பூவில் அதிகம் தேனுள்ளது என்பதை அறிந்து அதை உறிஞ்சும் வல்லமை அதற்கு இருக்கிறது. எத்தகைய அறிவு  ஜீவி. மனிதனுக்கு கூட தேனிருக்கும் பூ எது? தேன் இல்லாத பூ எது? அதிக தேனுள்ளது எது? என்பதை அறிய முடியாது. ஆனால் அப்பூவை கடந்த செல்லும் தேனீக்களுக்கு அது தெரியும். தேனீக்கள் தம் சிறகுகளுக்கு இடையேயிருந்து ஒழுகக்கூடிய மெழுகை உபயோகித்து சமஅளவில் அறுகோண வடிவில் அறைகளுடன் கூடிய கூடு கட்டுகிறது. அதன் அறைகள் ஒன்றைவிட மற்றொன்றிற்கு எந்த வொரு மாற்றமுமில்லாது அளந்து கட்டியது போல் கட்டுகின்றது.

ஐரோப்பியக் காடுகளிலும், வட அமெரிக்கக் காடுகளிலும் காணப்படும் காட்டட என்ஜினியர் என்று அழைக்கப்படும் பீவரியைப் பாருங்கள் அவைகள் சராசரி ஒரு மீட்டர் நீளமும், 17 கிலோகிராம் எடையுமுடையவையாகும். அதிக கனமுடைய மரங்களை தன்னுடைய கூரான பற்களைக் கொண்டு வெட்டி முறித்து காட்டாற்றிலே தள்ளிவிட்டு தனக்கு வீடு கட்ட நாடிய இடத்திற்கு கொண்டு செல்கிறது. ஆற்றின் ஆழம் குறைந்த இடத்தில் கல்லும். தொழி மண்ணும் உபயோகித்து தேவையுடைய அளவு உயரமாக்கி மரக்கட்டைகளையும், தொழிமண்ணையும் கொண்ட தேங்காய் மூடி (சிரட்டை) வடிவில் வீடுகட்டி. அது உட்செல்லும் வாசலுக்கு, பூமிக்கு அடியிலே துளையிட்ட சுரங்கம் அமைத்துக்கொள்கிறது. அது போய் வருவது எல்லாம் ஆற்றுநீர் வழியாகத்தான். வீட்டினுள் காற்று போய்வருவத்றகாக மேல்பாகத்தில் சிறய துளையிட்டுக் கொள்கிறது. நவீன நாகரீக மனிதர்களின் ஏர்கண்டிஷன் வீடுகளைப் போன்ற வீடுகளை பீவரிகள் எவரிடம் சென்று கற்றுவராமல் சுயமாக கட்டிவருகின்றன.

ஆரல்  மீனின் அற்புதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் அற்புதமாகும். ஐரோப்பிய கடலில் வசிக்கின்ற ஆரல்கள் தங்களுடைய முட்டையிடும் காலம் வந்ததும், பெர்மூடாயிலிருந்து சுமார் 4000 கிலோமிட்டர் நீந்தி ஸ்ஹாஸோ கடலில் வந்து - ஸர்ஹாஸோவில் சஞ்சாரமற்ற இடம் சென்று  இலட்சக் கணக்கில் முட்டையிட்டு விட்டு அங்கே படிகின்றன. இந்த முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சு ஆரல்கள் தன் தாய் வந்த வழியாக ஐரோப்பிய சமுத்திரத்தில் தன் தாய் எங்கிருந்து புறப்பட்ட வந்ததோ  அங்கு சென்று  வசிக்கின்றது. யாரும் வழிகாட்டிக் கொடுக்காத முன்பொருமுறையேனும் செல்லாத வழிகள் வழியாக நீந்தி செல்ல குஞ்சி ஆரல்களால் எப்படி முடிந்தது.

ஆர்ட்டிக்கில் வசிக்கும் தேஷாடனப் பறவைகள் துருவ காலம் வந்தால் ஆர்ட்டிக்கிலிருந்த புறப்பட்டு 17 ஆயிரம் கிலோ  மீட்டர் பறந்து கோடை காலம் ஆகும் போது அண்டார்டிக் வந்து சேருகிறது. அங்கு சிலகாலம் தங்கிய பின்பு தாம் வந்த வழியே பறந்து சென்று குறிப்பிட்ட காலத்தில் புறப்பட்ட இடம் வந்து சேர்கிறது.

தேனீக்களுக்க ஒரே அளவிலான கூடு கட்டவும், தேனுடைய பூக்களை அறியவும், பீவரிகள் அழகிய ஏர்கண்டிஷன் வீடு கட்டவும், ஆரல்களுக்கு சமுத்திரத்தில் பயணிக்கவும், தேஷாடனப் பறவைகளுக்கு ஆகாயத்தில் வாழிகாட்டவும் எவரும் கற்றுக்கொடுக்கவில்லை. பிரபஞ்ச அறிவிலிருந்து தேடி எடுத்துக் கொள்ளவும் இல்லை. இயல்பிலே அத்தன்மைகளைப் பெற்றே தோன்றுகின்றன.

இத்தகைய சிறப்புத் தன்மைகளுடன் கூடிய உயிரினங்களிலிருந்து தான் பரிணாம வளர்ச்சியில மனிதன் தோன்றினான் என்றால் இந்த உயிரி னங்களுக்கு இருக்கும் சிறப்புத் தன்மைகள் அனைத்தும் மனிதனுக்கும் இருக்க வேண்டும். பரிணாம வளர்ச்சியில் வளர்ந்து ஏற்றம் பெற்றுள்ள மனிதனுக்கு தேனியைப் போல் பீவரியைப் போல் நன்றாக உறைவிடம் உண்டாக்கவும் கூடிய தன்மையும். இயல்பும் இருந்திருக்க வேண்டும். ஆரல் மீன்கள் போன் றும், தேஷாடனப் பறவைகள போன்றும முன்பின் தெரியாத இடத்திற்கு சுய மாக இயல்பாக செல்லும் தன்மை இருந்திருக்கக வேண்டும். ஆனால் பரிணா ம வளர்ச்சியில் வந்த மனிதன் இத்தகைய தன்மை களையெல்லாம் இழந்தது எப்படி என்பதற்கு திருப்தியான பதிலை பரிணாம வாதிகள் இதுவரை கூறிய தில்லை.

அடிப்படையில் மிகவும் குறைவான தன்மையுடைய தன்னுடைய உடலுக்கு பதிலாக அவனுக்கு கிடைத்தது. நரம்பு மண்டலத்தின் தலைமைக் கேந்திரமாக பெரியதும், நுட்பமுமான பிரச்சனைகளுடன் கூடிய மூளையாகும்' என்கிறார். பிரபல பரிணாமவாதி ஹோர்டன் சைல்ட் (Man Makes himself ) மூளை வளர்ந்த போது மற்ற தன்மைகளெல்லாம் அவனைவிட்டுப் போய்விட்டது என்று பரிணாமவாதிகள் கூறுவது ஒரு விசித்திர வாதமாகும். மனிதன் தன் தன்மைகளை இழந்ததற்கு எந்தவொரு Fossil ஆதாரமோ Embryology   ஆதாரமோ இதுவரை சமர்ப்பிக்கப்பட்டதில்லை.

உடலியல் தன்மைகளில் மிருகங்களை விட எவ்வளவோ பின்நிற்கும் மனிதன் - தன்னை விட எவ்வளவோ சக்தியுள்ள மிருகங்களை விட முன்னேறி செல்லும் வகையான தன்மைகளைப் பெற முடிந்தது அறிவால் ஆகும். இந்த அறிவு பரிணாம வளர்ச்சியில் எந்த கட்டத்தில் அவனுக்கு கிடைத்தது என்பதற்கும் தெளிவானப் பதில் இல்லை.

சகல வித சூழ்நிலைகளில் விதங்களில் பார்க்கும் விதத்திலான கண்களும், சகலவிதங்களிலும் சுழற்றி எதையும் செய்ய ஏதுவான கைகளும் பருமான மூளையும் தான் மனிதனை அறிவு ஜீவியாக ஆக்கியது' என்னும் நவீன பரிணாமவாதி ஸ்டீபன் ஜெய் கோல்டின் (Ever Sinc Darwin) வாதம் பூசிமொழுகும் வாதமே தவிர விஞ்ஞான அடிப்படை ஆதாரங்களுடன் கூடிய வாதமும் அல்ல. ஒரு இனத்திலிருந்து இன்னொரு இனமாக மனிதனாக எப்படி வந்தான் என்பதை தெளிவு பட இதுவரை எந்த பரிணாம வாதிகளும் கூறியதில்லை.

முயலைப் போன்று வேகமாக ஓடும் கால்கள் மனிதனுக்கு இல்லை. யானையைப் போல் பழு தூக்கும் கைகளும் அவனுக்கில்லை. எதிரிகளிடமிருந்து தன்மை தற் காத்துக் கொள்ள முள்ளம்பன்றிக்கிருப்பது போன்ற முட்களோ, ஆமைக்குள்ளது போன்ற ஒடுகளோ அவனக்கில்லை. துருவப்பிரதேசங்களில் குளிரிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள கம்பளி ரோமங்களோ அவனுக்கில்லை. தேனீயைப் போன்ற கண்களோ வவ்வாலை போன்ற காதுகளோ நாயை போன்ற மோப்பசத்தியுடைய மூக்கோ, ஆகாயத்தில் பறப்பதற்குரிய இறக்கைகளோ, சமுத்திரத்தில் நீந்துவதற்குரிய துடுப்புகளோ ஒன்றும் அவனுக்கில்லை. இத்தகைய எந்தவொரு தன்மையுமில்லாமல் ஒன்றுமறியாதவனாகத்தான் இவ்வுலகிற்கு வருகின்றான் மனிதன்.

எந்தவொரு சிறப்புத்தன்மையையும் பெறாமல் ஒன்றுமறியாத நிலையில் பிறக்கும் மனிதன். இவ்வுயிரினங்களையெல்லாம் மிகைக்கும் வகையில் பல சாதனைகளை தன் அறிவு மூலம் சாதிக்கின்றான். முயலைத் தோற்கடிக்கும் வாகனத்தை கண்டுபிடிக்கிறான் பீவரியை விட அழகிய வீடுகளை கட்டுகிறான் கழுகை தோற்கடிக்கும் விமானங்களையும், மீனைத் தோற்கடிக்கும் கப்பல்களையும் கண்டுபிடிக்கிறான். ஆனால் இத்தகைய சாதனைகளை இயல்பிலேயே பெற்றவனாக பிறப்பதில்லை. ஒரு டாக்டரின் மகளையோ, ஒரு என்ஜீனியரின் மகளையோ காட்டிலே கொண்டுவிட்டால் காட்டுமிராண்டியாக வளருவானே தவிர டாக்டராக என்ஜீனியராகவோ ஆகமாட்டான்.

மனிதனுக்கு இறைவன் கொடுத்த அறிவே சுற்றுச் சூழ்நிலை ஆய்வில் விருத்தியடைந்து வளர்ச்சியடைகிறது. மரத்தோடு மரம் உரசிபற்றிக் கொண்ட நெருப்பைக் கண்டு பண்டைய மனிதன் மரக்கட்டையுடன் மரக்கட்டையை யுரசி நெருப்பை பெற்றுக் கொண்டான். அன்று அவன் மரத்தோடு மரம் உரசி நெருப்பை கண்டு பிடித்ததாலே தான் இன்று அணுவைப் பிளந்து அதிலும் நெருப்பை கொண்டு வர முடிந்தது . இவ்வுண்மையை கண்ணியத்துடன் ஏற்று, 'நாங்கள் முன்னோர்கள் முதுகில் ஏறி நின்று தான் உயர்ந்தவர்களானோம்' என்று கூறினார் பிரபல விஞ்ஞானி நியூட்டன்.

மனிதனை மிருகத்திடமிருந்தும் இதர வர்க்கங்களிலிருந்தும் வேறுபடுத்தி தனித் தன்மையுடையவனாக்கியது அவனுக்கு வழங்கப்பட்ட பகுத்தறிவே யாகும். அந்த பகுத்தறிவு இறைவனால் வழங்கப்பட்டது பரிணாமத்தால் வந்தது அல்ல.

அறிவு பரிணாம வளர்ச்சியில் கிடைத்தது என்றால் பீவரியை போல் வீடுகட்டவும், தேனீயைப் போல் கூடுகட்டவும், ஆரலைப் போல் வழியறியவுமான இயல்பான தன்மைகளை மனிதன் இழந்தது எப்படி???

மனிதன் பரிணாம வளர்ச்சியில் தோன்றியவன் என்றால் அவன் நாயைப் போல் மோப்பம் பிடிக்கவும். முயலைப் போல் ஒடவும், புலியைப்போல் பாயவும், குரங்கைப் போல் தாவவும் முடியாதது ஏன்???

பரிணாம வளர்ச்சி நிலையில் இயல்புகளிலும் வளர்ச்சியல்லவா ஏற்பட வேண்டும். இழப்புகள் ஏற்பட்டது ஏன்? எப்படி???

தேனீக்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படி கூட கட்டியதோ - இப்போதும் அதுபோலவே கட்டுகின்றது. பீவரிகள் பல ஆண்டுகளுக்கு முன் எப்படி வீடு கட்டியதோ இப்போதும் அதுபோலவே கட்டுகின்றன. அவைகளில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ஆனால் மனிதனோ கடந்த நூற்றாண்டை விட இந்நூற்றாண்டில் மிகைத்த முன்னேற்றம் பெற்று வருகிறான். வனாந்தரத்தில வாழ்ந்த மனிதன் - குகைகளை வீடாக்கினான். பின் தேவயுடைய இடத்தில் வீடுகளைக் கட்டினான். கூரை வீடு ஓட்டு வீடாகி பின் மாடி வீடாகி அது உயர்ந்து கொண்டே போகிறது. இனி வரும் காலத்தில் மனிதன் எத்தகைய வீடுகளை உருவாக்குவான் என்பதை இப்போது எவரும் உறுதிபட கூறிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக இயல்பிலே சில சிறப்புத்தன்மைகளைக் கொண்ட ஜந்துக்களால் எந்வொரு முன்னேற்றமும் பெற முடியாத போது எதுவுமே அறியாமல் பிறந்த மனிதன் அவைகளை மிகைக்கக் காரணமான அறிவை எந்தக் கட்டத்தில் பெற்றான்???

பெறுவதற்கு காரணமானது எது???

மனிதனால் மட்டும் பெற முடிந்தது எப்படி???

மற்ற ஜந்துக்கள் பெறாமல் போனதற்கு காரணமாக இருந்தது எது??

வெட்கம் எந்தவொரு உயிரினத்திற்கும் இல்லாத மனிதனுக்கு மட்டுமேயுள்ள சிறப்புத்தன்மையாகும். வெட்கத்தை மறைக்க உடையின் அவசியம் எப்போது ஏற்பட்டது என்று இறைவன் தெளிவாகக் குறிப்பிடுகின்றார்  பரிணாம கோட்பாட்டில் மனிதன் எந்நிலையில் வெட்கமுடையவனானான்? அவன் மூதாதையர்களாக கருதும் ஜந்துக்கள் எவற்றிற்கும்; இதுவரையும் வெட்க உணர்வுகள் இல்லாதிருக்கும் போது மனிதனக்கு மட்டும் வெட்கம் வர காரணம் என்ன???

மிருகங்கள் எல்லாம் குறிப்பிட்ட காலச் சூழ்நிலையில் மட்டுமே உடலுறவு கொள்ளக் கூடியதாக இருக்கிறது. மனிதனோ அதற்கென்று நேரம் காலம் இல்லாமல் விரும்பும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடியவனாக இருக்கிறான். மாறுபட்ட இத்தகைய நிலை பரிணாம மனிதனில் எந்த கட்டம் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது?

மிருகங்கள் எவையெவைகளுடன் கூடி உறவு கொண்டாலும் அவைகளுக்கு பாலியல் ரீதியான நோய் எதுவும் தாக்காதிருக்க சின்பன்ஜி களின் வால் முறிந்ததால் உண்டானவன் என்று கூறும் மனிதன் மட்டும் விபச்சாரம் செய்தால் எயிட்ஸ் போன்ற ஆட்கொல்லி பாலியல் நோய்கள் வரக் காரணம் என்ன???

-ஆக பரிணாம கோட்பாடு என்பது ஒரு விஷயத்தை விளக்குவதற்காக கற்பனையாக செய்து கொண்ட கணிப்பு. அனுமானமேயன்றி காலத்தின் சோதனைகள் கடந்து வந்த உண்மையல்ல. இன்னும் எத்தனையோ சோதனை களை அது கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த சோதனைகளிலெல்லாம் அது நீரூபிக்கப்படும் போது தான் அது நீரூபிக்கப்பட்ட விஞ்ஞானம் என்ற அந்தஸ்தை அடைய முடியும். பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் உறுதி செய்யக்கூடிய உண்மையான ஆதாரங்களை விஞ்ஞானக் கருவி கொண்டு உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான தத்துவங்களை ஏற்றுக் கொள்வதே பகுத்தறிவுப் பூர்வமானதாகும்.

'மனிதன் குரங்கிலிருந்து பிறந்தவன் என்னும் கோட்பாடானது படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறார்  என்பதை மறுக்க வேண்டும் என்பதற்காக புனையப்பட்ட ஒரு தத்துவமே தவிர நீரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட தத்துவம் அல்ல.

ஆக்கம் - அபூ ஆஸியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...