முற்பிதாக்களின் காலம் - ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு - ஒரு ஆய்வு
இஸ்ரவேல் தேசத்தின் சரித்திர தொடக்கமாக பைபிள் முற்பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் வாழ்க்கைகளை எடுத்து கூறுகிறது. ஆபிரகாம் சிலைவணக்க வழிபாடு மிகுந்த சமுதாயத்தில் பிறந்தாலும் யெகொவா தேவனுக்கு மட்டுமே தன்னை முழுவதும் அர்ப்பணித்து வாழ்ந்தவர். இறைவனின் ஆசியோடு ஆபிரகாம் ஈசாக்கை பெற்றார். ஈசாக்கு யாக்கோபை பெற்றார். யாக்கோபிற்கு பன்னிரெண்டு புத்திரர்கள் பிறந்தனர். இந்த சந்ததி எகிப்திற்கு குடிபெயர்ந்து பன்னிரெண்டு கோத்திரங்களாக பெருகுகின்றனர். அந்நியர்கள் தங்களது தேசத்தில் பெருகி வருவதை கண்டு அச்சமுற்ற எகிப்தியர்கள் அவர்களை ஒடுக்க ஆரம்பிக்கின்றனர். தேவன் ஆபிரகாமை நினைவு கூர்ந்து, அவரது சந்ததியை எகிப்தியர்களுக்கு தப்புவித்து கானான் தேசத்தில் குடி அமர்த்துகிறார். இஸ்ரேல் என்னும் தேசம் மலர்ந்தது.
பல்லாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மூவரை உறுதிபடுத்தும் தடயங்களை கண்டடைவது எளிதல்ல என்றாலும் அவர்களை குறித்த செய்திகளின் உண்மையை கண்டையலாம். பைபிளில் கணக்கிட்டபடி முற்பிதாக்களின் காலம் கி.மு 2000-த்திற்கு ஒத்து வருகிறது. இம்மூன்று தனி நபர்களை குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகளை இன்றைய மத்திய கிழக்கு தொல்பொருள் கண்டுபிடிப்புகள் உறுதி செய்கின்றன. குறிப்பாக பண்டைய மத்திய கிழக்கு பட்டணங்களான மரி, நுசி, எப்லா ஆகியவற்றில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சிகளில் கிட்டிய கல்வெட்டுகள் முற்பிதாக்களின் கதைகளோடு ஒத்திருக்கின்றன.
அ) முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் வரலாற்று துல்லியங்கள்:
முற்பிதாக்கள் வாழ்ந்த சூழல் குறித்து பைபிள் கூறுகின்ற செய்திகள் வரலாற்று பூர்வமாக உறுதியாகியுள்ளது. அவை நான்கு தலைப்புகளாக கீழே விளக்கப்பட்டுள்ளன.
1) பெயர்கள்: பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் காணப்படுகின்ற பல பெயர்கள் பழங்கால கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
- ஆபிரகாம்: ஆபிரகாம் என்ற பெயர் மரி கல்வெட்டுகள் பலவற்றில் பலமுறை காணப்படுகிறது. கி.மு 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பாபிலோனிய கல்வெட்டுகள் சிலவற்றிலும் இப்பெயர் காணப்படுகிறது.
- பென்யமீன்: இப்பெயர் மரி கல்வெட்டுகளில் காணப்படுகிறது.
- யாக்கோபு: சாகர்-பசர் என்ற வட மெசபொத்தோமிய பட்டணத்தில் கிட்டிய கி.மு 18-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டில் யாக்கோபு என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் துட்மோஸ் என்ற எகிப்திய மன்னரின் அரச ஓலையில் ஒரு பாலஸ்தீன பட்டணத்தின் பெயர் யாக்கோபு என எழுதப்பட்டுள்ளது. எகிப்தில் வாழ்ந்த ஹிஸ்கோஸ் என்ற பழங்குடி மக்களின் அதிகாரி ஒருவரின் பெயாராகவும் காணப்படுகிறது.
- நாகோர்: ஆபிரகாமின் சகோதரரின் பெயர் நாகோர். இப்பெயர் ஒரு பட்டணத்தின் பெயராக மரி கல்வெட்டுகள் சிலவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
- பிற பெயர்கள்: காத், தாண், லேவி, இஸ்மவேல் ஆகிய பெயர்களும் மரி கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. அசீரிய கல்வெட்டுகள் செரூகு, தேராகு என்னும் பெயருடைய இரு பட்டணங்களை குறிப்பிடுகின்றன. தேராகு ஆபிரகாமின் தந்தை. செரூகு தேராகின் தாத்தனாவார். எப்லா கல்வெட்டுகள் சிலவற்றிலும் இஸ்ரவேல், இஸ்மவேல் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன.
இப்பெயர்கள் பைபிளில் காணப்படுகின்ற நபர்களையே குறிக்கின்றன என்று நிச்சயித்து கூற முடியாது. எனினும் முற்பிதாக்களின் காலத்தில், சமூகத்தில் இப்பெயர்கள் மக்களிடையே விளங்கி வந்தன என்பதை இதன் மூலம் அறியலாம். இத்தடயங்கள் பைபிளின் சரித்திர செரிவிற்கு ஆதரவாக உள்ளன.
2) பாரம்பாரியங்கள்: முற்பிதாக்களின் கதைகளுக்கு தடயங்களை அக்கால பாரம்பரியங்களில் இருந்தும் பெறலாம். நுசி கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பாரம்பரியங்கள் பல, முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் பாரம்பரியங்களோடு ஒத்து வருகின்றன. நுசி பட்டணத்தை குறித்து பைபிளில் செய்திகள் இல்லை என்றாலும் அசீரியாவை குறித்து பைபிளில் செய்திகள் உள்ளன. நுசி அசீரியாவின் வடபகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. 1925-இல் நுசியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் நூற்று கணக்கில் அக்காதிய கல்வெட்டுகள் கிட்டின. இக்கல்வெட்டுகளில் அக்கால மக்களின் வணிகம் மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்த செய்திகள் பெரும்பாலும் காணப்படுகின்றன. இச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள சில வழக்கங்கள்,
- குழந்தையில்லா தம்பதிகள் ஒரு வேலைக்காரனை தங்களுக்கு மகனாக தத்தெடுத்து கொள்ளலாம். அவன் அவர்களது வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மகனாக பணிவிடை செய்ய வேண்டும். அவ்வாறு, அவன் பணிவிடை செய்தால், அவன் வாரிசுரிமை பெறுவான். அத்தம்பதி இறந்த பின், அவர்களது சொத்துக்கள் அனைத்தும் அவனுக்கே உரியவை. இச்செய்தி ஆபிரகாமின் கதையில் காணப்படுகிறது. ஆபிரகாமின் தத்து மகனாகவும், வாரிசுரிமையாகவும் எலியேசர் என்ற பணிவிடைக்காரன் காணப்படுகிறான் (ஆதியாகமம் 15:2-4).
- ஒரு தம்பதிக்கு குழந்தைகள் இல்லாவிட்டால், மனைவியானவள் தன் கணவனுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும். இச்செய்தியும் ஆபிரகாமின் கதையில் காணப்படுகிறது. சாராள் தன் கணவனுக்கு குழந்தை உண்டாகும்படி தன் அடிமை பெண்ணாகிய ஆகாரை அவருக்கு திருமணம் செய்து வைத்தாள்(ஆதியாகமம் 16:1-3).
- குழந்தையில்லாத காரணத்தினால் மனைவி தன் கணவனுக்கு வேறொரு பெண்ணை மணமுடித்து வைத்த பின்பு, அவளிற்கு குழந்தை பிறக்க நேரிட்டால், அக்குழந்தையே வாரிசுரிமை பெறும். மறுமனையாட்டிக்கு பிறந்த குழந்தைக்கு வாரிசுரிமை இல்லை. சாராள் ஈசாக்கை பெற்றபின், ஆகாரையும், அவள் ஆபிரகாமிற்கு பெற்ற மகனான இஸ்மவேலையும் புறந்தள்ளுகிறாள் (ஆதியாகமம் 21:9-11).
- ஒருவர் ஒரு பெண்ணிற்கு மணமுடித்து வைப்பதாக வாக்களித்து தனக்கு சகோதரியாக தத்தெடுக்கலாம். தத்தெடுக்கப்பட்டவர் அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும், இறந்த பின் துக்கித்து அவரை முறைபடி அடக்கஞ் செய்ய வேண்டும். இவ்வழக்கம் ஆபிரகாமிற்கும் சாராளிற்கும் பொருந்தலாம் (ஆதியாகமம் 20:2).
- தந்தை தன் முதல் மகனையே குடும்ப வாரிசாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அவர் விரும்பும் எந்த மகனையும் தன் வாரிசுரிமை உடையவன் ஆக்கலாம். உதாரணத்திற்கு, யாக்கோபு தன் மூத்த மகன்களை விடுத்து யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீமையும் மனாசேவையும் தன் வாரிசுரிமைகளாக தெரிந்து கொண்டார் (ஆதியாகமம் 48:5).
- உயில்கள் குலதெய்வ சிலைகளை மதிப்பிற்குரிய உரிமை சொத்துகளாக எடுத்துரைக்கின்றன. லாபான் தன் குலதெய்வ சிலைகளை தேடி கொண்டு யாக்கோபிடமும், ராகேலிடமும் புறப்பட்டு வந்த காரணத்தை இது தெளிவுபடுத்துகிறது (ஆதியாகமம் 31:19,34,35).
- ஒருவன் தன் பிறப்புரிமையை தன் சகோதரனுக்கு விற்கலாம். உதாரணத்திற்கு, ஏசா தன் பிறப்புரிமையை யாக்கோபிற்கு விற்றார்(ஆதியாகமம் 25:29-34).
- சில கல்வெட்டுகள் முதிர்ந்த பெரியவர்கள் இறப்பதற்கு முன்பு ஆசி வழங்கியதாக கூறுகின்றன. இச்செய்தி யாக்கோபு மரணிப்பதற்கு முன்பு ஆசீர்வதித்த சம்பவத்தை ஒத்திருப்பதை காணலாம் (ஆதியாகமம் 48,49).
- பண்டைய எகிப்தியர்களும், மெசபொத்தோமியர்களும் விருத்தசேதனம் செய்து வந்தனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எகிப்திய கல்லறை ஒன்றில் விருத்தசேதன காட்சிகள் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இதே காலக் கட்டத்தில் தான் ஆபிரகாமும் அவரது சந்ததியும் தன் உடன்படிக்கையின் அடையாளமாக விருத்தசேதனம் செய்து கொள்ள வேண்டும் என இறைவன் கூறுகிறார் (ஆதியாகமம் 17:9-14).
இவ்வாறு பல பாரம்பரிய பழக்கவழக்கங்கள் பைபிளுடன் ஒத்து போகின்றன.முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் பாரம்பரியங்களும், அக்காலக் கட்ட பாரம்பரியங்களும் ஒத்திருப்பதை இக்கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன.
3) பாலஸ்தீன பகுதிகளில் நிலவிய சூழல்: அக்கால பாலஸ்தீன வட்டாரத்தில் நிலவிய சூழல் ஆதியாகமத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகளை பெரிதும் உண்மைபடுத்துகிறது.
- மரி கல்வெட்டுகளில் காணப்படும் சுமேரிய நாடோடிகளின் தற்காப்பு படைகள் குறித்த விவரங்கள் ஆதியாகமம் 14-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆபிரகாமின் போர்குணங்களோடு பொருந்துகின்றன. அக்கால கட்டத்தில் கானான் பகுதிகளில் மக்கள் சிறு ராஜ்ஜியங்களாக பிரிந்து வாழ்ந்ததாகவும், அவ்வப்போது தங்களுக்குள் கூட்டு படைகள் அமைத்து ஆதாயந்தேடி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாகவும் இக்கல்வெட்டுகள் கூறுகின்றன. இக்குறிப்பு ஆதியாகமம் 14ஆம் அதிகாரத்தை ஒத்து காணப்படுகிறது.
ஆதியாகமம் 14:1-2: சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம் பண்ணினார்கள்.
- ஓரிடித்தில் நிலையாய் குடியிராமல், நாடோடிகளாகவும், கூடாரங்கள் அமைத்து வசிப்பவர்களாகவும் அக்கால சுமேரியர்கள் வாழ்ந்தனர் என்றும் தண்ணீர் தேடி அலைவது, கால்நடை மேய்ப்பது, பயிரிடுவது, அண்டை வீட்டாரோடு அமைதி பேணுவது என அவர்களின் அன்றாட வாழ்க்கை கடந்தது என்றும் மரி கல்வெட்டுகள் கூறுகின்றன. இவை பைபிளில் கூறப்பட்டுள்ள செய்திகளோடு ஒன்றியுள்ளது.
- ஆதியாகமம் 34-37- யாக்கோபு சீகேமிலும் பின் எபிரோனிலும் வாழ்ந்த கதை சுமேரிய நாடோடித் தலைவர்களின் வழக்கங்களோடு ஒத்துள்ளது.
4) நெடுந்தூர பயணங்கள்: முற்பிதாக்கள் நெடுந்தூர பயணங்களை மேற்கொண்டதாக பைபிள் கூறுகிறது. ஆபிரகாம் ஆயிரம் மைல்களை கடந்து கல்தேயருடைய ஊரை விட்டு தெற்கு கானானிற்கு சென்றார் (ஆதி.11:31-12:9). ஈசாக்கிற்கு மணப்பெண்ணை தேடும்படி தன் வேலையாளான எலியேசரை ஆரானில் இருந்து வட மெசபொத்தோமியா வரையுள்ள நானூறு மைல் தூரம் அனுப்பினார் (ஆதி. 24:1-10). யாக்கோபும் நெடுந்தூர பயணங்களை மேற்கொண்டார்.
- சுமேரியர்கள் நெடுந்தூர பயணங்களை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆரானில் இருந்தும் பிற பாலஸ்தீன பகுதிகளில் இருந்தும் தூதர்கள் தெற்கு மெசபொத்தோமியாவையும் ஏலாமையும் வந்தடைந்ததாக மரி கல்வெட்டுகளில் செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளன.
- ஏத்தியர்களுக்கும் அசீரியர்களுக்கும் வணிக உறவுகள் இருந்ததாக கனிஷில் கிட்டிய கப்பத்தோக்கியா குறிப்புகள் கூறுகின்றன.
இன்று நம்மிடம் தனி மனிதர்களை குறித்த தொல்பொருள் சான்றுகள் மிக குறைந்தளவே உள்ளன. எனினும், அகப்படும் அகழ்வாராய்ச்சி தடயங்கள் பல, முற்பிதாக்களின் கதைகளில் காணப்படும் வரலாற்றுச் செரிவை உறுதிபடுத்தி வருகின்றன.
ஆ) முற்பிதாக்களின் காலகட்டம்:
பைபிள், பைபிள் சாராத பிற வரலாற்று குறிப்புகளில் இருந்து ஆபிரகாம் வாழ்ந்த காலக் கட்டத்தை கணக்கிடுகின்றனர். பைபிள் கூறுகின்ற செய்திகளை குறிப்பிட்டு காணும் போது ஆபிரகாம் கி.மு 22ஆம் நூற்றாண்டின் மையத்தில் பிறந்திருக்கிறார்.
- சாலொமோன் ராஜா யூத தேவாலயத்தை கி.மு 966-இல் கட்டத் தொடங்கினார் என 99.99% வரலாற்று ஆசிரியர்கள் ஏற்கின்றனர்.
- விடுதலை பயணம் நிகழ்ந்து 480 ஆண்டுகள் ஆன பின்பு சாலொமோன் ராஜா தேவாலயத்தை கட்ட தொடங்கியதாக 1 இராஜாக்கள் 6:1கூறுகிறது. இக்குறிப்பின் படி விடுதலை பயணம் கி.மு 1446 என்ற கால கட்டத்தில் நிகழ்கிறது.
1 இராஜாக்கள் 6:1 - " இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின் மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான் "
- ஆபிரகாம் ஈசாக்கு பிறந்த போது 100 வயதை எட்டியிருந்தார் (ஆதி 21:5). ஈசாக்கு 60 வயதான போது யாக்கோபை பெற்றார் (ஆதி 25:26). யாக்கோபு எகிப்தை அடைந்த போது 130 வயதுள்ளவராய் இருந்தார் (ஆதி 47:9). இதன்படி ஆபிரகாம் பிறந்த காலம் முதல் யாக்கோபு எகிப்தை அடைந்த காலம் வரை 290 ஆண்டுகள் என கணக்கிடப்படுகிறது.
- இஸ்ரவேலர்கள் எகிப்தில் வசித்த காலம் 430 ஆண்டுகள். இக்குறிப்பு யாத்திராகமம் 12:40,41-இல் காணப்படுகிறது. இதனை ஆதியாகமம் 15:13, அப்போஸ்தலர் நடபடிகள் 7:6 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.
யாத்திராகமம் 12:40,41 - " இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்று முப்பது வருஷம். நானூற்று முப்பது வருஷம் முடிந்த அன்றைய தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது "இதன் படி ஆபிரகாம் பிறந்த ஆண்டை எளிதாக கணிக்கலாம்.
ஆபிரகாம் பிறந்த ஆண்டு = 966+480+430+290 = கி.மு 2166
இ) முற்பிதாக்கள் வாழ்ந்த பகுதிகள்:
பாக்தாத்திலிருந்து தெற்கு நோக்கி 100 மைல் தொலைவில் அமைந்த 'நிப்பூர்' என்ற மெசப்பொதோமிய பட்டணம் 1890-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பட்டணத்தை குறித்து பைபிளில் எந்த செய்திகளும் குறிப்பிடவில்லை. எனினும் நிப்பூரில் கிட்டிய 40,000 கல்வெட்களில் சுமேரிய பகுதிகளை ஆண்ட அரசர்களை குறித்தும், அவர்கள் அரசாண்ட காலத்தை குறித்தும் செய்திகள் உள்ளன. இது ஆதியாகமத்தில் காணப்படும் ஜலப்பிரளயத்திற்கு முந்திய அரசர்களின், முற்பிதாக்களின் தலைமுறை பட்டியலை ஒத்திருக்கிறது. மரி, நுசி, எப்லா பட்டணங்களில் கிட்டிய கல்வெட்டுகளிலும் இத்தகைய தடயங்கள் கிடைக்கின்றன. பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நினிவே பட்டணத்தில் நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் நோவா கதையை ஒத்த கில்கமெஷ் காப்பியம் என்ற பழங்கதை கல்வெட்டு கிட்டியது.
கில்கமேஷ் காப்பியம் |
ஆதியாகமம் 10:10 - " சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள் "ஆதியாகமம் 10:10-இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏரேக் பட்டணம் (உருக்) கி.பி 1850-இல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பட்டணத்தில் நிகழ்ந்த தொடர் அகழ்வு ஆராய்ச்சிகளில் கட்டிடங்களும் பழமையான ஜிக்கருட் கோபுரம் ஒன்றும் கண்டடையப்பட்டன. இக்கண்டுபிடிப்புகள் பைபிளில் காணப்படும் பண்டைய பட்டணங்களை பெரிதும் உண்மைப்படுத்துகின்றன.
எபிரேய மூலப்பிரதியில் ஆபிரகாம் 'ஊர் கஸ்திம்' என்ற பட்டணத்தில் வசித்ததாக எழுதப்பட்டுள்ளது. செப்துவசிந்தாவில் (கி.மு 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த கிரேக்க மொழிப்பெயர்ப்பு) 'கல்தேயருடைய பட்டணமான ஊர்' என இப்பட்டணம் குறிக்கப்பட்டுள்ளது. கல்தேயர்கள் பண்டைய செமிடிக் இனத்தை சேர்ந்தவர்கள். கி.மு 6ஆம் நூற்றாண்டில் இவர்களது ஆதிக்கம் பாபிலோனில் (ஈராக்கில்) பெருகியது. இவர்களது ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்-கஸ்திமும் அடங்கும். நெடுங்காலமாக இப்பட்டணம் அமைந்த இடம் கண்டுபிடிக்கப்படவில்லை. கி.பி-1850ஆம் ஆண்டு ஈராக்கில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில் 'இதன் அமைவிடம் ஊர்' என்று பொறிக்கப்பட்ட ஜிக்கருட் கண்டுபிடிக்கப்பட்டு அவ்விடம் 'ஊர்' என உறுதி செய்யப்பட்டது.
ஆதியாகமம் 15:7 - "பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர் நானே என்றார் "
ஊர்-கஸ்திம் |
ஊர்-கஸ்திமில் காணப்பட்ட ஜிக்கருட் |
கி.மு 2500 கால அளவை சேர்ந்த பொன், வெள்ளி சிலைகளும், கல்வெட்டுகளும், சுத்தி, அரிவாள் போன்ற பொருட்களும் ஊர்-கஸ்திமில் கிடைத்துள்ளன. கி.மு 2130-2022 காலக்கட்ட நிலவரங்களை தெளிவுபடுத்தும் பல தடயங்களும் கிட்டியுள்ளன. உர்-நம்மு, சுல்கி, அமர்-சின், ஷு-சின், இபி-சின் என ஐந்து அரசர்கள் இப்பகுதியை வரிசையாக ஆண்டுள்ளனர். உர்-நம்மு வகுத்த சட்ட விதிகள் பைபிளில் எழுதப்பட்டுள்ள நியாப்பிராமணங்களை ஒத்து காணப்படுகின்றன. உர்-நம்முவின் சட்டவிதிகளே இதுவரை கிட்டியுள்ள சட்ட விதிகளில் மிகவும் தொன்மையானது. இப்பட்டணத்தின் மக்கள் 'சின் (நன்னா)' எனப்படுகிற சுமேரிய நிலவு கடவுளை வழிப்பட்டனர்.
யோசுவா 24:2 - " அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்த போது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள் "
சின் - நன்னா நிலாக்கடவுள் |
ஆபிரகாம் ஊரிலிருந்து கானானுக்கு செல்லும் போது, ஆரானில் தங்கினார். ஊரை போல ஆரானும் (காரானூர்) நன்னா வழிபாடு மிகுந்த பட்டணமாக விளங்கியது என எப்லா கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன. எனவே ஆபிரகாமின் தந்தை தேராகு ஆரானில் நன்னாவை வழிபடும் பொருட்டு தங்கியிருந்தார் என சந்தேகிக்கப்படுகிறது.
அப்போஸ்தலர் 7:4 - " அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தை விட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம் பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்த பின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக் கொண்டு வந்து குடியிருக்கும்படி செய்தார் "கானான் தேச எல்லைகளை அமர்னா கல்வெட்டுகள் (கி.மு 14ஆம் நூற்றாண்டு) உறுதிபடுத்துகின்றன. இக்கல்வெட்டுகளில் கானான் எகிப்தின் ஆட்சிக்கு உட்பட்ட சிரியா-பாலஸ்தீன மாநிலம் என பொறிக்கப்பட்டுள்ளது. இக்குறிப்பின்படி சீதோன் வரை உள்ள இடங்கள் கானானில் அடங்கும்.
ஆதியாகமம் 10:19 - " கானானியரின் எல்லை, சீதோன் முதல் கேரார் வழியாய்க் காசா மட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசா மட்டுக்கும் இருந்தது "கி.மு 2200-2000 காலங்களில் பல கானானிய பட்டணங்கள் நாகரீக வளர்ச்சி மிகுந்து விளங்கின. இக்காலத்தில் தான் ஆபிரகாம் கானானை வந்தடைந்தார். இதே காலத்தில் தான் எகிப்திய நாகரீகமும் வளர்ந்து வந்தது.
ஊர்-இல் கிட்டிய சிலை |
மோரியா மலைமீது ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முற்படும் போது தேவன் அவரைத் தடுத்து நிறுத்தினார், அப்பொழுது ஆபிரகாம் புதர்களில் சிக்கிய ஒரு ஆட்டுக்கடாவை கண்டு அதனை தேவனுக்கு பலியிட்டார் (ஆதியாகமம் 22ஆம் அதிகாரம்). இதே மோரியா மலைமீது தான் சாலொமோன் தேவாலயத்தை கட்டினார் (2 நாளாகமம் 3:1). 1928-இல் ஊர்-கஸ்திமில் (ஊர்) நிகழ்த்திய அகழ்வாராய்ச்சியில் கி.மு 2600-2400 காலத்தைச் சேர்ந்த ஆட்டுக் கடாவின் பொற்சிலை கிட்டியது. புதர்களுக்கிடையே காலூன்றியதை போல இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்காலங்களில் தான் சுமேரியர்கள் பெருமளவான ஆடுகளை வீட்டுவளர்ப்புப் பிராணிகளாக்கி வந்தனர் என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
ஆபிரகாம் கானானை அடைந்த காலத்தில் அவருடைய சகோதரரின் மகனான லோத்து அவரை விட்டு பிரிந்து யோர்தான் நதி அருகில் அமைந்த சமபூமிக்கு சென்றார். இந்த சமபூமியின் ஐம்பட்டணங்களாக பைபிள் குறிப்பிடும் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம், சோவார் இன்றும் சர்ச்சைக்குரிய இடங்களாக உள்ளன. ஐந்தாவதான சோவார் அமைந்த இடம் மட்டுமே கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்மா, செபோயிம் பட்டணங்கள் விளங்கியதற்கான தடயங்கள் எப்லா கல்வெட்டுகளில் காணப்படுகின்றன, இருப்பினும் இவை அமைந்துள்ள இடங்கள் இன்றும் தேடல் நிலையிலேயே உள்ளன.
சோதோமிலும் கொமோராவிலும் பாவங்கள் பெருகின போது இறைவன் கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்க செய்து அப்பட்டணங்களை அழித்தார் எனவும் அதில் லோத்து குடும்பத்தார் மட்டுமே தப்பி பிழைத்ததாகவும் பைபிள் கூறுகிறது. பின்னிட்டு பாராமல் வெளியுமாறு விதிக்கப்பட்ட கட்டளையை மீறி லோத்தின் மனைவி உப்புத்தூண் ஆகிறாள். உப்புகடலை ஒட்டி இப்பட்டணங்கள் அமைந்திருந்ததாகவும் நீலக்கீல் மிகுந்த பகுதிகளாக விளங்கியதாகவும் பைபிளில் செய்திகள் உள்ளன (ஆதியாகமம் 14:1-3, 10). உப்புக்கடலை ஒட்டியுள்ள பகுதிகள் சிலவற்றில் கந்தகமும், சாம்பலும், நீலக்கீலும் படிந்திருக்கின்றன. கடற்கரையை ஒட்டி தூண் வடிவ உப்புக்கல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலர் சோதோம் கொமோரா உப்புக்கடலால் சூழப்பட்டு மூழ்கி இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் அழிக்கப்பட்ட இப்பட்டணங்கள் அமைந்துள்ள இடங்கள் இன்றும் கண்டறியப்படவில்லை.
உப்புக்கடல் அருகே காணப்படும் தூண் வடிவம் |
ஆதியாகமம் 21:32, 26:1,8, 14, 15, 18 ஆகிய வசனங்களில் பெலிஸ்தர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். கி.மு 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த பெலிஸ்தர்களின் மட்பாண்டங்கள் கப்தோரிலும், பெலிஸ்தாவிலும், எரிகோவிலும், பெத்சானிலும் கிடைத்துள்ளன. கானான், கப்தோர் மக்களுக்கிடையே தூதுவர்கள் இருந்தனர் என ஆத்சோரிலும், உகாரித்திலும் எடுக்கப்பட்ட மினோவர் மட்பாண்டங்கள் கூறுகின்றன. கி.மு 18ஆம் நூற்றாண்டை சேர்ந்த மரி கல்வெட்டுகளில் ஆத்சோரின் மன்னர் கப்தோருக்கு பரிசுப் பொருட்களை அனுப்பினார் என குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளன.
ஆபிரகாம் சாராள் இறந்த போது, எபிரோனிலுள்ள மக்பேலா என்னும் குகையை விலைக்கு வாங்கி அங்கு சாராளை அடக்கம் செய்தார். இக்குகையிலேயே ஆபிராகமும் அடக்கம் செய்யப்பட்டார்.ஈசாக்கு, ரெபேக்காள், யாக்கோபு, லேயாள் ஆகியோரும் மக்பேலாவில் அடக்கம் செய்யப்பட்டனர்.
ஆதியாகமம் 49:29-32 - " பின்னும் அவன் (யாக்கோபு) அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப் போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம் பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம் பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம் பண்ணினேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான் "
எபிரோன் மக்பேலா |
ஆபிரகாமின் கல்லறை வாயில் |
ஆபிரகாமின் கல்லறை - பிரேதம் நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ளது. |
சாராளின் கல்லறை வாயில். உள்ளே காணப்படுவது கல்லறை. |
ஈசாக்கு - ரெபெக்காளின் கல்லறைகள் |
யாக்கோபின் கல்லறை |
லேயாளின் கல்லறை வாயில். உள்ளே காணப்படுவது லேயாளின் கல்லறை. |
கி.மு முதல் நூற்றாண்டில் பேரரசர் ஏரோதால் மக்பேலா குகையை சுற்றி சுவர்கள் எழுப்பப்பட்டன. கி.பி 6ஆம் நூற்றாண்டில் பைசாண்டிய பேரரசால் மக்பேலாவில் கிறிஸ்தவ தேவாலயம் எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தை கி.பி-614-இல் பெர்சியர்கள் அழித்தனர். பின்னர், இஸ்லாமியர்களால் மக்பேலா மசூதியாக மாற்றப்பட்டது. சிலுவை போர்களின் போது கிறிஸ்தவர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டு தேவாலயமானது. இக்காலத்தில் முற்பிதாக்களின் உடற்கூறுகளும் எழும்புகளும் புதிய துணிகளால் போர்த்தப்பட்டு மீண்டும் குகையிலேயே வைக்கப்பட்டன என அலி, இபின் அத் அதிர், இபின் அல் குலானிஷி முதலிய இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். கி.பி 1188-இல் அரசர் சலாவுதீன் மக்பேலாவை மீண்டும் மசூதியாக்கினார். எனினும் இவ்விடத்தில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஆராதனை செய்ய அனுமதிக்கப்பட்டனர். கி.பி-13ஆம் நூற்றாண்டில் மன்னர் மம்லுக் மசூதியை விரிவுப்படுத்தி முற்பிதாக்களுக்கும் அவர்களது மனைவிமார்களுக்கும் கல்லறைகளைக் கட்டினார். இதன்பின்பு, 1929ஆம் ஆண்டு வரை யூதர்கள் மக்பேலாவிற்குள் அனுமதிக்கப்படவில்லை. 1967-இல் நிகழ்ந்த ஆறு நாட்கள் போரில் மக்பேலா யூதர்களால் கைப்பற்றப்பட்டு இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தது. எனினும் இவ்விடம் இன்றும் சர்ச்சைக்குரியதாக உள்ளது.
யாக்கோபு தன் இளைய மனைவி ராகாலை பெத்லகேமிற்கு போகின்ற வழியில் அடக்கம் செய்து கல்லறைத் தூணை நிறுத்தினார் (ஆதியாகமம் 35:19). ராகேலின் கல்லறையாக பெத்லகேமில் உள்ள பிலால்-பின்-ரபா மசூதியை கருதுகின்றனர். இது யூதர்களின் மூன்றாம் புனித ஸ்தலம்.
பிலால்-பின்-ரபா மசூதி |
ராகேலின் கல்லறை வாயில் |
ராகேலின் கல்லறை அருகே தொழும் யூதர்கள் |
இவைத்தவிர இஸ்ரேலில் காண வேண்டிய புனித ஸ்தலங்கள் ஏராளம் உள்ளன. யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் என கோடிக் கணக்கான மக்கள் வருடந்தோரும் இப்பகுதிகளை நோக்கி வருகை தந்து இறைவனை தொழுகின்றனர். முற்பிதாக்களின் காலடித் தடங்கள் பதிந்த புண்ணிய பூமியாக இஸ்ரேல் விளங்கி வருகிறது...
"அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவு மட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின் மேல் வைக்கப்பட்டிருக்கும்" - உபாகமம் 11:12
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக