செவ்வாய், 24 ஏப்ரல், 2018

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!



பகுதி-14


முருகன் என்ற தமிழ் கடவுள்
சரி இப்பொழுது நாம் முருகனை ஏன் தமிழ் கடவுளாக தமிழர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடுகின்றனர் என்று அந்த ஆய்வாளர்கள் கூறும் காரணத்தினைக் கண்டு விடலாம். அதற்கு நமது புராணக் கதையினுள் ஒன்றினைக் நாம் காண வேண்டி இருக்கின்றது.
'கந்தன் கருணை' படம் கண்டு இருக்கின்றீர்களா?
அப்படத்தினில் பிரமனுக்கு படைப்புப் பொருள் மறந்து விட்டதால் அவரை முருகன் சிறைப்பிடிப்பது போலவும் பின்னர் படைப்புப் பொருளினை சிவனுக்கு உபதேசிப்பது போலவும் ஒரு காட்சி இருக்கும். அனைவரும் கண்டு இருப்போம் என்றே நம்புகின்றேன். அந்த காட்சியினைத் தொடர்ந்தே அருமையான பாடலான 'சொல்ல சொல்ல இனிக்குதடா' என்றப் பாடலும் வரும். சரி இருக்கட்டும். இப்பொழுது நாம் காண வேண்டியது பிரமனை முருகன் சிறைப் பிடிக்கும் விடயத்தைத் தான். அதற்கு முன்னர் நாம் சில விடயங்களை அறிந்துக் கொள்வது நல்லது.
ஒன்று, ஆரம்பக் காலங்களில் இந்தியாவில் வடக்கு தெற்கு என்ற பாகுபாடுகள் இருந்தது கிடையாது. இந்தியா முழுமையுமே தமிழ் பேசும் மக்களே நிறைந்து இருந்தனர். இதனை நாம் நம்முடைய முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம் மேலும் அம்பேத்கர் போன்ற அறிஞர்களும் இக்கூற்றினைக் கூறி இருக்கின்றனர். ஆனால் காலங்கள் நகர நகர இந்தியா பல அரசியல் மாற்றங்களுக்கு உட்பட்டது, உட்பட்டு வட பகுதி முழுமையாக அந்நியர்களின் வசம் கி.பி ஏழாம் நூற்றாண்டு முதல் சென்று விட்டது. இதனை நாம் இந்தப் பதிவுகள் மூலம் கண்டு இருக்கின்றோம் (ஆரியர்கள் யார்).
எனவே அக்காலம் தோன்றி இந்தியாவில் பல மாற்றங்களும் சரி போராட்டங்களும் சரி சூழ்ச்சிகளும் சரி நிலவிக் கொண்டே தான் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் சமயங்கள் வடக்கே இருந்து தெற்கே வந்தவை என்றக் கருத்துக்கள். அதன் விளைவே இன்று சைவ சமயமும் வைணவ சமயமும் எங்கே தோன்றின என்றால் நம்மில் பெரும்பாலானோர் அவை வடக்கே தோன்றியவை என்ற எண்ணத்தினையே கொண்டு இருக்கின்றோம்.
தெற்கே இருந்து வடக்கே போன சமயங்களை சிலர் கைப்பற்றிக் கொண்டு அதன் அர்த்தங்களை அவர்களுக்கு ஏதாக மாற்றிக் கொண்டு கதை புனைய ஆரம்பிக்க அன்றைய அரசியல் சூழ்நிலைகள் காரணமாக சமயங்களும் அவற்றின் மெய்யான அர்த்தங்களை துறந்து போலி அர்த்தங்களை சுமக்க ஆரம்பிக்கின்றன. இதன் தாக்கத்தினை நாம் காவடி எடுக்கும் கதையிலையே காணலாம்.
அந்தக் கதைப்படி இடும்பன் வடக்கில் இருந்து இரு மலைகளை தெற்கே கொண்டு வருகின்றானாம்.
ஏன் வடக்கில் இருந்து மலைகள் வர வேண்டும்? தெற்கிலே மலைகளே இல்லையா? அவை சிறப்பானவை இல்லையா? அனைத்து ஆழ்வார்களும் நாயன்மார்களும் உதித்த தெற்கிலே இல்லாத சிறப்பு வடக்கில் இருக்கின்றதா? இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் வடக்கு சிறப்பாக கூறப்பட்டு இருக்கின்றது. நிற்க.
இவ்வாறு ஒரு காலத்தில் சைவ சமயமும் சரி வைணவ சமயமும் சரி அரசியல் காரணங்களாக மாறுகின்றன. வைணவமாவது பரவா இல்லை, சைவம் முற்றிலுமாக அந்த அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகின்றது (இதனைப் பற்றி நாம் பின்னர் பார்க்கலாம்). ஆனால் இந்த சமயங்களை உருவாக்கியோர் அத்தகைய தவறான மாற்றங்களை கண்டு கொண்டு சும்மா இருப்பரா என்ன? சமயங்களை நல் வழிப் படுத்த அவர்களும் முயலத் தான் செய்கின்றனர்.
அந்நியர்களின் சூழ்ச்சியினை எதிர்த்து அவர்கள் போராட இந்திய தேசத்தில் பல காலமாக சமயப் போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருந்து இருக்கின்றன. சரி இப்பொழுது நமது கதைக்கு வருவோம்.
நம்முடைய பதிவுகளின் படி, முருகன் - இறைவனின் மைந்தன். இவர் பிரமனை கைது செய்கின்றார். பிரமன், இவர் யார் என்றுப் பார்த்தால் இவரும் இறைவனின் மைந்தன். படைப்புக் கடவுளாக அறியப்படுபவர். அப்படி இருக்க இறைவனின் பிள்ளையாக அறியப்படுபவர் மற்றொரு பிள்ளையாக அறியப்படுபவரை ஏன் சிறை எடுக்குமாறு புராணம் படைக்கப் பட வேண்டும்? அதுவும் காரணமாக கூறப்படுவது என்னவென்று பார்த்தோம் என்றால் பிரமன் படைப்பின் அர்த்தத்தை மறந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதைத் தான் நாம் சற்று விரிவாக காண வேண்டி இருக்கின்றது.
எல்லாம் வல்ல ஒரு இறைவன் எவ்வாறு தனது கடமையை மறக்க முடியும்? அவ்வாறு மறப்பவன் எவ்வாறு இறைவனாக இருக்க முடியும்? எனவே இக்கதையினுக்கு வேறு அர்த்தம் இருக்கின்றதா என்று நாம் காண வேண்டி இருக்கின்றது. அவ்வாறு பார்த்தால் பிரமன் மனிதர்களை நான்கு வர்ணமாக படைத்தான் என்ற ஒரு கூற்று நமக்கு கிடைக்கப் பெறுகின்றது. அதன் அடிப்படையில் மனிதர்களும் சிலர் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும் சிலர் பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்றும் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர் என்றும் நாம் அறிவோம். ஆனால் பல அறிஞர்களின் கூற்றுப்படி இவை நம்முடைய சமயங்களில் இடைச் செருகல்களாக இணைக்கப்பட்டவை என்றும் ஆரம்ப காலங்களில் இக்கருத்துக்கள் நம்மிடையே இருந்ததில்லை என்றும் நாம் அறியப்பெருகின்றோம். எனவே நம்முடைய வரலாற்றின் இடையில் பிரமனின் வாயிலாக மக்களை பிறப்பால் பிரிக்கும் கருத்துக்கள் பரப்பப்பட்டன என்று நாம் அறிகின்றோம்.
இந்நிலையில் தான் சைவ வைணவ சமயத்தின் உண்மையான அர்த்தங்களுக்காக போராடியோர் பிரமன் மனிதர்களை பிறப்பால் பிரித்தான் என்றக் கருத்தினையும் மக்கள் அனைவரும் பிறப்பால் வேறுப்பட்டவர் என்ற கருத்தினையும் எதிர்க்க சில புராணங்களை எழுதுகின்றனர். அந்நிலையில் தான் நாம் மேலே உள்ள இந்தக் கதையினைக் காண வேண்டி உள்ளது.
பிரமன் தனது படைப்பு கொள்கையினை மறந்து மக்களை பிரிவு படுத்துகின்றான். அதனைக் கண்டு முருகன் அவனை கைது செய்கின்றார். கைது செய்து உலகப் படைப்பின் உண்மையான அர்த்தத்தினை உலகிற்கு உரைக்கின்றார் என்பதனையே நாம் அந்தப் புராணக் கதையின் வாயிலாக அறிந்துக் கொள்ள முடியும் செய்தியுமாக இருக்கின்றது.
அதாவது வட மொழியினை தங்களின் ஆதிக்கத்திற்கு கொண்டு வந்த சிலர் படைப்புக் கொள்கையினை பிரமன் என்ற இறை மைந்தனை வைத்து மாற்ற, அதனை சைவ வைணவ சமயத்தினைப் படைத்த தமிழர்கள் முருகன் என்றத் தமிழ் கடவுளை வைத்து எதிர்க்கின்றனர். வடக்கை தெற்கு எதிர்க்கின்றது. சமசுகிருதத்தினை தமிழ் எதிர்க்கின்றது. இந்நிலை இன்றும் தொடர்வதனை நாம் காணலாம். இதுவும் முருகன் தமிழ் கடவுளாக சிறப்பாக வணங்கப்படுவதற்கு ஒரு காரணியாகும்.
மேலும் பிரமன் பொய் சொல்பவனாகவும், அவனுக்கு என்று தனியே கோவில் எதுவுமே இல்லாதவனாகவும் நம்முடைய சமயங்களில் கூறப்பட்டுள்ளமையும் இங்கே கவனிக்கத்தக்கது.
இதன் வாயிலாக இன்று பலரும் நம்புவது போல சைவ வைணவ சமயங்கள் மனிதர்களில் பிரிவுகளை உருவாக்கவில்லை என்றும் அப்பிரிவுகளை எதிர்த்து அச் சமயங்கள் போரிட்டுக் கொண்டே வந்து இருந்து இருக்கின்றன என்பதனையும் ஆனால் காலத்தில் அவை அரசியல் சூழ்ச்சியினில் சிக்கி வீழ்ந்தன என்பதனையும் நாம் அறிய முடிகின்றது.
இதற்கு சான்றாக சித்தரான சிவ வாக்கியாரின் பாடல் சிலவற்றைக்  கண்டு விடுவோம்...
"பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?"
அர்த்தம்: பறைச்சி என்பவர் யார்? பணத்தி என்பவர் யார்? அவர்களின் வேறுபாடுகள் என்று நீங்கள் கூறுவது அவர்களின் எலும்பு அல்லது தோல் அல்லது சதையிலோ குறிக்கப்பட்டு உள்ளதோ?
"சாதியாவது ஏதடா சலம் திரண்ட நீராலோ
பூத வாசல் ஒன்றலோ பூதம் ஐந்தும் ஒன்றலோ"
அர்த்தம்: சாதிகள் என்பது ஏதடா... உடம்பில் ஓடும் குருதி ஒன்றாக இருக்கின்றது...பஞ்ச பூதங்களும் ஒன்றாக இருக்கின்றன...இந்நிலையில் சாதி பேதங்கள் மட்டும் எங்கிருந்து மாறுபடுகின்றன?
இவ்வாறு பாடிய சித்தர்கள் அனைவரும் குகை இடிக் கலகம் என்ற ஒன்றின் மூலமாக கொலை செய்யப்பட்டனர் என்பதும் வரலாறு. அதனை நாம் முன்னர் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது நமக்கு முக்கியம் என்னவென்றால் நம்முடைய தேசத்தில் பல போராட்டங்கள் நிகழ்ந்து உள்ளன...பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. பல உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. சில விடயங்களுக்கு தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டு அதன் அர்த்தங்கள் மாற்றப்பட்டு உள்ளன. அவ்வாறு மாற்றப்பட்டவைகளையும், மறைக்கப்பட்டவைகளையும் மீட்பதற்காக போராட்டங்களும் ஆண்டாண்டுக் காலங்களாக தொடரப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. இவையே நம்முடைய புராணங்களில் இருந்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டிய விடயங்களாகும்.
சரி இப்பொழுது சிலர் வேதங்களில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்று கூறுகின்றனர். அவர்களின் கூற்றுகள் சரியா என்பதனை காண நாம் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
காண்போம்...!!!
வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -
வேதங்கள் என்றால் என்ன?
இந்தக் கேள்வியினை நீங்கள் இன்று மக்கள் மத்தியில் கேட்டீர்கள் என்றால் பொதுவாக "வேதங்கள் என்றால் அவை ஆன்மீகச் சிறப்புமிக்கவை. அவை எண்ணிக்கையில் நான்காகும்.
ரிக் வேதம்
யசுர் வேதம்
சாம வேதம்
அதர்வண வேதம்."
என்ற விடையே விரைவாக நமக்கு கிட்டும். காரணம் நமது சமுகத்தில் நாம் இப்படித் தான் கற்கின்றோம். வேதங்கள் நான்கு. அவை இறைவனின் வாக்குகளைக் கொண்டு இருக்கின்றன. சமயங்கள் அனைத்தும் அவற்றில் இருந்தே தோன்றின. இவ்வாறு தான் வேதங்களைப் பற்றியக் கருத்துக்களும் கற்பிக்கப்படுகின்றன. நிற்க.
ஆனால் இந்தக் கருத்துக்களை மறுப்பவர்களும் நம்முடைய சமுகத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். அதுவும் குறிப்பாக சைவ வைணவ மற்றும் தமிழ் பெரியோர்கள், வேதத்தில் இருந்து தான் சைவ வைணவ சமயங்கள் தோன்றின என்றக் கருத்துக்களை தொன்று தொட்டே மறுத்து வந்து உள்ளனர். அவர்களுள் சிலர் தேவநேயப் பாவாணர், மறைமலைஅடிகள், திரு. கா.சு.பிள்ளை போன்றவர்களாவர். இந்நிலையில், வேதத்திற்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் தொடர்பு இருக்கின்றதா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் முதலில் வேதங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது. பார்க்கலாம்.
முதலில் வேதங்கள் என்றால் என்னவென்றே காண்போம். பொதுவாக வேதங்கள் நான்கு எனப்படினும், அவற்றுள் முக்கியமானதொன்றாக விளங்குவது ரிக் வேதம் தான். ஏனைய வேதங்கள் ரிக் வேதத்தின் மறு வடிவமைப்புகளாகவே திகழ்கின்றன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றன. விரிவாக பார்க்க வேண்டும் என்றால்,
"நான்கு வேதங்களுள் முதன்மையானதும் பழமையானதுமாக இருப்பது இருக்கு வேதமே. யசுர், சாமம், அதர்வணம் எனும் மற்றைய மூன்று வேதங்களும் இருக்கு வேதத்தின் மறுவமைப்புகளே" என்றே திரு சே.டால்போயிஸ் வீலர்(J.Talboys wheeler) என்னும் ஆராய்ச்சியாளர் தனது 'India of the Vedic age with reference to Mahabharata-Vol.1 of the history of India' நூலில் கூறுகின்றார்.
இவரதுக் கூற்றுகளை உறுதிப் படுத்துவது போல " மற்றைய மூன்றையும் இருக்கு வேதத்தின் பிற சேர்க்கை என்றும், இருக்கு வேதத்தின் விளக்கம் என்றும் சாரம் அல்லது சுருக்கம் என்றும் கூறலாம். இம்மூன்றில் யசுர் வேதம் பெரும்பாலும் இருக்கு வேதத்தின் பாடல்களைக் கொண்டு இருப்பதுடன் பலி செய்வதற்குரிய முறைகளை விளக்கும் பாடல்களையும் கொண்டுள்ளது. இரண்டாவதாக சாம வேதம், சோம பானம் தொடர்பான பாடல்களைக் கொண்டு விளங்குவதுடன் இருக்கு வேதத்தின் ஒன்பதாவது மண்டலத்தின் பாடல்களையும் அதிகமாகக் கொண்டு உள்ளது. அதர்வண வேதம் இருக்கு வேதத்தின் பெரும்பாலான பாடல்களைக் கொண்டு இருந்தாலும் மந்திரம் மாயம் தொடர்பான பாடல்களையே அதிகமாகக் கொண்டுள்ளது" என்றே மற்றொரு ஆய்வாளரான கே.சு.மாக்டொனால்ட்ஸ் (K.S.Macdonalde) அவர்கள் அவரது 'The Vedic Religion' நூலில் குறிப்பிடுகின்றார்.
அதுவும் சாம வேதத்தில் இருக்கும் 1875 பாடல்களும் 75 பாடல்கள் மட்டுமே புதியவைகளாக இருக்கின்றன. ஆய்வாளர்கள் கருத்துப் படி இசையமைக்கப்பட்ட இருக்கு வேதப் பாடல்களே சாம வேதம் என்று வழங்கப்படுகின்றன.
அதாவது நான்கு வேதங்கள் என்று இவை தனித்தனியே இன்று வழங்கப்பட்டாலும் பொதுவாக பார்த்தால் அனைத்து வேதங்களும் இருக்கு வேதத்தை சார்ந்தே இருக்கின்றன. நிற்க.
இப்பொழுது நாம் வேதங்களில் காணப்படும் வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் பற்றி சற்று கண்டு விடலாம்.
இருக்கு வேதத்தில் காணப்படும் தெய்வங்கள் பலர் இயற்கையின் உருவகங்களாகவே உள்ளனர். காற்று, மரம், ஆறு, மலை, வானம், கதிரவன் போன்றவை வழிப்படப்பட்டு உள்ளன. மேலும் "சோமபானம் என்னும் குடிவகையும் தெய்வமாக வழிப்படப்பட்டது. தெய்வங்களாக வழிப்படப்பட்டவற்றில் மருத், இந்திரன் போன்றோர் வீரர்களாகக் காட்டப்படுகின்றனர். சமயக் குருக்களாக அக்னி, பிரகசுபதி ஆகியோர் காட்டப்பட்டு உள்ளனர்" என்று மற்றொரு ஆராய்ச்சியாளரான எ.எ.மாக்டொனால்ஸ் (A.A.Macdonell) அவர்கள் அவரது 'India's Past' புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் வேதங்களில் பல பெண் தெய்வங்களைப் பற்றியும் கூறப்பட்டு உள்ளன. கூடுதலாக தமிழர்களிடம் இருந்தது போல் நினைவுத் தூண் வழிபாடும் வேதங்களில் குறிக்கப்பட்டு இருக்கின்றது. இன்னும் பலி வழிபாடும் சரி மர வழிபாடும் சரி வேதங்களில் இடம் பெற்று இருக்கின்றன.
மேலே நாம் கண்ட விடயங்களை வைத்துப் பார்க்கும் பொழுது இன்று நம்மிடையே இருக்கும் முழு முதற் கடவுளை வணங்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் சரி இயற்கை வழிபாடுகளை உடைய வேதங்களுக்கும் சரி தொடர்பு இருப்பது போன்றா தெரிகின்றது?
"அட...நில்லுங்கள். வேதங்களைப் பற்றிப் பேசினீர்கள். வேதாந்தங்களைப் பற்றி ஏன் கூறவில்லை. வேதங்களின் ஒரு பகுதி தான் அவை அல்லவா...அவை முழு முதற் கடவுளைப் பற்றிப் பேசுகின்றது அல்லவா" என்று எண்ணினீர்கள் என்றால் முதலில் ஒரு விடயம், வேதாந்தங்கள் என்பவை உண்மையில் உபநிடங்கள் என்றே வழங்கப்பட்டன. பின்னரே ஏதோ ஒரு காரணத்திற்காக பிராமணர்களால் அவை வேதங்களின் ஒரு பகுதியாக ஆக்கப் பட்டன. அதனைத் தவிர்த்து வேதங்களுக்கும் சரி வேதாதங்களுக்கும் சரி தொடர்பு இல்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். உதாரணத்துக்கு இதோ தேவநேயப் பாவாணரின் கூற்று,
"ஆரிய வேதம் பற்பல சிறுதெய்வ வழுத்துத் திரட்டேயாதலால் ஓரே, முழுமுதற் கடவுளை உணர்த்தும் உபநிடதத்திற்கும் அதற்கும் மண்ணிற்கும் விண்ணிற்கும் போன்று அடைக்கமுடியாத இடைவெளியுள்ளது” என்று கூறுகிறார் (தமிழ் இலக்கிய வரலாறு   - தமிழ் மண் பதிப்பகம்).
இவரின் கூற்றினை மெய்ப்பிப்பதை போன்றே பல விடயங்கள் வேதங்களுக்கும் சரி உபநிடங்களுக்கும் சரி வேறுபட்டுத்தான் இருக்கின்றன.
வேதங்கள் 'இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அவனுக்கு எதையாவது நாம் காணிக்கையாகத் தர வேண்டும். அதாவது பலி வேண்டும் என்கின்றது'
உபநிடங்களோ 'இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றிப் பேசி மனிதனை இறைவன் அறிவான்...அவன் பலி எதுவும் வேண்டுவது இல்லை' என்றுக் கூறி பலியினை மறுக்கின்றது.
வேதங்கள் ஆன்மாவினைப் பற்றிப் பேசவே இல்லை. உபநிடங்களோ ஆன்மாவினை அடிப்படையாக கொண்டு இருக்கின்றன.
வேதங்கள் இயற்கை வழிபாட்டினை உடையதாக இருக்கின்றது. உபநிடங்களோ பக்தி வழிபாட்டினை உடையனவாக இருக்கின்றன. நிற்க.
இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைப் பற்றி மேலும் காண வேண்டும் எனில் வேதங்களின் காலத்தையும் அவை யாரால் யாருக்காக எதுக்காக உருவாக்கப்பட்டன என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
பொதுவாக வேதங்களின் காலம் என்றாலே அது ஏதோ ஒரு மிகப் பழமையான காலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே பலரின் எண்ணத்திற்கும் வரும். காரணமில்லாமல் இல்லை, ஏனெனில் அப்படிப்பட்ட கருத்துக்கள் தாம் நம்மிடையே பரப்பப்பட்டு இருக்கின்றன. வேதங்கள் என்பது காலகாலமாக வாய் வழியாகச் சொல்லப்பட்டு வந்த ஒன்று. அவற்றின் காலம் இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாத வண்ணம் பழையக் காலம் என்றே போதிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் நீண்ட காலமாக வேதங்களைப் பொது மக்கள் படிக்க முடியாத வண்ணமே சூழ்நிலைகளும் இருந்தமையினால் அந்தக் கூற்றுக்களின் உண்மைத் தன்மையை மக்கள் ஆராய முடியாத நிலையே இருந்தது. ஆனால் இன்றோ அக்கருத்துக்களை மறுத்து அறிஞர்கள் சிலர் புதுக் கருத்துக்களை கூறுகின்றனர். அவர்கள் வேதங்களின் தொன்மையை மறுக்க ஒரு முக்கியமானக் காரணம் வேதங்களைப் பற்றிய சான்றுகள் எவையும் பழமையான காலத்தில் கிட்டப்பெறாமையே.
"வேதங்கள் மிகப் பழமையானவை என்றுக் கூறப்படினும், இக்கருத்தைக் கூறுவதற்கு அடிப்படையான தொல்பொருள் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ, நினைவுச் சின்னங்களோ, நாணயங்களோ கிடைக்கப் பெறவில்லை என்பதும், கிடைத்துள்ள எழுத்துப் படிவங்களும் அண்மைக் காலதிற்குரியவனவாக உள்ளன" என்ற Bloomfield பதிப்பகத்தாரின் 'The religion of the Vedas' புத்தகத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சரி அவர்களின் கருத்து இருக்கட்டும். இப்பொழுது நாம் வேறு சில விடயங்களைக் காண்போம்.
வேதங்களும் சரி...உபநிடங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே கிடைக்கப் பெறுகின்றன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் சமசுகிருதம் என்ற மொழியின் சான்றுகள் நமக்கு கி.பி இரண்டாம் நூற்றாண்டிலேயே தான் கிட்டப்பெற ஆரம்பிக்கின்றன என்று. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட மொழி என்றும் பொருள் தருகின்றது. எனவே வேதங்களின் காலமும் சமசுகிருதத்தின் காலமாகத் தான் இருக்க முடியும். எனவே வேதங்களின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டிற்கு பின்னரே என்று முன்னர் பதிவினில் கண்டு இருந்தோம். (பார்க்க: சமசுகிருதத்தின் காலம்)
பொதுவாக எவராலும் எளிதில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்து தான். அதுவும் வேதங்களைப் பொறுத்த வரைக்கும் இக்கருத்தினை எவரும் ஏற்றுக் கொள்வது முதலில் அரிது தான். காரணம் வேதங்கள் வாய் வழியாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன என்றே நம்மிடம் கூறப் பெறுகின்றது, "அவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவை எழுத்துருவில் கிடைக்கப் பெரும் காலத்தையே வேதங்களின் காலம் என்றுக் கூற முடியும், ஏனெனில் கி.மு 12 ஆம் நூற்றாண்டில் நடைப் பெற்ற சில சரித்திர நிகழ்ச்சிகளில் வேதக் கடவுளர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றனவே...அவ்வாறு இருக்கையில் அவற்றின் காலத்தை எவ்வாறு அவை எழுத்துரு பெற்றக் காலத்தினை வைத்துக் கூறுகின்றீர்கள்...அது சரியான ஒன்றாக அமையாதே" என்றக் கேள்வி எழுவது இயல்பே.
உண்மை தான். இக்கேள்விக்கு பதில் தேடும் முன் ஒரு கேள்வியினை இங்கே முன் வைக்க விரும்புகின்றேன். ஆயிரமாயிரம் காலமாக வாய் வழியாகவே கூறப்பட்டு வந்த ஒன்றை திடீர் என்று எழுத்து வடிவத்தில் கொண்டு வர வேண்டிய தேவை யாது வந்தது? நிற்க.
இப்பொழுது வேதத்தின் காலத்தினைப் பற்றிக் காணலாம். அதற்கு விவிலியத்தின் பழைய ஏற்பாட்டினைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது. "அட என்னங்க வேதம் அப்படின்னு சொல்லிட்டு விவிலியத்தினைப் பார்போம் என்கின்றீர்களே" என்கின்றீர்களா, சற்று பொறுங்கள் பொருள் இருக்கத் தான் செய்கின்றது.
பழைய ஏற்பாட்டின் காலம் என்ன? என்ற கேள்விக்கு
கி.பி ஒன்றாம் நூற்றாண்டு அல்லது இரண்டாம் நூற்றாண்டு என்ற விடைகளே கிட்டும். ஆனால் பழைய ஏற்பாட்டில் உலகம் தொடங்கிய செய்திகள் முதற்கொண்டு ஏனைய பல வரலாற்றுச் செய்திகள் இருக்கின்றன. அதனை எல்லாம் கணக்கில் கொண்டா பழைய ஏற்பாட்டின் காலத்தினைக் கணிக்க முடியும்? அவ்வாறு கணித்தால் உலகம் தோன்றிய பொழுதே பழைய ஏற்பாடும் தோன்றி இருக்க வேண்டும். மாறாக பல செய்திகள் ஒன்றாக தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வந்ததே பழைய ஏற்பாடு. இது புது ஏற்பாட்டுக்கும் பொருந்தும். மற்ற தொகுக்கப்பட்ட நூல்களுக்கும் பொருந்தும். எனவே அந்த நூல்கள் என்று தொகுக்கப்பட்டனவோ அக்காலம் தான் அந்த நூல்களின் காலமாக கருதப்பட வேண்டும். அது தான் சரியான ஒன்றாகவும் இருக்கும்.
இந்த விதியே வேதங்களுக்கும் பொருந்தும். காரணம் வேதங்கள் என்பவை தொகுக்கப்பட்ட நூல்களே ஆகும் என்கின்றார் ஆய்வாளர் பேராசிரியர் தெய்வநாயகம் அவர்கள். அவரின் கூற்றின் படி, கி.பி காலத்தில் தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு புது மொழியினில் அக்காலத்தில் இந்திய தேசத்தில் இருந்த மக்கள் பலருக்கும் ஒருக் கருத்தினைத் தெரிவிக்க தொகுக்கப்பட்டவை தான் வேதங்கள். தமிழர்களால் உருவாக்கப்பட்ட அந்தப் புதிய மொழி தான் சமசுகிருதம் என்றும் அவர் கூறுகின்றார். (வேதங்களைத் தொகுத்தவர் வியாசர் என்னும் திராவிடர் என்ற கருத்து நமக்கு ஏற்கனவே தெரியும்)
நம்புவதற்கு கடினமான விடயங்கள் தான். ஆனால் அவர் கூறும் கூற்றுகளை மெய்ப்பிக்கும் வண்ணம் சில சான்றுகளையும் அவர் தரும் பொழுது, அவற்றை முற்றிலும் நம்மால் புறக்கணிக்கவும் முடியவில்லை. அவ்வாறு அவர் தரும் சான்றுகள் என்ன...
காண்போம்...!!!
பின்குறிப்பு:ஆய்வாளர் தேவகலா அவர்களின் 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்ற ஆராய்ச்சிக் கட்டுரையில் இருந்து நான் அறிந்தவனவற்றை எனக்கு புரிந்த வகையிலேயே இங்கே பதிவிட்டு உள்ளேன்.
வில்லியம் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடும்
வேதங்கள் தொகுக்கப்பட்ட பாடல்கள் என்றும், அதனை தொகுத்தவர்கள் தமிழர்கள் என்றும், பல மொழிகள் பேசும் மக்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் சில கருத்துக்களை கூற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அனைத்து மொழியினையும் சேர்த்து ஒரு புது மொழியாய் சமசுகிருதத்தினை தமிழர்கள் உருவாக்கினர் என்றும் இன்று நாம் கூறினால் எவரும் இலகுவில் நம்பிவிட மாட்டார்கள். நம்பி விடவும் முடியாது. இந்நிலையில் அத்தகைய கருத்துக்களை ஒருவர் கூறுகின்றார் என்றால் அதற்கு சான்றுகள் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் நாம் விவிலியத்தினைப் பற்றி நாம் கண்டு விடுவது பயனுள்ளதாக இருக்கும்.
"அட என்னங்க எதை எடுத்தாலும் விவிலியம் விவிலியம் அப்படினே சொல்றீங்க, வேதத்தினைப் பற்றி அறிவதற்கு விவிலியத்தினைப் பற்றி எதுக்குங்க தெரிஞ்சிக்கணும்?" என்றக் கேள்வி இப்பொழுது சிலரின் மனதினில் நிச்சயமாக எழத்தான் செய்யும். ஆனால் இப்பொழுது நாம் விவிலியத்தினைப் பற்றி காண்பதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அக்காரணம் என்னவெனில் சில அறிஞர்கள் வேதங்களுக்கும் விவிலியத்துக்கும் இடையில் ஒற்றுமைகள் பல இருப்பதாக சொல்லுகின்றனர். உதாரணமாக,
"வேத சமயமும் எபிரேய சமயமும் ஒரே காலத்ததாக இருக்கலாம். இரண்டன் தோற்றமும் ஒன்றாக இருக்கின்றது. வேத சமயத்தின் வேர், பல தெய்வக் கோட்பாடுடையதாக இயற்கை வழிப்பாட்டினைக் கொண்டதாய் இருக்கின்றது. எபிரேய சமயமும் பல தெய்வக் கோட்பாட்டில் இருந்து வளர்ச்சி பெற்றதாய் இருக்கின்றது." என்றே ஆய்வாளர் எச்.தி. கிரிசுவோல்த் (H.D.Griswold) அவர்கள் அவரது 'The religion of the Rig veda' என்னும் நூலில் கூறுகின்றார்.
இந்நிலையில் நாம் வேதங்களுக்கும் சரி விவிலியத்திற்கும் சரி இடையில் என்ன ஒற்றுமைகள் என்றும் ஏன் ஒற்றுமைகள் என்றும் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு நாம் இப்பொழுது விவிலியத்தினைப் பற்றி சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.
விவிலியம் என்பது கிருத்துவர்களின் வேத நூல் என்றே அறிவோம். அது பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று இரு பிரிவுகளைக் கொண்டு இருக்கின்றது. பழைய ஏற்பாடு உலகின் தொடக்கத்தில் இருந்து ஆரம்பித்து பின்னர் யூதர்களின் வரலாற்றினை கூறும் ஒரு நூலாக மலர்கின்றது. புதிய ஏற்பாடோ கிருத்துவின் பிறப்பையும் அவரின் வாழ்கை மற்றும் கொள்கைகளை விளக்கும் ஒரு நூலாக இருக்கின்றது. நிற்க.
இப்பொழுது இவை இரண்டுமே கிருத்துவ சமயத்தின் நூல்கள் என்றால் இரண்டுமே ஒரே கருத்துக்களை உடையவைகளாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் மாறாக பழைய ஏற்பாட்டிற்கும் சரி புதிய ஏற்பாட்டிற்கும் சரி இடையில் பல கருத்து வேறுபாடுகள் நிறைந்து தான் இருக்கின்றன. உதாரணத்திற்கு,
பழைய ஏற்பாட்டினில்,
௧) பலி உண்டு. இறைவனிடம் நாம் ஏதாவது பெற வேண்டும் என்றால் அதற்கு பலி இன்றியமையாத தேவை என்ற எண்ணம் பழைய ஏற்பாட்டினில் காணப் படுகின்றது.
"அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்." - ஆதியாகமம் 8 (20:21)
௨) கண்ணுக்கு கண். பல்லுக்கு பல்.
"உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்." - உபாமகம் 19:21
௩) யூதர், புறசாதி என்னும் ஏற்றத் தாழ்வு
"புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்." - யாத்திராகமம் 12:17
௪) அந்நிய தெய்வம் உண்டு. அந்நிய தெய்வத்தின் பெயரைக் கூட சொல்லக் கூடாது. அந்நிய தெய்வத்தின் கோவிலுக்குள் செல்லக் கூடாது.
"அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." - சங்கீதம் 16:4
போன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன.
ஆனால் புதிய ஏற்பாட்டிலோ இக்கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களே காணப்படுகின்றன.
௧) பலி நிறைவேறி விட்டது. அதாவது இறைவன் மனிதனாகி வந்து பலியாகி விட்டார் என்றும் இறைவனுக்கு பலிகள் என்று எதுவுமே தேவைப்படுவது இல்லை என்றக் கருத்துகள் காணப்படுகின்றன.
"கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்." - எபேசியர் 5:2
௨) வலது கன்னத்தில் அறைந்தால் இடதுக் கன்னத்தினைக் காட்ட வேண்டும்.
"நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு" - மத்தேயு 5:39
௩) அனைவரும் கிருத்துவுக்குள் ஒரே உடலின் அங்கங்கள். சாதிகள் என்பன இல்லை.
"அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்." - எபேசியர் 3:3
௪) அந்நிய தெய்வம் என்பதற்கே இடம் இல்லை. ஒரே கடவுள். ஒரே மந்தை. ஒரே மேய்ப்பன்.
"விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்." - கொரிந்தியர் I 8:4
௫) அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.
"யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன்." - கொரிந்தியர் I 9 (20:21)
இதுவே புதிய ஏற்பாட்டினில் காணப்படும் கொள்கைகள். நிற்க.
மாபெரும் வித்தியாசங்கள் தான் அல்லவா... பழைய ஏற்பாடோ, பலி வேண்டும் என்கின்றது...அடித்தால் திருப்பி அடி என்கின்றது...அந்நிய தெய்வம் உண்டு என்றுக் கூறுகின்றது... ஆனால் புதிய ஏற்பாடோ இறைவனே வந்து மக்களுக்காக பலியாகி விட்டதினால் பலியினை தேவை இல்லை என்றுக் கூறுகின்றது... அடித்தால் அன்பினை திருப்பித் தான் என்கின்றது...ஒரே கடவுள் தான் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் என்றும் கூறுகின்றது. இப்பொழுது ஏன் இந்த மாற்றங்கள் என்றுப் பார்த்தோம் என்றால் பழைய ஏற்பாடு கிருத்துவர்களின் நூல் அல்ல என்ற ஒன்று நமக்கு விடையாய் கிடைக்கின்றது.
பழைய ஏற்பாடு என்பது எபிரேயச் சமயத்தின் நூல். அதாவது யூதர்களின் வழிப்பாட்டு முறைகளையும் வரலாற்றினையும் கூறக் கூடிய ஒரு நூலே அது அன்றி கிருத்துவின் கருத்துக்களைச் சுமந்துக் கொண்டு இருக்கும் ஒரு நூல் அல்ல. அதனால் தான் புதிய ஏற்பாட்டின் கருத்துக்களுக்கும் சரி பழைய ஏற்பாட்டின் கருத்துக்களுக்கும் சரி இவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன. பழைய ஏற்பாட்டின் கருத்துக்களை கிருத்துவே மறுத்தும் உள்ளது போன்ற கருத்துக்களும் புதிய ஏற்பாட்டினில் காணப்படுகின்றது.
"இயேசுவிடம் சிலர் கேள்வி கேட்கின்றார்கள். தள்ளுதற் சீட்டினை எழுதிக் கொடுத்து ஒரு கணவனானவன் அவனது மனைவியை தள்ளி வைக்கலாம்(விவாகரத்து) என்று மோசே சொல்லி இருக்கின்றாரே என்று அவர்கள் இயேசுவிடம் கேட்க அதற்கு அவர் "உங்களின் இதயம் கடினமாக இருப்பதினால் அவர் அவ்வாறு எழுதிக் கொடுத்து இருக்கின்றார்...ஆணும் பெண்ணும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஓர் உடலாக இருப்பார்கள். எனவே கடவுள் இணைத்ததனை மனிதன் பிரிக்க கூடாது" என்று அவர் கூறுகின்றார்." மாற்கு 10 (2:9)
உலகத்தினில் இயேசு வந்ததாகக் குறிப்பிடப்படும் காலத்திற்கு முன்பு வரை கடவுள் வழிபாட்டினை உடைய மக்கள் அனைவரும் கடவுளுக்கு பலி செலுத்துபவர்களாகவே இருந்தனர். அது தமிழர்களாகட்டும் அல்லது யூதர்களாகட்டும் பலி என்பது இறை வழிபாட்டில் இன்றியமையாத ஒன்றாகவே இருந்தது. அப்பலியினை எதிர்த்து தோன்றிய சமயங்கள் தாம் சமணமும் புத்தமும் (அவை இந்தியாவிலேயே தோன்றி இருக்கின்றன).
அதேப் போல் பல கடவுளர் வழிபாடுகளும் சரி கடவுளர் மக்களை போரில் வழிநடத்துவர் என்ற நம்பிக்கைகளும் சரி மக்களின் மத்தியில் அக்காலத்தில் இருந்து தான் இருக்கின்றன.
பழைய ஏற்பாட்டில் 'யாவே' யூதர்களுக்காக மற்ற தெய்வங்கள் மத்தியில் நின்று போர் புரிவது போல குறிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கடவுளர் இருப்பது போலவும் பழைய ஏற்பாட்டினில் குறிக்கப்பட்டு உள்ளது.
"கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்." - யாத்திராகமம் 14:14
இவை அனைத்தும் யூத சிந்தனைகள். யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தின் கருத்துக்கள். மாறாக கிருத்துவின் கருத்துக்கள் கிடையாது. அவ்வாறு இருக்க ஏன் இந்த எபிரேயச் சமயத்தின் கருத்துக்களும் வரலாறும் தொகுக்கப்பட்டன என்ற கேள்விகள் இயல்பாகவே எழும். அதற்கு விடையாக என்ன கிடைக்கின்றது என்று பார்த்தோம் என்றால் பழைய ஏற்பாடு யூதர்களுக்காகவே தொகுக்கப்பட்டது. எனவே தான் அது யூதர்களின் மொழியாகிய எபிரேய மொழியினில் எழுதப்பட்டது.
யூதர்கள் தங்களின் வரலாற்றையும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இறை மைந்தனுக்காக அவர்கள் காத்திருந்த விடயத்தினையும் அவர்கள் அறிந்துக் கொள்வதற்காகவே எழுதப்பட்டது தான் பழைய ஏற்பாடாகும். அவ்வளவே. அதில் கிருத்துவின் கருத்துக்கள் கிடையாது.
எனவே தான் பழைய ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் சரி இவ்வளவு வேறுபாடுகள். பழைய ஏற்பாட்டினில் இருப்பது யூதர்களின் கொள்கைகள்...புதிய ஏற்பாட்டில் இருப்பது கிருத்துவின் கொள்கைகள். கிருத்துவின் கொள்கைகள் உலகில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்ல வேண்டும் அவை யூதர்களுக்கு மட்டும் உரியவை அல்ல என்ற நோக்கிலே தான் அன்று உலகின் மத்தியப் பகுதியில் பெருமளவு பேசப்பட்டு வந்த கிரேக்க மொழியில் புதிய ஏற்பாட்டினை தொகுக்கின்றனர்.
பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது - எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது - எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.
புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக - கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது - கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.
சரி இருக்கட்டும்...இப்பொழுது விவிலியத்தினைப் பற்றியும் அதன் பிரிவுகளையும் பற்றி சற்று கண்டாயிற்று. இப்பொழுது நாம் வேதங்களுக்கும் சரி விவிலியத்திற்கும் சரி ஒற்றுமைகள் இருக்கின்றன என்று கூறி இருக்கின்றோம்... மேலும் எச்.தி. கிரிசுவோல்த் (H.D.Griswold) அவர்கள் குறிப்பாக வேதத்திற்கும் எபிரேயச் சமயத்திற்கும் சரி ஒற்றுமைகள் இருப்பதாக கூறி இருக்கின்றார். இந்நிலையில் அந்த ஒற்றுமைகள் யாதென்று நாம் காண வேண்டி இருக்கின்றது...
காண்போம்...!!!
பி.கு:
இக்கருத்துக்கள் நான் சில ஆய்வாளர்களின் ஆய்வுகளில் இருந்து நான் புரிந்துக் கொண்டவையே ஆகும்

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-13


இயேசு கிருத்து முழு சிலுவையைச் சுமந்தாரா?
இயேசு கிருத்து சிலுவையில் அறையப்பட்டார். இதில் மாற்றுக் கருத்து நமக்கு ஏதும் அல்ல. ஆனால் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றியக் கருத்துக்களைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதுவும் குறிப்பாக ஒரு விடயத்தினை நாம் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கின்றது.
"இயேசு கிருத்து தான் சிலுவையில் அறையப்படும் முன் அந்த முழு சிலுவையையுமே சுமந்து சென்றாரா?" என்பதே அந்த விடயம். இதனை பற்றி நாம் விரிவாக பார்க்க வேண்டும் என்றால் அன்றைய காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்கள் மற்றும் சிலுவையினைப் பற்றியும் அறிந்துக் கொள்வது இன்றியமையாத ஒன்றாக அமைவதால் ஒரு எட்டு சென்று அவற்றைப் பார்த்துக் கொண்டு வந்து விடலாம்.
நாம் முந்தைய பதிவுகளில் கண்டவாறு கி.பி நான்காம் நூற்றாண்டு வரை சிலுவை என்பது ஒரு கொலைக்கருவியே ஆகும். அக்காலத்திற்கு பின்னர் தான் அது ரோமப் பேரரசன் கோன்சுடைன் என்பவரால் அரசியல் காரணங்களுக்காக சிறப்பிக்கப்பட்டு கிருத்துவர்களின் சின்னமாக மாறுகின்றது. அதற்கு முன்னர் வரை சிலுவை என்பது எதிரிகளை துன்புறுத்திக் கொலை செய்யும் ஒரு கொடிய கொலைக்கருவியாகவே ரோமர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கிருத்துவுக்கு முன்னரும் சரி பின்னரும் சரி பலர் சிலுவையில் அறையப்பட்டு இருக்கின்றனர். ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிலுவையில் அறையப்பட்டு ஒருவன் இறப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒரு விடயமாகத் தான் இருந்து இருக்கின்றது. பொதுமக்கள் அஞ்ச வேண்டும் என்ற ஒரு காரணத்திற்க்காக ஊருக்கு வெளியே அனைவரும் காணும் படி ஒரு மனிதனை சிலுவையில் அறைந்து அவனைக் கொல்வது என்பது ரோமர்கள் கையாண்ட ஒரு யுக்தி ஆகும். அவ்வாறு எதிரிகளை, குற்றவாளிகளை சிலுவையில் அறைவதற்காகவே ஊருக்கு வெளியே ஒரு இடத்தினை ரோமர்கள் எப்பொழுதும் தயாராக வைத்து இருந்தனர் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து.நிற்க.
இப்பொழுது நாம் சிலுவையினைப் பற்றி சற்றுக் கண்டு விடலாம்.
சிலுவைகள் என்பன தொடக்கக் காலம் முதல் அந்த வடிவிலேயே தான் இருந்தனவா என்றால் ஒரு தெளிவான விடை நமக்கு கிடைக்க மாட்டேன்கின்றது. சில குறிப்புகள் சிலுவை என்பது ஒரே மரக்கட்டை தான் என்கின்றன (அதாவது செங்குத்தாக நிற்கும் பகுதி மட்டுமே தான் சிலுவையாக பயன்படுத்தப்பட்டது என்றும் அதன் மேல் இன்றுக் காணப்படுவது போன்ற படுக்கைவசமான பகுதி அன்று இருக்கவில்லை என்கின்றன), வேறு சில குறிப்புகளோ சிலுவை என்பது இருக் கட்டைகளால் ஆனது என்றும் ஆனால் அதன் வடிவம் கூட்டல் குறிக்கு நிகராக இருந்தது என்றும் கூறுகின்றன. இருக்கட்டும். இந்த வேறுபாடுகள் இப்பொழுது நமக்கு முக்கியமில்லை. நாம் நம்முடைய கேள்விக்கு விடையினைக் காண இப்பொழுது வழக்கில் இருக்கும் சிலுவையின் வடிவினை கொண்டே தொடருவோம்.
இன்று பெரும்பாலான வடிவங்கள் சிலுவையினை இரு பகுதிகள் கொண்ட வடிவமாகவே காட்டுகின்றன.(படம் இடதுபுறம்)
ஒரு மரப்பகுதி செங்குத்தாக இருக்கின்றது. மற்றொன்று அதன் மேல் படுக்கைவசமாக இருக்கின்றது. இதுவே தான் சிலுவையின் அமைப்பாக இருக்கின்றது. ரோமர்களின் வழக்கப்படி அந்த செங்குத்தான பகுதி மண்ணில் ஊன்றப்பட்டு இருக்கும். பின்னர் படுக்கைவசமாக இருக்கும் பகுதியில் குற்றவாளியின் கைகள் இரண்டும் இணைக்கப்பட்டு (ஆணிகள் மூலமாகவோ அல்லது கயிறின் மூலமாகவோ), அந்தப் பகுதி செங்குத்தான பகுதியில் இணைக்கப்படும். இதுவே ரோமர்கள் ஒருவனை சிலுவையில் அறையும் முறை. மேலும் ஒருவன் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர், அவன் சிலுவையில் அறையப்படும் இடம் வரை அவனே அவனது சிலுவையை தூக்கிக் கொண்டு வருவதும் ரோமர்களின் பழக்கம் ஆகும். நிற்க.
இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது இந்த அமைப்பின் எடையைத் தான். ஆய்வாளர்களின் கணிப்புப்படி ஒரு முழு சிலுவையின் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாகவும், படுக்கைவசமாக இருக்கும் பகுதியை மட்டும் தனியாக கணக்கிட்டால் 35 இருந்து 60 கிலோ வரை இருந்து இருக்க வேண்டும் என்றும் நாம் அறிய முடிகின்றது. இந்நிலையில் ஒரு மனிதன் முழு சிலுவையையும் அதாவது 130 கிலோ எடை உடைய அமைப்பினை சுமந்துக் கொண்டு செல்வது நடைமுறையில் சாத்தியமானதொன்றாக இருக்குமா என்பதே இப்பொழுது நம் முன் எழும் ஒரு கேள்வி. இக்கேள்விக்குரிய விடையினைத் தேடினோம் என்றால் நமக்கு விடையாய் கிட்டுவது "சிலுவையைச் சுமப்பது என்பது முழு சிலுவையையும் குறிக்காது. மாறாக சிலுவை அமைப்பில் ஒரு பகுதியான அந்த படுக்கைவசப் பகுதியை மட்டுமே சுமந்து செல்வது ஆகும்" என்ற விடையே ஆகும். இந்த விடையை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சிலுவை என்பது ஒரு பொதுவான கொலைக்கருவி என்று நாம் கண்டுவிட்டோம். மக்களை சிலுவையில் அறைவதும் அன்று வெகு இயல்பாக ரோமர்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு செயல் தான். இந்நிலையில் மக்களை சிலுவையில் அறைவதற்கு என்றே ஒரு இடத்தினை ரோமர்கள் தனியாக வைத்து இருந்தனர் என்பதும் அங்கேத் தான் சிலுவையில் அறைய மக்கள் அனைவரும் கொண்டு செல்லப்பட்டனர் என்பதுமே பொதுவான கருத்துக்களாக நிலவுகின்றன. எனவே மக்களை சிலுவையில் அறையும் இடத்தில அவர்களை சிலுவையில் அறைவதற்கான கருவிகள் தயாரான நிலையிலேயே இருந்து இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. அதாவது சிலுவையின் ஒரு பகுதியான செங்குத்தான மரப்பகுதிகள் சிலுவைகள் அறையப்படும் இடத்திலேயே எப்பொழுதும் வீற்று இருந்து இருக்க வேண்டும் என்றும் அதில் அறையப்பட இருப்பவர்களை எடை குறைவான படுக்கைவசப் மரப்பகுதியினை மட்டுமே சுமந்து கொண்டு அவ்விடத்திற்கு வரவழைத்தனர் ரோமர்கள் என்றுமே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுவே ரோமர்களின் பழக்கமாக இருப்பின், இயேசுவும் அந்த படுக்கைவசமான மரப்பகுதியினையே சுமந்துக் கொண்டு சென்று இருக்க வேண்டும். மேலும் விவிலியக் குறிப்புகளின் படி இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன் சவுக்கினால் அடித்தும் துன்புறுத்தி இருக்கின்றனர்.
"அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." - மத்தேயு (27-26)
இந்நிலையில் அவரால் முழு சிலுவையையும் சுமந்து சென்று இருக்க இயலுமா என்பதும் கேள்விக்குறியே. மேலும் இந்த வாதத்தை வலுப்படுதுமாறு விவிலியத்தில் மற்றொரு குறிப்பும் உள்ளது. அதாவது இயேசுவின் சிலுவையை சுமக்குமாறு சீமோன் என்ற மனிதனை காவலர்கள் பணித்தவாறு குறிப்பும் விவிலியத்தில் இருக்கின்றது.
"போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்." - மத்தேயு (27-32)
இதன் வாயிலாக இயேசு சிலுவையை சுமக்க முடியாத உடல் நிலையில் தான் இருந்தார் என்று நாம் எண்ண முடிகின்றது. இந்நிலையில் அவர் 130 கிலோ எடையுடைய முழு சிலுவையையும் சுமந்து சென்று இருக்க முடியும் என்பது சாத்தியமில்லாத ஒரு கூற்றாகத் தான் இருக்கின்றது.
இதன் அடிப்படையில் இயேசு மக்களின் மத்தியில் சிலுவையின் ஒரு பகுதியான படுக்கைவசமான கட்டையை சுமந்து சென்றார் என்றும் அதனை இடையில் சீமோன் என்ற மனிதன் ஏற்றுக் கொண்டான் என்றும் அவர்கள் அவ்வாறு கபாலஸ்தலம் என்ற இடத்தை அடைந்ததும் அங்கே ஏற்கனவே நிறுவப்பட்டு இருந்த சிலுவையின் செங்குத்தான பகுதியில் இயேசு அறையப்பட்டார் என்றும் நாம் அறிய முடிகின்றது.
எனவே இயேசு முழு சிலுவையை சுமந்து கொண்டு செல்லவில்லை மாறாக அவரின் தோளில் படுக்கைவசமான ஒரு மரப்பகுதியையே சுமந்து சென்று இருக்கின்றார் என்று நாம் அறிய முடிகின்றது. நிற்க.
இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைக் கண்டதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கின்றது.
மேலே உள்ள பதிவின் படி 'இறைவனின் மைந்தர்' மக்களுக்காக படுக்கைவசமான ஒரு மரப்பகுதியை சுமந்துக் கொண்டு மலையின் மீது ஏறிச் சென்று இருக்கின்றார். சரி தானே.
இங்கே ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் உலகின் மற்றொரு பகுதியில் இன்று 'இறைவனின் மைந்தனை' வேண்டிக் கொண்டு தோளில் படுக்கைவசமான மரப்பகுதியை ஏந்திக் கொண்டு மலை ஏறும் வழிப்பாட்டு பழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.
என்ன கண்டுபிடிச்சிடிங்களா!!!
அட ரொம்ப யோசிக்காதீங்கங்க...
அந்த உலகின் மற்றொரு பகுதி - தமிழகம்தேன்
இறைவனின் மைந்தன் - நம்ம முருகப் பெருமான்தேன்
அந்த வழிப்பாட்டு முறை - நம்ம தமிழர்களின் காவடி ஆட்டம்தேன்.
ஏற்கனவே பிள்ளையாரப் பத்தி பார்த்தாச்சி. இப்போ அவருடைய தம்பி...நம்ம தமிழ் கடவுள பத்தி பார்க்கலாமா...!!!
வெற்றி வேல்... வீர வேல்....!!!
முருகனும் இயேசுவும் -
ஆயிரம் கடவுள்களின் பெயர்கள் நம் நாட்டிலே வழங்கப்படினும் தமிழில் 'முருகன்' என்ற பெயருக்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கத் தான் செய்கின்றது. எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் முருகன் இருப்பான். தமிழர்களுக்கேன்றே சிறப்பாய் இருக்கும் ஒருவன் அவன். அழகன் அவன்... தமிழ் கடவுளும் அவன். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். முருகனும் தமிழும் என்றுமே முடிவில்லாதவர்கள்...அவர்களைப் பற்றிப் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். இப்பொழுது நம்முடைய பயணத்தில் அவர்களைத் தான் காண வேண்டி இருக்கின்றது. காரணம் சில ஆராய்ச்சியாளர்கள் இயேசு தான் தம்பி தமிழகத்தில் முருகனாக விளங்கிக் கொண்டு இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். எவராலும் எளிதில் நம்ப முடியாத கூற்று தான் அது. இருந்தும் சற்று நிதானமாய் சிந்தித்துப் பார்க்கையில் அவர்களின் அந்தக் கூற்றினை ஒதுக்கி விட இயலவில்லை.
"அட என்னங்க... அங்கே இயேசு சிலுவையின் ஒரு பகுதியினை மக்களுக்காக சுமந்து சென்றார் சரி. பிரச்சனை இல்லை. ஆனால் அந்த செயலை எண்ணித் தான் நம் நாட்டில் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது எப்படிங்க சரியாகும். அப்படினா உலகத்துல எந்த இடத்துல மரக்கட்டையை சுமந்து சென்றாலும் அது இயேசுவை எண்ணியே சுமந்து செல்லுகின்றார்கள் அப்படின்னு சொல்ல முடியுமா" என்ற எண்ணம் பலரின் மனதிலும் நிச்சயம் வந்து இருக்கும்.
நியாயமான கேள்வி தான். இக்கேள்விக்கு பதிலினைக் காண நாம் முதலில் காவடியினைக் பற்றியும் அதன் வரலாற்றினைப் பற்றியும் பார்க்க வேண்டி இருக்கின்றது.
காவடி என்பது முருகனுக்கே உரிய வழிப்பாட்டு முறைகளில் ஒன்று என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக காவடி எடுக்கின்றார்கள்? காவடி ஆட்டத்தின் வரலாறு என்னவென்று பார்த்தோம் என்றால் ஒரு கதை நம் புராணங்களில் இருந்து நமக்கு விடையாய் கிடைக்கின்றது.
அதாவது அகத்திய முனிவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் பொழுது அங்கிருந்து இரு மலைகளை அவருடனேயே எடுத்து வர எண்ணுகின்றார். அதற்காக அவருடைய சீடனாகிய இடும்பன் என்ற அசுரனைப் பணிக்க, அவனும் அந்த மலைகளை சுமந்துக் கொண்டு தெற்கே வருகின்றான். இதே நேரத்தில் தான் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் இடையே பழப் பிரச்சனை உருவாக முருகனும் கோபத்தோடு தெற்கே வருகின்றார். இந்நிலையில் இடும்பன் தான் ஓய்வு எடுக்க எண்ணி மலைகளை கீழே இறக்கி வைத்து விட்டு சற்றே கண் அயருகின்றான். ஆனால் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் மலைகளை தூக்க அவன் முயற்சிக்கையில் ஆச்சர்யமே அவனுக்கு காத்து இருக்கின்றது. இப்பொழுது அவனால் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை. ஏன் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை என்று அவன் சிந்திக்கும் பொழுது மலையின் மேல் ஒரு சிறுவன் வீற்று இருப்பதை காணுகின்றான். அந்தச் சிறுவனால் தான் அந்த மலைகளை தன்னால் தூக்க இயலவில்லை என்று எண்ணிய இடும்பன் அந்த சிறுவனை மலையில் இருந்து இறங்குமாறு சொல்ல சிறுவன் மறுக்கின்றான். இடும்பன் ஆத்திரப்படுகின்றான். சிறுவனைத் தாக்கவும் செய்கின்றான். ஆனால் அப்பொழுது நிலவிய சண்டையில் சிறுவனே வெல்லுகின்றான். எவ்வாறு தான் ஒரு சிறுவனிடம் தோற்றோம் என்று இடும்பன் சிந்திக்கும் பொழுது தான் அந்த சிறுவன் அவனது விருப்ப தெய்வமான முருகன் என்று அவன் அறிகின்றான்...அறிந்து முருகனிடம் இரு வரங்களைக் கோருகின்றான். ஒன்று...இடும்பனைப் போல் யார் காவடி தூக்கிக் கொண்டு வந்தாலும் முருகன் அவர்களை வாழ்த்த வேண்டும். இரண்டு முருகனுடன் போரிட்ட அந்த மலைக்கு இடும்பன் காவலாளியாக என்றென்றும் திகழ வேண்டும். முருகனும் அந்த வரங்களை அருள்கின்றார். அன்று ஆரம்பித்தது தான் மக்கள் முருகனுக்காக காவடி எடுக்கும் வழக்கம். இது தான் நம் புராணங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் கதை. நிற்க.
இப்பொழுது நாம் ஆய்வாளர்களின் கூற்றுகளைப் பார்ப்போம். அதற்கு நாம் காவடி என்ற சொல்லைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
'காவடி' என்பது ஒருத் தனிச் சொல்லே அல்ல. மாறாக இரு சொற்களின் சேர்க்கைத் தான் காவடி என்ற ஒரு சொல்லாக மாறி இருக்கின்றது. அதாவது,
'காவு+தடி' என்ற சொற்களே மருவி 'காவடி' என்று மாறி இருக்கின்றன.
காவடி = காவு+தடி
காவு என்றால் பலி அல்லது மரணம் என்றுப் பொருள்படும். இந்நிலையில் காவுத்தடி என்பது பலிகொடுக்கப்படும் தடி அல்லது உயிரினைப் பறிக்கும் தடி என்றே பொருள் தருகின்றது. ஆனால் நாம் நம்முடைய புராணக் கதையினைக் கண்டோம் என்றால் காவடி என்ற சொல்லின் அர்த்தத்திற்கு அக்கதை பொருந்துகின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது. இந்நிலையில் முருகனுக்கு காவடி எடுப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.
அதாவது 'இறைவனின் பிள்ளையை' வேண்டி மக்கள் உயிரினைப் பறிக்கும் தடியினை ஏந்திக் கொண்டு மலை ஏறுகின்றனர். இச்செயலுக்கு பொருத்தமான வேறு காரணங்கள் கிடைக்குமா என்று பார்த்தோம் என்றால் இயேசு உயிர் பறிக்கும் கட்டையினை சுமந்து கொண்டு மக்களுக்காக மலையினை ஏறி இருக்கின்றார் என்ற செய்தி நமக்கு கிடைக்கின்றது. இவ்விரண்டு விடயங்களும் ஒன்றினைப் போலவே இருக்கின்றன. ம்ம்ம்ம்...இந்நிலையில் ஏன் இவ்விரண்டு விடயங்களுக்கும் தொடர்பு இருக்க கூடாது என்ற எண்ணத்திலும் நாம் பார்க்க வேண்டி தான் இருக்கின்றது.
மக்களுக்காக இறைவனின் மகன் உயிர்பறிக்கும் கட்டையினை சுமந்துக் கொண்டு சென்று இருக்கின்றார். அவரின் அந்த தியாகத்தை நினைவுக் கூர மக்கள் அவர் சுமந்தவாறே ஒரு கட்டையினை அவரை நினைத்து சுமந்து கொண்டு இருக்கின்றனர். ம்ம்ம்... பொருந்தத் தான் செய்கின்றது. மேலும் நாம் முன்னர் கண்ட சில பதிவுகளின் படி,
௧) இன்று நம்மிடையே இருக்கும் முருகன் வழிப்பாட்டுக்கும் சங்க இலக்கியங்களில் காணப்படும் வழிப்பாட்டு முறைக்கும் மிகுந்த வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கு முருகனுக்கு பலி இடும் பழக்கம் கிடையவே கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் முருகனுக்கு பலி இருந்து இருக்கின்றது.
௨) மேலும் கடவுளின் பிள்ளை என்ற ஒரு கோட்பாடே சங்க இலக்கியத்திலும் சரி அதற்கு முந்தைய இலக்கியங்களிலும் சரி காணப்படவில்லை. முருகன் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பட்டு உள்ளான்.
௩) மேலும் நாம் மேலே கண்ட புராணக் கதைகளை பற்றிய குறிப்புகளும் சரி காவடி ஆட்டமும் சரி கி.மு வில் மக்களிடையே இருந்ததிற்கான சான்றுகள் இதுவரை கிட்டவில்லை. இக்கதைகள் எல்லாம் பிற்காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன.
என்றே அறியப் பெறுகின்றோம்.
அதாவது கிருத்து காலத்திற்கு பின்னரே நம்மிடையே காவடி ஆட்டத்தினைப் பற்றியக் குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் முருகனுக்குரிய வழிப்பாட்டு முறைகளும் மாறி இருக்கின்றன. அதாவது குறிஞ்சி நிலத்திற்கு மட்டும் தலைவனாக சங்க இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்ட முருகன் இறைவனின் மகனாக அனைவருக்கும் பொதுக் கடவுளாக பிற்காலத்திலேயே அறியப்படுகின்றான். இந்த மாற்றமும் ஏன் என்று சிந்திக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது.
எனவே இந்நிலையில் இயேசுவே தமிழகத்தில் முருகனாக சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தினை நாம் முற்றிலுமாக மறுக்க போதுமான சான்றுகள் நம்மிடையே கிட்டப் பெறவில்லை. அதுவும் நம்முடைய பதிவுகளின் படி விவிலியத்தில் சிவலிங்க வழிப்பாடு காணப்படுவதாலும் சரி சிவனின் பிள்ளை தான் இயேசு என்றுக் கூறும் நிலையினாலும் சரி இயேசுவே முருகன் என்றக் கருத்து வலுப்பெறத் தான் செய்கின்றது.
ஆனால் வெறும் காவடியினை வைத்துக் கொண்டு இயேசு தான் முருகன் என்று நாம் கூற இயலாது. அது தகுந்த ஒன்றாகவும் இருக்காது. மேலும் முருகன் தமிழ் கடவுளாக தமிழர்களின் மத்தியில் மட்டுமே சிறப்பாக விளங்குகின்றார்.
இந்நிலையில் இயேசு தான் முருகன் என்று ஆய்வாளர்கள் கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா?. முருகன் ஏன் தமிழ் கடவுளாக அறியப்படுகின்றான்? என்றக் கேள்விகளுக்கு நாம் விடையினை தேடத் தான் வேண்டி இருக்கின்றது.
தேடுவோம்...!!!
முருகன் இருக்க பயமேன்!!!
இயற்கை நெறிக் காலமும் அற நெறிக் காலமும்...!!!
என்னடா இது முருகனைப் பற்றி பார்ப்போம்னு நெனச்சா ஏதோ இயற்கை நெறிக் காலம், அற நெறிக் காலம் அப்படின்னு ஆரம்பமே திசை மாறுகின்றதே என்று எண்ணுவீர்கள் என்றே எண்ணுகின்றேன். ஆனால் இந்த திசை மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கின்றது. காரணம் என்னவென்றால் மேலே கூறியுள்ள அந்த கால மாற்றங்களில் தான் நம்முடைய வழிபாட்டு முறைகள் ஒரு மாபெரும் திசை மாற்றத்தினைக் கண்டு இருக்கின்றன. இப்பொழுது அந்த காலங்களைப் பற்றி சற்று கண்டு விடுவது தான் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றே எண்ணுகின்றேன்.
இயற்கை நெறிக் காலம் - பெயரில் இருந்தே இது எத்தகையக் காலம் என்று கணித்து விடலாம். மனிதர்கள் இயற்கையினை வழிப்பட்ட காலம் தான் இயற்கை நெறிக் காலம். கடவுளர் அனைவரும் இயற்கையினைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். அனைத்துக் காலங்களைப் போலவே இக்காலத்தினையும் நூல்கள் வாயிலாகவே நாம் அறிந்துக் கொள்கின்றோம். இயற்கை நெறிக் கால நூல்கள் என்றால் நமது சங்க காலத்து நூல்களான பத்துப்பாட்டையும், எட்டுத்தொகையையும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். இக்காலத்தில் மக்கள் வழிப்பட்ட கடவுளருக்கு பலி இருந்தது.
அறநெறிக் காலம் - இயற்கை நெறிக் காலத்தினைத் தொடர்ந்து தோன்றியக் காலத்தினைத் தான் அறநெறிக் காலம் என்பர். இயற்கை வழிப்பாட்டு முறை போய் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுகள் மற்றும் மற்ற அற நெறிக் கருத்துக்களும் சரி நூல்களும் சரி நம் மண்ணில் எழுந்தக் காலத்தினைத் தான் அறநெறிக் காலம் என்பர். அற நெறிக்காலத்தில் இறைவனுக்கு பலி இடும் பழக்கம் முற்றுப் பெற்றது மாறாக பல புதியக் கருத்துக்கள் தோன்றப்பெற்றன. முழு முதற் கடவுள் என்ற கொள்கை மேல் எழும்ப ஆரம்பித்தக் காலம். இக்காலத்தின் சிறப்புமிக்க ஒரு நூல் தான் நமது திருக்குறள். நிற்க
தமிழ் இலக்கியங்களை ஆராயும் அறிஞர்களாகட்டும் அல்லது சமயங்களை ஆராயும் அறிஞர்களாகட்டும் அனைவரும் மேலே கூறியுள்ள கால மாற்றத்தினை அறிந்து தான் உள்ளனர். நூல்களையும் சரி பழக்க வழக்கங்களையும் சரி காணும் பொழுது சமுகத்தில் திடீர் என்று எழுந்துள்ள இந்த மாற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தான் செய்கின்றது. கவனத்தை ஈர்ப்பதுடன் பல கேள்விகளையும் இந்த மாற்றம் எழுப்புகின்றது... ஏன் இந்த மாற்றம்? எதனால் இந்த மாற்றம்? என்றவாறு பல கேள்விகள் எழும்பினாலும் ஒரு விடயத்தில் மற்றும் ஆய்வாளர்கள் பலர் ஒன்றுப்படுகின்றனர். கிருத்துவுக்கு பிற்பட்ட காலம் என்றக் காலத்தில் தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. அக்காலத்தில் அதுவரை பலியிடப்பட்டு வந்த கடவுளருக்கு பலி தேவை இல்லாத ஒன்றாக மாறி இருக்கின்றது.
"தத்துவ உணர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில் முருகன் முதலிய கடவுளர்க்கு உயிர்பலி செய்தல் நின்று விட்டது" என்றே தமிழறிஞர் திரு கா.சு.பிள்ளை அவர்கள் அவர்களது 'தமிழர் சமயம்' என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
இங்கே நாம் விரிவாகக் காணவேண்டியது 'தத்துவ உணர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில்' என்று கூறப்படும் காலத்தினைப் பற்றி தான். ஆனால் எவ்வளவு முக்கியமானதொன்றாக அக்காலம் இருந்தாலும் அதனைப் பற்றி நாம் பின்னரே காண போகின்றோம். காரணம் முருகனை நாம் ஏற்கனவே நீண்ட காலம் காக்க வைத்தாயிற்று எனவே இனியும் அவரைக் காக்க வைப்பது சரியாக இருக்காது. எனவே இப்பொழுது மீண்டும் முருகரைக் காணச் செல்லலாம்...
முருகன் - சிவ மைந்தன். தீய வடிவே உருவான சூரபதுமனை அழிக்க சிவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்டவன். சூரனுடன் நடந்தப் போரில் சூரனை வென்று நன்மையை நிலை நிறுத்துகின்றான். இதுவே முருகனின் படைப்பினைப் பற்றியக் கதை. அதாவது முருகனின் படைப்பு சூரனை அழித்து மக்களைக் காக்கவே அமைந்து உள்ளது. நிற்க.
இப்பொழுது இந்தக் கதையினைப் பற்றி நாம் விரிவாகக் காணும் முன் நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் மேலே உள்ள கதைக்கு சான்றுகள் நமக்கு கிருத்துவுக்கு பிற்பட்ட காலத்திலேயே தான் கிடைக்கின்றன. அதாவது அறநெறிக் காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன. இயற்கை நெறி காலத்தில் காணப்படும் முருகன் பலி உடையவனாகவும் குறிஞ்சி நிலத் தலைவனாகவுமே அறியப்படுகின்றான்...மாறாக சிவ மைந்தனாக அவன் அக்காலத்தே அறியப்பட்டமைக்கு சான்றுகள் இல்லை. சரி இப்பொழுது மீண்டும் முருகனின் கதைக்கு வருவோம்.
முருகன் படைக்கப்பட்டமைக்கு முழு முதற் காரணம் தீமையின் வடிவே ஆன சூரபதுமனை வெல்லவே. அந்த காரணத்திற்காக அவனை சிவன் அவரது ஆற்றலின் வாயிலாக படைக்கின்றார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது எவ்வாறு பிள்ளையாரை சக்தியே உருவாக்குகின்றாரோ அதேப் போல் முருகனை சிவனே உருவாக்குகின்றார். பின்னர் முருகன் வளர்ந்தவுடன் சக்தியிடம் இருந்து வேலினைப் பெற்றுக் கொண்டு சூரனுடன் போராடுகின்றார். இறுதியில் சூரனை வெல்கின்றார். நன்மை வெல்கின்றது. தீமை தோற்கின்றது. இதுவே கதை. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால் முருகன் சூரனை வெல்கின்றார் ஆனால் அழிக்கவில்லை. இதனைப் பற்றி நாம் மேலும் பார்ப்பதற்கு திரு. கா.சு. பிள்ளை அவர்களின் கூற்றையும் கண்டு விடுவது நல்லது என்றே நினைக்கின்றேன்.
'மேலும் சூரபதுமனை முருகன் ஆட்கொண்டு அவனின் ஒரு பகுதியாகிய மயிலை வாகனமாகமும் மற்றொரு பகுதியாகிய கோழியைக் கொடியாகவும் கொண்டனர் என்பதே புராண வரலாறுமாகும். அவனால் வந்த தீமையை ஒழித்தார் என்பதைப் பற்றியே முருகனுக்கு அத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. அத்திருவிழாவில் தெய்வத் தியானமும் பட்டினி நோன்பும் பொறியடக்கமும் நிகழ்வனவே அன்றி வயிறு நிரம்ப உண்டலும் கூத்தாடளும் இல்லை என்றறிக' என்று அவரது 'தமிழர் சமயம்' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.
மேலே உள்ள கூற்றுகள் மூலம் முருகன் சூரனின் மூலமாக வந்தத் தீமையை அளித்து அவனை அடக்கி அருளினார் என்றே நமக்கு புலனாகின்றது. இப்பொழுது இயேசுவின் உருவகமே முருகன் என்றுக் கூறுபவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்றுப் பார்ப்போம்.
அவர்களின் கூற்றுப் படி இயேசு மக்களுக்காக தீமையே வடிவான சாத்தானை வென்ற நிகழ்வையே சூரபதுமனை முருகன் வெல்லும் கதையின் மூலமாக அக்காலத்தில் அறிஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என்றுக் கூறுகின்றனர்.
விவிலியக் கதையின் படி இயேசு பரிசுத்த ஆவியின் அருளினைப் பெற்றுக் கொண்டு தீமையே வடிவான சாத்தானை உயிர்தெழுவதன் மூலம் வென்று அடக்கி ஆள்கின்றார். சாத்தானும் தோற்கின்றான்...ஆனால் மடிய வில்லை.
சூர் - தீமை. சூரபதுமன் - தீமையே வடிவானவன். தீமையே வடிவான சாத்தானை சூரப்பதுமனாகவும் அவனை இயேசு மக்களுக்காக வென்றதை முருகன் சூரபதுமனை வென்ற நிகழ்ச்சியாகவும் அன்றைய தமிழர்கள் மக்கள் நடந்ததை எளிதாக அறிந்துக் கொள்ள பயன்படுமாறு உருவகப்படுத்தி உள்ளனர் என்றே அவர்கள் கூறுகின்றனர். அதாவது,
சாத்தான் - சூரபதுமன்
முருகன் - இயேசு
சாத்தானை தோற்கடிக்கும் ஆற்றலை இயேசு தூய ஆவியிடம் இருந்தே பெறுகின்றார்.
முருகன் சூரனை வெல்ல வேலினை சக்தியிடம் இருந்து பெறுகின்றார்.
இறுதியில் சாத்தான் தோற்கின்றான் ஆனால் மடியவில்லை.
சூரனும் தோற்கின்றான் ஆனால் மடியவில்லை.
மேலும் சூரனும் முருகனும் மோதிக் கொள்ளும் பகுதியில் சூரன் பல்வேறு வடிவங்கள் எடுத்து முருகனுடன் போரிடுவது போன்று வருகின்றது. அச் சண்டையின் இறுதியில் ஒரு மாமரமாக சூரன் மாறுகின்றான். அப்பொழுது முருகன் தனது வேலினைக் கொண்டு அம்மரத்தினைப் பிளக்க சூரன் தோற்பது போன்று கதை வருகின்றது. அதாவது தீமை இறுதியில் ஒரு மர வடிவில் வருகின்றது அதனை வென்று இறைவனின் மகன் தீமையினை வெல்லுகின்றார், இது இயேசு சிலுவையினை (மர கட்டையினை) இறுதியாக சுமந்து சென்று மரணமுற்று பின்னர் மீண்டும் உயிர்த்து எழுந்து சாத்தானை வென்றதை குறிப்பதாகவே இருக்கின்றது என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க.
இரண்டு கதைகளிலும் ஒற்றுமைகள் சில இருந்தாலும் இவற்றை வைத்து மட்டுமே இயேசு தான் முருகன் என்றால் நம்மால் நம்பிவிட முடியாது.
ஆனால் ஏன் இந்த ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும் கி.முவில் காணப்படாத இந்தக் கதை பிற்காலத்தில் காணப்படுவதன் அர்த்தம் என்னவென்றும் நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது. மேலும் நாம் முன்னர் கண்டவாறு முருகன் - சிவ மைந்தன் என்ற தகப்பன்-மைந்தன் உறவு முறை ஏன் கி.மு வில் காணப்படாது கி.பி யில் காணப்படுகின்றது என்றும், இயற்கை நெறி காலம் எதனால் அறநெறிக் காலமாக மாறிற்று என்றும் நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது.
மேலும் முருகனுக்கு இரு மனைவியர் இருப்பது போன்று புராணக்கதைகளும் நம்மிடையே இருக்கின்றன. எனவே முருகனை இயேசு என்றுக் கூறினால் முருகனுக்கு ஏன் மனைவிகள் இருப்பது போன்று கதைகள் அமைய வேண்டும் என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. ஆனால் இவற்றைப் பற்றி நாம் காண்பதற்கு முன்னர் வேறு சில பதிவுகளை கண்டு விடுதல் ஏற்றதாக இருக்கும் என்று தோன்றுவதனால் மற்றச் சில பதிவுகளைக் கண்ட பின் அவற்றைப் பற்றி நாம் காணலாம். இப்பொழுது ஏன் முருகனை தமிழ் கடவுள் என்று அழைக்கின்றனர் என்று நான் அறிந்தவனவற்றைக் காணலாம்
பி.கு:
நண்பர்களே இவை அனைத்தும் சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகளில் இருந்து நான் இது வரை அறிந்துக் கொண்டவையே. இன்னும் பல விடயங்களை அறியத் தேடிக் கொண்டும் அறிந்துக் கொண்டும் இருக்கின்றேன். இவற்றுக்கு தங்களின் கேள்விகளும் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றன. அதற்கு நன்றி. அதைப் போன்றே நான் ஏதாவது கூற்றினை தவறாக அறிந்தும் இருக்கலாம், அதனை தாங்கள் சுட்டிக் காட்டினீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். ஏன் என்றால் உண்மைகள் வெளி வர வேண்டும் என்பதே எனது எண்ணம். நம்முடைய சமய உண்மைகள் தான் இன்று நம்முடைய உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மாபெரும் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு. அப்பேற்பட்ட ஒரு செல்வம் இன்று மறைந்துக் கிடக்கின்றது. அதுவும் நம்முடைய மண்ணில். அவ்வாறு இருக்க மண்ணின் மைந்தர்களான நாம் நம் மண்ணில் விளைந்த செல்வத்தை மீட்டு எடுத்து உலக நலனுக்காக பயன்படுத்த முயற்சி செய்வது நம்முடைய கடமை அல்லவா...

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-12


பண்டைய கால நாகரீகங்களுள் வழிபாடுகள்
அனைத்து சமயங்களும் ஒன்றோடொன்று தொடர்புக் கொண்டவையாகவே இருக்கின்றன என்றும் அவை அனைத்தையும் இணைத்துக் கொண்டு சில விடயங்கள் பொதுவாக இருக்கத் தான் செய்கின்றன என்றும் நாம் கூறினோம் என்றால் அவற்றுக்கு தக்க சான்றுகளையும் நாம் காண்பிக்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறு ஒற்றுமைகளை நாம் காண்பிக்கத் தவறினோம் என்றால் நமது கூற்றுகள் வெறும் பெயரளவுக் கூற்றுக்களாகவே சென்று விடும். எனவே இப்பொழுது நமது பயணத்தில் மேலும் சில ஒற்றுமைகளை நாம் காண வேண்டி இருக்கின்றது.
ம்ம்ம்ம்... இம்முறை நாம் எங்கிருந்து பயணத்தை தொடங்கலாம்...? சரி... சிந்து சமவெளியில் இருந்தே தொடங்கலாம்... சென்ற முறை நாம் சிந்து சமவெளியை பற்றி கண்டப் பொழுது அந்த நாகரீகம் தமிழர்களின் நாகரீகம் என்றும் அங்கிருந்தே சென்ற மக்கள் மேசொபோடமியா மற்றும் சுமேரிய நாகரீகத்தினை உருவாக்கினர் என்றக் கருத்துக்களை மையமாக வைத்தே கண்டதால் அங்கே மக்கள் கொண்டு இருந்த வழிப்பாட்டு முறையைப் பற்றி நாம் காண முடியாது சென்று விட்டது. கவலை இல்லை...அவற்றை இப்பொழுது காண்போம்.
சிந்து சமவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் மூலமாக பல விடயங்கள் நம்முடைய பார்வைக்கு வந்து உள்ளன. முதலில் அந்த இடங்களில் அதிக அளவில் நினைவுக்கற்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. நாம் முன்னரே கண்டு இருக்கின்றோம் கல்லினை நட்டி வைத்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம் என்று. இதனையே ஆராய்ச்சியாளர் இரா. ஜெசிந்தர் எபினேசர் என்பவரும் அவரது 'நினைவுக்கல் வழிப்பாடும் விவிலியமும் என்ற நூலில் பின் வருமாறு கூறுகின்றார்
"அக்கற்கள் ஆனவை பொது நன்மையின் வடிவாக விளங்கும் இறைவனையும் பொது நன்மையின் பொருட்டு தன்னையே தியாகம் செய்த மனிதனையும் நினைத்துக் கல் கட்டி வழிபடுவது நினைவுக்கல் வழிப்பாடாகும்".
மேலும் இந்த நினைவுக் கல் வழிபாடே இசுலாமிய சமயத்திலும் காணப்படுகின்றது என்றே 'இசுரவேளர் சமயம்' என்ற தனது நூலில் ஞான ராபின்சன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"பழங்கால அரபுக் கோவில்களில் அப்புனிதக் கல், தொழுகைக்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்பட்டது. இக்கல் ஒரு குறிப்பிட்ட கடவுளைக் குறிப்பதாக இராமல் அனைத்துக் கடவுளையும் குறிப்பிட்டு நின்றது. கற்களின் மேல் இரத்தம் பூசப்பட்டது."
இந்த நினைவுக் கல் வழிபாட்டு முறை தான் சமணம் மற்றும் புத்த சமயங்களில் 'தூபி' என்று பெயர்பெற்றும் தமிழ் சங்க இலக்கியங்களில் 'கந்து' என்று பெயர் பெற்றும் விளங்கிக் கொண்டு இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அட என்னய்யா இது நினைவுக் கல் அப்படின்னு கேட்குறீங்களா... அட அது வேற ஒண்ணும் இல்லைங்க இன்று நாம் சிவலிங்கம் என்ற பெயரில் வழிபடுகின்றோமே அதேக் கல் வழிப்பாட்டு முறை தான் அந்தக் காலத்தில் நினைவுக் கல் வழிபாடு என்ற பெயரில் இருந்து இருக்கின்றது.
மக்கள் அனைவருக்கும் பொதுவான இறைவனை கல்லினை நட்டி வைத்து வணங்கி வந்தனர். இந்தப் பழக்கம் அனைத்து நாகரீகங்களிலும் பொதுவாக இருந்தமையை நாம் முந்தையப் பதிவுகளில் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம். ஆனால் அக்காலத்தில் சிவலிங்கம் என்றப் பெயர் தோன்றி இருக்காத காரணத்தினால் நாம் அக்கல் வழிப்பாட்டு முறையினை நினைவுக் கல் வழிப்பாட்டு முறை என்றே நாம் இந்தப் பதிவில் அழைக்கின்றோம்.
சரி... நினைவுக் கல் வழிபாடு சிந்து சமவெளி மக்களிடம் இருந்தது... சுமேரிய மக்களிடமும் இருந்தது... அதனைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்திலும் காணப்படுகின்றது என்பதனையும் நாம் முந்தையப் பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். இப்பொழுது இன்னொரு ஒற்றுமைகளையும் நாம் கண்டு விடுவோம்...
சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட படிமங்களில் பல பெண் தெய்வங்களின் வடிவங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல உருவங்கள் கொம்பினை உடைய உருவங்களாகவே காணப்படுகின்றன. கொம்புகள் அந்த உருவங்களின் தெய்வத்தன்மையை உருவகப்படுத்துவதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அத்தகைய கொம்பினை உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் சரி விவிலியத்திலும் சரி ஒன்று போலவே நமக்கு கிட்டப்பெருகின்றன. இதனை
"சிந்துவெளியில் கொம்புடன் காணப்படும் உருவங்களை ஒத்து, சுமேரியாவிலும் பாபிலோனியாவிலும் கொம்புடைய உருவங்கள் காணப்படுகின்றன. அங்கு இக் கொம்பு அரசனையோ, குருவையோ, கடவுளையோ குறிப்பதாக கொள்ளப்பட்டு இருக்கின்றது." என்று சான் மார்ஷல் அவர்கள் அவரது ;மோகஞ்சடாரோவும் சிந்து சமவெளி நாகரீகமும் என்ற புத்தகத்தில் கூறி உள்ளது மூலமும் நாம் அறிந்துக் கொள்ளலாம்.
மேலும் இன்றும் கூட இந்தியப் பழங்குடி மக்களுள் தலைவராக உள்ளவர்கள் அவர்களது தலைமைக்கு அடையாளமாக எருமைக் கொம்பைத் தலையில் அணிந்து இருப்பதும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகவே இருக்கின்றது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க
இன்றும் நம்முடைய சமுகத்தில் ஒரு சொற்தொடர் நிலவிக் கொண்டு இருக்கின்றது மேலே உள்ள வாக்கியத்தினை மெய்ப்பிப்பது போல.
"நீ என்ன பெரிய கொம்பனா டே...? "உனக்கு மட்டும் என்னவே ரெண்டு கொம்பா மொளச்சி இருக்கு" என்ற வாக்கியங்கள் தான் அவை. உற்றுப் பார்த்தோம் என்றால் அவற்றின் அர்த்தம் 'நீ என்ன பெரியவனா' என்றே வருகின்றது. அதாவது கொம்பினை வைத்து இருக்கின்றவன் பெரியவன் என்ற மறைமுகப் பொருளினையே அவை தருகின்றன. இந்தச் சொற்தொடர் என்றில் இருந்து நம்மிடையே இருக்கின்றன... தெரியவில்லை...இருந்தும் இவையும் சிந்தித்துப் பார்க்கத் தக்கவையே.
சரி... சிந்துசமவெளியில் கிடைக்கும் கொம்புகள் உடைய உருவங்கள் சுமேரிய நாகரீகத்திலும் பாபிலோனிய நாகரீகத்திலும் கிடைக்கின்றன...ஆனால் விவிலியத்திலும் இவற்றைப் பற்றியக் குறிப்புகள் உள்ளன என்றுக் கூறினீர்களே அது என்ன என்றுக் கேட்கின்றீர்களா... சரிதான் அதையும் கண்டு விடலாம். முந்தையப் பதிவுகளில் நாம் கண்டது போலவே மீண்டும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் உள்ள சில பக்கங்களை நாம் இதற்காக திருப்ப வேண்டி இருக்கின்றது.
"யோசேப்பின் அலங்காரம் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப் போலவும் அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகள் போலவும் இருக்கும். அவைகளாலே சனங்களை ஏகமாய்த் தேசத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்" - உபாமகம் (33:17)
"சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்;" - மீகா (4:13)
"அவர் வெஞ்சினம் கொண்டு
இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்;" - புலம்பல் (2:3)
மேலே உள்ள இவ்வரிகள் மூலமாக கொம்புகள் ஆற்றலையும் அரசாட்சியையும் குறிப்பதாக இசுரவேலரின் சமயத்திலும் விளங்கியதை நாம் அறியலாம்.
சரி...பழைய நாகரீகங்களுள் நினைவுக் கல் வழிபாடும் ஒன்றுப் போலவே இருக்கின்றது... கொம்பு வைத்த உருவங்களும் சரி அவற்றிற்குரிய அர்த்தங்களும் சரி ஏறக்குறைய ஒன்றுப் போலவே இருக்கின்றது...இவற்றைப் போலவே இன்னும் பல பழக்கங்கள் அந்த பழைய நாகரீகங்களுக்குள்ளே பொதுவானதாக விளங்குகின்றன.
மர வழிபாடு, விலங்குகள் வழிபாடு , இயற்கை தெய்வங்கள் வழிபாடு, மலைகளில் இறைவன் இருப்பதாக நம்பிக்கை... மேலும் இன்ன பிற பழக்க வழக்கங்களும் இந்த நாகரீகங்களுள் ஏறக்குறைய ஒன்றைப் போலவே இருக்கின்றன. அட மறந்து விட்டேன்... உலகத் தோற்றக் கதையும் வெள்ளத்தால் உலகம் அழிந்தக் கதையும் கூட இவற்றில் ஒரே போலவே இருக்கின்றன.
இந்த ஒற்றுமைகள் தற்செயலானவையா அல்லது ஒரு இடத்தில தோன்றிய மக்கள் பல இடங்களுக்கு நகர்ந்தமையால் அவர்களுடனேயே இந்தப் பழக்கங்களும் நகர்ந்தமையால் காணப்படும் ஒற்றுமைகளா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது. அது அவர்கள் கடமை... அதனை அவர்களிடமே விட்டுவிடுவோம்.
நாம் இப்பொழுது அறிந்துக் கொள்ள வேண்டியது பண்டைய காலத்தில் மக்களிடையே பல பழக்க வழக்கங்கள் ஒன்றுப் போலவே இருந்து இருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சிகளை இன்றும் நமது சமுகத்தில் நாம் கண்டுக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதே!!!
பி.கு:
இந்தத் தகவல்கள் நான் தெ. தேவகலா என்பவரது 'தமிழ் பக்தி இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (விவிலிய ஒளியில்)' என்னும் ஆராய்ச்சி நூலின் இருந்தே அறிந்து கொண்டவைகளாகும்.
பண்டைய தமிழர்களின் திணைக் கடவுளர்
நண்பர் ஒருவர் அருமையான கேள்வி ஒன்றினை கேட்டு இருந்தார்.
தமிழர்களின் திணைப் பிரிவுகளில் முருகனின் பெயர் காணப்படுகின்றது…திருமால் என்ற பெயர் காணப்படுகின்றது…ஆனால் சிவன் என்ற பெயரோ அல்லது விநாயகர் என்ற பெயரோ காணப்படவில்லையே அது ஏன் என்று வினவி இருந்தார். சமயங்களைப் பற்றிய நமது பயணத்தில் இந்தக் கேள்வி ஒரு மிக முக்கியமானதொருக் கேள்வி. சரி இப்பொழுது இந்தக் கேள்விக்கான விடையினைக் காண்போம். அதற்கு தமிழர்களின் திணைப் பிரிவுகளைப் பற்றி நாம் காண வேண்டி இருக்கின்றது.
தமிழர்கள் நிலத்தினை ஐந்தாகப் பிரித்து இருந்தனர் என்பதனை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அவைகளைத் தான் ஐந்திணைகள் என்று நாம் வழங்குகின்றோம். அதாவது,
குறிஞ்சி – மலையும் மலை சார்ந்த இடமும்
முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் – கடலும் கடல் சார்ந்த இடமும்
பாலை – சுரமும் சுரம் சார்ந்த இடமும்
என்பனையே அந்த ஐந்துப் பிரிவுகள். தமிழ் பாட நூல்களுள் இவற்றைப் பற்றி நாம் நிச்சயம் பார்த்து இருப்போம். மேலும் இந்தப் பிரிவுகளுக்கு என்றே உரித்தான தனி கருப் பொருள்களையும் தமிழர்கள் வரையறை செய்து வைத்து இருந்தனர். அதாவது ஒவ்வொரு நிலத்திலும் வாழும் மக்கள், அங்கு காணப்படும் மிருகங்கள் மற்றும் பறவைகள், நீர் நிலைகள், வணங்கப்படும் கடவுளர், இசைக்கும் கருவிகள், பண், மரங்கள்… மற்றும் இன்ன பிற விடயங்களை ஒவ்வொரு நிலத்திற்கும், இவை இவை இந்த நிலத்திற்குரிய கருப்பொருள்கள் என்று தமிழர்கள் பிரித்து வைத்து இருந்தனர். நிற்க
இப்பொழுது நாம் காண வேண்டியது அந்தந்த நிலங்களில் வழிப்படப்பட்ட தெய்வங்களைப் பற்றியே. அதற்கு நமக்கு தொல்காப்பியரின் பாடல் உதவுகின்றது.
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறையான் சொல்லவும் படுமே”
இந்தப் பாடலில் தொல்காப்பியர் நிலங்களின் பிரிவையும் அவற்றிற்குரிய கடவுளரையும் குறிப்பிட்டு இருக்கின்றார்.
முல்லை நிலக் கடவுளாக ‘மாயோன்’ அறியப்படுகின்றான்.
குறிஞ்சி நிலக் கடவுளாக சேயோன் அறியப்படுகின்றான்.
மருத நிலக் கடவுளாக வேந்தன் அறியப்படுகின்றான்.
நெய்தல் நிலக் கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.
பாலையைப் பற்றி தொல்காப்பியர் கூறாதது அந்தப் பிரிவானது அவர் காலத்திற்கு பின்னாலேயே தோன்றி இருக்கக் வேண்டும் என்று நாம் கருத வாய்ப்பளிக்கின்றது.
பாலை நிலக் கடவுளாக கொற்றவை அறியப்படுகின்றார். இவையே அந்த ஐந்திணைகளில் வழங்கப்படும் கடவுளரின் பெயர்கள் ஆகும்.
இங்கே நாம் இப்பொழுது காண வேண்டிய விடயம் என்னவென்றால் இங்கே குறிக்கப்பட்டு உள்ள கடவுளர்கள் அனைவரும் அந்தந்த நிலத்திற்குரிய கடவுளர்களே அன்றி முழுமுதற் கடவுளர் அல்லர். அதாவது,
மாயோன் முல்லை நிலத்துக்கான கடவுளாகவே அறியப்படுகின்றான்.
அதேப்போல் சேயோன் குறிஞ்சி நிலத்துக்குரிய கடவுளாகவே அறியப்படுகின்றான். மற்ற நிலங்களில் இவர்கள் வணங்கப்படவில்லை. ஒவ்வொரு திணைக்குரிய மக்களும் அவர்களுக்கென தனிக் கடவுளரை கொண்டு இருந்தனர். அதாவது இன்று நாம் முழுமுதற் கடவுளாக சிவனையோ அல்லது பெருமாளையோ வணங்குகின்றோம். இவர்களும் சரி இவர்கள் பிள்ளைகளாக கூறப்படும் முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றியவர்களும் குறிப்பிட்ட நிலத்துக்குரிய கடவுளராக இல்லாது அனைவருக்கும் உரியக் கடவுளராக விளங்குகின்றனர். ஆனால் இது போல் தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டுள்ள கடவுளர் காணப்படவில்லை.
“அட என்னங்க அப்படினா அந்தக் காலத்துல அனைத்து திணை மக்களும் தனித்தனி கடவுளரை வழிப்பட்டனர் என்றால் பொதுக் கடவுள் என்று எவருமே அப்பொழுது இல்லையா?” என்ற ஒரு கேள்வி இப்பொழுது எழலாம். இந்தக் கேள்விக்கு பதில் ‘இல்லை…மக்கள் பொதுவானக் கடவுள் வழிப்பாட்டையும் கொண்டு தான் இருந்தனர். நினைவுக் கல் நாட்டி வழிபடும் பழக்கம் மக்கள் அனைவர் உள்ளும் ஒன்றைப் போலவே இருக்கத் தான் செய்தது. அந்த நினைவுக் கல்லுக்கு அக்காலத்தில் வழங்கப்பட்ட பெயர் கந்து’. (அந்தக் கந்து என்ற பெயர் தான் பிற்காலத்தில் சிவலிங்கம் என்ற பெயர் பெற்று இன்று நம்மிடையே தொடர்ந்து இருந்துக் கொண்டு வருகின்றது.) நிற்க.
சரி இதுவரை நாம் கண்ட விடயங்களை சற்று உன்னிப்பாக கவனித்தோம் என்றால் நம்மிடையே இன்று வழங்கிக் கொண்டு இருக்கும் கடவுளர்களின் பெயர்களான ‘பெருமாள், சிவன், பிள்ளையார், முருகன், சக்தி, பிரமன்’ போன்ற பெயர்கள் அக்காலத்திலே இல்லாது இருப்பதை நம்மால் காண முடியும். மேலும் அந்தக் காலத்தில் வணங்கப்பட்ட கடவுளருக்கும் இன்று நாம் வணங்கிக் கொண்டு இருக்கும் கடவுளருக்கும் பொருள் அளவிலும் வித்தியாசங்கள் இருப்பதையும் நாம் காணலாம்.
இன்று சிவனும் பெருமாளும் முழுமுதற் கடவுளாக அறியப்படுகின்றனர். ஆனால் அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட கடவுளைப் பற்றியக் குறிப்புகள் இல்லை.
முருகன், பிள்ளையார், பிரமன், ஐயப்பன் போன்றோர் முழுமுதற் கடவுளரின் பிள்ளைகளாக அறியப்படுகின்றனர் இன்று. ஆனால் அக்காலத்தில் அப்பேர்ப்பட்ட உறவுமுறைகள் இருந்ததாக சான்றுகள் இல்லை.
நில்லுங்கள் நில்லுங்கள்…அந்தக் காலக் கடவுளருக்கும் இன்றைய கடவுளருக்கும் தொடர்புகள் காணப்படவில்லை என்று கூறுகின்றீர்களே…ஆனால் மாயோன் தான் ‘திருமால்’ என்றும் சேயோன் தான் முருகன் என்றும் ஆய்வுகள் கூறுகின்றனவே அதற்கு என்ன கூறுகின்றீர் என்று சில நண்பர்கள் கேட்கலாம். இக்கேள்விக்கு பதிலினை காண நாம் அந்தக் கடவுளரைக் காண வேண்டி இருக்கின்றது.
மாயோன் என்ற பெயர் – கருமை நிறத்தினை உடையவன் என்ற பொருளினைத் தருவதாகவே அமைந்து உள்ளது. (மால் – கருமை). முல்லை நிலத்தின் கருப்பொருளான கார்காலத்தினில் தோன்றும் கரிய மேகங்களைப் போன்றவன் என்ற அர்த்தத்தினாலேயே அவன் அப்பெயரினைப் பெற்று இருக்கின்றான். இதைத் தவிர்த்து இன்று நாம் காணும் திருமாலுக்கும் முல்லை நிலக்கடவுளான மாயோனுக்கும் தொடர்புகள் இருப்பதாக சான்றுகள் இதுவரை இல்லை.
அதேப் போல் சேயோன் என்ற பெயர் - சிவந்தவன் என்ற பெயரினையே தருகின்றது. இவனை பொதுவாக மக்கள் முருகன் என்றே கருதுகின்றனர். ஆனால் சேயோன் என்றப் பெயர் சிவனையும் குறிக்கும் ஒன்றாக விளங்குகின்றது. (இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் சங்க இலக்கியங்களிலும் சரி சில சிற்பங்களிலும் சரி முருகனும் சிவனும் ஒரே மாதிரியாக சித்தரிக்கப்பட்டு இருக்கின்றனர். இது ஆராயத் தக்க ஒரு விடயமாகும்). ஆனால் மாயோனைப் போலவே சேயோனுக்கும் இன்றைய முருகன்/சிவன் ஆகியோருக்கும் ஒற்றுமைகள் சிறிதளவே இருக்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு – இன்றைய சிவனுக்கும் முருகனுக்கும் பலிகள் கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் ‘கந்து’ வழிப்பாட்டுக்கும் சரி முருகன் வழிப்பாட்டுக்கும் சரி பலிகள் இருந்து இருக்கின்றன. அவர்களை மக்கள் பலியிட்டே வணங்கியும் இருக்கின்றனர்.
இந்தப் பலி வழிப்பாட்டு முறை எவ்வாறு பலி இல்லாத வழிப்பாட்டு முறையாக மாறியது என்றும் எவ்வாறு இந்தத் திணைக் கடவுளர் வழிப்பாட்டு முறை போய் இன்றைய வழிப்பாட்டு முறை நம்மிடையே வந்தது என்பதும் எண்ணிப்பார்க்க/ஆராயத் தக்கது. நிற்க.
எனவே இன்று நாம் காணும் திருமாலும், முருகனும் தொல்காப்பியக் காலத்தில் மக்களின் மத்தியில் வணங்கப்பட்ட கடவுளர் அல்ல என்பதும், அக்காலத்தில் இருந்த முறைகளில் இருந்து இன்று நாம் கொண்டு இருக்கும் வழிப்பாட்டு முறைகள் மாற்றங்கள் பல கொண்டு இருக்கின்றன என்பதும் நாம் மேலே கண்ட விடயங்கள் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
சரிங்க… மாயோன், சேயோன் போன்றவர்களைப் பற்றி கூறி விட்டீர்கள். மருத நிலக் கடவுளைப் பற்றியும் நெய்தல் நிலக் கடவுளைப் பற்றியும் கூற வில்லையே என்கின்றீர்களா…
மருத நிலத்தின் கடவுள் வேந்தன் எனப்படுகின்றான். வேந்தன் என்றால் அரசன்/தலைவன் என்றுப் பொருள். எனவே மக்கள் அந்நிலத்தில் தங்களது தலைவனையே வழிப்பட்டனர் என்றும் நாம் கருத முடிகின்றது(இதனைக் குறித்து ஆராய்ச்சிகள் தேவை). தமிழில் இந்திரன் என்றால் தலைவன் என்றே பொருள் தரும்.
தேவேந்திரன் – தேவர்களின் தலைவன்.
கஜேந்திரன் – யானைகளின் தலைவன்.
நரேந்திரன் – மனிதர்களின் தலைவன்.
எனவே தலைவன் என்றப் பொருளிலே வேந்தன் என்றப் பெயர் மருத நிலக் கடவுளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.
அதைப்போலவே கடல் சூழ்ந்த நெய்தல் நிலத்து கடவுளாக வருணன் அறியப்படுகின்றான்.
இப்பொழுது வேறு சில கேள்விகள் தோன்றலாம் ‘இந்திரன் மற்றும் வருணன் ஆகியோர் வேதங்களில் வருகின்றனரே…அவர்கள் ஆரியக் கடவுளர் என்றும் கூறுகின்றனரே. ஆனால் தமிழ் திணைக் கடவுளரிலும் அப்பெயர்கள் வருகின்றதே. இவ்விரண்டு கடவுளரும் ஒருவரே ஆவரா அல்லது இருவரும் வேறானவரா” என்றக் கேள்வி நிச்சயம் தோன்றும். இதற்கு விடையினை நாம் வரும் பதிவுகளில் காண முயற்சிக்கலாம்.
இப்போதைக்கு இதுவே பண்டைய காலங்களில் தமிழ் மக்கள் தம்மிடையே கொண்டு இருந்த வழிப்பாட்டு முறைகள் ஆகும்...

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-11


சில கேள்விகள் சில பதில்கள்...!!!
பல பதிவுகள் கண்டாயிற்று. அவற்றினோடு பல கேள்விகளும் தான். சில கேள்விகளுக்கு பதில்கள் தந்து இருந்தாலும் பல கேள்விகளுக்கு 'பின்னர் காண்போம்' என்ற ஒரே பதிலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் சரி ஒரு சில கேள்விகளுக்கு பதில்களை தனியாகவே கூறி விடலாம் என்ற எண்ணம் தோன்றவே இந்தப் பதிவு.
கேள்வி : தோமா தமிழ்நாட்டில் கிறித்துவம் பேசினால், பிள்ளையார் – கிறிஸ்து ஒன்று என்றால்பிள்ளையார் தமிழ்நாட்டில்தானே தோன்றியிருக்கவேண்டும்? அதுவும் தோமையார் வந்து கொஞ்ச காலத்தில்? ஆனால், பிள்ளையார் தமிழ்நாட்டிற்கு வந்ததே 10-ம் நூற்றாண்டு. இதற்கு என்ன விளக்கம் சொல்கிறீர்கள்?
பதில்: தோமா தமிழகத்திற்கு மட்டுமே வரவில்லை. அவர் 20 வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றி கருத்துக்களை பரப்பி இருக்கின்றார். சரி இப்பொழுது பிள்ளையார் வடக்கில் இருந்து தெற்கே வந்ததன் காரணத்தினைக் காண்போம். அதற்கு முன் கீழே உள்ள படத்தைக் காண்போம்.
காண்பதற்கு பிள்ளையாரினைப் போன்றே தோற்றம் கொண்டு இருந்தாலும் இவர் பிள்ளையார் இல்லை. இவர் பார்சுவநாதர். சமண சமயத்தின் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரர். காலம் ஏறக்குறைய கி.மு ஏழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது. இவர் மகாவீரருக்கு முந்தியவர். இவருக்கு சமண சமயத்தில் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்றில் இவர் ஒரு பிறவியில் யானையாக பிறந்ததாகவும் அப்பிறவியில் இவரின் பகைவன் பாம்பாகப் பிறந்து இவரின் தலையில் கொட்டி இவர் அமைதியாக மரணமுற்றதாகவும் கூறப்படுகின்றது. அக்கதையின் படியே இவருக்கு யானைத் தலையும் தலைக்கு மேல் பாம்பு நிற்பது போலவும் வடிவம் அமைந்து இருக்கின்றது. மேலும் யானையை வழிப்பட்ட சில குழுக்களும் வட இந்தியாவில் இருந்து இருக்கின்றனர். நிற்க.
இந்நிலையில் தான் பிற்காலத்தில் கிருத்துவின் கருத்துக்களை சுமந்துக் கொண்டு தோமா இந்தியா வருகின்றார். புது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுவும் அவர்களின் பழக்க முறைக்கு ஏற்றார் போலவே கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் தான் இறைவன் மக்களுக்காக தன் உயிரினைத் துறந்தான் என்ற செய்தியை பரப்ப மக்களிடம் அன்று இருந்த யானை வழிபாடு முறையையும் பர்சுவனாதரின் இந்தக் கோலத்தையும் மக்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்றே நாம் கருத முடிகின்றது. இதன் அடிப்படையில் தான் பிள்ளையார் வடக்கே இருந்து தெற்கே வருகின்றார்.
****************************************************************************
கேள்வி: சைவ வைணவம் மட்டுமே இந்து சமயங்களாக பண்டைய தமிழகத்தில் இல்லை அல்லவா. அப்படி இருக்க அவற்றினை நாம் சைவ வைணவ சமயங்களாக கருத முடியுமா?
பதில்: உண்மை தான் நண்பரே. இந்து சமயங்கள் எனப்படுபவை மொத்தம் ஆறு சமயங்கள் ஆகும். ஆனால் அவற்றில் நான்கு சமயங்களுக்கு சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கின்றார். இரண்டிற்கு விஷ்ணு இருக்கின்றார்.
சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
சைவம் - சிவன் - அம்மை - மகன்
சாக்தம் - சிவன் - சக்தி - மகன்
கௌமாரம் - சிவன் - சக்தி - குமரன்
காணாபத்தியம் - சிவன் - சக்தி - கணபதி
விஷ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
வைணவம் - சிவன் - விஷ்ணு - பிரமன்
சௌரம் - சிவன் - விஷ்ணு - ஐயப்பன்.
அனைத்து சமயங்களும் சிவன் அல்லது விஷ்ணுவையே சார்ந்து இருப்பதால் இவை அனைத்தையுமே நாம் சைவ வைணவ சமயங்களாக கருதலாம்.
****************************************************************************
கேள்வி: இந்து சமயத்தின் தத்துவம் சித்து - அசித்து - ஈசுவரன் அல்லது பதி - பசு - பாசம் தானே. இவை கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடுக்கு வேறானதாக அல்லவா இருக்கின்றது. அவ்வாறு இருக்க கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடு எவ்வாறு சைவ வைணவ சமயத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்றீர்கள்.
பதில்: நண்பரே... பதி-பசு-பாசம் என்பதோ அல்லது சித் - அசித் - ஈசுவரன் என்ற தத்துவங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். ஆனால் மூ ஒருமைக் கோட்பாடோ இறைவனின் நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். இதனை விளக்க பின் வரும் பாடல்களைக் காண்போம்.
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ  செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)
மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.  - திருமங்கை ஆழ்வார் (3-1-10).
அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே.  - சிவஞானசித்தியார்(1:38)
மேலே கண்ட வரிகள் மூலம் இறைவன் ஒருவன் தான் ஆனால் மூன்று நிலையில் விளங்குகின்றான் என்ற அவர்களின் கருத்து விளங்குகின்றது. இக்கருத்தும் கிருத்துவத்தின் கருத்தும் ஒன்று போல் இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் இந்த ஒற்றுமை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.
சரி...கேள்விகள் இப்போதைக்கு போதும். மற்ற கேள்விகளுக்கு பதிலினை நம்முடைய பயணத்தில் 'பின்னர் காண முயற்சிப்போம்...'
தமிழும் சமசுகிருதமும் -
'சமசுகிருதம் முதலில் தோன்றியதா...அல்லது தமிழ் முதலில் தோன்றியதா' - நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ அல்லது ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்துக் கொள்ள முடியாது. சரி...இப்பொழுது பதிவுக்கு செல்வோம்.
இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்றுக் கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் ஜோன்சும் மாக்ஸ் முல்லேருமே அவர். அவர்கள் தான் சமசுகிருதத்தினை ஆராயும் பொழுது அதனில் கிரேக்கச் சொற்கள், லட்டின் சொற்கள் போன்ற பல ஐரோப்பியச் சொற்கள் இருப்பதனைக் கண்டு வியந்து "இவர்கள் வேதங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையானவை என்று கூறுகின்றனர்...மேலும் இவர்கள் பழைமையான நாகரீகத்தினைச் சார்ந்தவர்கள் தாம்... அவ்வாறு நிலை இருக்க இவர்களின் இந்த மொழியில் நம்முடைய சொற்கள் பல தென் படுகின்றனவே... ஒரு வேளை இம்மொழியில் இருந்தே நம்முடைய மொழிகள் தோன்றி இருக்குமோ" என்று எண்ணி சமசுகிருதமே முதல் மொழியாக இருக்கலாம் என்ற தங்களது கருத்தினை உலகிற்கு முதலில் பரப்புகின்றனர். இது நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில். அதில் தொடங்கியது தான் சமசுகிருதம் உலகின் பழமையான மொழி என்றக் கோட்பாடு. இது சரியான கோட்பாடா என்பதனை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
ஒரு மொழி என்பது முதலில் பேசப்பட்டே வந்து இருக்கும். பின்னரே காலத்தில் அதற்கு எழுத்துரு கிட்டி இருக்கும் என்பது வரலாறு. பல மொழிகள் இன்றும் எழுத்துரு பெறாது பேசப்பட்டு மட்டுமே வந்துக் கொண்டு இருப்பது அதற்கு நல்ல சான்று. இந்நிலையில் ஒரு மொழியின் வரலாற்றினை எவ்வாறு நாம் அறிவது. அதன் வயதினைக் கணக்கிடுவது எவ்வாறு?
இப்பொழுது தமிழுக்கு செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றார்கள். காரணம் தமிழ் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மொழியாக இருக்கின்றது எனவே அதனைச் சிறப்பித்து அதற்கு செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கணக்கிட்ட முறையைத் தான். இராண்டாயிரம் ஆண்டுகள் பழமை என்று சொல்கின்றார்கள்... எதன் அடிப்படையில் சொல்கின்றனர்.. கல்வெட்டுக்கள், நூல்கள் மற்றும் பல குறிப்புகள் போன்றவை கிடைத்துள்ளதால் சொல்கின்றனர். அதன் அடிப்படையிலேயே செம்மொழி நிலையும் வழங்கி உள்ளனர். ஆனால் தமிழ் அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே பேசப்பட்டுக் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள் அவற்றை சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் செம்மொழி விருதென்ன உலகின் முதல் மொழி விருதே கொடுக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, தெலுங்கு மொழியினை எடுத்துக் கொள்ளலாம். இம்மொழியில் கல்வெட்டுக்கள் கி.பி காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் "அதற்காக இம்மொழி அதற்கு முன்னர் உலகில் இல்லை என்று நீங்கள் கருத முடியாது...எங்கள் தெலுங்கு மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்து வந்தது...நாங்கள் இதற்கு எழுத்துரு பின்னர் தான் தந்தோம்...ஆனால் ஆதிக் காலத்தில் இருந்தே எங்கள் மொழி இருந்தது....எங்கள் மொழியில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றின" என்று ஒரு தெலுங்கு நண்பர் கூறினால் நம்மால் மறுக்க முடியாது. ஏன் எந்த மொழியினையுமே மறுக்க முடியாது 'பேசிக் கொண்டு மட்டுமே இருந்தோம்... ஆனால் எழுதவில்லை' என்ற காரணம் பாரபட்சமின்றி அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.
அவ்வாறு கூறிவிட்டால் சரி மொழியின் காலத்தினை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்... 'நாங்கள் மொழியை _______ இத்தனை வருடங்களாக பேசிக்கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது தான் அதனை எழுத்துருவில் கொண்டு வந்தோம் என்றுக் கூறலாம்.
அந்த இடைப்பட்ட இடத்தை ஆயிரம் என்றோ லட்சம் என்றோ ஏன் இன்னும் எத்தனை வருடங்களோ என்றும் போட்டு நிரப்பிக் கொள்ளலாம். அதை நிரூபிக்கத் தான் சான்றுகள் தேவை இல்லையே.
அந்நிலையில் ஒரு மொழியினைப் பற்றி முழுதும் அறிய அந்த மொழியினைப் பேசிய மக்கள் எங்கே இருந்தனர்...அவர்கள் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா என்று பலதும் ஆராய வேண்டி இருக்கின்றது. ஏனெனில் பேசினோம் ஆனால் அதற்கு சான்றுகள் இல்லை என்று கூறுவது என்றுமே தகுந்த கூற்றாக அமையாது. இன்றும் கூட அலுவலுகத்திலும் சரி வேறு இடங்களிலும் சரி நீங்கள் ஏதேனும் முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேசுகின்றீர்கள் என்றால் அதற்கு சான்றாக எழுத்து வடிவத்தில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. எனவே ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பேசிக் கொண்டு வந்த மொழி என்றுக் கூறினாலும் அது எப்பொழுது எழுத்துருவில் கிடைக்கின்றதோ அப்பொழுது இருந்து தான் ஒரு மொழியின் வயதினை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதுவே முறை.
சரி...இப்பொழுது நாம் அசோகரை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி இருக்கின்றது. இந்திய வரலாற்றில் நாம் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒருவர் இவர். இவரை பற்றி நாம் முன்னரே மூன்றாம் பதிவில் கண்டு இருக்கின்றோம். புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக் கொள்கைகளையும் பலி கூடாது என்றக் கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல மொழிகளில் கல்வெட்டுக்களைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த கல்வெட்டுக்களே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்துக் கொள்ள உதவும் மேலும் ஒரு கருவிகளாகத் திகழ்கின்றன. எனவே நாம் அவற்றினைக் காண வேண்டிய அவசியம் வருகின்றது. அசோகரின் கல்வெட்டுக்கள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கப்பட்டு உள்ளன.
பாலி
அர்த்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்
ஆச்சர்யவசமாக சமசுகிருதத்தில் ஒரு கல்வெட்டுகள் கூட இது வரை கிட்டவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர் பலிகள் இடும் பழக்கத்தை தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுக்களை உருவாக்குகின்றார். வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில் வேதங்களை போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க வேண்டும் தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டுக்கள் ஒன்றுக் கூட சமசுகிருதத்தில் காணப்பட வில்லை.
"அட என்னங்க சமசுகிருதம் தெய்வ மொழி... அதனை பொது மக்கள் அறிந்துக் கொள்ளுமாறு எவ்வாறு கல்வெட்டினை வடித்து வைப்பர்" என்று பார்த்தோமானால், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நமக்கு முதல் சமசுகிருதக் கல்வெட்டுக் கிடைக்கின்றது. அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையை பழுது பார்த்த செய்தியை சுமந்துக் கொண்டு கிடைக்கின்றது. ஆனால் இங்கு கிடைக்கும் சமசுகிருதம் தனது முழுமையான வடிவத்தினை அடையவில்லை என்றே ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். செப்பமான சமசுகிருத கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்துக்கள் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.
அதாவது முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது. இந்நிலையில் ஒரு கேள்வி எழுகின்றது...
அணையை பழுது பார்த்த செய்தியை தெரிவிக்க சமசுகிருதம் பயன்பட்டு இருக்கும் பொழுது அதனை விட உயர்ந்த செயலான புத்தரின் கொள்கையை பரப்ப அசோகரால் ஏன் அம்மொழி பயன்படுத்தப் படவில்லை. அதுவும் வேதங்களில் பலி இருக்கும் பொழுது அசோகர் நிச்சயம் அதனை எதிர்த்து சமசுகிருதத்தில் எழுதி இருக்க வேண்டும் தானே. ஏன் சமசுகிருதத்தில் அசோகரின் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்த வில்லை காரணம் அவர் காலத்தில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை. எளிதாக சொல்லி விட்டார்கள். ஆனால் நம்புவது அவ்வளவு எளிதானக் காரியம் அன்று. இந்நிலையில் நாம் இன்னும் சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டி இருக்கின்றது.
ஒன்று கி.பி இரண்டாம் நூற்றாண்டின் வரை சமசுகிருதம் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. நான் சமசுகிருத எழுத்துக்களைச் சொல்ல வில்லை, சமசுகிருதம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. வேதங்களை வாய் மொழியில் சொன்னார்கள் சரி... அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா...இது வரை அத்தகைய வேதங்கள் கி.மு காலங்களில் இருந்ததாகவும் சரி வேதங்களின் படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை.
மேலும் அசோகர் காலத்து எழுத்துக்களை பிராகிருத எழுத்துக்கள் என்பர்.
பிராகிருதம் என்றால் - இயற்கையாகவே எழுந்த மொழிகள் என்று பொருள்.
அனால் சமசுகிருதமோ - நன்கு செய்யப்பட்டது என்ற பொருளினைத் தருகின்றது. நன்கு செய்யப்பட்டது என்றால் என்ன... யாரால் செய்யப்பட்டது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
அதாவது ஒரு மொழி இருக்கின்றது. ஆனால் அம்மொழியின் எழுத்துக்களோ...அல்லது அம்மொழியை பற்றிய தகவல்களோ, அதனை யார் பேசினர்... எங்கு பேசினர் என்றத் தகவல்களோ கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை கிட்டவில்லை. அவ்வாறு சான்றுகளே இல்லாத மொழி எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாமே. நாம் முன்னர் கண்டது போல ஒரு லட்சம் வருடங்கள் முந்தியும் இருந்து இருக்கலாம். ஆனால் காலத்தில் அது அழிந்து இருக்கலாம். அதற்கு பின்னர் வந்த மொழிகள் இருந்தமைக்கு சான்றுகள் அழியாது கிடைக்கின்றன... ஆனால் இம்மொழி இருந்த வரலாற்றை மட்டும் அழித்து விட்டனர்...அல்லது அழிந்து விட்டது. இதற்கு எல்லா மொழிகளுமே பொருந்துமே.
இல்லை... சமசுகிருதத்தில் வேதப்பாடல்கள் உள்ளனவே. எனவே சமசுகிருதம் பழமையானதான ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்றக் கருத்தும் இப்பொழுது எழலாம். உண்மை தான்.
வேதங்கள் இன்று சமசுகிருதத்தில் இருக்கின்றன. ஆனால் அவை வெறும் பாடல்களாய் இருந்தப் பொழுது சமசுகிருதத்தில் தான் இருந்தன என்று எவ்வாறு நாம் சொல்ல முடியும். பின்னால் தொகுக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.
ஏன் எனில் இந்திரன், வருணன் ஆகிய கடவுள்கள் தமிழில் மொழியில் தினைக் கடவுள்களாக அறியப்பட்டு உள்ளனர். மேலும் வேதத்தில் உள்ள 'தியெளஸ்' என்ற வான் கடவுள் கிரேக்கத்தில் உள்ள 'சுஸ்' கடவுளை நினைவுபடுத்துகின்றார். மேலும் பெர்சியர்களின் வழிப்பாட்டுப் பழக்கங்களும் சரி கடவுள்களின் பெயர்களும் சரி வேதங்களில் காணப்படும் சில பெயர்களையும் வழிபாட்டு முறைகளையும் ஒத்தே இருக்கின்றன. அந்த வழிபாட்டுப் பழக்கங்கள் எல்லாம் சமசுகிருதத்தின் காலத்துக்கு முன்னரே காணப்படுவதால் அப்பாடல்களே பின்னர் வேதங்களாக தொகுக்கப்பட்டன என்றும் நாம் கருத வாய்ப்பிருக்கின்றது.
உதாரணத்துக்கு, இன்று ஆங்கிலம் இருக்கின்றது. நம்முடைய நூல்கள் பலவற்றை மக்கள் பலரும் அறிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றோம். பல மொழி பேசும் மக்களின் இலக்கியங்கள், பாடல்கள், வழிபாட்டு பழக்கங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இப்பொழுது காணப்படுகின்றன. ஆனால் அதை வைத்துக் கொண்டே ஆங்கிலத்தில் இருந்து தான் அம்மொழிகளின் இலக்கியங்கள் எல்லாம் வந்தது என்றுக் கருதுவது சரியாகுமா? அப்பொழுது எந்த மொழியில் இருந்து எந்த மொழி வந்தது என்று அறிவதற்கு மொழியின் காலத்தை கணக்கிட்டுத் தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்பொழுது ஆங்கிலம் எழுதப்படவே இல்லை வாய் வழியாகவே நாங்கள் அந்தப் பாடல்களைக் கூறிக் கொண்டு வந்தோம் பின்னரே அவற்றை எழுத நேர்ந்தது என்று கூறினால் அதை மறுக்க முடியுமா அல்லது ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா?
எனவே சான்றுகள் இன்றி ஒரு மொழியின் காலத்தை கணிக்க முடியாது. சமசுகிருத மொழி உலகில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை இருந்ததற்கு சான்றுகளே இல்லை. எனவே சமசுகிருதத்தின் காலத்தினை கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின் தான் வைக்க முடியும் மாற்று ஆதாரங்கள் கிட்டும் வரை....
சமசுகிருதம் என்று ஒரு மொழி
சமசுகிருதம்....ஒரு அருமையான மொழி!!!
"அட என்னங்க 'தமிழ் தமிழ்' என்றுக் கூறிக் கொண்டு தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் போராடுபவர்கள் எல்லாம் சமசுகிருதத்தினை எதிர்த்துக் கொண்டு இருக்கும் போது நீங்க சமசுகிருதம் அருமையான மொழி அப்படின்னு சொல்றீங்களே...கட்சி மாறிடீங்களா!!!" என்று நண்பர்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். சமசுகிருதம் உண்மையிலையே அருமையான மொழி தான். அதில் ஆய்வாளர்களுக்கு மாற்றுக் கருத்துக்களே கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு காலத்தில் சமசுகிருதம் தமிழர்களால் வளர்க்கப்பட்டது. இப்பொழுது எதிர்க்கப்படுகின்றது. இந்த மாற்றம் திடீர் என்றோ அல்லது காரணம் ஏதும் இன்றியோ தோன்றிவிடவில்லை மாறாக இந்த மாற்றத்திற்கு அடிப்படையாக ஒரு மாபெரும் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலினைப் பற்றி நாம் பின்னர் காணலாம். ஆனால் இப்பொழுது ஏன் சமசுகிருதத்தினை தமிழர்கள் அன்று வளர்த்தனர்...ஏன் பின்னர் எதிர்கின்றனர்...என்ற இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் சமசுகிருததினைக் காண வேண்டி இருக்கின்றது. காண்போம்...
நாம் ஏற்கனவே சமசுகிருதத்தின் காலம் என்ற மேலே உள்ள பதிவில் சமசுகிருதத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னரே என்றுக் கண்டு இருந்தோம். நண்பர்கள் பலர் இக்கருத்தினை நிச்சயம் ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் காலம்காலமாக சமசுகிருதம் தான் உலகின் முதல் மொழி என்றே நாம் நம்பிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...அவ்வாறு தான் நம்மிடையே கருத்துக்களும் பரப்பப்பட்டு இருக்கின்றன. சரி பிரச்சனை இல்லை...இப்பொழுது நாம் சமசுகிருதத்தினைப் பற்றி சற்று உன்னிப்பாகக் காணலாம். அதற்கு முதலில் நாம் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் காண வேண்டி இருக்கின்றது.
கி.பி காலத்தில் இந்தியாவில் எந்த எந்த மக்கள் எல்லாம் இருந்தார்கள் என்பதனை நாம் முன்னர் கண்ட பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். இதற்கு முன்னர் அந்தப் பதிவுகளைப் படிக்காதவர்கள் அதனை முதலில் படித்து விட்டால் நலமாக இருக்கும். (ஆரியர் யார், ஆரியர் யார் - 2)
சரி படிச்சிட்டீங்களா...அருமை.
கி.பி முதல் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பல விதமான மக்கள் இருக்கின்றனர் என்று அந்தப் பதிவுகள் வாயிலாக நாம் அறிந்து இருக்கின்றோம். பெர்சியர்கள் இருக்கின்றனர், கிரேக்கர் இருக்கின்றனர்...ரோமர் இருக்கின்றனர்...பார்தியர்கள் இருக்கின்றனர்...குசானர்களும் இருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு மக்கள் இனத்தவர் இங்கே இருக்கின்றனர். பல்வேறு மக்கள் இனத்தவர் இருக்கின்றனர் என்றால் பல்வேறு மொழிகளும் இருக்க வேண்டும் தான் அல்லவா...
அவ்வாறே தான் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் இருக்கின்றன...தமிழ்,பாலி,அரமேயம்,பாரசீகம்(பெர்சியர்களின் மொழி),கிரேக்கம், இலத்தின், அர்த்தமாகதி போன்ற பல மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன.இப்பொழுது ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் மேலே நாம் கண்ட அந்த அனைத்து மொழிச் சொற்களையும் சமசுகிருதத்தினில் நம்மால் காண முடிகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் திருவாளர் சார் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் சமசுகிருதமே உலகின் முதல் மொழியாக இருந்து இருக்கலாம் என்ற கருத்தை கூறுகின்றார். அன்று ஆரம்பித்தது தான் சமசுகிருதம் உலகின் முதல் மொழி என்றக் கோட்பாடு.
ஆனால் இந்தக் கருத்தினை சில ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். அவர்கள் கூறும் காரணம் எளிதானதொரு காரணம் தான். சமசுகிருத எழுத்துக்கள் கிடைக்கப் பெரும் முன்னரே மேலே கூறிய அந்த மற்ற மொழிகளுக்கான எழுத்துக்களும் சரி அவை பயன்பாட்டில் இந்த இன மக்களிடம் இருந்தன என்ற சான்றுகளும் சரி மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் சமசுகிருதத்தின் சான்றுகளோ பிற்காலத்திலேயே தான் கிட்டப் பெறுகின்றன. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட ஒரு மொழி என்றே பொருள் தருகின்றது. எனவே மேலே உள்ள அந்த மொழிகளை எல்லாம் இணைத்து ஏன் சமசுகிருதத்தினை மக்கள் உருவாக்கினர் என்று நாம் கருதக் கூடாது...? அந்த மொழிகள் அனைத்தையும் இணைத்து செம்மையாக தோன்றிய ஒரு புதிய மொழியாக ஏன் சமசுகிருதம் இருக்க கூடாது? இருக்கலாம் தானே.
அதாவது பல மொழிகள் இருக்கின்றன. அவை முன்னரே இருந்து இருப்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. திடீர் என்று ஒரு புதிய மொழி தென்படுகின்றது...அந்த மொழியில் முன்பு இருந்த மொழியின் எழுத்துக்கள் எல்லாம் தென்படுகின்றன. எனவே முன்பிருந்த மொழிகளை எல்லாம் தொகுத்து இந்த புதிய மொழி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் கருத முடிகின்றது தானே. அதுவும் அந்த புதிய மொழியின் அர்த்தமே செம்மையாக செய்யப்பட்டு இருக்கின்றது என்று இருக்கும் பொழுது நம்முடைய கருத்து வலுபெறத்தானே செய்கின்றது. ஆனால் சான்றுகள் இன்றி நம்மால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மேலே உள்ள ஆய்வாளர்களின் கூற்றுக்கு அவர்கள் தரும் சான்றுகள் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வேதங்களையும் வேதாந்தங்களையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. மேலும் சென்றப் பதிவுகளில் அவைகளுக்கும் விவிலியத்தில் இருக்கும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்தோம். இப்பொழுது நாம் மேலும் எந்த புதிய விடயத்தினையும் காணும் முன்னர் சில பழைய விடயங்களை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது...
௧) ஒரு கிருத்துவக் கொள்கை -
அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.

௨) விவிலியத்தைத் தொகுத்ததில் உள்ள ஒரு கொள்கை -
பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது – எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது – எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.
புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக – கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது – கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.
௩) வேதங்களுக்கும் பழைய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
௪) வேதாந்தங்களுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
௫) வேதத்தில் இறைவன் பலியாவது போன்று வரும் செய்திகள். நிற்க.
என்ன அனைத்து விடயங்களையும் ஒரு முறை நியாபகப்படுத்திக் கொண்டு விட்டீர்களா? நன்று. இனி நாம் சுத்தி வளைக்காது நேரே நம்முடைய கருத்துக்கு செல்லலாம்.
மேலே நாம் கண்ட கிருத்துவக் கொள்கையின் மூலம், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகளையும் தத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் அவைகளின் மூலமாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றே நாம் அறிகின்றோம்(இன்று அரசியல் காரணமாக அனைத்து சமயங்களின் கொள்கைகளுமே மாறி விட்டன) அதன் அடிப்படையிலேயே யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தினைப் பற்றிய தொகுதியான பழைய ஏற்பாட்டினை எபிரேய மொழியில் தொகுக்கின்றனர். பின்னர் அந்த நிலப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கிருத்துவின் கருத்துக்களைக் கூற அங்கே பரவலாகக் காணப்பட்ட கிரேக்க மொழியிலே தொகுக்கின்றனர்.
ஆனால் யூதர்களும் கிரேக்கர்களும் மட்டுமே அன்று உலகில் வாழ்ந்த மக்கள் அல்லவே...மற்ற இனத்தவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே. அவர்களுக்கென்று தனி மொழி இருக்குமே. எபிரேயத்தில் யூதர்களுக்கு சொல்லியாயிற்று...யூதர்களுக்கும் சரி கிரேக்கர்களுக்கும் கிரேக்கத்தின் வாயிலாகவே சொல்லியாயிற்று...அந்த நூல்களில் யூதர்களின் பழக்க வழக்கங்களும் சரி கிரேக்கர்களின் வரலாறும் சரி இருக்கின்றன... எனவே அந்த மக்கள் அந்த நூல்களின் உள்ள கருத்துக்களை அவர்களின் வாழ்வோடு இணைத்துக் கொள்வர். ஆனால் மற்ற மக்களுக்கு? அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துக் கொண்டு அவற்றின் வாயிலாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் தானே...அது தானே முறையாக இருக்கும். நிற்க.
இந்நிலையில் தான் நாம் இந்தியாவினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்வேறு மொழிகள் இருக்கின்றது. பல்வேறு மக்கள் பல்வேறு வரலாற்றோடு இருக்கின்றனர். பலி இடும் பழக்கம் அனைவரின் மத்தியிலும் ஒன்றினைப் போலவே இருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொதுவான கருத்துக்களைச் எவ்வாறுச் சொல்வது? எந்த மொழியினில் சொல்வது?
நியாயமான கேள்வி தானே. இக்கேள்விக்கு இரண்டு விதமாக தீர்வினைக் காண முடியும்.
ஒன்று - அனைத்து மொழிகளிலும் கருத்துக்களைப் படைத்து அனைவரிடமும் பரப்பலாம்.
இரண்டு - அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினைப் படைத்து அதன் மூலமாக கருத்துக்களைப் பரப்பலாம்.
இந்த இரண்டு தீர்வுகளில் அக்காலத்தில் இருந்த அறிஞர்கள் இரண்டாவது தீர்வினைத் தேர்ந்து எடுத்ததே இன்று சமசுகிருதம் என்ற மொழி நம்மிடையே இருப்பதற்கு காரணம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆம்...அவர்களின் கூற்றின் படி அக்காலத்தில் இந்தியாவில் இருந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கருத்தினைப் பரப்ப அன்று நிலைவிய மொழிகளான தமிழ்,பாலி,அர்த்தமாகதி,அரமேயம்,கிரேக்கம்,இலத்தின் போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி தான் சமசுகிருதம். அவ்வாறு அது உருவாக்கப்பட்டமையால் தான் அது 'செம்மையாகச் செய்யப்பட்டது' என்று பொருள் தருவதோடு அம்மொழி யாராலும் பேசப்பட்டதாக வரலாறும் கிட்டப்பெறாமல் இருக்கின்றது.
அப்படிப்பட்ட ஒரு மொழியினைக் கொண்டு இந்தியாவில் அன்று இருந்த மக்கள் அனைவருக்கும் இறைவனது கருத்துக்களைப் பரப்ப அன்று இருந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்ட நூல்கள் தான் வேதங்களும் வேதாந்தங்களும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது அன்று இந்தியாவில் இருந்த மக்களுள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அனைவரிடமும் பல கடவுளர் வழிபாடும் பலி வழிபாடும் ஒன்றினைப் போலவே இருந்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்களாகட்டும் அல்லது பெர்சியர்களாகட்டும் பலி இருந்து தான் இருக்கின்றது. அப்படி இருக்கையில், "இறைவனுக்கு பலியிட்டு நாம் வணங்கிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...ஆனால் இறைவன் நமக்காக பலியாகி விட்டார்... எனவே நாம் பலியிடத் தேவை இல்லை...மாறாக நமக்காக பலியான இறைவனை வேண்டி அன்பினையே போதிப்போம்" என்ற கருத்துக்களை அனைத்து மக்களுக்கும் பரப்பத் தான் வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி தொகுக்கப்படுகின்றன.
அதனால் தான் வேதங்களில் பல கடவுளர் இருக்கின்றனர்...பலி இருக்கின்றது...முடிவில் இறைவன் பலியாவதைப் போல் வருகின்றது. வேதாந்தத்தில் கடவுள் ஒருவரே என்றக் கொள்கையும் பலி தேவை இல்லை என்ற கொள்கையும் காணப்படுகின்றன. மேலும் இந்தியாவில் அன்று இருந்த அனைத்து மக்களுக்கும் பொதுவாக வேதங்களைத் தொகுத்தக் காரணத்தினால் தான் வேதங்களில் பெர்சியர்களின் கொள்கைகள், வரலாறு மற்றும் கிரேக்கர்களின் கொள்கைகள் மற்றும் இன்னும் பல கொள்கைகளும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு,
"வேதங்களுள் வழிப்படப்பட்ட இயற்கைப் பொருள்களுள் பழமையானது வானம். இதனுடைய பழம் பெயர் 'தியுஸ்' என்பது. இது கிரேக்க சுஸ் என்பதையும் இலத்தீனில் உள்ள ஜுபிட்டர்ஐயும் ஒத்ததாய் இருக்கின்றது. 'தியுஸ்' என்பது பிதர், தந்தை என்றும், படைப்பவர், ஆற்றல் மிக்கவர் என்றும் கூறப்படுகின்றன. 'தியுஸ் பிதர்' என்னும் வான் தந்தை அல்லது ஒளியின் தந்தை என்பது விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே என்பதையும் ஒளியின் தந்தையே என்பதையும் நினைவுறுத்துகின்றன" என்றே கூறுகின்றார் மாரிஸ் பிலிப்ஸ் என்னும் ஆய்வாளர் தனது 'The Teaching of the vedas' என்னும் நூலில்.
“ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India).
மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).
டேவிட் பிரௌலே தனது ‘ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley – The Myth of the Aryan Invasion of India)’ என்ற தனது புத்தகத்திலே ‘ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய – ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனவே இந்தியாவில் அன்று இருந்த பல்வேறு இனங்களுக்குரிய வரலாறு, பாடல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினைத் அவர்களுக்காகத் தொகுத்து அவர்களின் இறைவன் அவர்களுக்காக பலியானான் என்ற செய்தியை தெரிவித்து பின்னர் இறைவன் ஒருவன் தான் அவன் மக்களுக்காகவே இருப்பவன் என்ற கருத்தினைத் தெரிவிக்கவே வேதங்களும் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் "அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்." என்றக் கொள்கைக்கு ஏதாக அம்மக்கள் அவர்களுள் கொண்டு இருந்த இறைப் பெயர்களைக் கொண்டே அம்மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு செல்கின்றனர். அதனால் தான் இயேசு என்ற பெயர் அங்கே காணப்படவில்லை.
காரணம் இறைவனின் பெயர் முக்கியமில்லை கருத்துக்களே முக்கியம் என்ற நிலையில் தான் அன்றைய அறிஞர்கள் கருத்துக்களைத் தொகுக்கின்றனர் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதிலும் முதலில் இருக்கு வேதமே தொகுக்கப்பட்டது என்றும் பின்னரே மற்ற வேதங்கள் தொகுக்கப்பட்டன என்றும் அவர்கள் கூறுகின்றனர். சரி இருக்கட்டும்…!!!

இறைவன் உலகிற்கு வந்து மக்களுக்காக பலியானார் என்ற செய்தியினைப் பரப்பவே வேதங்களும் பின்னர் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன, அந்தப் பணிக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழி தான் சமசுகிருதம் என்ற இந்த கருத்தை நிச்சயம் ஏற்பது கடினமாகத் தான் இருக்கும். இந்நிலையில் இக்கருத்துக்களை வலுப்படுத்துமாறு வேறு சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

மேலும் பலி இல்லாத வழிபாட்டு முறைக்கு புத்தம் மற்றும் சமணம் ஆகிய சமயங்களின் தாக்கங்களும் காரணமாக இருக்கலாம் அல்லவா என்றக் கேள்வியும் இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றது அல்லவா…எனவே நாம் அவற்றையும் காணத் தான் வேண்டி இருக்கின்றது.
அதற்கு நாம் இப்பொழுது அந்த சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது…
காண்போம்…!!!

பின்குறிப்பு:

இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவை தமிழர்களால் இறைவன் பலியானதை தெரிவிக்க தொகுக்கப்பட்ட நூல்கள் என்று கூறுகின்றீர்களே அப்படி என்றால் அதில் வரும் நான்கு பிரிவுகள் எவ்வாறு வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து இருந்தது என்றால், வேதங்களில் இறைவன் மனிதன் நான்கு வர்ணமாக படைத்தான் என்று வரும் பகுதி இடைச் செருகல் என்றே அம்பேத்கர், மாக்ஸ் முல்லேர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாம் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருந்து இருக்கின்றன என்று. அக்காலம் தொடங்கி இந்திய நூல்களில் பல மாற்றங்களும் பல இடைச் செருகல்களும் நிகழ்ந்து இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்...

தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல் அ அக்கம்பக்கம் பார்த்துப் பேசு. அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்திதான். அகத்தின் அழகு முகத்தில் தெ...