செவ்வாய், 24 ஏப்ரல், 2018






மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!








பகுதி-4


கடலில் மூழ்கிய கண்டம் -
கடலினுள் கண்டங்கள் மூழ்கி உள்ளனவா… மக்கள் வாழ்ந்து இருந்த மாபெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளையிட்டுக் கொண்டு சென்று விட்டதா? என்றக் கேள்விக்கு ஆம் என்கின்றனர் கிரேக்க ஞானிகளான பிளாடோவும் (Plato) ஓமரும் (Homer) , நம் இளங்கோவடிகளும்.
ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.
பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.
ஆனால் இவர்களின் கூற்று அந்தச் செய்தியினை கூறுவதோடு மட்டும் நின்று விடுகின்றது. அந்த கண்டம் எங்கே இருந்தது, அதில் இருந்த மக்கள் யார் என்ற செய்திகள் அவர்களின் கூற்றுகளில் தெளிவாக இல்லை. எனவே இவர்களின் கூற்றுகள் வெறும் கதைகளாக மாறிப் போகின்றன.
மேற்குலக அறிவியலாளர்களும், இவர்களின் கூற்றினை அடிப்படையாக கொண்டே ஒரு அழிந்தக் கண்டதினை உலகம் முழுவதிலும் தேடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் முடிவு கிட்டியப் பாடில்லை.
அவர்களின் ஒவ்வொரு ஆராய்ச்சியும் ஒவ்வொரு இடத்தினைக் குறிப்பதாகவே அமைந்து வருகின்றன.
ஒரு சமயம் அட்டுலாண்டிசு அமெரிக்காவிற்கும் ஐரோபியாவிற்கும் இடையில் உள்ளது என்கின்றனர்.
மறு சமயம் அது சப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருப்பதாக சொல்லுகின்றனர்.
மற்றொரு சமயம் ‘பெர்முடா முக்கோணம்’ இருக்கும் இடத்தில் தான் இந்தக் கண்டம் இருந்து இருக்கலாம் என்கின்றனர்.
இத்தகைய முரண்பாடான தகவல்கள் மூலம் அட்டுலாண்டிசு என்னும் கண்டம் தனியே இருந்ததா இல்லை வேறேனும் ஒரு மூழ்கிய கண்டத்தினைப் பற்றிய தகவல்கள் அட்டுலாண்டிசு என்னும் பெயரின் மூலம் கதையாக வெளியாகி உள்ளதா என்று எண்ணும் எண்ணம் வருகின்றது.
அப்படி வேறோரு கண்டத்தினைப் பற்றி ஐரோப்பிய அறிவியலாளர்கள் இன்னும் அவர்களின் தேடலை ஆரம்பிக்கவில்லை. பிரச்சனை இல்லை நாம் ஆரம்பிப்போம்.
தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒருத் தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது. கடலில் மூழ்கிய இந்தக் கண்டத்தினைப் பற்றி கதைகளாகவோ, இலக்கியங்கள் மூலமாகவோ அல்லது நண்பர்களின் மூலமாகவோ நாம் நிச்சயம் அறிந்து இருப்போம். அட்டுலாண்டிசு என்றக் கண்டத்தினைப் போல் விவரங்கள் தெளிவாக இல்லாத நிலை போல் அல்லாது குமரிகண்டதினைப் பற்றிய விவரங்கள் தெளிவாக கிடைகின்றன. தமிழ் சங்க இலக்கிய பாடல்களிலும், சிலப்பதிகாரத்திலும் குமரிக்கண்டதினைப் பற்றியக் குறிப்புகள் தெளிவாக இருக்கின்றன.
இந்த இடத்தில் இந்த நிலையில் தான் குமரிக் கண்டம் இருந்தது என்று அந்த நூல்கள் உறுதிப்படக் கூறுகின்றன. நாம் முன்னரே கண்டது போல் நம்முடைய நூல்கள் எந்த இடத்தில் குமரிக்கண்டம் இருந்தது என்றுக் கூறுகின்றனவோ அதே இடத்தில் தான் உயிரினம் தோன்றி இருக்க வேண்டும் என்று அறிவியலும் கருதுகின்றது.
மேலும் தமிழர்களின் சில பழக்க வழக்கங்களும் சமகாலத்தில் நடந்த சம்பவங்களும் குமரிக்கண்டம் என்ற ஒன்று இந்த மண்ணில் இருந்தது என்றும் கூற்றுக்கு ஆதாரங்களாக இருந்துக் கொண்டு இருக்கின்றன. குமரிக் கண்டதினையும் அதன் வழி மனிதனின் வரலாற்றினையும் பார்க்கும் முன் நாம் அந்த விடயங்களைப் பார்த்து விடுவது நல்லது.
௧) குமரிக் கண்டத்தினைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுவது என்ன..
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள….
மேலே உள்ள இந்தக் கூற்றின் படி பல மலைகளுடன் குமரிக்கண்டமும் கடலினுள் சென்றது என்ற செய்தி நமக்கு தெரிகின்றது.
௨) ஆடு மேய்ச்சான் பாறை…
தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ என்று வழங்குகின்றனர். காரணம் என்னவெனில் ஒருக் காலம் அந்தப் பாறை இருந்த இடம் தரையாக இருந்தது அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்த்து இருக்கின்றனர். ஆனால் காலத்தில் கடல் அந்த இடத்தினைக் கொள்ளைக் கொள்ளவே மக்கள் அவ்விடம் விட்டு நகர்ந்து வந்து விட்டனர். ஆனால் ஆடு மேய்த்த பாறை என்ற பெயர் மட்டும் அங்கேயே தங்கி விட்டது.
இதன் மூலம் தமிழர்கள் வாழ்ந்து இருந்த இடம் இன்று கடலுக்கு அடியினில் மூழ்கி உள்ளது என்று நாம் அறிய முடிகின்றது.
௩) காவேரிப்பூம்பட்டினம்…
பூம்புகார் என்றுப் பெயர் பெற்ற இந்த மாபெரும் நகரமும் கடலினுள் மூழ்கி விட்டது. காலத்தில் பூம்புகார் நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகத்தினை விட முந்தியது என்பது அறிஞர்களின் கருத்து.
௪) தனுசுக்கோடி…
இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 இல் அடித்த புயல் மற்றும் கடல் ஊழிக் காரணமாக தனுசுக்கோடி என்னும் ஊர் கடலினுள் மூழ்கியது.
எனவே கடலில் நம் நகரங்கள் மறைந்து உள்ளன என்னும் செய்திகள் பொய்யல்ல என்பது புலனாகிறது.
இன்னும் பல சங்க இலக்கியங்கள் மூலமாகவும்,
தெற்கு திசையில் உள்ள தமிழர்களின் பழக்க வழக்கங்கள் வாயிலாகவும், ஒரு பெரும் நிலப்பரப்பினை கடல் கொள்ளைக் கொண்டு போய் உள்ளது என்னும் செய்தியினை நாம் அறிந்துக் கொள்ளலாம்.
இந்த உண்மைகள் எல்லாம் அந்த நிலப்பரப்பினில் தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டோம் என்றால் நிச்சயம் புலனாகும். ஆனால் இந்திய அரசோ அத்தகைய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளாது இருக்கின்றது. அத்தகைய ஆராய்ச்சிகளை மற்றவர்கள் மேற்கொள்ளவும் ஆதரிக்காது இருக்கின்றது” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஏன் இந்தியா ஆராய்ச்சியினை மேற்கொள்ளாது இருக்கின்றது என்ற கேள்வியோடு சேர்த்து நாம் இது வரை பார்த்து இருந்த கேள்விகளுக்கும் விடையினைக் காண முயல்வோம்….ஆனால் அதற்கு எல்லாம் அடிப்படையாக நாம் தெளிவாக குமரிக்கண்டதினைப் பற்றி அறிய வேண்டும்... குமரிக்கண்டம் உண்மையா அல்லது கற்பனையா என்பதனை அடுத்தப் பதிவில் காண்போம்...
குமரிக்கண்டம் …உண்மையா?… கற்பனையா?:-
இக்காலக் கட்டத்தில் குமரிக் கண்டம் உண்மை என்று சொன்னாலும் அது வெறும் நம்பிக்கையே. குமரிக்கண்டம் இல்லை என்றால் அதுவும் நம்பிக்கையே.
ஏனெனில் குமரிக்கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதனைப் பற்றிய முழுவீச்சான ஆராய்ச்சிகள் தொடங்கப்படவே இல்லை. சிறிது தொடங்கப்பட்ட ஆராய்ச்சிகளும் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது.
இப்பொழுது குமரிக்கண்டம் என்பது உண்மை என்று நம்புவோர்களின் கூற்றையும் குமரிக்கண்டம் பொய் என்று நம்புவோர்களின் கூற்றையும் காண்போம்.
குமரிக்கண்டம் உண்மை என்போர் அது உண்மை என்று அவர்கள் நம்புவதற்கு சில காரணிகளைக் கூறுகின்றனர்…
௧) ஆபிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் இந்திய ஆகிய நாடுகளில் காணப்படும் மரங்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஒன்றுப் போல் இருக்கும் விடயம்.
௨) ஆசுதிரேலிய பழங்குடி மக்கள் மற்றும் ஆபிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல்.(இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம்).
௩) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள்.
௪) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள்.
௫) தனுசுக்கோடி மற்றும் காவேரிப்பூம்பட்டினம் ஆகிய நகரங்கள் கடலில் மூழ்கிய வரலாறு.
௬) ஆடு மேய்ச்சான் பாறை என்று பெயர் கொண்ட பாறை கடற்கரையில் இருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளி கடலின் நடுவில் இருக்கும் செய்தி.
ஆனால் குமரிக்கண்டம் என்பது கற்பனையே என்றுக் கூறுவோர் கூறும் காரணங்கள்…
௧) இதை அறிவியல் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
௨) இக் கதைகள் சங்க இலக்கிய செய்திகளில் மட்டுமே இருப்பதினால் இவை வரலாறாக ஏற்றுக்கொள்ள பட மாட்டாது. இவை புராணங்களே.
இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளலாம்…
அறிவியல் குமரிக்கண்டதினை மறுக்கவும் இல்லை ஆதரிக்கவும் இல்லை… ஏனெனில் அறிவியல் அங்கே இன்னும் சென்று ஆராய்ந்தே பார்க்க வில்லை. ஆராய்ந்து தெளிவு படுத்தாத விடயங்களை அறிவியல் என்று நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே அறிவியலின் உதவி தற்போது குமரிக்கண்டதினைப் பற்றிய விடயத்தில் நமக்கு கிட்டவில்லை.
எனவே இப்பொழுது நாம் மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்றுப் பார்ப்போம்.
அவர்களின் கூற்றுப்படி,
மனிதன் தோன்றிய இடம் - குமரிக்கண்டம்.முதல் மனிதன் - தமிழன்.முதல் மொழி - தமிழ். குமரிக்கண்டதினில் தோன்றிய மனிதனே வடக்கே பயணித்து சென்று அங்கே சில நாகரீகங்களை நிறுவி பின் உலகம் முழுவதும் பரவுகின்றான். இதற்கு சான்றாக அவர்கள் பல விடயங்களை தருகின்றார்கள்.
உதாரணமாக “பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.”
இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள இந்த இணைப்பைப் பாருங்கள்.
இந்த விடயங்களில் இருந்து மனிதன் தெற்கில் இருந்து வடக்கே சென்றுள்ளான் என்று நாம் கருத முடிகின்றது.
“அப்படி எவ்வாறு கூறுகின்றீர்கள்… வடக்கில் இருந்தும் அவன் தெற்கே வந்து பெயரிட்டு இருக்கலாம் அல்லவா?” என்று கூறுகின்றீர்களா.
சரி தான். அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்கின்றது. அப்படி இருக்கும் பட்சத்தில் மொழியறிஞர்கள் ஏன் அப்பெயர்கள் தெற்கில் இருந்து வடக்கே சென்றன என்று கூறுகின்றனர் என்பதனை நாம் அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.
அவர்களின் கூற்றுப்படி ஒரு மொழி அது தோன்றிய இடத்திலேயே தான் செம்மையாக இருக்கும். அந்த இடத்தினை விட்டு தொலைவுக் கூட கூட அந்த மொழி திரியும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதன் அடிப்படையிலே, வடக்கே செல்ல செல்ல தமிழ் வேறு மொழிகளாக திரிந்து இருப்பதும், தெற்கே செல்ல செல்ல அது செழித்து இருப்பதும், தமிழ் தெற்கிலேயே தோன்றிய மொழி என்பதற்கு நல்ல சான்று என்று அவர்கள் கருதுகின்றனர்.
இரண்டாவது, ஒரு நாகரீத்தில் இருந்து மற்றொரு நாகரீகத்திற்கு பெயர்கள் கொண்டு
செல்லப் பட்டு இருக்கின்றன என்றால் முதலில் தோன்றிய நாகரீகம் காலத்தில் இரண்டாவது நாகரீகத்திற்கு முந்தியதாக இருந்திருக்க வேண்டும். எனவே வடக்கில் இருந்து இந்த பெயர்கள் தெற்கே வந்தன என்றால் வடக்கில் உள்ள நாகரீகம் காலத்தில் தெற்கு நாகரீகங்களுக்கு முன்னோடியாக இருந்திருக்க வேண்டும்.
இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரீகங்கள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னால் சிந்து சமவெளியிலோ, சுமேரியாவிலேயோ அல்லது மேசபோடமியாவிலேயோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரீகங்கள் இருந்தனவா?… அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் என்று அந்த ஆராய்ச்சிகள் இன்னும் முழுவீச்சில் ஆராயத் தொடங்கவில்லை. இந்நிலையில் தான் நாம் ஒரு ஆங்கிலேய ஆய்வாளரைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது. அவர் பெயர் கிரகாம் கான்காக் (Graham Hancock). உலகமே சுமேரியாவையும் மேசொபோடமியாவையும் சிந்து சமவெளியையும் ஆராய்ந்துக் கொண்டு இருந்த வேளையில் இவர் இந்தியாவில் தெற்கினை நோக்கி தன் ஆராய்ச்சியினை தொடங்குகின்றார்.
அவரின் ஆராய்ச்சி பிரம்மிப்பூட்டும் பல தகவல்களை வெளி இடுகின்றது. உதாரணமாக சிந்து சமவெளிக்கும்  3000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் ஒன்று குசராத் மாநிலத்தில் கடலோரத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த நாகரீகதினைத் தொடர்ந்து அவர் மீண்டும் தெற்கே நோக்கி நகர்கின்றார்.
அங்கே குசராத் நாகரீகத்தினை விட 3000 ஆண்டுகள் பழமையான ஒரு மாபெரும் நாகரீகத்தினை அவர் கண்டுப்பிடிக்கின்றார்…. தமிழகத்தினில்!!! அந்த இடம் பூம்புகார் எனப்படும் காவேரிப்பூம்பட்டினம். அவரின் கூற்றுப் படி இந்த நாகரீகம் சுமார் 11000 ஆண்டுகள் பழமையானது என்றும் அந்த நாகரீகம் கடற் கோள்களால் அழிந்தது என்றும் (400 அடி உயர் அலைகளால் என்றும் குறிப்பிடுகின்றார்) கூறுகின்றார். மேலும் அந்த இடங்களை நன்றாக ஆராய்ந்தோம் என்றால் பல உண்மைகள் வெளி வரும் என்றும் ‘அந்த இடத்தினை ஏன் ஆராயாது இது வரை விட்டு வைத்து இருக்கின்றார்கள் என்பது தமக்கு வியப்பளிப்பதாகவும்’ அவர் கூறுகின்றார். இவருடைய இந்தக் கருத்தினை இங்கிலாந்தில் உள்ள துர்கம் பல்கலைக்கழகமும் (Durham university) ஏற்று உள்ளது.
ஆனால் அந்த ஆராய்ச்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு மேற்கொள்ள எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மேலும் பூம்புகார் பற்றிய இந்தத் தகவல்கள் மக்களுக்கு முறைப்படி அறிவிக்கப்படவும் இல்லை.
இவ்வாராய்ச்சிகள் மொழியறிஞர்கள் சொல்லும் கூற்றினை, அதாவது நாகரீகம் தெற்கில் தோன்றி பின்னர் வடக்கே நோக்கி சென்று இருக்கின்றது என்பதனை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றன. தொடர்ந்து இந்த இடங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டால் உண்மைகள் வெளிப்படும். ஆனால் இந்திய அரசாங்கம் இந்த ஆராய்ச்சிகளை தானும் மேற்கொள்ளாது மற்றவர்கள் மேற்கொண்டாலும்
அதற்கு தடங்களை ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றது.
தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டதினைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா?உண்மை வெளிப்படுமா?
சிந்திப்போம்…!!!
சில நண்பர்கள் இந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்களை பகிருமாறு கேட்டுக்கொண்டார்கள். இதோ சில ஆராய்ச்சியாளர்களைப் பற்றிய தகவல்கள்…
மா.சோ.விக்டர் - இவர் மொழியியல் அறிஞர். உலகின் தாய் மொழி தமிழ் தான் என்றும் மற்ற மொழிகள் அனைத்தும் தமிழின் திரிபுகளே என்றும் அவர் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் கூறுகின்றார். பல புத்தகங்களை இவர் மொழி தொடர்பாகவும் குமரிக்கண்டம் மற்றும் தமிழர்கள் தொடர்பாகவும் எழுதி உள்ளார். உதா… ‘குமரிக் கண்டம்’ ‘எபிரேயத்தின் தாய் மொழி தமிழே’ ‘அ’….
தேவநேயப் பாவாணர் - இவரும் ஒரு மொழி அறிஞர். தமிழ் மொழியில் இருந்தே வடமொழி போன்ற அனைத்து மொழிகளும் தோன்றின என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை நிரூபித்தவர். இவரும் பல புத்தகங்களை மொழி தொடர்பாகவும் தமிழர் வரலாறு தொடர்பாகவும் எழுதியுள்ளார். உதா… தமிழர் வரலாறு.
மாத்தளை சோமு - இவர் ஒரு ஆய்வாளர். உலகம் முழுவதும் சென்று அங்கு வாழும் மக்களின் பழக்க வழக்கங்கள் இடங்கள் போன்றவற்றை ஆராய்பவர். இவருடைய நூல்கள் பல அவற்றுள் நான் எடுத்துக் கொண்ட நூல் ‘வியக்க வைக்கும் தமிழர் அறிவியல்’.
மறைமலைஅடிகள் - இவரும் ஒரு தமிழ் ஆர்வலர். தனித்தமிழ் இயக்கத்தினை தோற்றுவித்து தமிழை வளர்த்தவர். தமிழ் தொடர்பாகவும், ஆரியர் திராவிடர் போன்ற கூறுகளைப் பற்றியும் பல நூல்களை எழுதி உள்ளார். உதா… தமிழர் மதம்.
தெய்வநாயகம் - இவர் ஆன்மீக ஆராய்ச்சியாளர். தமிழிலேயே அனைத்து மதங்களுக்கும் பொதுவான தத்துவ மற்றும் ஆன்மீகக் கருத்துக்கள் மறைந்து இருக்கின்றன. அனைத்து மதங்களும் அடக்குமுறைகளில் இருந்தும் பகைமையில் இருந்தும் விடுபட்டு மக்களின் நலனுக்காக மாறுவதற்குரிய வழி தமிழில் இருக்கின்றது என்னும் கருத்தினை உடையவர். சைவ வைணவ சமயங்கள், கிருத்துவ சமயம் மற்றும் இசுலாமிய சமயங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இவரும் பல நூல்களை எழுதி உள்ளார்.
சரி... குமரிக்கண்டதினைப் பற்றி பார்த்தாயிற்று.. மேலும் விவிலியம், அசோகர், சமணம்...புத்தம், பக்தி இயக்கம் போன்றியவற்றை பற்றியும் பார்த்து இருக்கின்றோம். ஆனால் அந்த அனைத்துச் செய்திகளும் கோர்க்கப் படாத முத்துக்களைப் போல் தனித்தனியே இருக்கின்றன... உலகின் வரலாறினை அறிய அந்த முத்துக்கள் கோர்க்கப்பட வேண்டும்.
கோர்ப்போம்... உலகின் வரலாறு காத்து இருக்கின்றது...!!!
உலகின் வரலாறு:
ஆதியில் ஆணும் பெண்ணும் குமரிக்கண்டத்தினில் படைக்கப்படுகின்றனர்.
அவர்கள் தமிழ் மொழியில் இறைவனிடம் பேசுகின்றனர். தமிழிலேயே உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பெயர் இடுகின்றனர். பூமியின் தட்பவெட்ப நிலைக்கு ஏதாக அவர்கள் கருப்பு நிறத்தில் இருக்கின்றனர்.
மனிதன் தொடர்ந்து குமரிக்கண்டதினில் வாழ்ந்து வருகின்றான். காலத்தில் மனிதன் எண்ணிக்கையில் பெருகுகின்றான். அச்சூழ்நிலையில் தான் குமரிக்கண்டம் கடற்கோள்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இந்தக் கடல்கோள்களுக்கு காரணம் பனிக்காலத்தின் முடிவுக்காலத்தில் ஏற்ப்பட்ட பனி உருகலும் அதனால் கூடிய கடல் அளவுமே என்று அறிவியல் கூறுகின்றது.
சிலர் கருதுவது போல குமரிக்கண்டம் ஒரே அடியாக மூழ்கிப் போய்விடவில்லை. இதனை தமிழ் சங்க இலக்கியங்கள் மூலமாக நாம் அறிந்துக் கொள்ளலாம்.
முதல் வெள்ளத்தில் தப்பிய மக்கள் குமரிக்கண்டத்தின் வடக்கே நோக்கி செல்கின்றனர். மீண்டும் சில வருடங்களுக்கு பின்னர் கடற்கோள் தாக்க மீண்டும் மனிதன் வடக்கே நகருகின்றான். நகர்ந்து இன்றைய தமிழகத்தில் குடி ஏறுகின்றான். இக்காலத்தில் தான் குமரிக்கண்டம் முழுமையாக அழிகின்றது.
இன்றைய ஆசுற்றேலியாவினையும் ஆபிரிகாவினையும் ஆசியாவோடு இணைத்துக் கொண்டு இருந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு கடலினுள் போக சில புவி மாற்றங்கள் பூமியில் நடக்கின்றது. கடலினுள் இருந்த இமயமலை மேலே வருகின்றது. குமரிக் கண்டம் இருந்த இடத்தினில் தற்போதைய இந்திய மகாக்கடல் தோன்றுகின்றது.
பின் காலப்போக்கில் மனிதர்களின் எண்ணிக்கை கூடக் கூட அவர்கள் வேறு இடம் தேடிச் செல்ல ஆரம்பிக்கின்றனர். சிலர் தெற்கே சென்று எகிப்தில் குடியேறுகின்றனர். சிலர் கிழக்கே செல்லுகின்றனர். சிலர் வடக்கே நோக்கி செல்லுகின்றனர். இவ்வாறு மக்கள் குமரிக்கண்டத்தின் அழிவிற்கு பின்னால் இடம்பெயர்ந்ததையே நோவா கதையாக சமய நூல்கள் கூறுகின்றன.
ஆனால் அனைத்து மக்களும் இடம் பெயரவில்லை. பலர் தமிழகத்திலேயே தங்கி விடுகின்றனர். தமிழகத்திலே ஒரு மாபெரும் கலாசாரம் மலர்ந்து இருக்கின்றது. நகரங்கள் தோன்றி இருந்தன. கடல் போக்குவரத்து சிறந்து இருந்தது. அவர்கள் விரும்பிய அனைத்தும் அங்கே கிடைக்கப் பெற்றது. பாண்டியனின் தலைமையில் தமிழர்கள் அங்கே நிகரின்றி விளங்கிக்கொண்டு இருந்தனர்.
வடக்கே சென்ற தமிழர்கள் தாங்கள் தங்கிய இடங்களுக்கு எல்லாம் தமிழிலேயே பெயர் வைக்கின்றனர். எனவே தான் நாம் இன்றும் அங்கே ‘ஊர்’ என்று முடியும் பெயர்களைக் காண முடிகின்றது. உதா.. செயப்பூர், கான்ப்பூர்.
வடக்கே சென்ற தமிழர்கள் சிலர் கங்கை நதியின் கரையில் சில நகரங்களைக் அமைத்து அங்கேயே குடியேறுகின்றனர். மேலும் சிலர் இன்னும் வடக்கே சென்று பல நகரங்களைக் கண்டப்பின் சிந்து சமவெளியினை அடைகின்றனர்.
பரந்து விரிந்த அந்த செழிப்பான இடத்தினைக் கண்டதும் அவர்கள் அங்கே ஒரு நாகரீகத்தினை தொடங்குகின்றனர். ஆனால் சில காலம் கடந்ததும் மீண்டும் உலகினைக் காண வேண்டும் என்ற ஆவல் மேல்லோங்க சில தமிழர்கள் சிந்து சமவெளியில் இருந்து மேற்கே செல்லுகின்றனர். அங்கே அவர்கள் சுமேரிய நாகரீகம், மேசொபோடமியா நாகரீகம் மற்றும் பாபிலூனிய நாகரீகம் போன்ற நாகரீகங்களைத் தோற்றுவிக்கின்றனர். (இந்தக் கூற்றுகளுக்கு சான்றுகள் பல இருக்கின்றன... அவற்றினை நாம் பின் வரும் பதிவுகளில் காண்போம்)
மேலும் சில மக்கள் வடக்கே செல்லத் தொடங்கினர். மக்கள் தாங்கள் சென்ற இடம் எங்கிலும் தங்களது வழிப்பாட்டு முறையினையும் கொண்டுச் சென்றனர். மிருக பழி வழிப்பாடு கிட்டதட்ட அனைத்து நாகரீகங்களிலும் காணப்படுகின்றது. அதேப் போல் கல் வழிபாடும் காணப்படுகின்றது.
தமிழகத்தில் இருந்து கிழக்கே சென்ற மக்கள் சிலர் தென் அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடிகொள்கின்றார்கள். சிலர் வட அமெரிக்காவிற்கு சென்று அங்கே குடிக்கொள்கின்றார்கள். சிலர் சப்பானில்… சிலர் சீனாவில்… சிலர் ஆசுற்றலியாவில்…!!! இவ்வாறு உலகம் முழுவதும் தமிழர்கள் பரவுகின்றனர். (இந்தக் கூற்றினை அம்மக்களின் வரலாற்றினையும் மொழியினையும் வைத்துப் பார்த்து நாம் ஆராய்ந்தாலே அறிந்துக் கொள்ள முடியும்... அவற்றினையும் நாம் மற்ற பதிவுகளில் பார்ப்போம்.)
இந்தக் காலத்தில் தான் புவியின் வெட்ப நிலைக்கு ஏற்றார்ப் போல், குளிர் பிரதேசங்களான மேற்கு பகுதிக்கும் வடக்கு பகுதிக்கும் சென்ற தமிழர்களின் நிறம் வெண்மையாக மாறத் தொடங்குகின்றது. தலைமுறை தலைமுறையாக மேற்கிலேயே தங்கிய மக்கள் தாங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்னும் உண்மையினை காலப்போக்கில் மறக்கத் தொடங்குகின்றனர். ஆனால் கிழக்கில் ஒரு வளமையான நாடு இருக்கின்றது என்ற செய்தி மட்டும் கதையாக அவர்களிடம் பதிந்து விடுகின்றது.
இந்தக் காலத்தில் தான் தமிழ் மொழி மருவ ஆரம்பிக்கின்றது. பிரிந்து சென்ற குழுக்களிடம் புது புது மொழிகளாய் அது உருமாறுகின்றது. இலத்தின், கிரேக்கம் போன்ற மொழிகள் உருபெருகின்றன.
அதேப்போல் மக்கள் இவ்வாறு இடப்பெயர்ச்சி செய்துக் கொண்டு இருந்த காலத்திலும், தமிழகத்தில் இருந்த மக்கள் அந்த அனைத்து நாகரீகங்களுடனும் வாணிக அளவிலான தொடர்பினை வைத்து இருந்தனர்.
எனவே உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழகத்திற்கு வந்து செல்வதும், தமிழர்கள் அவர்களின் நாடுகளுக்குச் செல்வதும் காலத்தில் நடைப் பெற்றுக் கொண்டே இருந்தன. இன்றைய கேரளாவில் அதாவது அன்றைய சேர நாட்டில் கிரேக்கர்கள், அரபியர்கள் போன்றவர் வந்து வாழ்ந்து இருந்தனர் என்பது வரலாற்றில் இருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.
மேலும் பண்டைய ரோமர்களின் நாணயங்கள் தமிழகத்தில் அதிகமாக கிடைப்பதும் அத்தகைய வாணிகம் தமிழகத்தினில் நடைப்பெற்றது என்பதற்கு சான்றாக உள்ளது.
இவ்வாறே காலங்களும் ஓடிக் கொண்டு இருக்கின்றன. உலகில் பல நாகரீகங்கள் தோன்றி விட்டன. சில அழிந்தும் விட்டன.
ஒவ்வொரு நாகரீகங்களுக்கும் இடையே போர்களும் தோன்றிவிட்டன.
மனிதன் உலகின் பல்வேறு மூலைக்கும் சென்று பரவி விட்டான். இந்தக் காலத்தில் தான் மேற்கில் இருந்து சில நாடோடிகள் சிந்து சமவெளியின் மீது படை எடுத்து வருகின்றனர். அவர்களைத் தான் நாம் ஆரியர்கள் என்கின்றோம். அவர்கள் கிரேக்கம் மற்றும் மத்திய ஆசியாவில் இருந்து குதிரையின் மீது ஏறி வந்தவர்கள். யாகம் மற்றும் வேள்வி முறையில் நம்பிக்கை உடையவர்கள்.
அதாவது நெருப்பினை மூட்டி அதில் யாகம் செய்வது.
அந்த நெருப்பினில் உணவுப்பண்டங்களையும் மற்ற பொருட்களையும் போட்டால் அப்படிப் போடப்பட்ட பொருட்கள் கடவுளிடம் போய் சேரும் என்ற நம்பிக்கையினைக் கொண்டவர்கள்.
அதாவது இப்பொழுது ஒரு நெருப்பினை மூட்டி அதில் ஒரு பழத்தினைப் போட்டீர்கள் என்றால் அந்தப் பழம் இறைவனிடம் சென்று விடும். அப்படி சென்ற பழத்தினை இறைவன் உண்டு விடுவார். இது கிரேக்க வழிப்பாட்டு பழக்கம்.
இதே முறை இப்பொழுது நம் ஊரினில் ‘சுவாகா…சுவாகா…!!!’ என்றுக் கூறிக் கொண்டு நெருப்பினில் உணவினைக் கொட்டும் முறையாக இருப்பதை நாம் எல்லா யாகங்களிலும் காணலாம்.
சுவாகா - என்றால் சாப்பிடுங்கள் என்றுப் பொருள்.
அப்பேர்ப்பட்ட ஆரியர்கள் சிந்து சமவெளியினை அடைகின்றார்கள். நீண்ட நெடிய போருக்குப் பின் சிந்து சமவெளி மக்கள் பின் வாங்குகின்றார்கள். சிந்து சமவெளி நாகரீகம் மெதுவாக அழிகின்றது. ஆரியர்கள் வட நாட்டினுள் நுழைகின்றனர். ஆனால் சிந்து சமவெளியில் அவர்களுக்கு கிடைத்த வெற்றி இந்தியாவின் மற்ற இடங்களில் அவர்களுக்கு கிட்டவில்லை. அங்கு ஏற்கனவே சென்று தங்கி நகரங்களைக் கட்டி வாழ்ந்து வந்த தமிழர்கள் ஆரியர்களைக் காட்டிலும் பலம் பொருந்தியவர்களாக இருந்ததினால் ஆரியர்களின் போர் முயற்சிகள் அங்கே வெற்றிப் பெறவில்லை. மேலும் ஆரியர்களாக வந்தவர்களின் எண்ணிக்கை தமிழர்களை கணக்கிடும் பொழுது மிகவும் குறைவு.
எனவே ஆரியர்கள் மாற்று வழியினை யோசித்தார்கள்.
“வெள்ளையர்களான நம்மால் கறுப்பர்களான இந்த மக்களை பலத்தினால் வெல்ல முடியவில்லையா…. சரி… அப்படியானால் நாம் தந்திரத்தினால் வெல்வோம்…!!!” என்று முடிவு செய்துக் கொண்டு அந்த மக்களுடன் கலந்தனர்.
வந்தோரை வாழ வைக்கும் தமிழர்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர்.
அவ்வாறு தமிழர்களுடன் கலந்த ஆரியர்கள் தமிழர்களின் வழிப்பாட்டு முறைகளுடன் தங்களது முறைகளை கலக்க ஆரம்பித்தனர்.
“என்ன ஐயா செய்கின்றீர்.. வெறுமனே பலி இட்டால் போதுமா…நெருப்பினை மூட்டி அதனில் சில மந்திரங்களை சொல்லிவாறே இந்தப் பலியினைக் காணிக்கை செய்தால் தானே ஐயா இப்பலி இறைவனை திருப்தி படுத்தும்…இது தெரியாமல் இருக்கின்றீர்களே…” என்றுக் கூறிக் கொண்டே அந்த மக்களின் மனதினை மாற்றுகின்றனர்.
வீரத்தினிடம் வீழாத தமிழர்கள் தந்திரத்தில் வீழுகின்றனர். மந்திரம் மற்றும் யாகம் ஆகியனவற்றை அறியாத சமுதாயத்தினுள் மெல்ல யாகம் அடி எடுத்து வைக்கின்றது. தமிழர்களின் இந்த வீழ்ச்சி ஆரியர்களுக்கு வசதியாக போய் விடுகின்றது. இதை அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழர்களின் கடவுள்கள் பழக்கவழக்கங்கள் முதலியவற்றுள் அவர்களின் கருத்துக்களை திணிக்கின்றனர். கிரேக்க கதைகளை ஒட்டிய இதிகாசக் கதைகள் தமிழ் கடவுள்களுக்கு எழுதப்படுகின்றன. ஆரியர்கள் வட நாட்டினில் தங்களை நிலைப் பெற செய்துக் கொள்ளுகின்றனர். நிற்க.
"ஆரியர்கள் எண்ணிக்கையில் குறைவு என்று கண்டோம். பின்னர் எவ்வாறு அவர்கள் அவ்வளவு செல்வாக்கினைப் பெற்றார்கள். அவர்கள் இனம் தமிழர்களிடையே எவ்வாறு தழைத்தது" என்றுக் கேட்க்கின்றீர்களா... ஆரியர்கள் தமிழர்களை மணமுடித்துக் கொண்டனர். மணமுடித்துக் கொண்டு அவர்களுடன் கலந்தனர். ஆனால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தினை மட்டும் விடாது இருந்தனர்.
இவ்வாறே சென்றோம் என்றாம் சூழ்ச்சியால் மக்களை அடக்கி ஆண்டு விடலாம் என்று அவர்கள் என்னும் பொழுது தான் மகாவீரரும் புத்தரும் வருகின்றனர்.
ஆரியர்கள் திகைக்கின்றனர்….”யாகத்தினையும் பலியையும் வைத்து நாம் பிழைப்பினை ஒட்டிக் கொண்டு இருக்கும் பொழுது பலி கூடாது என்று இவர்கள் சொல்லுகின்றார்களே… என்ன செய்வது” என்று யோசிக்க ஆரம்பிக்கின்றனர்.
அந்தக் காலத்தில் தான் அசோகரும் வருகின்றார்….!!! பௌத்தமும் சமணமும் வட நாட்டில் நன்றாக பரவுகின்றது.
ஆரியர்கள் திகைத்தவாறே நிற்கின்றனர்.
வரலாறு தொடரும்….

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...