செவ்வாய், 24 ஏப்ரல், 2018

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-6



கி.பி ஏழாம் நூற்றாண்டில் வடக்கே ஆர்ய வர்த்தம் நிலைப்பெற்ற அதே காலக் கட்டத்தில் தெற்கிலேயும் சைவ வைணவ சமயங்களின் வாயிலாக ஆரிய வேள்வி நெறிகள் வளரத் தொடங்கின.
சமணம் மற்றும் புத்த சமயங்களை தனித்து எதிர்க்க திராணி இல்லாது வலுவிழந்திருந்த வேத நெறிக் கருத்துக்கள், சைவம் மற்றும் வைணவ சமயங்களின் வளர்ச்சியோடு இலைமறைக் காயாய் மீண்டும் வளர ஆரம்பித்தன. சைவ வைணவக் கருத்துக்களுடன் வேள்வி நெறிக் கருத்துக்கள் இணைக்கப்பட்டன. இணைத்தே பரப்பவும் பட்டன. வேத நெறிக் கருத்துக்கள் இருந்தமையால் வடக்கேயும் இக்கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தமிழில் தோன்றிய இலக்கியங்கள் சமசுகிருதத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு வடக்கேயும் பரப்பப் படுகின்றன.
வெகு விரைவில் சைவ வைணவக் கொள்கைகள் வேறு... ஆரிய
வேள்விக் கொள்கைகள் வேறு என்ற நிலை மறைந்து இரண்டுக் கொள்கைகளும் ஒன்றே என்ற நிலை தோன்றலாயிற்று.இந்நிலையில் தமிழர்கள் பின் தள்ளப்படுகின்றனர்...ஆரியர்கள் செல்வாக்கினைப் பெற ஆரம்பிக்கின்றனர்.
"மேன்மையான நிலைக்கு வந்தாயிற்று...நல்லது!!! ஆனால் இந்த நிலை நிரந்தரமல்ல. இப்பொழுதே சில கேள்விகள் நம்முடைய கொள்கைகளைப் பற்றி எழுகின்றன. எனவே நம் நிலை எப்பொழுது வேண்டும் என்றாலும் மாறலாம்...ஆனால் மாறக் கூடாது. நாம் உயர்ந்தவர்கள். உயர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். அதற்கு என்ன வழி..!!!" என்று ஆரியர்கள் சிந்தித்துக் கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த வழி அவர்களின் கண்ணுக்குப் புலனாகின்றது.
'பிறவி சுழற்சிக் கொள்கை - செய்யும் செயலினைப் பொறுத்தே பிறவிகள்' என்ற புத்த சமணத் தத்துவமே அந்த வழி.
என்ன புத்த சமணத் தத்துவமா?... அச்சமயங்கள் தான் தங்கள் செல்வாக்கினை இழந்து விட்டனவே... பின் எவ்வாறு அவற்றின் கொள்கைகள் இவர்களுக்கு உதவி இருக்க கூடும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழும்பக் கூடும்.
உண்மைதான்... புத்தமும் சமணமும் தங்களின் செல்வாக்கினை இழந்து தான் இருந்தன. ஆனால் அவற்றின் மறுப்பிறவிக் கொள்கை மட்டும் மக்களிடம் அதன் செல்வாக்கினை இழக்காது நின்று இருந்தது. கடவுள் இல்லை என்ற நிலை கடந்து கடவுள் இருக்கின்றார் என்ற நிலை வந்தும் மக்கள் மறு பிறவிகளில் நம்பிக்கையினை கொண்டு தான் இருந்தனர்.
அந்த நம்பிக்கை தான் ஆரியர்களுக்கு அவர்கள் தேடிய வழியாய் அமைந்தது. அவ்வழியினை அமைத்துத் தந்தவர் தாம் ஆதி சங்கரர்.
"நாம் உயர்ந்தவர்கள்... ஆனால் எதனால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்றுக் கேட்டால் என்ன சொல்வது... அறிவு, பண்பு, வீரம் மற்றும் பொருள் போன்றக் காரணிகளால் நாம் உயர்ந்தவர் என்றுக் கூறினால் அவற்றில் நம்மைக் காட்டிலும் சிறந்தவர்கள் இருக்கின்றனர்... அப்பொழுது அவர்களும் உயர்ந்தவர்கள் ஆவார்கள்... நம்முடைய மேன்மை அப்பொழுது கேள்விக்குறி ஆக்கப்படும்...!!! ஆனால் நம்முடைய மேன்மை கேள்விகளுக்கு அப்பாற்ப்பட்டதாக இருக்க வேண்டும்.அதற்கு மேன்மை நம் பிறப்பில் இருக்க வேண்டும். நான் பிறப்பால் உயர்ந்தவன்... நீ உயர்ந்தவனாக இருக்க வேண்டும் என்றால் என் இனத்தில் பிறந்து இருக்க வேண்டும்...இல்லையெனில் மன்னித்துக் கொள் நீ என்னை விடத் தாழ்ந்தவன் தான்...!!! ஆம்..!!! இது தான் சரி... நம் மேன்மையை யாரும் கேள்விக் கேட்காதிருக்க இது தான் சரியான வழி" என்றவாறே 'பிறவிச் சுழற்சிக் கொள்கையினை' தங்களின் தேவைகேற்ப மாற்றிக் கொள்ள ஆரம்பித்தார். மாற்றிக் கொள்ள ஆரம்பித்தக் காலாம் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு.
"நீ முற்பிறவியில் செய்த செயலின் காரணமாகத் தான் இப்பிறவி. சென்றப் பிறவியில் பல நன்மைகள் செய்து இருந்தால் பிராமணனாகப் பிறப்பாய்... இல்லையெனில் செய்த பாவத்திற்கேற்ப பிறப்பாய்... சத்திரியனாய்... அல்லது வைசியனாய்... அல்லது சூத்திரனாய். இதுவே இறைவனின் நியதி"என்பதே அந்தக் கருத்து. மக்களை பிறப்பிலேயே பிரிக்கும் இந்தக் கருத்து அப்போதைய அரசியல் சூழ்நிலைகளால் நசுக்கப்படாது வளர்க்கப்படுகின்றது. இறைவன் பெயரினைச் சொல்லி மக்கள் தாழ்த்தப்படுகின்றனர். மக்கள் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தோன்றிய சைவ வைணவத் தத்துவங்கள் ஆரியர்களால் திசை மாற்றப்படுகின்றன.
ஆரியர்கள் தங்களை உயர்ந்தவர்களாக நிலை நிறுத்திக் கொள்ள நல்லதொருக் காலக்கட்டமும் அமைகின்றது. அது வரை இருந்த பல விடயங்களுக்கு அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன.
ஆரியர்களின் சட்ட நூலாக இருந்த மனு தர்மம், மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய சாசுத்திரமாக மாற்றப் படுகின்றது. பிராமணர்கள் என்ற சொல்லுக்கு அர்த்தமும் மாற்றப்பட்டு ஒரு புது பிரிவு உருவாக்கப்படுகின்றது.
சிவனைக் வணங்குபவர் - சைவர்.
பெருமாளை வணங்குபவர் - வைணவர். என்ற இந்த இரு மக்கள் பிரிவுகளுக்குள் புதிதாய், 'பிராமணன்' என்ற சொல்லுக்கு அர்த்தம் மாற்றப்பட்டு ஒரு புதிய பிரிவு உருவாகின்றது.
பிராமணன் - நான் பிரமன்.. அதாவது 'நான் கடவுள் (அகம் பிரமாச்மி)' என்றப் பொருள் கொண்ட பிரிவே அது.
இந்தப் பிரிவுகளுக்கு ஏற்ப புராணக் கதைகளும் மாற்றப்படுகின்றன. இவை அனைத்தினையும் செய்தவர் ஆதி சங்கரர். இந்தக் கொள்கையினை பரப்ப அவர் ஆரம்பித்த மடங்கள் தான் இன்றைய சங்கர மடங்கள்.
இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு ஆரியர்களுக்கு உதவிய தமிழர்கள் சற்சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்களே இன்றைய உயர்சாதியினர்.
இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாது ஆரியர்களை எதிர்த்த தமிழர்கள் பஞ்சமர்கள் எனப்பட்டனர். இன்றைய தாழ்த்தப்பட்டோர் இவர்கள் தாம்.
மற்ற தமிழர்கள் எல்லாம் சூத்திரர்கள் எனப்பட்டனர். இவர்கள் தான் இன்றைய பிற்படுத்தப்பட்டோர்.
மலைக்கு தப்பி ஓடியவர்கள் மலைவாழ் சாதியினராயினர்.
இந்த நிலையில் ஒரு கேள்வி எழலாம்...!!! 'இவர்கள் இவ்வளவு மாற்றங்கள் செய்து இருக்கின்றார்களே... இதனைக் கண்டித்து தமிழகத்தில் ஒருக் கேள்விக் கூட எழவில்லையா' என்று நீங்கள் கேட்கலாம்.
கேள்விகள் எழத்தான் செய்தன... மாற்றுக் கருத்துக்களும் வரத் தான் செய்தன. அந்த கேள்விகளை எழுப்பியவர்களுள் முக்கியமானவர்கள் நம் சித்தர்கள். அதனாலையே அவர்களை பஞ்சமர்கள் என்று ஆரியர்கள் கூறினர்.ஆனால் தமிழகத்தில் அன்று சமசுகிருதம் ஆட்சி மொழியாக இருந்தமையால் (பல்லவர் ஆட்சி காலம்) தமிழ் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. மேலும் அரசியல் செல்வாக்கினால் இந்தக் கருத்துக்கள் மக்களிடையே சென்றடையாது மறைக்கப்பட்டன. சில நூல்கள் அழிக்கப்பட்டன... சில கருத்துக்கள் மாற்றப்பட்டன. இப்படிப்பட்ட காரணிகளால் பல கருத்துக்கள் மக்களிடையே சேராது மறைக்கப்பட்டன.
ஒரு வேளை பல்லவர்களின் ஆட்சியே தமிழகத்தில் தொடர்ந்திருக்கும் என்றால் அந்தக் கருத்துக்கள் இன்று நமக்கு கிட்டாமலே போயிருக்கக் கூடும். ஆனால் தமிழகத்தின் பொற்காலமும் வருகின்றது சோழனின் வாயிலாக... இராசஇராச சோழனின் வாயிலாக!!!
தமிழின் அனைத்து இலக்கியங்களும் சமசுகிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சமசுகிருதம் வளர்க்கப்பட்டுக் கொண்டு இருந்தக் காலக் கட்டத்தில், இராச இராச சோழனால் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு தமிழ் மீண்டும் புத்துயிர் பெறுகின்றது. கோவில்களில் தமிழர்கள் வழிபாட்டினை மேற்கொள்கின்றனர். தமிழிலேயே இறைவனை வணங்குகின்றனர். தமிழ் பாடல்களே இசைக்கப் படுகின்றன. சித்தர் பாடல்கள் தொகுக்கப்படுகின்றன. சைவ வைணவ இலக்கியங்கள் முழுவதுமாக இயன்ற வரை தொகுக்கப்படுகின்றன.ஆரியர்களின் செல்வாக்கு தமிழகத்தில் குறைய ஆரம்பிக்கின்றது. தமிழ் மேன்மை அடைய ஆரம்பிக்கின்றது.
ஆனால் முழுமையான மேன்மை தமிழ் அடையவில்லை.ஏனெனில் சைவ வைணவ இலக்கியங்களைத் தொகுக்கும் பணியில் ஆரியர்களும் இருந்தனர.
பன்னிரு திருமுறைகளை தொகுத்த நம்பியாண்டார் நம்பி ஒரு ஆரியர். எனவே தான் சம்பந்தரைப் பற்றி ஆறு பிரபந்தங்கள் பாடிய அவர் அப்பரைப் பற்றி ஒன்றே ஒன்றினை மட்டும் பாடி உள்ளார்.
அதேப் போல் 63 நாயன்மார்களைப் பற்றி பெரிய புராணம் பாடிய சேக்கிழாரும் நூலில் பெறும் பகுதியை வேள்வி நெறிக் கருத்துக்களை வளர்த்த சம்பந்தருக்கே ஒதுக்கி உள்ளார்.
இது போன்ற செயல்களால் தமிழ் என்ன தான் வளர முயற்சித்தாலும் அதனுடன் இணைந்து இலைமறைக்காயாக வேள்வி நெறிக் கொள்கையும் ஆரியமும் வளர்ந்து கொண்டே வந்தன. முழுமையான வெற்றி கிட்டவில்லை என்றாலும் சோழனின் இந்த முயற்சிகள் காரணமாகத் தான் இன்று தமிழ் இன்னும் தனித் தன்மையுடன் இருக்கின்றது. இல்லையெனில் என்றோ சமசுகிருதத்தில் இருந்து தான் தமிழ் தோன்றியது என்ற கருத்தினை மறுப்பதற்கு நமக்கு விடயமே கிட்டாது போயிருக்க கூடும். ஆரியத்தினை எதிர்த்து உண்மையான நெறிகளைக் கூறிய சித்தர்களின் பாடல்களும் கிட்டாமலே போயிருக்க கூடும்.
என்ன ஆரியர்களை சித்தர்கள் எதிர்த்தார்களா?... வேள்வி நெறிகளையும் அவர்கள் எதிர்த்தார்களா என்று கேள்விக் கேட்கின்றீர்களா... அப்படி என்றால் திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்றையும் சிவவாக்கியரின் பாடல் ஒன்றையும் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது. அடுத்தப் பதிவில் அவற்றினை பார்ப்போம்... அதனுடனே குகை இடிக்கலகம், கோவிலில் சமசுகிருத அர்ச்சனை போன்றவற்றினைப் பற்றியும் பார்ப்போம்..
சித்தர்கள் ஆரியர்களை எதிர்த்தார்கள் என்றுக் கண்டு இருந்தோம். அவ்விடயதினைப் பற்றி விரிவாக நாம் பார்க்க இதோ திருமூலரின் திருமந்திரப் பாடல் ஒன்று..
"பேர்கொண்ட பார்ப்பான் பிறான் தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே” (திருமந்திரம்-519)
மேலே உள்ள திருமந்திரப் பாடலில் திருமூலர் 'பேர் கொண்ட பார்ப்பானை' அர்ச்சித்தால், அதாவது அவர்களின் பேச்சினைக் கேட்டால் நாட்டுக்கும் அரசனுக்கும் பெரும் தீங்கு வரும் என்றுக் கூறுகின்றார். எளிதான பாடல் தான். ஆனால் இங்கே திருமூலர் யாரையோ 'பேர் கொண்ட பார்ப்பான்' என்று குறிப்பிடுகின்றார். 'பார்ப்பான்' என்ற பெயர் நமக்குத் தெரியும் ... ஆனால் யார் அது 'பேர்க் கொண்ட பார்ப்பான்'. சற்று பார்ப்போம்...
'பார்ப்பான்' 'அந்தணர்' மற்றும் 'ஐயர்' போன்ற சொற்கள் எல்லாம் தூய தமிழ் சொற்கள். இவை இறை பணி செய்பவரையும் அறநெறிப்படி வாழ்பவரையும் குறிக்கும் மதிப்பு மிக்க சொற்கள். ஆனால் காலத்தில் ஆரியர்கள் தமிழ் மக்களுடன் கலந்து, அவர்களது வேத நெறிக் கொள்கையினைப் பரப்பி மக்களை ஏமாற்றி பார்ப்பான், அந்தணர் மற்றும் ஐயர் ஆகிய பெயர்களுக்குள் தங்களை இணைத்துக் கொண்டனர். எனவே தூய தமிழ் பெயர்களான அந்தச் சொற்கள் இப்பொழுது பிராமணர்களைக் குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டதால் தான் திருமூலர் 'பேர் கொண்ட பார்ப்பான்' என்கின்றார். ஏனெனில் பார்ப்பான் என்றப் பெயரில் பிராமணர்கள் சமுகத்தில் நுழைந்து அவர்களின் வேத நெறிக் கருத்துக்களை பரப்பிக் கொண்டு இருந்தனர். எனவே அவர்களின் சொல்லினைக் கேட்டால் நாட்டுக்கும் அரசனுக்கும் பெரும் கேடு என்று தான் சொல்லவந்த கருத்தினை திருமூலர் கூறுகின்றார்.
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ. - சிவவாக்கியர்
இறைவனை புரிந்துக் கொள்ளாது மந்திரங்கள் சொல்வதும் கல்லுக்கு பூக்கள் சூடி பூசை செய்வதும் பலனில்லை என்ற மேலே உள்ள சிவவாக்கியரின் இந்தப் பாடலும் ஆரியர்களின் வழிப்பாட்டு முறையினை கேள்விக்கு உள்ளாக்குகின்றது. ஆனால் சித்தர்கள் எவ்வளவு முயன்றும் ஆரியர்களின் செல்வாக்கினை சரிக்க இயலவில்லை.
காரணம்...ஆரியர்களின் அரசியல் செல்வாக்கு. காலத்தில் அரசியலும் மதங்களும் ஒன்றாகக் கைகோர்ப்பதை நாம் வரலாறு எங்கிலும் கண்டு வந்து இருக்கின்றோம். தான் ஆட்சியில் இருக்க மதத்தினை ஆயுதமாக பயன்படுத்திய அரசர்கள் பற்றியும் நாம் கண்டு இருக்கின்றோம்... கிருத்துவத்திற்கு எப்படி ஒரு கோன்சன்டைன் மன்னனோ, அவ்வாறே ஆரியர்களுக்கும் சில மன்னர்கள் இங்கே துணைப்போகின்றனர்...பதவிக்காக...பொன்னிற்காக.. மேலும் பல காரணங்களுக்காக!!!
இந்த நிலையில் தான் "அரசியல் செல்வாக்கும் இருக்கின்றது...சமயங்களும் நம் கையில் இருக்கின்றன. ஆனால் இந்தச் சித்தர்கள் மட்டும் தொல்லைக் குடுத்தவாறே இருக்கின்றனரே.இவர்களை முதலில் ஒழிக்க வேண்டும்" என்று எண்ணி அரசர்களின் உதவியோடு சித்தர்களை வேட்டையாட ஆரியர்கள் ஆரம்பிக்கின்றனர்.
சித்தர்கள் காடுகளுக்கு துரத்தப்படுகின்றனர். காட்டினில் குகைகளில் அவர்கள் பதுங்குகின்றனர். ஆனால் ஆரியர்களுக்கு அதுவும் பொறுக்கவில்லை.
"நம்முடைய கருத்திற்கு மறுக் கருத்தினை சொல்பவன் எவ்வாறு உயிரோடிருக்கலாம்?... தவறாயிற்றே... கொல் அவர்களை...குகையில் பதுங்கி இருந்தார்கள் என்றால் அந்த குகையுடன் சேர்த்தே அவர்களுக்கு சமாதியினை கட்டுங்கள்... அவர்கள் கடவுளின் எதிரிகள்" என்றவாறே குகையில் பதுங்கி இருந்த சித்தர்களை குகையில் வைத்தே கொல்லவும் செய்கின்றனர். சித்தர்கள் இருக்கக் கூடும் என்று எண்ணப்பட்ட குகைகள் எல்லாம் இடிக்கப்படுகின்றன.
தமிழக வரலாற்றில் இந்த நிகழ்வுகள் குகை இடிக் கலகம் என்றே வழங்கப்பெறுகின்றது. இதன் காலம் கி.பி 13 ஆம் நூற்றாண்டு. சித்தர்கள் தலைமறைவாகின்றனர். ஆரியர்கள் கேள்விக்கேட்பார் இன்றி மேன்மையினை அடைகின்றனர். பல சித்தர்கள் பாடல்களும் தமிழ் பாடல்களும் அழிக்கப்படுகின்றன.
இந்தக் காலத்திலும் கோவிலில் தமிழே அர்ச்சனை மொழியாக இருக்கின்றது. தமிழ் பாடல்களே இசைக்கப்படுகின்றன. காரணம் இன்னும் சைவக் கோவிலிலும் வைணவக் கோவிலிலும் தமிழர்கள் பொறுப்பில் இருக்கின்றனர்.
சைவக் கோவில்களில் பூசாரிகளாக பறையர்கள் இருக்கின்றனர். வைணவக் கோவிலில் பாணர்கள் இருக்கின்றனர்.
ஆனால் இந்த நிலை வெகுக் காலம் நீடிக்க வில்லை. சிதம்பரத்தில் பறையர்களை துரத்தி விட்டு தீட்சிதர்கள் நுழைய அதை எதிர்கின்றார் இறுதி நாயன்மாரான நந்தனார். ஆனால் எதிர்ப்பு பயன் தராது போகவே இறுதியில் நந்தனார் கொலை செய்யப்படுகின்றார். முக்தி அடைந்து விட்டார் என்று அவரின் சரித்திரமும் மூடப்படுகின்றது. இதைப்போலவே பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வாரும் கொல்லப்பட்டார் என்பதே வரலாற்றுச் செய்தியாகும்.
இவ்வாறு இறுதி நாயன்மாரும் ஆழ்வாரும் காலமாக, எவ்வித எதிர்ப்பும் இன்றி கோயிலுள் அரச மரியாதையுடன் சமசுகிருதம் நுழைகின்றது. தமிழ் வெளியேற்றப்படுகின்றது. சைவ வைணவ மதங்கள் முழுமையாக ஆரியர்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன.வேத நெறியினை போற்றும் நூல்களே முதன்மையாக வைக்கப்படுகின்றன. அவற்றினை முன்வைத்தே கதைகள் பல இயற்றப்படுகின்றன. சாதிப் பிரிவுகள் சமுகத்தின் வேர்களாக ஆக்கப் படுகின்றன.பிரித்தாளும் சூழ்ச்சி நடைமுறைப் படுத்தப்படுகின்றது. சாதிகளுக்கும் சாதிகள் உருவாக்கப்படுகின்றன. மக்கள் பிரிக்கப்படுகின்றனர்.
பிரிக்கப்பட்டவர்களுக்குள் வன்மம் விதைக்கப்படுகின்றது. பகை உணர்ச்சிகளும் தான். அவற்றின் இடையே உண்மையான கருத்துக்கள் புதைக்கப்படுகின்றன. திசை மாறிய ஒரு சமுகம் மலரத் தொடங்குகின்றது.
அன்று வெளியேறிய தமிழ் இன்று வரை வெளியிலேயே காத்துக் கொண்டு நிற்கின்றது. தேவாரமும் திருவாசகமும் இசைக்கப் பட்ட இடங்களில் இன்று புரியாத மந்திரங்கள் ஓதப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.
பின்னர் ஆட்சிகள் மாறினாலும் மக்களின் இந்த இழிநிலை மாறவில்லை. முகமதியர்கள் வந்தாலும் சரி...ஆங்கிலேயர்கள் வந்தாலும் சரி...தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். காரணம் - அது அவர்களின் இறைவன் வகுத்தது... வேதம் அவ்வாறு தான் சொல்கின்றது. இதை மாற்ற யாருக்கும் உரிமைக் கிடையாது. மக்கள் அவர்களின் அவலங்களுக்குரிய காரணத்தினை அறியாமலேயே காலத்தினை நகர்த்திச் செல்கின்றனர்.
'ஏன்' என்றுக் கேட்க அவர்களுக்கு உரிமை இல்லை... ஏனென்றால் வேதமும் மனு தர்மமும் அதைத் தான் போதிக்கின்றன. கேள்விக் கேட்பது இறைக் குற்றம். 'எங்கே வேதம் அவ்வாறு சொல்கின்றதா...அவற்றைக் காட்டுங்கள் நாங்கள் பார்கின்றோம்' என்றால் அவற்றை அவர்கள் பார்க்க முடியாது... படிக்கவும் கூடாது. ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள். மேலும் உண்மையினை கூறும் நூல்கள் பலவும் மறைக்கப்பட்டு இருந்தன. எனவே படிக்கவும் முடியாது... அவ்வாறு படிக்க எண்ணினாலும் உண்மையானக் கருத்துக்களை படிக்க இயலாது என்ற நிலையில் அறியாமையிலையே மக்கள் அடிமையாக காலத்தினை கழித்துக் கொண்டு இருக்கின்றனர்.
மக்களின் அந்த நிலை ஆங்கிலேயர்களின் வருகையினால் மேலும் மோசமாகின்றது. மனுதர்ம சாசுத்திரம் ஆங்கிலேயர்களால் இந்து சமய மக்களுக்கு உரிய சட்டமாக ஆக்கப்படுகின்றது. (இதைப் பற்றி முதல் பதிவில் பார்த்து இருக்கின்றோம்). பின்னர் பெரியார் வருகின்றார்...அம்பேத்கர் வருகின்றார்... மக்களுக்குரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்து நடந்தவை... நடந்துக் கொண்டு இருப்பவை பற்றி நாம் அறிவோம். போராட்டங்கள் இன்று வரை தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கின்றன.
சரி இந்து சமயத்தினைப் பற்றி ஓரளவு பார்த்தாயிற்று. எவ்வாறு தமிழகத்தில் தோன்றிய ஒரு இயக்கம் தமிழினை அடிமைப்படுத்த பயன்பட்டது என்பதினையும் கண்டாயிற்று.
ஆனால் இந்த விடயங்களைக் கொண்டு உலகின் முதல் மனிதன் தமிழன் என்று நாம் கூற முடியாது. உலகின் முதல் மனிதன் தமிழன் என்பதினைக் காண நாம் சிந்து சமவெளியில் இருந்து சற்று மேற்கே பயணிக்க வேண்டும்.
எவ்வாறு சிந்து சமவெளிக்கு கீழே வந்து இந்து சமயத்தினைப் பற்றிப் பார்த்தோமோ அதேப்போல் நாம் இப்பொழுது சற்று மேற்கே சென்று சுமேரியர்களையும் மெசொபோடமியர்களையும் அப்படியே கிருத்துவம் மற்றும் இசுலாமிய மதங்களையும் கண்டு கொண்டு வர வேண்டி இருக்கின்றது...
மேசொபோடோமியா...!!!
இன்றைய ஈராக், துருக்கி,சீரியா போன்ற நாடுகளை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பகுதி. டைகிரிசு மற்றும் யுபிரடுசு ஆகிய நதிகளின் இடையில் அமைந்த ஒரு வளமான பிரதேசம்.
சுமேரிய நாகரீகம்...பாபிலோனிய நாகரீகம் போன்ற உலகின் தலை சிறந்த நாகரீகங்கள் செழித்து விளங்கிய ஒரு இடம். எனவே தான் மேற்க்கத்திய ஆராய்ச்சியாளர்கள் முதலில் மேசொபோடோமியாவினை 'மனித நாகரீகத்தின் தொட்டில்' என்று கூறினர். இங்கிருந்து தான் உலகின் பல்வேறு நாகரீகங்கள் தோன்ற தலைப்பட்டன என்றும் அவர்கள் கருதினர்....சிந்து சமவெளி நாகரீகத்தினைக் அவர்கள் கண்டுப்பிடிக்கும் வரை!!! சிந்து சமவெளி நாகரீகம் ஆராய்ச்சியாளர்கள் அது வரை கொண்டு இருந்த கருத்தினை முற்றிலுமாக மாற்றிப் போட்டது.
"சரிங்க இருக்கட்டும்... அதான் அத பத்தியும் குமரிக்கண்டத்தைப் பத்தியும்  முன்னாடியே பாத்தாச்சில...இப்போ மேசொபோடோமியாவுக்கு வாங்க. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்த ஒரு நாகரீகம் எப்படி இன்றும் தழைத்து இருக்கும் ஒரு நாகரீகத்தின் கிளையாக இருக்க முடியும்? மேசொபோடமியர்களை தமிழர்கள் என்று எவ்வாறு சொல்லுகின்றீர்கள்...அந்த கதைக்கு வாங்க" என்று கூறுகின்றீர்களா...சரி!!!
மேசொபோடமியர்கள் தமிழர்களா என்று நாம் காண்பதற்கு முன் மேசொபோடமியர்களைப் பற்றி சற்று அறிந்துக் கொள்ள வேண்டி இருக்கின்றது.
உண்மையில் மேசொபோடமியர்கள் யார் என்று ஒரு கேள்வி எழும்புமானால் அதற்குரிய விடை 'தெரியவில்லை!!!' என்றே ஆய்வாளர்களிடம் இருந்து வரும். பல்வேறு காலங்களில் பல்வேறு மக்கள் அங்கே வந்து பல நாகரீகங்களை உருவாக்கி விட்டு சென்று இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யார்...எங்கிருந்து வந்தனர்...தெரியவில்லை. முதலில் சுமேரியர்...பின்னர் பாபிலோனியர் என்று பலர் அங்கே ஆதிக்கம் செலுத்தி இருந்தாலும் அவர்களின் தொடக்கம் ஒருக் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இந்நிலையில் தான் நாம் அவர்களது உலகின் தோற்றத்தினைப் பற்றிய நூலினை பற்றி ஆராய வேண்டியிருக்கின்றது.
என்ன...உலகத்தின் தோற்றம் பற்றி இன்னொரு நூலா என்று எண்ணுகின்றீர்களா?. ஒரு சின்ன திருத்தம். ஒரு நூல் அல்ல... இரு நூல்கள்!!!
ஈனும் -மா - எல் - இசு(Enuma-Elis) - எனப்படும் சுமேரிய இலக்கியமும்...
கில்காமேசு (GILGAMESH) - எனப்படும் மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியமும் தான் அவை.
இந்த நூல்கள் தான் இது வரைக் கிடைக்கப்பெற்ற நூல்களிலேயே உலகின் தொடக்கம் பற்றிக் கூறும் தொன்மையான நூல்கள். மேலும் ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் இவ்விரண்டு நூல்களுமே வெள்ளத்தினால் அழிவுண்ட உலகத்தினைப் பற்றியும் அதில் இருந்து இறைவன் அருளால் மீண்டு வந்த மாந்தனைப் பற்றியும் கூறுகின்றன. இங்கு தான் அறிவாளர்கள் குழம்புகின்றனர்.
ஏன் இந்த நூல்கள் வெள்ளத்தினைப் பற்றிக் கூற வேண்டும்?. மேசொபோடமியா இருக்கும் இடத்தில் இது வரை வெள்ளம் வந்ததுக்கான கூறுகளே இல்லையே. அதுவும் இவர்கள் கூறுவது போல உலகமே அழிந்து போகும் வண்ணம் வெள்ளம் இங்கே வந்து இருப்பதற்கு சாத்தியக் கூறுகளே கிடையாது...பின்னர் எவ்வாறு இவர்கள் வெள்ளத்தினைப் பற்றிப் பேசுகின்றார்கள் - இது தான் ஆய்வாளர்களின் குழப்பம். இந்தக் கேள்விக்கு இன்றும் விடை தெரியாமல் அவர்கள் நிற்கின்றார்கள்...காரணம் இன்னும் அவர்கள் தமிழின் வழி அந்த கதைகளையும் நாகரீகங்களையும் நோக்க ஆரம்பிக்கவில்லை. சரி தவறில்லை... நாம் ஆரம்பிப்போம்...நமக்குத் தான் தமிழ் அறிந்த மொழி அறிஞர்கள் துணை இருக்கின்றார்களே.
முதலில் கில்காமேசு என்னும் இலக்கியத்தில் இருந்து ஆரம்பிப்போம். இக்கதையின் படி 'யா (Ea)' என்னும் கடவுள் 'ஆதப்பா (Adappa)' என்னும் மனிதனை படைக்கின்றான். அம்மனிதனை கடவுள் தன்மையுடைய ஒருவனாக மாற்ற 'யா' எத்தனித்த பொழுது 'ஆதப்பா' செய்த தவறால் அவன் அவ்வாயப்பினை இழக்கின்றான். பின்னர் மற்ற கடவுள்கள் உலகினை அழிக்க முடிவு செய்த பொழுது 'யா', 'ஊத்-நா-பிசுடம் (Ut. Na- Pishtim)' என்னும் ஒருவனை படகில் ஏற்றி அவனைக் காப்பாற்றுகின்றார். அவ்வாறு பிழைத்த அந்த மனிதனின் மூலம் மனித இனம் மீண்டும் தழைக்கின்றது.நிற்க.
இப்பொழுது விவிலியம் கூறும் உலகப் படைப்பின் கதையை ஒத்து இருக்கும் இந்த கதையில் நாம் கவனிக்க வேண்டிய சில விடயங்கள்.
முதல் மனிதனின் பெயர் - ஆதப்பா. இந்த பெயருக்கு காரணம் என்னவென்று தெரியவில்லை என்று ஆராச்சியாளர்கள் கூறி கொண்டு இருக்கின்றனர். ஆனால் இந்த பெயரினைப் பார்த்த உடன் நமக்கு பொருள் விளங்கி இருக்கும் என்றே நான் எண்ணுகின்றேன்.
ஆதப்பா - ஆதி அப்பா. உலகின் முதல் மனிதன் தானே அனைவருக்கும் அப்பா. எனவே தான் அவனை ஆதப்பா என்று அந்த இலக்கியம் கூறுகின்றது என்று நாம் கருதலாம்.
அடுத்து 'ஊத்-நா-பிசுடம்' என்றப் பெயரினை நாம் காண வேண்டி இருக்கின்றது. கதையின் படி இறைவனின் எண்ணப்படி படகின் மூலம் பிழைத்தவன் இவன் என்று அறிய வருகின்றோம். ஆனால்  நாம் முன்னர் 'நோவா' வினைக் கண்டது போல் இதுவும் ஒரு காரணிப் பெயரே என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஊத்-நா-பிசுடம் என்ற சொல் 'ஊற்று -நாவி - பித்தன்' என்றச் சொல்லின் திரிபே என்று அறிஞர்கள் கருதுகின்றனர். 'ஊற்றும் நாவியும்' வெள்ளத்தினையும் படகினையும் குறிக்கும் சொல்லாக இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் 'ஊத்-நா-பிசுடம்' என்பவன் 'சூர்பாக்(Shurpak)' என்னும் ஒரு ஊரில் இருந்தவன் என்றும் அவ்வூர் ஆற்றங்கரைப் பக்கம் இருந்தது என்றக் குறிப்புகளும் கிடைக்கப்படுகின்றன. இதில் சூர்பாக் என்பது 'சூரிப் பாக்கம்' என்னும் பெயரின் திரிபே என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
மேலும் அந்தக் கதைகளிலும் சரி மேசொபோடமியா வரலாற்றிலும் சரி காணப்படும் பல பெயர்கள் தமிழ் பெயர்களாகவே இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
உதாரணத்திற்கு, மேசொபோடமியாவின் மாபெரும் நகரங்களின் பெயர்கள் இதோ... 'ஊர் (Ur)'..'ஊருக்(Uruk)'...'உடு(Utu)' (விண்மீன்)'...'நிப்பூர்(Nippur)'...'மாரி(Mari)'...!!! இவை அனைத்தும் எம்மொழிப் பெயர்கள் என்று நாம் அறிவோம். ஆனால் தமிழினை அறியாதக் காரணத்தினால் இப்பெயர்களின் வேரினை அறியாது இன்னும் தவறான திசையில் ஆராய்ச்சிகளை மேற்குலகம் மேற்கொண்டு வருகின்றன.
'யா' என்னும் கடவுள் : மாந்தனைப் படைத்ததும் அவனை அழிவில் இருந்து காப்பாற்றியதும் 'யா' என்னும் கடவுளே என்றே மேசொபோடமிய/பாபிலோனிய இலக்கியம் கூறுகின்றது. இந்தக் கடவுளை நீர் நிலையினைச் சேர்ந்தக் கடவுளாகவே அந்த இலக்கியம் சிறப்பிக்கின்றது. பத்தி மனிதன், பாதி மீன் என்றவாறே 'யா' போற்றுவிக்கப் பட்டு இருக்கின்றார். வெள்ளத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிய கடவுளை மக்கள் நீரின் வடிவில் கண்டனர் என்றும் நாம் இங்கே கருத வாய்ப்பு இருக்கின்றது. மேலும் குமரிக்கண்டத்தினை ஆண்ட பாண்டியனின் சின்னமும் 'மீன்' என்பதினை நாம் இங்கே நினைவுக் கூற வேண்டி இருக்கின்றது. மேலும் 'யா' என்னும் சொல் தமிழ் சொல்லே என்பதும் கவனிக்கத்தக்கது.
சரி... மேசொபோடமிய கதையினைக் கண்டாயிற்று... அடுத்து சுமேரியக் கதை என்ன கூறுகின்றது என்பதனையும்...அக்கதைகள் கொண்டாடும் கடவுள்களையும்....அக்கதைகளின் உண்மையான வரலாற்றினையும் இனி காண்போம்....
'ஈனும் -மா - எல் - இசு' வின்  பக்கங்கள் காத்து இருக்கின்றன...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...