செவ்வாய், 24 ஏப்ரல், 2018

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-11


சில கேள்விகள் சில பதில்கள்...!!!
பல பதிவுகள் கண்டாயிற்று. அவற்றினோடு பல கேள்விகளும் தான். சில கேள்விகளுக்கு பதில்கள் தந்து இருந்தாலும் பல கேள்விகளுக்கு 'பின்னர் காண்போம்' என்ற ஒரே பதிலே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் சரி ஒரு சில கேள்விகளுக்கு பதில்களை தனியாகவே கூறி விடலாம் என்ற எண்ணம் தோன்றவே இந்தப் பதிவு.
கேள்வி : தோமா தமிழ்நாட்டில் கிறித்துவம் பேசினால், பிள்ளையார் – கிறிஸ்து ஒன்று என்றால்பிள்ளையார் தமிழ்நாட்டில்தானே தோன்றியிருக்கவேண்டும்? அதுவும் தோமையார் வந்து கொஞ்ச காலத்தில்? ஆனால், பிள்ளையார் தமிழ்நாட்டிற்கு வந்ததே 10-ம் நூற்றாண்டு. இதற்கு என்ன விளக்கம் சொல்கிறீர்கள்?
பதில்: தோமா தமிழகத்திற்கு மட்டுமே வரவில்லை. அவர் 20 வருடங்கள் இந்தியா முழுவதும் சுற்றி கருத்துக்களை பரப்பி இருக்கின்றார். சரி இப்பொழுது பிள்ளையார் வடக்கில் இருந்து தெற்கே வந்ததன் காரணத்தினைக் காண்போம். அதற்கு முன் கீழே உள்ள படத்தைக் காண்போம்.
காண்பதற்கு பிள்ளையாரினைப் போன்றே தோற்றம் கொண்டு இருந்தாலும் இவர் பிள்ளையார் இல்லை. இவர் பார்சுவநாதர். சமண சமயத்தின் இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரர். காலம் ஏறக்குறைய கி.மு ஏழாம் நூற்றாண்டு என்று கருதப்படுகின்றது. இவர் மகாவீரருக்கு முந்தியவர். இவருக்கு சமண சமயத்தில் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றில் ஒன்றில் இவர் ஒரு பிறவியில் யானையாக பிறந்ததாகவும் அப்பிறவியில் இவரின் பகைவன் பாம்பாகப் பிறந்து இவரின் தலையில் கொட்டி இவர் அமைதியாக மரணமுற்றதாகவும் கூறப்படுகின்றது. அக்கதையின் படியே இவருக்கு யானைத் தலையும் தலைக்கு மேல் பாம்பு நிற்பது போலவும் வடிவம் அமைந்து இருக்கின்றது. மேலும் யானையை வழிப்பட்ட சில குழுக்களும் வட இந்தியாவில் இருந்து இருக்கின்றனர். நிற்க.
இந்நிலையில் தான் பிற்காலத்தில் கிருத்துவின் கருத்துக்களை சுமந்துக் கொண்டு தோமா இந்தியா வருகின்றார். புது கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதுவும் அவர்களின் பழக்க முறைக்கு ஏற்றார் போலவே கொண்டு செல்ல வேண்டும். இந்நிலையில் தான் இறைவன் மக்களுக்காக தன் உயிரினைத் துறந்தான் என்ற செய்தியை பரப்ப மக்களிடம் அன்று இருந்த யானை வழிபாடு முறையையும் பர்சுவனாதரின் இந்தக் கோலத்தையும் மக்கள் பயன்படுத்திக்கொண்டனர் என்றே நாம் கருத முடிகின்றது. இதன் அடிப்படையில் தான் பிள்ளையார் வடக்கே இருந்து தெற்கே வருகின்றார்.
****************************************************************************
கேள்வி: சைவ வைணவம் மட்டுமே இந்து சமயங்களாக பண்டைய தமிழகத்தில் இல்லை அல்லவா. அப்படி இருக்க அவற்றினை நாம் சைவ வைணவ சமயங்களாக கருத முடியுமா?
பதில்: உண்மை தான் நண்பரே. இந்து சமயங்கள் எனப்படுபவை மொத்தம் ஆறு சமயங்கள் ஆகும். ஆனால் அவற்றில் நான்கு சமயங்களுக்கு சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கின்றார். இரண்டிற்கு விஷ்ணு இருக்கின்றார்.
சிவன் முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
சைவம் - சிவன் - அம்மை - மகன்
சாக்தம் - சிவன் - சக்தி - மகன்
கௌமாரம் - சிவன் - சக்தி - குமரன்
காணாபத்தியம் - சிவன் - சக்தி - கணபதி
விஷ்ணு முழுமுதற் கடவுளாக இருக்கும் சமயங்கள்.
வைணவம் - சிவன் - விஷ்ணு - பிரமன்
சௌரம் - சிவன் - விஷ்ணு - ஐயப்பன்.
அனைத்து சமயங்களும் சிவன் அல்லது விஷ்ணுவையே சார்ந்து இருப்பதால் இவை அனைத்தையுமே நாம் சைவ வைணவ சமயங்களாக கருதலாம்.
****************************************************************************
கேள்வி: இந்து சமயத்தின் தத்துவம் சித்து - அசித்து - ஈசுவரன் அல்லது பதி - பசு - பாசம் தானே. இவை கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடுக்கு வேறானதாக அல்லவா இருக்கின்றது. அவ்வாறு இருக்க கிருத்துவத்தின் மூ ஒருமைக் கோட்பாடு எவ்வாறு சைவ வைணவ சமயத்தில் இருக்கின்றது என்று சொல்லுகின்றீர்கள்.
பதில்: நண்பரே... பதி-பசு-பாசம் என்பதோ அல்லது சித் - அசித் - ஈசுவரன் என்ற தத்துவங்கள் இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். ஆனால் மூ ஒருமைக் கோட்பாடோ இறைவனின் நிலையை விளக்குவதாக இருக்கும் ஒன்றாகும். இதனை விளக்க பின் வரும் பாடல்களைக் காண்போம்.
மூவராகிய மூர்த்தியை முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை
சாவம் உள்ளன நீக்குவானைத் தடம் கடல் கிடந்தான் தன்னை
தேவ தேவனைத் தென் இலங்கை எரி எழ  செற்ற வில்லியை
பாவ நாசனை பங்கயத் தடம் கண்ணனைப் பரவுமினோ - நம்மாழ்வார் - திருவாய்மொழி (3-6-2)
மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை
தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து
மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த பாவு
தண் டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே.  - திருமங்கை ஆழ்வார் (3-1-10).
அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற
உருவமோ உரைக்கும் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்
அருவமும் உருவா ரூபம் ஆனது மன்றி நின்ற
உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே.  - சிவஞானசித்தியார்(1:38)
மேலே கண்ட வரிகள் மூலம் இறைவன் ஒருவன் தான் ஆனால் மூன்று நிலையில் விளங்குகின்றான் என்ற அவர்களின் கருத்து விளங்குகின்றது. இக்கருத்தும் கிருத்துவத்தின் கருத்தும் ஒன்று போல் இருப்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஏன் இந்த ஒற்றுமை என்று நாம் ஆராய வேண்டி இருக்கின்றது.
சரி...கேள்விகள் இப்போதைக்கு போதும். மற்ற கேள்விகளுக்கு பதிலினை நம்முடைய பயணத்தில் 'பின்னர் காண முயற்சிப்போம்...'
தமிழும் சமசுகிருதமும் -
'சமசுகிருதம் முதலில் தோன்றியதா...அல்லது தமிழ் முதலில் தோன்றியதா' - நீண்ட காலமாக நீண்டுக் கொண்டு இருக்கும் ஒரு விவாதம்.இதனை நாம் இப்பொழுது பார்க்க வேண்டியதன் காரணம் இம்மொழிகளைப் பற்றி அறியாமல் இந்தியாவின் அரசியல் வரலாற்றினையோ அல்லது ஆன்மீக வரலாற்றினையோ நாம் இன்று நிச்சயம் முழுவதுமாக அறிந்துக் கொள்ள முடியாது. சரி...இப்பொழுது பதிவுக்கு செல்வோம்.
இன்று பெரும்பாலான மக்கள் சமசுகிருதத்தினையே முதல் மொழி என்றுக் கருதிக் கொண்டு இருக்கின்றனர். இதற்கு முழு முதற்க் காரணம் நாம் முதல் பதிவில் கண்ட சர் வில்லியம் ஜோன்சும் மாக்ஸ் முல்லேருமே அவர். அவர்கள் தான் சமசுகிருதத்தினை ஆராயும் பொழுது அதனில் கிரேக்கச் சொற்கள், லட்டின் சொற்கள் போன்ற பல ஐரோப்பியச் சொற்கள் இருப்பதனைக் கண்டு வியந்து "இவர்கள் வேதங்கள் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பழமையானவை என்று கூறுகின்றனர்...மேலும் இவர்கள் பழைமையான நாகரீகத்தினைச் சார்ந்தவர்கள் தாம்... அவ்வாறு நிலை இருக்க இவர்களின் இந்த மொழியில் நம்முடைய சொற்கள் பல தென் படுகின்றனவே... ஒரு வேளை இம்மொழியில் இருந்தே நம்முடைய மொழிகள் தோன்றி இருக்குமோ" என்று எண்ணி சமசுகிருதமே முதல் மொழியாக இருக்கலாம் என்ற தங்களது கருத்தினை உலகிற்கு முதலில் பரப்புகின்றனர். இது நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில். அதில் தொடங்கியது தான் சமசுகிருதம் உலகின் பழமையான மொழி என்றக் கோட்பாடு. இது சரியான கோட்பாடா என்பதனை நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.
ஒரு மொழி என்பது முதலில் பேசப்பட்டே வந்து இருக்கும். பின்னரே காலத்தில் அதற்கு எழுத்துரு கிட்டி இருக்கும் என்பது வரலாறு. பல மொழிகள் இன்றும் எழுத்துரு பெறாது பேசப்பட்டு மட்டுமே வந்துக் கொண்டு இருப்பது அதற்கு நல்ல சான்று. இந்நிலையில் ஒரு மொழியின் வரலாற்றினை எவ்வாறு நாம் அறிவது. அதன் வயதினைக் கணக்கிடுவது எவ்வாறு?
இப்பொழுது தமிழுக்கு செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றார்கள். காரணம் தமிழ் இராண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மொழியாக இருக்கின்றது எனவே அதனைச் சிறப்பித்து அதற்கு செம்மொழி நிலை வழங்கி இருக்கின்றனர். இங்கே நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கணக்கிட்ட முறையைத் தான். இராண்டாயிரம் ஆண்டுகள் பழமை என்று சொல்கின்றார்கள்... எதன் அடிப்படையில் சொல்கின்றனர்.. கல்வெட்டுக்கள், நூல்கள் மற்றும் பல குறிப்புகள் போன்றவை கிடைத்துள்ளதால் சொல்கின்றனர். அதன் அடிப்படையிலேயே செம்மொழி நிலையும் வழங்கி உள்ளனர். ஆனால் தமிழ் அதற்கு பல நூற்றாண்டுகள் முன்னரே பேசப்பட்டுக் கொண்டு வந்து இருக்கலாம். ஆனால் ஆய்வாளர்கள் அவற்றை சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு சான்றுகள் இல்லாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளுக்கும் செம்மொழி விருதென்ன உலகின் முதல் மொழி விருதே கொடுக்கலாம்.
எடுத்துக்காட்டுக்கு, தெலுங்கு மொழியினை எடுத்துக் கொள்ளலாம். இம்மொழியில் கல்வெட்டுக்கள் கி.பி காலத்திலேயே கிடைக்கின்றன. ஆனால் "அதற்காக இம்மொழி அதற்கு முன்னர் உலகில் இல்லை என்று நீங்கள் கருத முடியாது...எங்கள் தெலுங்கு மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்து வந்தது...நாங்கள் இதற்கு எழுத்துரு பின்னர் தான் தந்தோம்...ஆனால் ஆதிக் காலத்தில் இருந்தே எங்கள் மொழி இருந்தது....எங்கள் மொழியில் இருந்தே மற்ற மொழிகள் தோன்றின" என்று ஒரு தெலுங்கு நண்பர் கூறினால் நம்மால் மறுக்க முடியாது. ஏன் எந்த மொழியினையுமே மறுக்க முடியாது 'பேசிக் கொண்டு மட்டுமே இருந்தோம்... ஆனால் எழுதவில்லை' என்ற காரணம் பாரபட்சமின்றி அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும்.
அவ்வாறு கூறிவிட்டால் சரி மொழியின் காலத்தினை நாம் எவ்வளவு வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம்... 'நாங்கள் மொழியை _______ இத்தனை வருடங்களாக பேசிக்கொண்டு வந்தோம். ஆனால் இப்பொழுது தான் அதனை எழுத்துருவில் கொண்டு வந்தோம் என்றுக் கூறலாம்.
அந்த இடைப்பட்ட இடத்தை ஆயிரம் என்றோ லட்சம் என்றோ ஏன் இன்னும் எத்தனை வருடங்களோ என்றும் போட்டு நிரப்பிக் கொள்ளலாம். அதை நிரூபிக்கத் தான் சான்றுகள் தேவை இல்லையே.
அந்நிலையில் ஒரு மொழியினைப் பற்றி முழுதும் அறிய அந்த மொழியினைப் பேசிய மக்கள் எங்கே இருந்தனர்...அவர்கள் இருந்தமைக்கு சான்றுகள் இருக்கின்றனவா என்று பலதும் ஆராய வேண்டி இருக்கின்றது. ஏனெனில் பேசினோம் ஆனால் அதற்கு சான்றுகள் இல்லை என்று கூறுவது என்றுமே தகுந்த கூற்றாக அமையாது. இன்றும் கூட அலுவலுகத்திலும் சரி வேறு இடங்களிலும் சரி நீங்கள் ஏதேனும் முக்கியமான விடயங்களைப் பற்றிப் பேசுகின்றீர்கள் என்றால் அதற்கு சான்றாக எழுத்து வடிவத்தில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளத் தான் வேண்டி இருக்கின்றது. எனவே ஆயிரம் ஆயிரம் வருடங்கள் பேசிக் கொண்டு வந்த மொழி என்றுக் கூறினாலும் அது எப்பொழுது எழுத்துருவில் கிடைக்கின்றதோ அப்பொழுது இருந்து தான் ஒரு மொழியின் வயதினை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். அதுவே முறை.
சரி...இப்பொழுது நாம் அசோகரை கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சந்திக்க வேண்டி இருக்கின்றது. இந்திய வரலாற்றில் நாம் முக்கியமாக அறிந்துக் கொள்ள வேண்டிய ஒருவர் இவர். இவரை பற்றி நாம் முன்னரே மூன்றாம் பதிவில் கண்டு இருக்கின்றோம். புத்தத்தினைத் தழுவி இருக்கும் அவர் புத்த மதக் கொள்கைகளையும் பலி கூடாது என்றக் கொள்கைகளையும் மக்களிடம் பரப்ப பல மொழிகளில் கல்வெட்டுக்களைத் தயார் செய்கின்றார். அவர் அன்று செய்த கல்வெட்டுக்களே இன்று இந்தியாவின் வரலாற்றினை நாம் அறிந்துக் கொள்ள உதவும் மேலும் ஒரு கருவிகளாகத் திகழ்கின்றன. எனவே நாம் அவற்றினைக் காண வேண்டிய அவசியம் வருகின்றது. அசோகரின் கல்வெட்டுக்கள் பின் வரும் மொழிகளிலேயே கிடைக்கப்பட்டு உள்ளன.
பாலி
அர்த்தமாகதி
தமிழ்
கிரேக்கம்
அரமேயம்
ஆச்சர்யவசமாக சமசுகிருதத்தில் ஒரு கல்வெட்டுகள் கூட இது வரை கிட்டவில்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், அசோகர் பலிகள் இடும் பழக்கத்தை தடுப்பதற்கே முக்கியமாக கல்வெட்டுக்களை உருவாக்குகின்றார். வேதங்களோ பலியினை உடைய வழிபாட்டு முறையினை உடையதாக உள்ளன. மேலும் வேதங்கள் அனைத்தும் சமசுகிருதத்திலேயே உள்ளன. இந்நிலையில் வேதங்களை போற்றும் மக்கள் மத்தியில் உள்ள பலி இடும் பழக்கத்தினை மாற்ற அசோகர் நிச்சயம் அம்மொழியில் கல்வெட்டுக்களை அமைத்து இருக்க வேண்டும் தானே. ஆனால் அசோகரின் கல்வெட்டுக்கள் ஒன்றுக் கூட சமசுகிருதத்தில் காணப்பட வில்லை.
"அட என்னங்க சமசுகிருதம் தெய்வ மொழி... அதனை பொது மக்கள் அறிந்துக் கொள்ளுமாறு எவ்வாறு கல்வெட்டினை வடித்து வைப்பர்" என்று பார்த்தோமானால், கி.பி இரண்டாம் நூற்றாண்டில் நமக்கு முதல் சமசுகிருதக் கல்வெட்டுக் கிடைக்கின்றது. அதுவும் சந்திர குப்த மௌரியர் கட்டிய ஒரு அணையை பழுது பார்த்த செய்தியை சுமந்துக் கொண்டு கிடைக்கின்றது. ஆனால் இங்கு கிடைக்கும் சமசுகிருதம் தனது முழுமையான வடிவத்தினை அடையவில்லை என்றே ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர். செப்பமான சமசுகிருத கல்வெட்டுக்கள் மற்றும் எழுத்துக்கள் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்தே கிடைக்கப் பெறுகின்றன.
அதாவது முதல் சமசுகிருதக் கல்வெட்டே கி.பி இரண்டாம் நூற்றாண்டில் தான் கிடைக்கின்றது. அதுவும் செப்பமான வடிவில் அல்லாது கிடைக்கின்றது. இந்நிலையில் ஒரு கேள்வி எழுகின்றது...
அணையை பழுது பார்த்த செய்தியை தெரிவிக்க சமசுகிருதம் பயன்பட்டு இருக்கும் பொழுது அதனை விட உயர்ந்த செயலான புத்தரின் கொள்கையை பரப்ப அசோகரால் ஏன் அம்மொழி பயன்படுத்தப் படவில்லை. அதுவும் வேதங்களில் பலி இருக்கும் பொழுது அசோகர் நிச்சயம் அதனை எதிர்த்து சமசுகிருதத்தில் எழுதி இருக்க வேண்டும் தானே. ஏன் சமசுகிருதத்தில் அசோகரின் கல்வெட்டுக்கள் காணப்படவில்லை. காரணமாக ஆய்வாளர்கள் கூறுவது, அசோகர் சமசுகிருதத்தை பயன்படுத்த வில்லை காரணம் அவர் காலத்தில் சமசுகிருதம் என்ற மொழியே இல்லை. எளிதாக சொல்லி விட்டார்கள். ஆனால் நம்புவது அவ்வளவு எளிதானக் காரியம் அன்று. இந்நிலையில் நாம் இன்னும் சற்று உன்னிப்பாக பார்க்க வேண்டி இருக்கின்றது.
ஒன்று கி.பி இரண்டாம் நூற்றாண்டின் வரை சமசுகிருதம் என்ற சொல் எங்கேயும், எந்த இலக்கியத்திலும் சரி கல்வெட்டுக்களிலும் சரி காணப்படவில்லை. நான் சமசுகிருத எழுத்துக்களைச் சொல்ல வில்லை, சமசுகிருதம் என்ற சொல்லையே எங்கும் காண முடியவில்லை. வேதங்களை வாய் மொழியில் சொன்னார்கள் சரி... அப்படி அவர்கள் சொன்னார்கள் என்றத் தகவலாவது காணப்பட வேண்டும் அல்லவா...இது வரை அத்தகைய வேதங்கள் கி.மு காலங்களில் இருந்ததாகவும் சரி வேதங்களின் படி மக்கள் பிரிந்து இருந்தார்கள் என்பதற்கும் சரி சான்றுகளே இல்லை.
மேலும் அசோகர் காலத்து எழுத்துக்களை பிராகிருத எழுத்துக்கள் என்பர்.
பிராகிருதம் என்றால் - இயற்கையாகவே எழுந்த மொழிகள் என்று பொருள்.
அனால் சமசுகிருதமோ - நன்கு செய்யப்பட்டது என்ற பொருளினைத் தருகின்றது. நன்கு செய்யப்பட்டது என்றால் என்ன... யாரால் செய்யப்பட்டது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
அதாவது ஒரு மொழி இருக்கின்றது. ஆனால் அம்மொழியின் எழுத்துக்களோ...அல்லது அம்மொழியை பற்றிய தகவல்களோ, அதனை யார் பேசினர்... எங்கு பேசினர் என்றத் தகவல்களோ கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை கிட்டவில்லை. அவ்வாறு சான்றுகளே இல்லாத மொழி எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாமே. நாம் முன்னர் கண்டது போல ஒரு லட்சம் வருடங்கள் முந்தியும் இருந்து இருக்கலாம். ஆனால் காலத்தில் அது அழிந்து இருக்கலாம். அதற்கு பின்னர் வந்த மொழிகள் இருந்தமைக்கு சான்றுகள் அழியாது கிடைக்கின்றன... ஆனால் இம்மொழி இருந்த வரலாற்றை மட்டும் அழித்து விட்டனர்...அல்லது அழிந்து விட்டது. இதற்கு எல்லா மொழிகளுமே பொருந்துமே.
இல்லை... சமசுகிருதத்தில் வேதப்பாடல்கள் உள்ளனவே. எனவே சமசுகிருதம் பழமையானதான ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்றக் கருத்தும் இப்பொழுது எழலாம். உண்மை தான்.
வேதங்கள் இன்று சமசுகிருதத்தில் இருக்கின்றன. ஆனால் அவை வெறும் பாடல்களாய் இருந்தப் பொழுது சமசுகிருதத்தில் தான் இருந்தன என்று எவ்வாறு நாம் சொல்ல முடியும். பின்னால் தொகுக்கப்பட்டு இருக்கலாம் அல்லவா.
ஏன் எனில் இந்திரன், வருணன் ஆகிய கடவுள்கள் தமிழில் மொழியில் தினைக் கடவுள்களாக அறியப்பட்டு உள்ளனர். மேலும் வேதத்தில் உள்ள 'தியெளஸ்' என்ற வான் கடவுள் கிரேக்கத்தில் உள்ள 'சுஸ்' கடவுளை நினைவுபடுத்துகின்றார். மேலும் பெர்சியர்களின் வழிப்பாட்டுப் பழக்கங்களும் சரி கடவுள்களின் பெயர்களும் சரி வேதங்களில் காணப்படும் சில பெயர்களையும் வழிபாட்டு முறைகளையும் ஒத்தே இருக்கின்றன. அந்த வழிபாட்டுப் பழக்கங்கள் எல்லாம் சமசுகிருதத்தின் காலத்துக்கு முன்னரே காணப்படுவதால் அப்பாடல்களே பின்னர் வேதங்களாக தொகுக்கப்பட்டன என்றும் நாம் கருத வாய்ப்பிருக்கின்றது.
உதாரணத்துக்கு, இன்று ஆங்கிலம் இருக்கின்றது. நம்முடைய நூல்கள் பலவற்றை மக்கள் பலரும் அறிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றோம். பல மொழி பேசும் மக்களின் இலக்கியங்கள், பாடல்கள், வழிபாட்டு பழக்கங்கள் ஆகியவை ஆங்கிலத்தில் இப்பொழுது காணப்படுகின்றன. ஆனால் அதை வைத்துக் கொண்டே ஆங்கிலத்தில் இருந்து தான் அம்மொழிகளின் இலக்கியங்கள் எல்லாம் வந்தது என்றுக் கருதுவது சரியாகுமா? அப்பொழுது எந்த மொழியில் இருந்து எந்த மொழி வந்தது என்று அறிவதற்கு மொழியின் காலத்தை கணக்கிட்டுத் தான் பார்க்க வேண்டும். ஆனால் அப்பொழுது ஆங்கிலம் எழுதப்படவே இல்லை வாய் வழியாகவே நாங்கள் அந்தப் பாடல்களைக் கூறிக் கொண்டு வந்தோம் பின்னரே அவற்றை எழுத நேர்ந்தது என்று கூறினால் அதை மறுக்க முடியுமா அல்லது ஏற்றுக் கொள்ளத் தான் முடியுமா?
எனவே சான்றுகள் இன்றி ஒரு மொழியின் காலத்தை கணிக்க முடியாது. சமசுகிருத மொழி உலகில் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் வரை இருந்ததற்கு சான்றுகளே இல்லை. எனவே சமசுகிருதத்தின் காலத்தினை கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின் தான் வைக்க முடியும் மாற்று ஆதாரங்கள் கிட்டும் வரை....
சமசுகிருதம் என்று ஒரு மொழி
சமசுகிருதம்....ஒரு அருமையான மொழி!!!
"அட என்னங்க 'தமிழ் தமிழ்' என்றுக் கூறிக் கொண்டு தமிழுக்காகவும் தமிழனுக்காகவும் போராடுபவர்கள் எல்லாம் சமசுகிருதத்தினை எதிர்த்துக் கொண்டு இருக்கும் போது நீங்க சமசுகிருதம் அருமையான மொழி அப்படின்னு சொல்றீங்களே...கட்சி மாறிடீங்களா!!!" என்று நண்பர்கள் யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம். சமசுகிருதம் உண்மையிலையே அருமையான மொழி தான். அதில் ஆய்வாளர்களுக்கு மாற்றுக் கருத்துக்களே கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு காலத்தில் சமசுகிருதம் தமிழர்களால் வளர்க்கப்பட்டது. இப்பொழுது எதிர்க்கப்படுகின்றது. இந்த மாற்றம் திடீர் என்றோ அல்லது காரணம் ஏதும் இன்றியோ தோன்றிவிடவில்லை மாறாக இந்த மாற்றத்திற்கு அடிப்படையாக ஒரு மாபெரும் அரசியல் இருக்கின்றது. அந்த அரசியலினைப் பற்றி நாம் பின்னர் காணலாம். ஆனால் இப்பொழுது ஏன் சமசுகிருதத்தினை தமிழர்கள் அன்று வளர்த்தனர்...ஏன் பின்னர் எதிர்கின்றனர்...என்ற இக்கேள்விகளுக்கு விடையினைக் காண நாம் சமசுகிருததினைக் காண வேண்டி இருக்கின்றது. காண்போம்...
நாம் ஏற்கனவே சமசுகிருதத்தின் காலம் என்ற மேலே உள்ள பதிவில் சமசுகிருதத்தின் காலம் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னரே என்றுக் கண்டு இருந்தோம். நண்பர்கள் பலர் இக்கருத்தினை நிச்சயம் ஏற்றுக் கொண்டு இருக்க மாட்டார்கள். ஏனெனில் காலம்காலமாக சமசுகிருதம் தான் உலகின் முதல் மொழி என்றே நாம் நம்பிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...அவ்வாறு தான் நம்மிடையே கருத்துக்களும் பரப்பப்பட்டு இருக்கின்றன. சரி பிரச்சனை இல்லை...இப்பொழுது நாம் சமசுகிருதத்தினைப் பற்றி சற்று உன்னிப்பாகக் காணலாம். அதற்கு முதலில் நாம் கி.பி இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளைக் காண வேண்டி இருக்கின்றது.
கி.பி காலத்தில் இந்தியாவில் எந்த எந்த மக்கள் எல்லாம் இருந்தார்கள் என்பதனை நாம் முன்னர் கண்ட பதிவுகளில் கண்டு இருக்கின்றோம். இதற்கு முன்னர் அந்தப் பதிவுகளைப் படிக்காதவர்கள் அதனை முதலில் படித்து விட்டால் நலமாக இருக்கும். (ஆரியர் யார், ஆரியர் யார் - 2)
சரி படிச்சிட்டீங்களா...அருமை.
கி.பி முதல் நூற்றாண்டுகளில் இந்தியாவில் பல விதமான மக்கள் இருக்கின்றனர் என்று அந்தப் பதிவுகள் வாயிலாக நாம் அறிந்து இருக்கின்றோம். பெர்சியர்கள் இருக்கின்றனர், கிரேக்கர் இருக்கின்றனர்...ரோமர் இருக்கின்றனர்...பார்தியர்கள் இருக்கின்றனர்...குசானர்களும் இருக்கின்றனர். இவ்வாறு பல்வேறு மக்கள் இனத்தவர் இங்கே இருக்கின்றனர். பல்வேறு மக்கள் இனத்தவர் இருக்கின்றனர் என்றால் பல்வேறு மொழிகளும் இருக்க வேண்டும் தான் அல்லவா...
அவ்வாறே தான் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் பல்வேறு மொழிகள் பயன்பாட்டில் இருக்கின்றன...தமிழ்,பாலி,அரமேயம்,பாரசீகம்(பெர்சியர்களின் மொழி),கிரேக்கம், இலத்தின், அர்த்தமாகதி போன்ற பல மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன.இப்பொழுது ஆச்சர்யமான விடயம் என்னவென்றால் மேலே நாம் கண்ட அந்த அனைத்து மொழிச் சொற்களையும் சமசுகிருதத்தினில் நம்மால் காண முடிகின்றது. அதனை அடிப்படையாகக் கொண்டு தான் திருவாளர் சார் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் சமசுகிருதமே உலகின் முதல் மொழியாக இருந்து இருக்கலாம் என்ற கருத்தை கூறுகின்றார். அன்று ஆரம்பித்தது தான் சமசுகிருதம் உலகின் முதல் மொழி என்றக் கோட்பாடு.
ஆனால் இந்தக் கருத்தினை சில ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். அவர்கள் கூறும் காரணம் எளிதானதொரு காரணம் தான். சமசுகிருத எழுத்துக்கள் கிடைக்கப் பெரும் முன்னரே மேலே கூறிய அந்த மற்ற மொழிகளுக்கான எழுத்துக்களும் சரி அவை பயன்பாட்டில் இந்த இன மக்களிடம் இருந்தன என்ற சான்றுகளும் சரி மிகுதியாகக் கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் சமசுகிருதத்தின் சான்றுகளோ பிற்காலத்திலேயே தான் கிட்டப் பெறுகின்றன. மேலும் சமசுகிருதம் என்றால் செம்மையாக செய்யப்பட்ட ஒரு மொழி என்றே பொருள் தருகின்றது. எனவே மேலே உள்ள அந்த மொழிகளை எல்லாம் இணைத்து ஏன் சமசுகிருதத்தினை மக்கள் உருவாக்கினர் என்று நாம் கருதக் கூடாது...? அந்த மொழிகள் அனைத்தையும் இணைத்து செம்மையாக தோன்றிய ஒரு புதிய மொழியாக ஏன் சமசுகிருதம் இருக்க கூடாது? இருக்கலாம் தானே.
அதாவது பல மொழிகள் இருக்கின்றன. அவை முன்னரே இருந்து இருப்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன. திடீர் என்று ஒரு புதிய மொழி தென்படுகின்றது...அந்த மொழியில் முன்பு இருந்த மொழியின் எழுத்துக்கள் எல்லாம் தென்படுகின்றன. எனவே முன்பிருந்த மொழிகளை எல்லாம் தொகுத்து இந்த புதிய மொழி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று நாம் கருத முடிகின்றது தானே. அதுவும் அந்த புதிய மொழியின் அர்த்தமே செம்மையாக செய்யப்பட்டு இருக்கின்றது என்று இருக்கும் பொழுது நம்முடைய கருத்து வலுபெறத்தானே செய்கின்றது. ஆனால் சான்றுகள் இன்றி நம்மால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே மேலே உள்ள ஆய்வாளர்களின் கூற்றுக்கு அவர்கள் தரும் சான்றுகள் என்னவென்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வேதங்களையும் வேதாந்தங்களையும் நாம் காண வேண்டி இருக்கின்றது.
வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி சமசுகிருத மொழியிலேயே காணப்படுகின்றன. மேலும் சென்றப் பதிவுகளில் அவைகளுக்கும் விவிலியத்தில் இருக்கும் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு ஆகியவைக்கும் உள்ள ஒற்றுமைகளைப் பார்த்தோம். இப்பொழுது நாம் மேலும் எந்த புதிய விடயத்தினையும் காணும் முன்னர் சில பழைய விடயங்களை நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது...
௧) ஒரு கிருத்துவக் கொள்கை -
அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்.

௨) விவிலியத்தைத் தொகுத்ததில் உள்ள ஒரு கொள்கை -
பழைய ஏற்பாடு யூதர்களுக்கு உரியது – எபிரேயச் சமயத்தின் கொள்கைகளைக் கொண்டது – எபிரேய மொழியில் தொகுக்கப்படுகின்றது.
புதிய ஏற்பாடு உலக மக்கள் அனைவருக்கும் உரியதாக – கிருத்துவின் கொள்கைகளைக் கொண்டது – கிரேக்க மொழியில் தொகுக்கப்படுகின்றது.
௩) வேதங்களுக்கும் பழைய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
௪) வேதாந்தங்களுக்கும் புதிய ஏற்பாட்டுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
௫) வேதத்தில் இறைவன் பலியாவது போன்று வரும் செய்திகள். நிற்க.
என்ன அனைத்து விடயங்களையும் ஒரு முறை நியாபகப்படுத்திக் கொண்டு விட்டீர்களா? நன்று. இனி நாம் சுத்தி வளைக்காது நேரே நம்முடைய கருத்துக்கு செல்லலாம்.
மேலே நாம் கண்ட கிருத்துவக் கொள்கையின் மூலம், எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகளையும் தத்துவ அடிப்படைகளையும் கற்றுக் கொண்டு பின்னர் அவைகளின் மூலமாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்றே நாம் அறிகின்றோம்(இன்று அரசியல் காரணமாக அனைத்து சமயங்களின் கொள்கைகளுமே மாறி விட்டன) அதன் அடிப்படையிலேயே யூதர்களின் சமயமான எபிரேயச் சமயத்தினைப் பற்றிய தொகுதியான பழைய ஏற்பாட்டினை எபிரேய மொழியில் தொகுக்கின்றனர். பின்னர் அந்த நிலப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கிருத்துவின் கருத்துக்களைக் கூற அங்கே பரவலாகக் காணப்பட்ட கிரேக்க மொழியிலே தொகுக்கின்றனர்.
ஆனால் யூதர்களும் கிரேக்கர்களும் மட்டுமே அன்று உலகில் வாழ்ந்த மக்கள் அல்லவே...மற்ற இனத்தவரும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களே. அவர்களுக்கென்று தனி மொழி இருக்குமே. எபிரேயத்தில் யூதர்களுக்கு சொல்லியாயிற்று...யூதர்களுக்கும் சரி கிரேக்கர்களுக்கும் கிரேக்கத்தின் வாயிலாகவே சொல்லியாயிற்று...அந்த நூல்களில் யூதர்களின் பழக்க வழக்கங்களும் சரி கிரேக்கர்களின் வரலாறும் சரி இருக்கின்றன... எனவே அந்த மக்கள் அந்த நூல்களின் உள்ள கருத்துக்களை அவர்களின் வாழ்வோடு இணைத்துக் கொள்வர். ஆனால் மற்ற மக்களுக்கு? அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துக் கொண்டு அவற்றின் வாயிலாகவே இறைவனின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் தானே...அது தானே முறையாக இருக்கும். நிற்க.
இந்நிலையில் தான் நாம் இந்தியாவினைக் காண வேண்டி இருக்கின்றது. பல்வேறு மொழிகள் இருக்கின்றது. பல்வேறு மக்கள் பல்வேறு வரலாற்றோடு இருக்கின்றனர். பலி இடும் பழக்கம் அனைவரின் மத்தியிலும் ஒன்றினைப் போலவே இருக்கின்றது. இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் பொதுவான கருத்துக்களைச் எவ்வாறுச் சொல்வது? எந்த மொழியினில் சொல்வது?
நியாயமான கேள்வி தானே. இக்கேள்விக்கு இரண்டு விதமாக தீர்வினைக் காண முடியும்.
ஒன்று - அனைத்து மொழிகளிலும் கருத்துக்களைப் படைத்து அனைவரிடமும் பரப்பலாம்.
இரண்டு - அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழியினைப் படைத்து அதன் மூலமாக கருத்துக்களைப் பரப்பலாம்.
இந்த இரண்டு தீர்வுகளில் அக்காலத்தில் இருந்த அறிஞர்கள் இரண்டாவது தீர்வினைத் தேர்ந்து எடுத்ததே இன்று சமசுகிருதம் என்ற மொழி நம்மிடையே இருப்பதற்கு காரணம் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆம்...அவர்களின் கூற்றின் படி அக்காலத்தில் இந்தியாவில் இருந்த மக்கள் அனைவருக்கும் பொதுவான கருத்தினைப் பரப்ப அன்று நிலைவிய மொழிகளான தமிழ்,பாலி,அர்த்தமாகதி,அரமேயம்,கிரேக்கம்,இலத்தின் போன்ற மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புது மொழி தான் சமசுகிருதம். அவ்வாறு அது உருவாக்கப்பட்டமையால் தான் அது 'செம்மையாகச் செய்யப்பட்டது' என்று பொருள் தருவதோடு அம்மொழி யாராலும் பேசப்பட்டதாக வரலாறும் கிட்டப்பெறாமல் இருக்கின்றது.
அப்படிப்பட்ட ஒரு மொழியினைக் கொண்டு இந்தியாவில் அன்று இருந்த மக்கள் அனைவருக்கும் இறைவனது கருத்துக்களைப் பரப்ப அன்று இருந்த அறிஞர்களால் உருவாக்கப்பட்ட நூல்கள் தான் வேதங்களும் வேதாந்தங்களும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது அன்று இந்தியாவில் இருந்த மக்களுள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் அனைவரிடமும் பல கடவுளர் வழிபாடும் பலி வழிபாடும் ஒன்றினைப் போலவே இருந்து இருக்கின்றது. அவர்கள் தமிழர்களாகட்டும் அல்லது பெர்சியர்களாகட்டும் பலி இருந்து தான் இருக்கின்றது. அப்படி இருக்கையில், "இறைவனுக்கு பலியிட்டு நாம் வணங்கிக் கொண்டு வந்து இருக்கின்றோம்...ஆனால் இறைவன் நமக்காக பலியாகி விட்டார்... எனவே நாம் பலியிடத் தேவை இல்லை...மாறாக நமக்காக பலியான இறைவனை வேண்டி அன்பினையே போதிப்போம்" என்ற கருத்துக்களை அனைத்து மக்களுக்கும் பரப்பத் தான் வேதங்களும் சரி வேதாந்தங்களும் சரி தொகுக்கப்படுகின்றன.
அதனால் தான் வேதங்களில் பல கடவுளர் இருக்கின்றனர்...பலி இருக்கின்றது...முடிவில் இறைவன் பலியாவதைப் போல் வருகின்றது. வேதாந்தத்தில் கடவுள் ஒருவரே என்றக் கொள்கையும் பலி தேவை இல்லை என்ற கொள்கையும் காணப்படுகின்றன. மேலும் இந்தியாவில் அன்று இருந்த அனைத்து மக்களுக்கும் பொதுவாக வேதங்களைத் தொகுத்தக் காரணத்தினால் தான் வேதங்களில் பெர்சியர்களின் கொள்கைகள், வரலாறு மற்றும் கிரேக்கர்களின் கொள்கைகள் மற்றும் இன்னும் பல கொள்கைகளும் காணப்படுகின்றன. உதாரணத்திற்கு,
"வேதங்களுள் வழிப்படப்பட்ட இயற்கைப் பொருள்களுள் பழமையானது வானம். இதனுடைய பழம் பெயர் 'தியுஸ்' என்பது. இது கிரேக்க சுஸ் என்பதையும் இலத்தீனில் உள்ள ஜுபிட்டர்ஐயும் ஒத்ததாய் இருக்கின்றது. 'தியுஸ்' என்பது பிதர், தந்தை என்றும், படைப்பவர், ஆற்றல் மிக்கவர் என்றும் கூறப்படுகின்றன. 'தியுஸ் பிதர்' என்னும் வான் தந்தை அல்லது ஒளியின் தந்தை என்பது விண்ணகத்திலுள்ள எங்கள் தந்தையே என்பதையும் ஒளியின் தந்தையே என்பதையும் நினைவுறுத்துகின்றன" என்றே கூறுகின்றார் மாரிஸ் பிலிப்ஸ் என்னும் ஆய்வாளர் தனது 'The Teaching of the vedas' என்னும் நூலில்.
“ஆரியர்கள் இரானியர்களுடன் மிக நெருங்கிய தொடர்பினை பெற்று இருந்தனர் என்பது அவர்களது செய்யுள்களான அவேசுடாவிலும்(Avesta Scriptures) (ஈரானியர்கள் அல்லது பெர்சியர்கள்) ரிக் வேதத்திலும் காணப்படும் வழிபாட்டு முறைக்கும் மொழிக்கும் உள்ள ஒற்றுமையை வைத்தே நன்கு புலனாகின்றது.” என்கின்றார் எ.வ. தோம்ப்சன் தனது ‘இந்தியாவின் வரலாறு’ என்ற புத்தகத்தில் (E.W.Thompson – History of India).
மேலும் ர.ச. ஷர்மாவின் ” சோம பானம் என்னும் பயன்பாடு ஹோம (Haoma) என்று அவேசுட மொழியில் வழங்கப்படும். இந்தப் பயன்பாடு ஆரியர்கள் மத்தியிலும் சரி இரானியர்கள் மத்தியிலும் சரி ஒன்று போல் இருக்கின்றது.” என்றக் கூற்றும் கவனிக்கத்தக்கது (புத்தகம் – ஆரியர்களைத் தேடி) (R.S.Sharma – Looking for the Aryans).
டேவிட் பிரௌலே தனது ‘ஆரியர் படையெடுப்பு என்றொரு கற்பனை (David Frawley – The Myth of the Aryan Invasion of India)’ என்ற தனது புத்தகத்திலே ‘ஆஸ்கோ பர்பொலோ வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள யுத்தங்கள் இந்தியாவில் நடை பெற்ற யுத்தங்களே அல்ல அவை ஆப்கானிஸ்தானில் இரு வேறு இந்திய – ஈரானிய இனக்குழுக்களுக்குள் நடந்தவையே ஆகும் என்று கூறுகின்றார்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
எனவே இந்தியாவில் அன்று இருந்த பல்வேறு இனங்களுக்குரிய வரலாறு, பாடல்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றினைத் அவர்களுக்காகத் தொகுத்து அவர்களின் இறைவன் அவர்களுக்காக பலியானான் என்ற செய்தியை தெரிவித்து பின்னர் இறைவன் ஒருவன் தான் அவன் மக்களுக்காகவே இருப்பவன் என்ற கருத்தினைத் தெரிவிக்கவே வேதங்களும் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் "அந்நியக் கோவில்களுக்குச் சென்று அவர்கள் வழிப்பாட்டு முறை, நம்பிக்கைகளை அறிந்து அவர்களுடைய நம்பிக்கை, தத்துவ அடிப்படையில் நற்செய்தி கூறுதல். யூதனுக்கு யூதன். கிரேக்கனுக்கு கிரேக்கன்." என்றக் கொள்கைக்கு ஏதாக அம்மக்கள் அவர்களுள் கொண்டு இருந்த இறைப் பெயர்களைக் கொண்டே அம்மக்களிடம் கருத்துக்களைக் கொண்டு செல்கின்றனர். அதனால் தான் இயேசு என்ற பெயர் அங்கே காணப்படவில்லை.
காரணம் இறைவனின் பெயர் முக்கியமில்லை கருத்துக்களே முக்கியம் என்ற நிலையில் தான் அன்றைய அறிஞர்கள் கருத்துக்களைத் தொகுக்கின்றனர் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதிலும் முதலில் இருக்கு வேதமே தொகுக்கப்பட்டது என்றும் பின்னரே மற்ற வேதங்கள் தொகுக்கப்பட்டன என்றும் அவர்கள் கூறுகின்றனர். சரி இருக்கட்டும்…!!!

இறைவன் உலகிற்கு வந்து மக்களுக்காக பலியானார் என்ற செய்தியினைப் பரப்பவே வேதங்களும் பின்னர் வேதாந்தங்களும் தொகுக்கப்பட்டன, அந்தப் பணிக்காக உருவாக்கப்பட்ட ஒரு புதிய மொழி தான் சமசுகிருதம் என்ற இந்த கருத்தை நிச்சயம் ஏற்பது கடினமாகத் தான் இருக்கும். இந்நிலையில் இக்கருத்துக்களை வலுப்படுத்துமாறு வேறு சான்றுகள் இருக்கின்றனவா என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

மேலும் பலி இல்லாத வழிபாட்டு முறைக்கு புத்தம் மற்றும் சமணம் ஆகிய சமயங்களின் தாக்கங்களும் காரணமாக இருக்கலாம் அல்லவா என்றக் கேள்வியும் இன்னும் பதில் அளிக்கப்படாமல் இருக்கின்றது அல்லவா…எனவே நாம் அவற்றையும் காணத் தான் வேண்டி இருக்கின்றது.
அதற்கு நாம் இப்பொழுது அந்த சமயங்களைக் காண வேண்டி இருக்கின்றது…
காண்போம்…!!!

பின்குறிப்பு:

இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவை தமிழர்களால் இறைவன் பலியானதை தெரிவிக்க தொகுக்கப்பட்ட நூல்கள் என்று கூறுகின்றீர்களே அப்படி என்றால் அதில் வரும் நான்கு பிரிவுகள் எவ்வாறு வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வந்து இருந்தது என்றால், வேதங்களில் இறைவன் மனிதன் நான்கு வர்ணமாக படைத்தான் என்று வரும் பகுதி இடைச் செருகல் என்றே அம்பேத்கர், மாக்ஸ் முல்லேர் போன்ற ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நாம் ஏற்கனவே கண்டு இருக்கின்றோம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இருந்து இந்திய அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்து இருந்து இருக்கின்றன என்று. அக்காலம் தொடங்கி இந்திய நூல்களில் பல மாற்றங்களும் பல இடைச் செருகல்களும் நிகழ்ந்து இருக்கின்றன என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...