செவ்வாய், 24 ஏப்ரல், 2018

மதங்களும் இறைவனும் - ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி!




பகுதி-13


இயேசு கிருத்து முழு சிலுவையைச் சுமந்தாரா?
இயேசு கிருத்து சிலுவையில் அறையப்பட்டார். இதில் மாற்றுக் கருத்து நமக்கு ஏதும் அல்ல. ஆனால் அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் என்ன நடந்தது என்பதைப் பற்றியக் கருத்துக்களைத் தான் நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. அதுவும் குறிப்பாக ஒரு விடயத்தினை நாம் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டி இருக்கின்றது.
"இயேசு கிருத்து தான் சிலுவையில் அறையப்படும் முன் அந்த முழு சிலுவையையுமே சுமந்து சென்றாரா?" என்பதே அந்த விடயம். இதனை பற்றி நாம் விரிவாக பார்க்க வேண்டும் என்றால் அன்றைய காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்கள் மற்றும் சிலுவையினைப் பற்றியும் அறிந்துக் கொள்வது இன்றியமையாத ஒன்றாக அமைவதால் ஒரு எட்டு சென்று அவற்றைப் பார்த்துக் கொண்டு வந்து விடலாம்.
நாம் முந்தைய பதிவுகளில் கண்டவாறு கி.பி நான்காம் நூற்றாண்டு வரை சிலுவை என்பது ஒரு கொலைக்கருவியே ஆகும். அக்காலத்திற்கு பின்னர் தான் அது ரோமப் பேரரசன் கோன்சுடைன் என்பவரால் அரசியல் காரணங்களுக்காக சிறப்பிக்கப்பட்டு கிருத்துவர்களின் சின்னமாக மாறுகின்றது. அதற்கு முன்னர் வரை சிலுவை என்பது எதிரிகளை துன்புறுத்திக் கொலை செய்யும் ஒரு கொடிய கொலைக்கருவியாகவே ரோமர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. கிருத்துவுக்கு முன்னரும் சரி பின்னரும் சரி பலர் சிலுவையில் அறையப்பட்டு இருக்கின்றனர். ரோமர்களின் ஆட்சிக்காலத்தில் சிலுவையில் அறையப்பட்டு ஒருவன் இறப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமான ஒரு விடயமாகத் தான் இருந்து இருக்கின்றது. பொதுமக்கள் அஞ்ச வேண்டும் என்ற ஒரு காரணத்திற்க்காக ஊருக்கு வெளியே அனைவரும் காணும் படி ஒரு மனிதனை சிலுவையில் அறைந்து அவனைக் கொல்வது என்பது ரோமர்கள் கையாண்ட ஒரு யுக்தி ஆகும். அவ்வாறு எதிரிகளை, குற்றவாளிகளை சிலுவையில் அறைவதற்காகவே ஊருக்கு வெளியே ஒரு இடத்தினை ரோமர்கள் எப்பொழுதும் தயாராக வைத்து இருந்தனர் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து.நிற்க.
இப்பொழுது நாம் சிலுவையினைப் பற்றி சற்றுக் கண்டு விடலாம்.
சிலுவைகள் என்பன தொடக்கக் காலம் முதல் அந்த வடிவிலேயே தான் இருந்தனவா என்றால் ஒரு தெளிவான விடை நமக்கு கிடைக்க மாட்டேன்கின்றது. சில குறிப்புகள் சிலுவை என்பது ஒரே மரக்கட்டை தான் என்கின்றன (அதாவது செங்குத்தாக நிற்கும் பகுதி மட்டுமே தான் சிலுவையாக பயன்படுத்தப்பட்டது என்றும் அதன் மேல் இன்றுக் காணப்படுவது போன்ற படுக்கைவசமான பகுதி அன்று இருக்கவில்லை என்கின்றன), வேறு சில குறிப்புகளோ சிலுவை என்பது இருக் கட்டைகளால் ஆனது என்றும் ஆனால் அதன் வடிவம் கூட்டல் குறிக்கு நிகராக இருந்தது என்றும் கூறுகின்றன. இருக்கட்டும். இந்த வேறுபாடுகள் இப்பொழுது நமக்கு முக்கியமில்லை. நாம் நம்முடைய கேள்விக்கு விடையினைக் காண இப்பொழுது வழக்கில் இருக்கும் சிலுவையின் வடிவினை கொண்டே தொடருவோம்.
இன்று பெரும்பாலான வடிவங்கள் சிலுவையினை இரு பகுதிகள் கொண்ட வடிவமாகவே காட்டுகின்றன.(படம் இடதுபுறம்)
ஒரு மரப்பகுதி செங்குத்தாக இருக்கின்றது. மற்றொன்று அதன் மேல் படுக்கைவசமாக இருக்கின்றது. இதுவே தான் சிலுவையின் அமைப்பாக இருக்கின்றது. ரோமர்களின் வழக்கப்படி அந்த செங்குத்தான பகுதி மண்ணில் ஊன்றப்பட்டு இருக்கும். பின்னர் படுக்கைவசமாக இருக்கும் பகுதியில் குற்றவாளியின் கைகள் இரண்டும் இணைக்கப்பட்டு (ஆணிகள் மூலமாகவோ அல்லது கயிறின் மூலமாகவோ), அந்தப் பகுதி செங்குத்தான பகுதியில் இணைக்கப்படும். இதுவே ரோமர்கள் ஒருவனை சிலுவையில் அறையும் முறை. மேலும் ஒருவன் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர், அவன் சிலுவையில் அறையப்படும் இடம் வரை அவனே அவனது சிலுவையை தூக்கிக் கொண்டு வருவதும் ரோமர்களின் பழக்கம் ஆகும். நிற்க.
இப்பொழுது நாம் கவனிக்க வேண்டியது இந்த அமைப்பின் எடையைத் தான். ஆய்வாளர்களின் கணிப்புப்படி ஒரு முழு சிலுவையின் எடை கிட்டத்தட்ட 130 கிலோவாகவும், படுக்கைவசமாக இருக்கும் பகுதியை மட்டும் தனியாக கணக்கிட்டால் 35 இருந்து 60 கிலோ வரை இருந்து இருக்க வேண்டும் என்றும் நாம் அறிய முடிகின்றது. இந்நிலையில் ஒரு மனிதன் முழு சிலுவையையும் அதாவது 130 கிலோ எடை உடைய அமைப்பினை சுமந்துக் கொண்டு செல்வது நடைமுறையில் சாத்தியமானதொன்றாக இருக்குமா என்பதே இப்பொழுது நம் முன் எழும் ஒரு கேள்வி. இக்கேள்விக்குரிய விடையினைத் தேடினோம் என்றால் நமக்கு விடையாய் கிட்டுவது "சிலுவையைச் சுமப்பது என்பது முழு சிலுவையையும் குறிக்காது. மாறாக சிலுவை அமைப்பில் ஒரு பகுதியான அந்த படுக்கைவசப் பகுதியை மட்டுமே சுமந்து செல்வது ஆகும்" என்ற விடையே ஆகும். இந்த விடையை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சிலுவை என்பது ஒரு பொதுவான கொலைக்கருவி என்று நாம் கண்டுவிட்டோம். மக்களை சிலுவையில் அறைவதும் அன்று வெகு இயல்பாக ரோமர்களால் நிறைவேற்றப்பட்ட ஒரு செயல் தான். இந்நிலையில் மக்களை சிலுவையில் அறைவதற்கு என்றே ஒரு இடத்தினை ரோமர்கள் தனியாக வைத்து இருந்தனர் என்பதும் அங்கேத் தான் சிலுவையில் அறைய மக்கள் அனைவரும் கொண்டு செல்லப்பட்டனர் என்பதுமே பொதுவான கருத்துக்களாக நிலவுகின்றன. எனவே மக்களை சிலுவையில் அறையும் இடத்தில அவர்களை சிலுவையில் அறைவதற்கான கருவிகள் தயாரான நிலையிலேயே இருந்து இருக்க வேண்டும் என்பதும் ஆய்வாளர்கள் கருத்து. அதாவது சிலுவையின் ஒரு பகுதியான செங்குத்தான மரப்பகுதிகள் சிலுவைகள் அறையப்படும் இடத்திலேயே எப்பொழுதும் வீற்று இருந்து இருக்க வேண்டும் என்றும் அதில் அறையப்பட இருப்பவர்களை எடை குறைவான படுக்கைவசப் மரப்பகுதியினை மட்டுமே சுமந்து கொண்டு அவ்விடத்திற்கு வரவழைத்தனர் ரோமர்கள் என்றுமே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுவே ரோமர்களின் பழக்கமாக இருப்பின், இயேசுவும் அந்த படுக்கைவசமான மரப்பகுதியினையே சுமந்துக் கொண்டு சென்று இருக்க வேண்டும். மேலும் விவிலியக் குறிப்புகளின் படி இயேசுவை சிலுவையில் அறைவதற்கு முன் சவுக்கினால் அடித்தும் துன்புறுத்தி இருக்கின்றனர்.
"அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்." - மத்தேயு (27-26)
இந்நிலையில் அவரால் முழு சிலுவையையும் சுமந்து சென்று இருக்க இயலுமா என்பதும் கேள்விக்குறியே. மேலும் இந்த வாதத்தை வலுப்படுதுமாறு விவிலியத்தில் மற்றொரு குறிப்பும் உள்ளது. அதாவது இயேசுவின் சிலுவையை சுமக்குமாறு சீமோன் என்ற மனிதனை காவலர்கள் பணித்தவாறு குறிப்பும் விவிலியத்தில் இருக்கின்றது.
"போகையில் சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்." - மத்தேயு (27-32)
இதன் வாயிலாக இயேசு சிலுவையை சுமக்க முடியாத உடல் நிலையில் தான் இருந்தார் என்று நாம் எண்ண முடிகின்றது. இந்நிலையில் அவர் 130 கிலோ எடையுடைய முழு சிலுவையையும் சுமந்து சென்று இருக்க முடியும் என்பது சாத்தியமில்லாத ஒரு கூற்றாகத் தான் இருக்கின்றது.
இதன் அடிப்படையில் இயேசு மக்களின் மத்தியில் சிலுவையின் ஒரு பகுதியான படுக்கைவசமான கட்டையை சுமந்து சென்றார் என்றும் அதனை இடையில் சீமோன் என்ற மனிதன் ஏற்றுக் கொண்டான் என்றும் அவர்கள் அவ்வாறு கபாலஸ்தலம் என்ற இடத்தை அடைந்ததும் அங்கே ஏற்கனவே நிறுவப்பட்டு இருந்த சிலுவையின் செங்குத்தான பகுதியில் இயேசு அறையப்பட்டார் என்றும் நாம் அறிய முடிகின்றது.
எனவே இயேசு முழு சிலுவையை சுமந்து கொண்டு செல்லவில்லை மாறாக அவரின் தோளில் படுக்கைவசமான ஒரு மரப்பகுதியையே சுமந்து சென்று இருக்கின்றார் என்று நாம் அறிய முடிகின்றது. நிற்க.
இப்பொழுது நாம் இந்தத் தலைப்பினைக் கண்டதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கின்றது.
மேலே உள்ள பதிவின் படி 'இறைவனின் மைந்தர்' மக்களுக்காக படுக்கைவசமான ஒரு மரப்பகுதியை சுமந்துக் கொண்டு மலையின் மீது ஏறிச் சென்று இருக்கின்றார். சரி தானே.
இங்கே ஆச்சர்யப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் உலகின் மற்றொரு பகுதியில் இன்று 'இறைவனின் மைந்தனை' வேண்டிக் கொண்டு தோளில் படுக்கைவசமான மரப்பகுதியை ஏந்திக் கொண்டு மலை ஏறும் வழிப்பாட்டு பழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.
என்ன கண்டுபிடிச்சிடிங்களா!!!
அட ரொம்ப யோசிக்காதீங்கங்க...
அந்த உலகின் மற்றொரு பகுதி - தமிழகம்தேன்
இறைவனின் மைந்தன் - நம்ம முருகப் பெருமான்தேன்
அந்த வழிப்பாட்டு முறை - நம்ம தமிழர்களின் காவடி ஆட்டம்தேன்.
ஏற்கனவே பிள்ளையாரப் பத்தி பார்த்தாச்சி. இப்போ அவருடைய தம்பி...நம்ம தமிழ் கடவுள பத்தி பார்க்கலாமா...!!!
வெற்றி வேல்... வீர வேல்....!!!
முருகனும் இயேசுவும் -
ஆயிரம் கடவுள்களின் பெயர்கள் நம் நாட்டிலே வழங்கப்படினும் தமிழில் 'முருகன்' என்ற பெயருக்கு என்றுமே ஒரு தனி இடம் இருக்கத் தான் செய்கின்றது. எங்கெங்கெல்லாம் தமிழர்கள் இருக்கின்றனரோ அங்கெல்லாம் முருகன் இருப்பான். தமிழர்களுக்கேன்றே சிறப்பாய் இருக்கும் ஒருவன் அவன். அழகன் அவன்... தமிழ் கடவுளும் அவன். இன்னும் கூறிக் கொண்டே போகலாம். முருகனும் தமிழும் என்றுமே முடிவில்லாதவர்கள்...அவர்களைப் பற்றிப் பேசினால் பேசிக் கொண்டே போகலாம். இப்பொழுது நம்முடைய பயணத்தில் அவர்களைத் தான் காண வேண்டி இருக்கின்றது. காரணம் சில ஆராய்ச்சியாளர்கள் இயேசு தான் தம்பி தமிழகத்தில் முருகனாக விளங்கிக் கொண்டு இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள். எவராலும் எளிதில் நம்ப முடியாத கூற்று தான் அது. இருந்தும் சற்று நிதானமாய் சிந்தித்துப் பார்க்கையில் அவர்களின் அந்தக் கூற்றினை ஒதுக்கி விட இயலவில்லை.
"அட என்னங்க... அங்கே இயேசு சிலுவையின் ஒரு பகுதியினை மக்களுக்காக சுமந்து சென்றார் சரி. பிரச்சனை இல்லை. ஆனால் அந்த செயலை எண்ணித் தான் நம் நாட்டில் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கிறார்கள் என்று நீங்கள் கூறுவது எப்படிங்க சரியாகும். அப்படினா உலகத்துல எந்த இடத்துல மரக்கட்டையை சுமந்து சென்றாலும் அது இயேசுவை எண்ணியே சுமந்து செல்லுகின்றார்கள் அப்படின்னு சொல்ல முடியுமா" என்ற எண்ணம் பலரின் மனதிலும் நிச்சயம் வந்து இருக்கும்.
நியாயமான கேள்வி தான். இக்கேள்விக்கு பதிலினைக் காண நாம் முதலில் காவடியினைக் பற்றியும் அதன் வரலாற்றினைப் பற்றியும் பார்க்க வேண்டி இருக்கின்றது.
காவடி என்பது முருகனுக்கே உரிய வழிப்பாட்டு முறைகளில் ஒன்று என்பதனை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக காவடி எடுக்கின்றார்கள்? காவடி ஆட்டத்தின் வரலாறு என்னவென்று பார்த்தோம் என்றால் ஒரு கதை நம் புராணங்களில் இருந்து நமக்கு விடையாய் கிடைக்கின்றது.
அதாவது அகத்திய முனிவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வரும் பொழுது அங்கிருந்து இரு மலைகளை அவருடனேயே எடுத்து வர எண்ணுகின்றார். அதற்காக அவருடைய சீடனாகிய இடும்பன் என்ற அசுரனைப் பணிக்க, அவனும் அந்த மலைகளை சுமந்துக் கொண்டு தெற்கே வருகின்றான். இதே நேரத்தில் தான் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் இடையே பழப் பிரச்சனை உருவாக முருகனும் கோபத்தோடு தெற்கே வருகின்றார். இந்நிலையில் இடும்பன் தான் ஓய்வு எடுக்க எண்ணி மலைகளை கீழே இறக்கி வைத்து விட்டு சற்றே கண் அயருகின்றான். ஆனால் சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் மீண்டும் மலைகளை தூக்க அவன் முயற்சிக்கையில் ஆச்சர்யமே அவனுக்கு காத்து இருக்கின்றது. இப்பொழுது அவனால் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை. ஏன் அந்த மலைகளைத் தூக்க முடியவில்லை என்று அவன் சிந்திக்கும் பொழுது மலையின் மேல் ஒரு சிறுவன் வீற்று இருப்பதை காணுகின்றான். அந்தச் சிறுவனால் தான் அந்த மலைகளை தன்னால் தூக்க இயலவில்லை என்று எண்ணிய இடும்பன் அந்த சிறுவனை மலையில் இருந்து இறங்குமாறு சொல்ல சிறுவன் மறுக்கின்றான். இடும்பன் ஆத்திரப்படுகின்றான். சிறுவனைத் தாக்கவும் செய்கின்றான். ஆனால் அப்பொழுது நிலவிய சண்டையில் சிறுவனே வெல்லுகின்றான். எவ்வாறு தான் ஒரு சிறுவனிடம் தோற்றோம் என்று இடும்பன் சிந்திக்கும் பொழுது தான் அந்த சிறுவன் அவனது விருப்ப தெய்வமான முருகன் என்று அவன் அறிகின்றான்...அறிந்து முருகனிடம் இரு வரங்களைக் கோருகின்றான். ஒன்று...இடும்பனைப் போல் யார் காவடி தூக்கிக் கொண்டு வந்தாலும் முருகன் அவர்களை வாழ்த்த வேண்டும். இரண்டு முருகனுடன் போரிட்ட அந்த மலைக்கு இடும்பன் காவலாளியாக என்றென்றும் திகழ வேண்டும். முருகனும் அந்த வரங்களை அருள்கின்றார். அன்று ஆரம்பித்தது தான் மக்கள் முருகனுக்காக காவடி எடுக்கும் வழக்கம். இது தான் நம் புராணங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் கதை. நிற்க.
இப்பொழுது நாம் ஆய்வாளர்களின் கூற்றுகளைப் பார்ப்போம். அதற்கு நாம் காவடி என்ற சொல்லைப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
'காவடி' என்பது ஒருத் தனிச் சொல்லே அல்ல. மாறாக இரு சொற்களின் சேர்க்கைத் தான் காவடி என்ற ஒரு சொல்லாக மாறி இருக்கின்றது. அதாவது,
'காவு+தடி' என்ற சொற்களே மருவி 'காவடி' என்று மாறி இருக்கின்றன.
காவடி = காவு+தடி
காவு என்றால் பலி அல்லது மரணம் என்றுப் பொருள்படும். இந்நிலையில் காவுத்தடி என்பது பலிகொடுக்கப்படும் தடி அல்லது உயிரினைப் பறிக்கும் தடி என்றே பொருள் தருகின்றது. ஆனால் நாம் நம்முடைய புராணக் கதையினைக் கண்டோம் என்றால் காவடி என்ற சொல்லின் அர்த்தத்திற்கு அக்கதை பொருந்துகின்றதா என்றால் இல்லை என்பதே பதிலாக வருகின்றது. இந்நிலையில் முருகனுக்கு காவடி எடுப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது.
அதாவது 'இறைவனின் பிள்ளையை' வேண்டி மக்கள் உயிரினைப் பறிக்கும் தடியினை ஏந்திக் கொண்டு மலை ஏறுகின்றனர். இச்செயலுக்கு பொருத்தமான வேறு காரணங்கள் கிடைக்குமா என்று பார்த்தோம் என்றால் இயேசு உயிர் பறிக்கும் கட்டையினை சுமந்து கொண்டு மக்களுக்காக மலையினை ஏறி இருக்கின்றார் என்ற செய்தி நமக்கு கிடைக்கின்றது. இவ்விரண்டு விடயங்களும் ஒன்றினைப் போலவே இருக்கின்றன. ம்ம்ம்ம்...இந்நிலையில் ஏன் இவ்விரண்டு விடயங்களுக்கும் தொடர்பு இருக்க கூடாது என்ற எண்ணத்திலும் நாம் பார்க்க வேண்டி தான் இருக்கின்றது.
மக்களுக்காக இறைவனின் மகன் உயிர்பறிக்கும் கட்டையினை சுமந்துக் கொண்டு சென்று இருக்கின்றார். அவரின் அந்த தியாகத்தை நினைவுக் கூர மக்கள் அவர் சுமந்தவாறே ஒரு கட்டையினை அவரை நினைத்து சுமந்து கொண்டு இருக்கின்றனர். ம்ம்ம்... பொருந்தத் தான் செய்கின்றது. மேலும் நாம் முன்னர் கண்ட சில பதிவுகளின் படி,
௧) இன்று நம்மிடையே இருக்கும் முருகன் வழிப்பாட்டுக்கும் சங்க இலக்கியங்களில் காணப்படும் வழிப்பாட்டு முறைக்கும் மிகுந்த வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இன்றைக்கு முருகனுக்கு பலி இடும் பழக்கம் கிடையவே கிடையாது. ஆனால் சங்க இலக்கியத்தில் முருகனுக்கு பலி இருந்து இருக்கின்றது.
௨) மேலும் கடவுளின் பிள்ளை என்ற ஒரு கோட்பாடே சங்க இலக்கியத்திலும் சரி அதற்கு முந்தைய இலக்கியங்களிலும் சரி காணப்படவில்லை. முருகன் குறிஞ்சி நிலக் கடவுளாகவே அறியப்பட்டு உள்ளான்.
௩) மேலும் நாம் மேலே கண்ட புராணக் கதைகளை பற்றிய குறிப்புகளும் சரி காவடி ஆட்டமும் சரி கி.மு வில் மக்களிடையே இருந்ததிற்கான சான்றுகள் இதுவரை கிட்டவில்லை. இக்கதைகள் எல்லாம் பிற்காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன.
என்றே அறியப் பெறுகின்றோம்.
அதாவது கிருத்து காலத்திற்கு பின்னரே நம்மிடையே காவடி ஆட்டத்தினைப் பற்றியக் குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றன. மேலும் முருகனுக்குரிய வழிப்பாட்டு முறைகளும் மாறி இருக்கின்றன. அதாவது குறிஞ்சி நிலத்திற்கு மட்டும் தலைவனாக சங்க இலக்கியங்களில் சித்தரிக்கப்பட்ட முருகன் இறைவனின் மகனாக அனைவருக்கும் பொதுக் கடவுளாக பிற்காலத்திலேயே அறியப்படுகின்றான். இந்த மாற்றமும் ஏன் என்று சிந்திக்கத்தக்க ஒன்றாக இருக்கின்றது.
எனவே இந்நிலையில் இயேசுவே தமிழகத்தில் முருகனாக சித்தரிக்கப்பட்டு இருக்கலாம் என்ற கருத்தினை நாம் முற்றிலுமாக மறுக்க போதுமான சான்றுகள் நம்மிடையே கிட்டப் பெறவில்லை. அதுவும் நம்முடைய பதிவுகளின் படி விவிலியத்தில் சிவலிங்க வழிப்பாடு காணப்படுவதாலும் சரி சிவனின் பிள்ளை தான் இயேசு என்றுக் கூறும் நிலையினாலும் சரி இயேசுவே முருகன் என்றக் கருத்து வலுப்பெறத் தான் செய்கின்றது.
ஆனால் வெறும் காவடியினை வைத்துக் கொண்டு இயேசு தான் முருகன் என்று நாம் கூற இயலாது. அது தகுந்த ஒன்றாகவும் இருக்காது. மேலும் முருகன் தமிழ் கடவுளாக தமிழர்களின் மத்தியில் மட்டுமே சிறப்பாக விளங்குகின்றார்.
இந்நிலையில் இயேசு தான் முருகன் என்று ஆய்வாளர்கள் கூறுவதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா?. முருகன் ஏன் தமிழ் கடவுளாக அறியப்படுகின்றான்? என்றக் கேள்விகளுக்கு நாம் விடையினை தேடத் தான் வேண்டி இருக்கின்றது.
தேடுவோம்...!!!
முருகன் இருக்க பயமேன்!!!
இயற்கை நெறிக் காலமும் அற நெறிக் காலமும்...!!!
என்னடா இது முருகனைப் பற்றி பார்ப்போம்னு நெனச்சா ஏதோ இயற்கை நெறிக் காலம், அற நெறிக் காலம் அப்படின்னு ஆரம்பமே திசை மாறுகின்றதே என்று எண்ணுவீர்கள் என்றே எண்ணுகின்றேன். ஆனால் இந்த திசை மாற்றத்திற்கு ஒரு காரணம் இருக்கின்றது. காரணம் என்னவென்றால் மேலே கூறியுள்ள அந்த கால மாற்றங்களில் தான் நம்முடைய வழிபாட்டு முறைகள் ஒரு மாபெரும் திசை மாற்றத்தினைக் கண்டு இருக்கின்றன. இப்பொழுது அந்த காலங்களைப் பற்றி சற்று கண்டு விடுவது தான் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றே எண்ணுகின்றேன்.
இயற்கை நெறிக் காலம் - பெயரில் இருந்தே இது எத்தகையக் காலம் என்று கணித்து விடலாம். மனிதர்கள் இயற்கையினை வழிப்பட்ட காலம் தான் இயற்கை நெறிக் காலம். கடவுளர் அனைவரும் இயற்கையினைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். அனைத்துக் காலங்களைப் போலவே இக்காலத்தினையும் நூல்கள் வாயிலாகவே நாம் அறிந்துக் கொள்கின்றோம். இயற்கை நெறிக் கால நூல்கள் என்றால் நமது சங்க காலத்து நூல்களான பத்துப்பாட்டையும், எட்டுத்தொகையையும் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம். இக்காலத்தில் மக்கள் வழிப்பட்ட கடவுளருக்கு பலி இருந்தது.
அறநெறிக் காலம் - இயற்கை நெறிக் காலத்தினைத் தொடர்ந்து தோன்றியக் காலத்தினைத் தான் அறநெறிக் காலம் என்பர். இயற்கை வழிப்பாட்டு முறை போய் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுகள் மற்றும் மற்ற அற நெறிக் கருத்துக்களும் சரி நூல்களும் சரி நம் மண்ணில் எழுந்தக் காலத்தினைத் தான் அறநெறிக் காலம் என்பர். அற நெறிக்காலத்தில் இறைவனுக்கு பலி இடும் பழக்கம் முற்றுப் பெற்றது மாறாக பல புதியக் கருத்துக்கள் தோன்றப்பெற்றன. முழு முதற் கடவுள் என்ற கொள்கை மேல் எழும்ப ஆரம்பித்தக் காலம். இக்காலத்தின் சிறப்புமிக்க ஒரு நூல் தான் நமது திருக்குறள். நிற்க
தமிழ் இலக்கியங்களை ஆராயும் அறிஞர்களாகட்டும் அல்லது சமயங்களை ஆராயும் அறிஞர்களாகட்டும் அனைவரும் மேலே கூறியுள்ள கால மாற்றத்தினை அறிந்து தான் உள்ளனர். நூல்களையும் சரி பழக்க வழக்கங்களையும் சரி காணும் பொழுது சமுகத்தில் திடீர் என்று எழுந்துள்ள இந்த மாற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கத் தான் செய்கின்றது. கவனத்தை ஈர்ப்பதுடன் பல கேள்விகளையும் இந்த மாற்றம் எழுப்புகின்றது... ஏன் இந்த மாற்றம்? எதனால் இந்த மாற்றம்? என்றவாறு பல கேள்விகள் எழும்பினாலும் ஒரு விடயத்தில் மற்றும் ஆய்வாளர்கள் பலர் ஒன்றுப்படுகின்றனர். கிருத்துவுக்கு பிற்பட்ட காலம் என்றக் காலத்தில் தான் இந்த மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. அக்காலத்தில் அதுவரை பலியிடப்பட்டு வந்த கடவுளருக்கு பலி தேவை இல்லாத ஒன்றாக மாறி இருக்கின்றது.
"தத்துவ உணர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில் முருகன் முதலிய கடவுளர்க்கு உயிர்பலி செய்தல் நின்று விட்டது" என்றே தமிழறிஞர் திரு கா.சு.பிள்ளை அவர்கள் அவர்களது 'தமிழர் சமயம்' என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
இங்கே நாம் விரிவாகக் காணவேண்டியது 'தத்துவ உணர்ச்சி ஏற்பட்ட பிற்காலத்தில்' என்று கூறப்படும் காலத்தினைப் பற்றி தான். ஆனால் எவ்வளவு முக்கியமானதொன்றாக அக்காலம் இருந்தாலும் அதனைப் பற்றி நாம் பின்னரே காண போகின்றோம். காரணம் முருகனை நாம் ஏற்கனவே நீண்ட காலம் காக்க வைத்தாயிற்று எனவே இனியும் அவரைக் காக்க வைப்பது சரியாக இருக்காது. எனவே இப்பொழுது மீண்டும் முருகரைக் காணச் செல்லலாம்...
முருகன் - சிவ மைந்தன். தீய வடிவே உருவான சூரபதுமனை அழிக்க சிவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்டவன். சூரனுடன் நடந்தப் போரில் சூரனை வென்று நன்மையை நிலை நிறுத்துகின்றான். இதுவே முருகனின் படைப்பினைப் பற்றியக் கதை. அதாவது முருகனின் படைப்பு சூரனை அழித்து மக்களைக் காக்கவே அமைந்து உள்ளது. நிற்க.
இப்பொழுது இந்தக் கதையினைப் பற்றி நாம் விரிவாகக் காணும் முன் நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் மேலே உள்ள கதைக்கு சான்றுகள் நமக்கு கிருத்துவுக்கு பிற்பட்ட காலத்திலேயே தான் கிடைக்கின்றன. அதாவது அறநெறிக் காலத்திலேயே கிடைக்கப் பெறுகின்றன. இயற்கை நெறி காலத்தில் காணப்படும் முருகன் பலி உடையவனாகவும் குறிஞ்சி நிலத் தலைவனாகவுமே அறியப்படுகின்றான்...மாறாக சிவ மைந்தனாக அவன் அக்காலத்தே அறியப்பட்டமைக்கு சான்றுகள் இல்லை. சரி இப்பொழுது மீண்டும் முருகனின் கதைக்கு வருவோம்.
முருகன் படைக்கப்பட்டமைக்கு முழு முதற் காரணம் தீமையின் வடிவே ஆன சூரபதுமனை வெல்லவே. அந்த காரணத்திற்காக அவனை சிவன் அவரது ஆற்றலின் வாயிலாக படைக்கின்றார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது எவ்வாறு பிள்ளையாரை சக்தியே உருவாக்குகின்றாரோ அதேப் போல் முருகனை சிவனே உருவாக்குகின்றார். பின்னர் முருகன் வளர்ந்தவுடன் சக்தியிடம் இருந்து வேலினைப் பெற்றுக் கொண்டு சூரனுடன் போராடுகின்றார். இறுதியில் சூரனை வெல்கின்றார். நன்மை வெல்கின்றது. தீமை தோற்கின்றது. இதுவே கதை. ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விடயம் என்னவென்றால் முருகன் சூரனை வெல்கின்றார் ஆனால் அழிக்கவில்லை. இதனைப் பற்றி நாம் மேலும் பார்ப்பதற்கு திரு. கா.சு. பிள்ளை அவர்களின் கூற்றையும் கண்டு விடுவது நல்லது என்றே நினைக்கின்றேன்.
'மேலும் சூரபதுமனை முருகன் ஆட்கொண்டு அவனின் ஒரு பகுதியாகிய மயிலை வாகனமாகமும் மற்றொரு பகுதியாகிய கோழியைக் கொடியாகவும் கொண்டனர் என்பதே புராண வரலாறுமாகும். அவனால் வந்த தீமையை ஒழித்தார் என்பதைப் பற்றியே முருகனுக்கு அத்திருவிழா கொண்டாடப்படுகின்றது. அத்திருவிழாவில் தெய்வத் தியானமும் பட்டினி நோன்பும் பொறியடக்கமும் நிகழ்வனவே அன்றி வயிறு நிரம்ப உண்டலும் கூத்தாடளும் இல்லை என்றறிக' என்று அவரது 'தமிழர் சமயம்' என்னும் நூலில் குறிப்பிடுகின்றார்.
மேலே உள்ள கூற்றுகள் மூலம் முருகன் சூரனின் மூலமாக வந்தத் தீமையை அளித்து அவனை அடக்கி அருளினார் என்றே நமக்கு புலனாகின்றது. இப்பொழுது இயேசுவின் உருவகமே முருகன் என்றுக் கூறுபவர்கள் என்ன கூறுகின்றார்கள் என்றுப் பார்ப்போம்.
அவர்களின் கூற்றுப் படி இயேசு மக்களுக்காக தீமையே வடிவான சாத்தானை வென்ற நிகழ்வையே சூரபதுமனை முருகன் வெல்லும் கதையின் மூலமாக அக்காலத்தில் அறிஞர்கள் வெளிப்படுத்தி உள்ளனர் என்றுக் கூறுகின்றனர்.
விவிலியக் கதையின் படி இயேசு பரிசுத்த ஆவியின் அருளினைப் பெற்றுக் கொண்டு தீமையே வடிவான சாத்தானை உயிர்தெழுவதன் மூலம் வென்று அடக்கி ஆள்கின்றார். சாத்தானும் தோற்கின்றான்...ஆனால் மடிய வில்லை.
சூர் - தீமை. சூரபதுமன் - தீமையே வடிவானவன். தீமையே வடிவான சாத்தானை சூரப்பதுமனாகவும் அவனை இயேசு மக்களுக்காக வென்றதை முருகன் சூரபதுமனை வென்ற நிகழ்ச்சியாகவும் அன்றைய தமிழர்கள் மக்கள் நடந்ததை எளிதாக அறிந்துக் கொள்ள பயன்படுமாறு உருவகப்படுத்தி உள்ளனர் என்றே அவர்கள் கூறுகின்றனர். அதாவது,
சாத்தான் - சூரபதுமன்
முருகன் - இயேசு
சாத்தானை தோற்கடிக்கும் ஆற்றலை இயேசு தூய ஆவியிடம் இருந்தே பெறுகின்றார்.
முருகன் சூரனை வெல்ல வேலினை சக்தியிடம் இருந்து பெறுகின்றார்.
இறுதியில் சாத்தான் தோற்கின்றான் ஆனால் மடியவில்லை.
சூரனும் தோற்கின்றான் ஆனால் மடியவில்லை.
மேலும் சூரனும் முருகனும் மோதிக் கொள்ளும் பகுதியில் சூரன் பல்வேறு வடிவங்கள் எடுத்து முருகனுடன் போரிடுவது போன்று வருகின்றது. அச் சண்டையின் இறுதியில் ஒரு மாமரமாக சூரன் மாறுகின்றான். அப்பொழுது முருகன் தனது வேலினைக் கொண்டு அம்மரத்தினைப் பிளக்க சூரன் தோற்பது போன்று கதை வருகின்றது. அதாவது தீமை இறுதியில் ஒரு மர வடிவில் வருகின்றது அதனை வென்று இறைவனின் மகன் தீமையினை வெல்லுகின்றார், இது இயேசு சிலுவையினை (மர கட்டையினை) இறுதியாக சுமந்து சென்று மரணமுற்று பின்னர் மீண்டும் உயிர்த்து எழுந்து சாத்தானை வென்றதை குறிப்பதாகவே இருக்கின்றது என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிற்க.
இரண்டு கதைகளிலும் ஒற்றுமைகள் சில இருந்தாலும் இவற்றை வைத்து மட்டுமே இயேசு தான் முருகன் என்றால் நம்மால் நம்பிவிட முடியாது.
ஆனால் ஏன் இந்த ஒற்றுமைகள் இருக்கின்றன என்றும் கி.முவில் காணப்படாத இந்தக் கதை பிற்காலத்தில் காணப்படுவதன் அர்த்தம் என்னவென்றும் நாம் சிந்திக்கத் தான் வேண்டி இருக்கின்றது. மேலும் நாம் முன்னர் கண்டவாறு முருகன் - சிவ மைந்தன் என்ற தகப்பன்-மைந்தன் உறவு முறை ஏன் கி.மு வில் காணப்படாது கி.பி யில் காணப்படுகின்றது என்றும், இயற்கை நெறி காலம் எதனால் அறநெறிக் காலமாக மாறிற்று என்றும் நாம் சிந்தித்துப் பார்க்கத் தான் வேண்டி இருக்கின்றது.
மேலும் முருகனுக்கு இரு மனைவியர் இருப்பது போன்று புராணக்கதைகளும் நம்மிடையே இருக்கின்றன. எனவே முருகனை இயேசு என்றுக் கூறினால் முருகனுக்கு ஏன் மனைவிகள் இருப்பது போன்று கதைகள் அமைய வேண்டும் என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது. ஆனால் இவற்றைப் பற்றி நாம் காண்பதற்கு முன்னர் வேறு சில பதிவுகளை கண்டு விடுதல் ஏற்றதாக இருக்கும் என்று தோன்றுவதனால் மற்றச் சில பதிவுகளைக் கண்ட பின் அவற்றைப் பற்றி நாம் காணலாம். இப்பொழுது ஏன் முருகனை தமிழ் கடவுள் என்று அழைக்கின்றனர் என்று நான் அறிந்தவனவற்றைக் காணலாம்
பி.கு:
நண்பர்களே இவை அனைத்தும் சில ஆராய்ச்சியாளர்களின் கூற்றுகளில் இருந்து நான் இது வரை அறிந்துக் கொண்டவையே. இன்னும் பல விடயங்களை அறியத் தேடிக் கொண்டும் அறிந்துக் கொண்டும் இருக்கின்றேன். இவற்றுக்கு தங்களின் கேள்விகளும் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றன. அதற்கு நன்றி. அதைப் போன்றே நான் ஏதாவது கூற்றினை தவறாக அறிந்தும் இருக்கலாம், அதனை தாங்கள் சுட்டிக் காட்டினீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். ஏன் என்றால் உண்மைகள் வெளி வர வேண்டும் என்பதே எனது எண்ணம். நம்முடைய சமய உண்மைகள் தான் இன்று நம்முடைய உலகம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மாபெரும் பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு. அப்பேற்பட்ட ஒரு செல்வம் இன்று மறைந்துக் கிடக்கின்றது. அதுவும் நம்முடைய மண்ணில். அவ்வாறு இருக்க மண்ணின் மைந்தர்களான நாம் நம் மண்ணில் விளைந்த செல்வத்தை மீட்டு எடுத்து உலக நலனுக்காக பயன்படுத்த முயற்சி செய்வது நம்முடைய கடமை அல்லவா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  நில அளவுகள் அறிவோம். 1 ஏக்கர்_ 4 றூட். 1 ஏக்கர்_ 160 பேர்ச் இதுவே இலங்கையில் நடைமுறையில் உள்ள நில அளவை 1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட் 1 ...