ஈழம் தந்த தொல்காப்பியம்
பழந் தமிழகத்தில் முதலில் தோன்றிய பாண்டிய மரபிலிருந்தே சேரரும், சோழரும் தோன்றினர் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
மாறன் வழுதி மாறன் திரையன்
மாறன் பொறையன் ஓர்வகுப்பில் வந்தனர்
தமிழ்மூ வரசிவர் தாமா வாரே" (ந.வே.வ.பாயிரம்)
மாறன் திரையன் மரபில் வந்தோர் சோழராயினர்.
மாறன் , வழுதி மரபினர் தொடர்ந்து பாண்டியராகவே நீடித்தனர்.
அதே போன்று பதிற்றுப்பத்து எட்டு சேர மன்னர்களின் வரலாற்றை அவர்கள் ஆட்சி புரிந்த ஆண்டுக் காலக் குறிப்போடு தெளிவாகக் கூறுகிறது. கா.சு. பிள்ளை அவர்கள் இந்த ஆட்சிக் காலத்தைக கி.மு. 4-ஆம் நூற்றாண்டு முதல் முறைப்படி கணித்திருக்கிறார்.
இந்நிலையில் 1920 ஆம் ஆண்டு மதுரையில் அச்சிட்டு வெளியிடப்பட்ட நற்குடி வேளாளர் வரலாறு என்னும் 1035 செய்யுள் கொண்ட பாண்டியர் குடிமரபு கூறும் நூல் பாண்டியர்களின் 201 தலைமுறைகளைக் குறிப்பிடுகிறது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறைக்கு உரியவனுக்குப் பட்டம் கட்டி வந்த வழக்கத்தை இவர்கள் கொண்டிருந்தனர்.
பாண்டியரின் ஐவகைப் பிரிவில் கொடி என்றும் பிதிர் என்றும் பிரிக்கப்பட்ட வண்ணம் இருங்கோவேள் பிரிவினர் வழி வந்தவர்கள் தொடர்ந்து பட்டம் கட்டிக் கொள்வதைக் கைவிடவில்லை. . இதன் வண்ணம் கி.பி. 1944 இல் இயற்கை எய்திய போற்றியடியா
இருங்கோவேள் என்பவர் 201 ஆவது பாண்டிய மன்னர் மரபின் பட்டம் கொண்டிருந்தார் என அந்நூல் கூறுகிறது.
இந்நூலில் பெயர் தெரிந்த பாண்டியர்களின் ஆட்சிக் காலம் கலியாண்டுக் கணக்கில் குறிக்கப்பட்டுள்ளது.
காசுமீர வரலாற்றை இராச தரங்கிணி என்ற நூல் குறிப்பிடுவது போல் நெடிய பாண்டியர் மரபை நற்குடி வேளாளர் வரலாறு குறிப்பிடுகிறது, நெடிய மூவேந்தர் வரலாற்றை மீட்டமைப்பதற்கு ஓரளவு துணை செய்கிறது. இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும், வெற்றிவேள் செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது போன்று ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி
வருகிறது. இந்நூலில் கண்ட குறிப்புகளின் வண்ணம் விடுபட்ட பாண்டியன் பெயர்களையும் சேர்த்தால் கி.மு. 500 முதல் கி.பி. 500 வரை 1000 ஆண்டுக் கால பாண்டியர் தலைமுறைகளைக் கண்டறிய முடிகிறது.
1000 ஆண்டுகளில் 40 தலைமுறை குறிப்பிடப்படுகிறது. ஒரு தலைமுறைக்குச் சராசரி 25 ஆண்டுகள் என்பது இயல்பான நிகழ்ச்சி ஆகும். இவர்களுள் கடைக் கழக நூல்களில் 20 பாண்டியர் பெயர்கள் மட்டும் உள்ளன.
ஏனையவற்றுள் பிற சான்றுகள் வாயிலாகக் கிடைத்த பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடைக்கழக இலக்கியங்களின் வாயிலாக அறியப்படும் முதுகுடுமிப் பெரு வழுதி, கருங்கை ஒள் வாட் பெரும் பெயர் வழுதி ஆகிய இருவரும் முறையே 66 ஆவது, 67 ஆவது பாண்டிய மரபிரராக அறிய முடிகிறது.
இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 - 300 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறு கூறுகிறது.
பாண்டியரின் கிளை மரபாகிய இருங்கோவேள் மரபு கி.மு. 2283 கூன் பாண்டியனில் தொடங்குகிறது.
கோசாம்பியை தலைநகராகக் கொண்டு வடநாட்டில் ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் உதயணன் கி.மு.701 இல் (கலியாண்டு 2400) ஆரியர்களைப் போரிட்டு வென்றான். அவன் ஆட்சி செய்திருந்தால் கி.பி. 199 - இல் குப்தர் தலையெடுக்காமல் தடுத்திருக்கலாம். பணிந்து பேசிய ஆரியர்களை நம்பி அடங்கிப் போன பண்பாட்டு அடிமைத்தனமே இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என நற்குடி வேளாளர் வரலாறு ஆசிரியர் ஆறுமுக நயினார்
பிள்ளை பின்வரும் செய்யுளில் குறிப்பிட்டுள்ளார்.
பண்டை நாலறு நூறாண்டினாகரிறை பாடலிக்க ணளவில் படை
விண்டிருந்தவடவர்படை தடுத்ததமிழ்வேந்தர் முப்பத்து முந்நூற்றுமேற்
கொண்டுகுத்தரை யடக்கிடாததெனை கூடுநின்ற வடவோர் வழித்
தொண்டராயதிறன் பின்னர் சாங்கரடி தொத்தினார் (ந.வே.வ.414)
மேற் சொன்ன ஆதாரங்களை ஆய்வு செய்து முனைவர் இரா. மதிவாணனது கடைக்கழக நூல்களின் காலமும் கருத்தும் என்ற நூலும் தெரிவிக்கிறது.
குமரியின் மைந்தர்களான பழம்பாண்டிய மன்னர்கள்
கி.மு. 2082 - முடத்திருமாறன் - 6ஆவது பாண்டியன்
கி.மு.1932 - மாறன் வழுதி - 10 ஆவது பாண்டியன்
கி.மு. 1002 - 960 திருவழுதி - 45 ஆவது பாண்டியன்
கி.மு. 910 - 854 வீர பாண்டியன் - 49 ஆவது பாண்டியன்
கி.மு. 884 -832 பாண்டியன் (நிலந் தரு - 50 ஆவது பாண்டியன் திருவின்பாண்டியன்) ஆகும்.
இனி தொல்காப்பிய விடயம் குறிப்பன..
"பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்து
குமரிக்கோடும் கொடும் கடல் கொள்ள
வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு
தென் திசை ஆண்ட தென்னவன் வாழி” (சிலம்பதிகாரம்)
என இடைச்சங்க காலகட்டத்தில் கடற்கோள் நடந்ததைக் கூறி,அக் கடற்கோளால் இடைச்சங்க கபாடபுரம் அழிந்ததால் அந் நாட்டு மக்களைக் காப்பாற்ற ( நிலந்தரு திருவிற் பாண்டியன் கி.மு. 884 -832 ( 50 ஆவது பாண்டியன்) பாண்டியன் வடக்கே கங்கையையும் இமயத்தையும் கைப்பற்றினான் என அவன் வீரத்தை புகழ்கிறார் இளங்கோவடிகள்.
அவன் பஃறுளி ஆற்றுக்கும் தெற்கே இருந்தே ஆண்டான். அந்தக் காலத்தில் அப்பாண்டியனின் நாட்டின் தெற்குப் பகுதியின் வடக்கு எல்லையாக பஃறுளி ஆறு இருந்ததை சிலப்பதிகார உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் ‘அக்காலத்து அவர் நாட்டு தென்பாலி முகத்துக்கு வட எல்லையாகிய பஃறுளி எனும் ஆற்றுக்கும்’ என தனது உரையில் எழுதியுள்ளார். எனவே இளங்கோ அடிகள் கூறிய தென்னவனாகிய நிலந்தரு திருவிற் பாண்டியன் தற்போதைய தமிழகத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பது உறுதியாகின்றது. அத்துடன் வட எல்லையாகிய பஃறுளி எனச்சுட்டுவதால் அவ்வாற்றுக்கும் தெற்கேயும் நிலம் இருந்தது என்பதும் உறுதியாகின்றது.
எனவே நிலந்தரு திருவின் பாண்டியன் இடைச்சங்க காலத்திருந்தவன். அவன் காலத்திலேதான் தொல்காப்பியம் அரங்கேறிற்று என்று தொல்காப்பியப் பாயிரம் நன்கு காட்டுகின்றது. தொல்காப்பியர் ஈழத்தினை சேர்ந்தவர் என உறுதியாக கூறலாம். இதன் காலத்தை தொல்காப்பியம் கி.மு 865 இல் அரங்கேற்றம் கண்டதாக பேராசிரியரான இரா.மதிவாணன் கண்டறிந்து கொண்டார்.
'நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி'த்
(தொல். பாயிரம், 9. 12)
தம் தொல்காப்பியத்தை நிறைவேற்றினர். இதில் வரும் நான்மறை என்பதற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் நன்கு விளக்கம் தருகின்றார். எனவே, தொல்காப்பியம் பாண்டியன் அவைக்களத்து நிறைவேறிற்று எனக் கொள்ளல் பொருந்தும். தொல்காப்பியம் கபாடபுரத்து இருந்த இடைச்சங்க நூலென இறையனார் களவியல் உரை குறிக்கின்றது.
அடுத்து பல்யாகசாலை முதுகுடுமியைப் பற்றிக் காண்போம். ‘முதுகுடுமி’ என்ற இவன் பெயரும் இவனைப் பாடியவரின் நெட்டிமையார்’ என்ற பெயருமே ஓரளவு தொன்மையைக் குறிக்க வருவன எனக்கொள்ளலாம். இவனைப் பாடினவாகப் புறநானூற்றில் ஐந்து பாடல்கள் உள்ளன. இவனைப் பாடியவர் காரி கிழார் நெட்டிமையார் நெடும்பல்லியத்தனார் ஆவர் மூவர் பெயர்களுமே பழமையைக் குறிப்பன. இனி இவர் தம் பாடலுள் காரிகிழார் இவன் ஆட்சி எல்லையை இமயம் முதல் குமரி எல்லைக்கு அப்பாலும் குறிக்கின்றார்,
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்’
(புறம் .6:1,2)
இவன் உருவும் புகழும் சிறந்தனவாய் இருந்தன எனக் குறிக்கின்றார். எனவே பஃறுளியாற்றினை எல்லைக்கோடாக கொண்ட நிலப்பகுதியை குமரி என எனவும் அக்குமரியின் தெற்கில் இருந்து பனிவரை வடக்காகிய இமயம் வரை பாண்டியர்கள் ஆண்டார்கள் என்பதும் தெளிவாக புலனாகின்றது. பழம் பாண்டிய மன்னனின் முந்து தலைமுறை முடந்திரு மாறன் கி.மு 2082 இல் ஆறாவது பாண்டியனாக குமரி நாடாகிய ஈழத்தில் அரசாண்டு இருக்கிறான். அவனது வழிவந்த நிலந்தரு திருவிற் பாண்டியன் ஈறாக 50 தலைமுறை வரை அரசாண்ட நிலம் குமரி நாடாகிய ஈழதேயமாகும். அப்பழம் பெரும் ஈழ நாட்டிலேயே கபாடபுரம் என்ற அழைக்கப்பட்ட துவரை இருந்தது. அது செம்பு புனைந்தியற்றிய சேநெடும் புரிசை மிக்கதாக விளங்கியது. அதாவது செம்பு போன்ற சிவந்த செங்கற்களால் அமைக்கப்பட்ட நீண்ட நெடிய மதில்கள் கொண்ட கோட்டையாகவும் அதன் கண் பாரிய வாயிற் கதவுகளும் அலங்கரிக்கப்பட்ட புரிசையாக விளங்கியது. அத்தகைய ஈழத்தில் செந்தமிழ்ப் புலமைமிக்க புரவலர் சங்ககால பாடல்களை பாடியுள்ளனர். அவர்களுள் முயற்சியில் முடிநாகராயர்,ஈழத்துப்பூதன் தேவனார்,கணியன் பூங்குன்றனார்,நரிவெருத்தலையார் என அம்மரபு மிகத்தொன்மை மிக்கவை, அக்காலத்தில் தமிழகத்தில் ஈழத்தீவிலும் தமிழர்கள் மட்டுமே வசித்தனர். ஆனால் தமிழகத்தில் ஆசீவக, பெளத்த மத தாக்கங்கள் நிகழ்ந்த போது தமிழக மன்னர்கள் தவிர்ந்த அதன் துறவிகள் மாத்திரம் தமது பெயர்களை தமது மதம் சார்ந்த பிராகிருத மொழி பெயர்களாக மாற்றியமைத்துக் கொண்டார்கள். ஈழத்தில் அத்துறவிகள் மாத்திரமல்ல கூடவே அதனை ஆண்ட மன்னர்களும் அம்மதம் சார்ந்த பெயர்களை சூடிக் கொண்ட பண்பாட்டு மாற்றம் நிகழ்ந்ததால். அம்மதப்பிரிவுகள் இரண்டுக்கும் இடையிலான யுத்தங்களும் நடந்தேறின. அவற்றுள் ஒன்றாக எல்லாளன் துட்பாகமினி போரை காணமுடிகிறது. கூடவே ஒரே மதமாக விளங்கிய பெளத்தத்திற்கு உள்ளேயும் பிளவுகள் தோன்றி யுத்தங்கள் விளைந்தன. இது வட்டகாமினி தொடக்கம் மகாசேனன் காலம் வரை இடம்பெற்றுள்ளன. இப்பிராகிருத பெயர்களில் இருந்த அம் மன்னர்கள் மொழியால் தமிழர்கள் ஆவர். இப்பண்பாட்டு மாற்றம் பின்னான காலத்தில் மெளரியனான தாதுசேனன் தொடக்கம் கலிங்க விஜயபாகு வரையான அந்நிய ஆதிக்கத்துக்கு வழிவகுத்தது. இவர்கள் கி.பி 12 ஆம் நூற்றாண்டு வரை தென்னிலங்கையில் அந்நாளில் சிறியதொரு ஆளும் வர்க்கமாக மாத்திரமே விளங்கினர். அப்போதும் அதன் பின்னான காலனித்துவ ஆட்சிக்காலம் வரையும் தமிழ் மொழி மாத்திரமே இலங்கையிலிருந்த கோட்டை, கண்டி, யாழ்ப்பாண இராசதானிக்குரிய ஆட்சி மொழியாகவும் விளங்கியது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக